Tuesday 10 January 2023

இறைவன் எங்கே ? எல்லாம் மாயை,....!

 இறைவன் எங்கே ?

எல்லாம் மாயை,....!
அண்டத்தில் நிறைந்தவனே உன் பிண்டத்திலும் இருக்கிறான் என்பது தத்துவம். அது ஆதிசங்கரர் தந்த அத்வைத கோட்பாடு. உன்னுள் இருக்கும் இறைவனே அடுத்தவரிடமும் உள்ளான். எல்லா உயிர்களிலும் இருப்பது அதுவே என்கிறது அக்கொள்கையின் "தத்துவமசி" என்னும் வார்த்தை.
அப்படியென்றால் காண்போர் எல்லாம் இறைவனா என்று யோசித்தால் அக்கொள்கையின் மீதான ஈர்ப்பு சற்றே குறைகிறது. இதை புரிந்துக் கொள்ள நீரின் ஓட்டத்தை உதாரணமாகக் கொளளலாம். நீரானது காற்றில் நீராவியாகவும் பூமிக்கடியில் நீரோட்டமாகவும் புவிபரப்பில் ஆறு, நதி , ஓடை , கால்வாய், கடல் என மாறுப்பட்டுக் காணப்பட்டாலும் அதன் சாரம் ஒன்றுதான் அது நீர். ஆனால் எல்லா நீரும் ஒன்றாகிவிடாது.‌ கூவத்து நீரையும் காவிரி நதி நீரையும் ஒன்றாக எண்ணமுடியாதல்லவா. ஆனால் இரண்டும் வெப்பத்தால் வற்றும் போது நீர் மூலக்கூறு மட்டுமே ஆவியாகிறது. அதாவது சாராம்சம் நீர்தான் அது இருக்கும் இடத்தைப் பொருட்டு தன்மையில் மாறுகிறது. அதுபோலத்தான் ஆன்மாவும். அது தூய்மையானது. அது வேறொன்றுமில்லை, பிரபஞ்ச சக்தி நிறைந்த காற்றுதான் அது. இறக்கும் போது மறுபடியும் வளிமண்டலத்தில் கலந்துவிடுகிறது. அப்படியிருக்க அனைவரிடத்திலும் இறைவனை காணுதல் என்பது அர்த்தமற்றதாகிறது. காவிரியும் கூவும் போல , இரண்டும் நீர்தான். என்றாலும் கூட காவிரி நீரைத் தான் பருகமுடியும்.
அப்படியென்றால் அது த்வைதம் ஆகிறதா ? பரமாத்மா ஜீவாத்மாவாக பிரிந்து உயிர்களில் ஜீவிக்கும் போது அது வேறு இது வேறு என்று தனது பண்பில் சற்று மாறுபடுகிறதா ? அல்லது ஒரே ஆற்றல் ஒவ்வொரு பொருளிலும் வெவ்வேறு பண்பென விசிஷ்டாவைதமாகிறதா ? விளக்கம் பெற வேண்டுமென்றால் நீண்ட சிந்தனை அவசியமாகிறது. உண்மையில் இவையெல்லாம் தத்துவ போதகர்கள் தாம் அறிந்த கருத்துக்களாக சொன்னது ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் சிந்தனையின் தீவிரத்தை பொறுத்தது.
அப்படியென்றால் இறைவன் யார் அவன் எங்கே என்று கேட்டால் இறைவன் என்பதே Abstract noun" அதாவது இல்லாத பொருள். அமிர்தம் என்று எதுவும் கிடையாது ஆனால் சுவையான, மேன்மையான பொருளை அமிர்தத்துடன் ஒப்பிட்டு கூறுவர் அதுபோலத்தான் கடவுளும்.
"பக்தி பாதையில் புத்தி நிற்காது" என்பது பழமொழி. சதுரகிரி பயணத்தின் போது சித்தர்கள் பைரவர் தோற்றத்தில் பாதை காட்டினர் என பரவசத்துடன் பேசும் பக்திமான்களை பார்த்திருக்கிறேன். சித்தர்கள் ஏன் பைரவர் தோற்றத்தில்தான் வர வேண்டுமா மான்,மயில் போன்றத்தோற்றத்திலோ அல்லது காற்றில் ஓர் பிம்பம் போல வந்து பாதைக் காட்டிருக்கலாமே. காரணம் என்னவென்றால் சித்தர்கள் என்பதே ஒரு கட்டுக்கதை எங்கே யாராவது ஒருவராவது நான் 18 சித்தர்களில் இவரை பார்த்தேன் என்று சொல்ல சொன்னால் உண்மைபேசும் யாரும் தான் கண்டதாக சொல்ல மாட்டார்கள். நாய் மனிதனை அண்டி வாழும் ஓர் விலங்கு. அதனால் மனிதர்கள் மீதான ஈர்ப்பின் காரணமாக அது அருகில் வரலாம். பல மனிதர்களை கண்டதால் அவர்கள் பாதையை அது கவனித்து வைத்திருக்கலாம். அவ்வளவுத்தான். அது சித்தர் கிடையாது.
