Tuesday 10 January 2023

ஒரு ஆணின் உதவியின்றி ஒரு பெண்ணால் முக்தி அடைய முடியாதா?

 ஒரு ஆணின் உதவியின்றி ஒரு பெண்ணால் முக்தி அடைய முடியாதா?

ஓசோவின் பதில்
***********************
ஆண்மையிலிருந்து வேறுபட்டது பெண்மை. இது ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது. ஆண் ஒரு பெண்ணின் மூலமாகத்தான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவேதான் ஆன்மீகத்தில் நேர்மாறாக நடக்கிறது. ஒரு பெண் ஒரு ஆண் மூலமாகத்தான் முக்தி அடைய முடியும். அவர்களது உடலமைப்பு வேறுபடுவதைப்போல அவர்களது ஆன்மீக சக்தி வேறுபடுகிறது.
இது சமம் என்பதைப் பற்றியோ, சமமில்லை என்பதைப் பற்றியோ அல்ல. இது வேற்றுமை பற்றியது. பெண்கள் நேரிடையாக முக்தி அடைய முடியாது என்பதால் அவர்கள் ஆணைவிடத் தாழ்ந்தவர்கள் அல்ல.
அவர்கள் வேறுபட்டவர்கள். இதுதான் உண்மையும்கூட.
அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். தியானம் தனியே செய்யலாம். ஆண் தியானத்தின் மூலம் அடைய முடியும். அதனால்தான் அவனால் நேரிடையாக முக்தி அடைய முடியும். அவனால் தனியாக இருக்க முடியும். அவன் அடி ஆழத்தில் தனியாகத்தான் இருக்கிறான்.
தனிமை ஆணுக்கு இயற்கையாகவே வருகிறது. பெண்ணுக்கு தனியாக இருத்தல் மிகவும் கடினமானது. கிட்டத்தட்ட முடியாது எனலாம். அவள் முழு உயிரும் அன்பிற்கு ஆழமாகத் துடிக்கிறது. அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். அங்கு ஒருவரும் இல்லாமல் எப்படி அன்பு செய்ய முடியும்?
பெண், பெண்மை அன்பின் மூலம் தியான நிலையை அடைகிறது. ஆண்மை தியானத்தின் மூலம் அன்பை அடைகிறது.பெண்னால்
தியானம் செய்ய முடியாது. ஏனெனில் அவளது முழு உயிரும் அடுத்தவருக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது. அவளால் தனிமையாக இருக்க முடியாது.
எப்போதெல்லாம் அவள் தனியாக இருக்கிறாளோ, அப்போதெல்லாம் அவள் துயரத்தில் இருக்கிறாள். அதனால் தனிமை ஒரு ஆனந்தம், தனிமையாக இருத்தல் களிப்பு என்று சொன்னால் ஒரு பெண்ணால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.
தனிமையாக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஏனெனில் பல ஞானிகள் புத்தர், மகாவீரர், ஜீசஸ், முகம்மது எல்லோரும் ஆண்களே, இவர்கள் எல்லோரும் தனிமைக்குள் சென்றிருக்கின்றனர். இவர்கள் தனிமையில்தான் அடைந்திருக்கின்றனர். அவர்கள் அந்தக் கருத்தை உருவாக்கி விட்டனர்.
ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது வேதனையடைவாள்..
அவளைச் சுற்றி அன்பிருந்தால் அது அவளுக்கு ஊட்டமளிக்கும். அது ஒரு ஊட்டச் சத்து. அது ஒரு நுட்பமான உணவு. எப்போதெல்லாம் ஒரு பெண் அன்பில்லை என்று உணர்கிறாளோ அப்போது துன்புறுகிறாள், அவஸ்தைப்படுகிறாள். அவள் முழுமையும் சுருங்கி விடுகிறாள். அதனால் ஒரு பெண்ணால் தனிமை ஆனந்தமாயிருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.
பெண்மைதான் பக்தியையும் அன்பு வழியையும் உருவாக்குகிறது. இறைமை அன்புகூட இதை செய்ய முடியும். உடல் மூலம் அன்பு தேவை இல்லை. மீராவுக்கு கிருஷ்ணரேபோதும் என்பதைப்போல். அங்கு சிக்கல் இல்லை.
சஏனெனில் அங்கு மற்றவர் உள்ளார். அவன் அங்கு இல்லாமல் இருக்கலாம். கண்ணன் ஒரு மாயையாக இருக்கலாம். ஆனால் மீராவுக்கு அவர் உள்ளார். அன்பிற்குரியவர் உள்ளார். மீரா மகிழ்ச்சியடைகிறாள், ஆடுகிறாள், பாடுகிறாள். அவள் வளர்கிறாள்.
மற்றவர் அங்கு இருக்கிறார் அன்பு செய்ய என்ற அந்தக் கருத்தே, அந்த எண்ணமே, அந்த உணர்வே பெண்ணுக்கு நிறைவை அளித்துவிடுகிறது. அவள் மகிழ்வுடன் துடிப்புடன் வாழ்வாள். இந்த அன்பில்தான் காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும் ஒன்று என்ற முடிவுக்கு அவள் வருவாள். பிறகு தியானம் நிகழும்...
(LOVE AND MEDITATION)
என்ற நூலில் இருந்து..
(ஓசோ)

No comments:

Post a Comment