அவிழ்க்க முடியா சர்ச்சையுடன் தொடரும் மர்ம மரணங்களும் ராஜபக்சக்களின் பங்களிப்பும்!
இலங்கையின் அரசியல் மற்றும் ஊழல் விசாரணை வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள எயார்பஸ் ஒப்பந்த விவகாரம், மீண்டும் ராஜபக்ச அரசியல் குடும்பத்தை மையமாகக் கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இலங்கை விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றய தினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியருந்தன!
அந்த விசாரணையின் போது, “நீங்கள் மெதமுலனவில் வசிக்கிறீர்களா?” என ஆணைக்குழு கேள்வி எழுப்பியபோது, “நான் கார்ல்டன் இல்லத்தில் வசிக்கிறேன்” என்று மகிந்த ராஜபக்ச பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, “கார்ல்டன் இல்லத்தில் மூன்று தவணைகளாக தலா 20 மில்லியன் ரூபாய், மொத்தமாக 60 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது” என்ற கபில சந்திரசேனவின் வாக்குமூலம் குறித்து கேட்கப்பட்டபோது, “அது உண்மையெனில் அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள்” என மகிந்த பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதில் என்பது ராஜபக்ச அரசியல் நடைமுறையின் பரிச்சயமான பதிலாகவே பலரால் பார்க்கப்படுகிறது. தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடி விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, தகவலை வெளியிட்டவர்களிடமே பொறுப்பை திருப்பி விடும் நடைமுறையும் சாணக்கியமும் மீண்டும் வெளிப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளுவது அவ்வளவு கடினமாகாது!
கடந்த கால ரஜபக்சக்களின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு புரியும் அவர்களுக்கு எதிராக கருத்துரைத்தவர்கள் , அல்லது அசட்டு துணிவில் அவர்களுக்கெதிராக சாட்சியளிக்க முன்வந்தவர்களுக்கும் என்ன நடந்தது அல்லது நடக்கும் என்பது!
இலங்கை அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், ராஜபக்ச ஆட்சிக் கால ஊழல்கள் மற்றும் கொலைகள் ஆட்கடத்தல்கள் , வன்முறைகள்்என்பவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பலர் மர்மமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டனர் , கொல்லப்பட்டனர் அல்லது அவர்களாகவே நாட்டை விட்டு தப்பியோடி தலைமறைவு வாழ்க்கைக்குக்குள வாழ்ந்து வருவது என்பது புதிதாக விசாரணை ஆணைகுழு அமைத்து கண்டு பிடிக்க வேண்டிய செயல்கள் அல்ல!
ராஜபக்ச குடும்பம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது,மிக் விமான ஒப்பந்த ஊழலை துணிந்து வெளிப்படுத்திய மகிந்தவின் மிக நெருங்கிய நண்பரான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த போத்தல ஜயந்த தாக்கப்பட்டு இன்று வரை வெளிநாட்டில் உடல் நலக்குறைவுடன் வாழ்ந்து வருவது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் ராஜபக்சக்களால் புதுபிக்கப்பட்டு வருவதனை கபில சந்திரசேனவின் மரணம் கோடிட்டு காட்டுகின்றது
அதேபோன்று தமிழ்மக்களிற்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், ஊடகவியலாளர்கள் தராக்கி, நிமலன் என பல ஊடகர்கர்கள் ஒட்டுக்குழு மற்றும் ராஜபக்சக்களால் இயக்கப்பட்ட “பரா மிலிட்டரிகளால்”படுகொலை செய்யப்பட்டமை கொலை செய்தமை போன்ற பல குற்ற கொடுஞ்ச்செயல் களை அடுக்கி கொண்டே போகலாம்.
அதேபோல் உபாலி தென்னகோன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், உண்மையை அடக்குவதற்கான அரசியல் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.
விசாரணைகளின் அடிப்படையில் வெளிவரும் தகவல்களின்படி, எயார்பஸ் ஒப்பந்தத்தில் மொத்தமாக 17.5 மில்லியன் அமெரிக்க டொலர் தரகு பண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் முன்பணமாக 2.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டதாகவும், அந்தத் தொகையில் ஒரு பகுதி கபில சந்திரசேனவின் மனைவியின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டதாகவும் விசாரணை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தின் ஒரு பகுதி ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
ஒருகாலத்தில் சாதாரண அரசியல் பின்னணியில் இருந்த மெதமுலன ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய செல்வச் செழிப்புகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக பசில் ராஜபக்ச உள்ளிட்டோரின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் பெருமளவு சொத்துக்கள் தொடர்பாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
எயார்பஸ் கொள்வனவு வழக்கில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சமாக மாறியிருப்பது கபில சந்திரசேனவிற்கு பிணையாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட போலி நபர்களின் சம்பவமாகும்.
கபில சந்திர சேனவிற்கு உண்மையான உறவுக்காரர்கள் நண்பர்கள் என பலரிற்கு பிணைக்கு முன்னிற்க கூடிய சூழல் மற்றும் தகுதி இருந்தபோதும், சாதரண தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்களை பிணைதாரர்களாக (அதுவும் 15 .000 ரூபா தரகு பணம் செலுத்தி) முன்னிலைபடுத்திய சம்பவம் விசாரணை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் ஆச்சரியத்தையும
ஏற்படுத்தியுள்ளது!
இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கபில சந்திரசேன நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அது நடந்திருந்தால் வழக்கின் முக்கிய சாட்சியாளர் சுதந்திரமாக உயிராபத்தின் அச்சமின்றி ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக மேலும் பல உண்மைகளை வெளிகொணர வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர்கள் அந்த பிடியில் இருந்த தப்ப வாய்ப்பே இருந்திருக்காது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கபில சந்திரசேன மரணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆரம்பத்தில் இது தற்கொலை முயற்சியாக சித்தரிக்கப்பட்டாலும், தற்போது அது சந்தேகத்திற்கிடமான மரணமாகவே விசாரிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் அடையாளம் காணப்படாத இரசாயனப் பொருள், இரத்தக் கறைகள், கழுத்தில் கட்டப்பட்டிருந்த உடல் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும ஒருவகை பட்டி ,போன்ற ஆதாரங்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச இரசாயன ஆய்வாளர் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மரணத்தை நினைவூட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ராஜா மகேந்திரன் ஆகியோரின் மரணங்களும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் இடம்பெற்றதாக மீண்டும் பேசப்படுகிறது.
அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான டி என் ஏ சோதனை நடவடிக்பைகளில் முக்கிய பங்கு வகித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்கவின் மரணமும் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. அவர் மீது அரசியல் அழுத்தங்கள் செலுத்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட டி என் ஏ அறிக்கையை மாற்றுமாறு ராஜபக்ச தரப்பினரால் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன!
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழல் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவான அரசியல், நிதி மற்றும் குற்ற வலையமைப்புகள் இன்னும் செயலில் உள்ளன என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் கும்பல்கள், பாதாள அமைப்புகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் தற்போதைய ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளும் விரைவில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ புலனாய்வு பிரிவுகளுடன் தொடர்புடைய சிலரின் பெயர்கள் வெளிவரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்தின் ஆதிக்கத்துடனும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், மக்களின் நம்பிக்கை மீண்டும் முறியடிக்கப்படும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
#kamalanathanswiss
No comments:
Post a Comment