ஒவ்வொரு தெய்வத்தின் பெயரையும் அதன் புராண கதைகளையும் யோசித்துப் பார்த்தால் அதுவும் கற்பனையே என் தெரியவரும். மதுரையை ஆண்டது பாண்டியர்கள். பாண்டியரின் கொடி மீன்கொடி. பாண்டியரின் ஆட்சி என்பதை மீனின் ஆட்சி என்னும் பொருட்டு மீன்+ஆட்சி என உருவாக்கப்பட்ட கடவுள்தான் மீனாட்சி மற்றபடி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் எல்லாம் பின்புலமே‌. இடைகாடன் அவமானத்திற்காக கோவில் விட்டுசென்ற இறைவன் அழுது புலம்பும் பக்தனுக்காக இப்போது ஏன் வருவதில்லை ? அன்பே சிவம் ' எனக்கூறும் சைவ சமய கொள்கை எண்ணாயிரம் சமணர்கள் கழுகேறும் போது எங்கே சென்றது ? அப்போது ஹிட்லரின் மனப்பாங்காற்கிற்கும் ஆளுடைய பிள்ளையின் செயலுக்கும் வேறுபாடு இல்லையே. தருமிக்கு பொற்கிழி வழங்க, தானே கவிதை வரைந்த இறைவன் தகுதி இல்லாத ஒருவன் தன் பக்தன் என்பதால் செய்வது நேர்மையானதா. தான் நினைத்தால் ஒருகோடி மாம்பழங்களை உருவாக்க முடிந்தபோதிலும் ஒற்றை மாம்பழத்திற்காக முருகன் கோபத்துக் கொண்டாரா? யோசித்து பார்த்தால் திருவிளையாடற் புராணம் முழுவதுமே கற்பனை கதைகளாக தோன்றும் .‌செண்பகபாண்டியனின் காலம் வரலாற்றில் இல்லை. காரணம் பரஞ்சோதி அந்த நூலை எழுதியது 17ஆம் நூற்றாண்டு. சங்ககால நிகழ்வுகளை பத்திரபடுத்திய எட்டுத்தொகை பத்துப்பாட்டில் கூட இக்கதைகள் சம்மந்தமான முழுமையான விளக்கங்கள் இல்லாத போது செவிவழி செய்தியாக தன்குறிப்பேற்றி புலவர் எழுதியிருக்கலாம். இக்கதைகள் தரும் கருத்துக்கள் மகத்தானவை ஆனால் கதைகள் கற்பனைகளாக எண்ணத்தோன்றுகிறது.
அருவம் என்பது உருவமற்றது அப்படியிருக்க லிங்கத்தினை எப்படி அருவமாக கொள்ளமுடியும் ? அது ஆணின் உறுப்பின் வடிவம் என ஒரு சாரர் கூறுவதும் யோசிக்கூடியதே. திருமாலுக்கு தரும் நாமமும் பெண்ணின் உறுப்போடு தொடர்பு படுத்த படுவதும் உண்டு. எனவேதான் திருமால் மோகினி அவதாரம் கொண்டதன் காரணமாய் சில விஷயங்களை புராணங்களில் காணமுடிகிறது. நெருப்பிற்கு ஒத்த சிவனின் தன்மையை விட உயர்வாக காட்டும் பொருட்டு நீரின் கடவுளாக நாராயணனை உருவாக்கினர். விஷ்ணு அழித்த ராவணன் இரண்யகசிபு என அனைத்து அசுரர்களும் சிவபக்தர்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் சிவன் சூடும் பாம்பினை கொத்தித் திண்ணக்கூடியது. ஆக இவர் விட அவர் சிறந்தவர் என காட்ட உருவாக்கப்பட்ட கடவுள்கள் !
தடுத்து நின்ற பத்தாயிரம் பேரின் தலையை வெட்டி வீழ்த்தி சோம்நாத் ஆலயத்தின் தங்க சிவலிங்கத்தை உடைத்து முகமது கஜினி தூக்கிச் சென்றபோதும் ஔரங்கசீப் தலைமையில் நவாப் படை 5000 பேரைக் கொன்று காசி விசுவநாதரை கங்கையில் தூக்கி எறியும் போது எங்கே போனார் கடவுள் ? இறைவனின் பாதை என காட்டிய நபிநாயகத்தின் பேரன்மார்கள் இரு பிரிவாக பிரிந்து தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்து மாளும்போது இறைவன் வராதது ஏன் ? தன் இன் மக்களை ஹிட்லர் மொத்த மொத்தமாக கொல்லும் போதும் அவர்களை காக்க ஜீஸஸ் வராது விட்டது ஏன் ? ஏனென்றால் கடவுளென வர்ணிக்கப்படும் அனைத்தும் கற்பனை கதாபாத்திரங்களே !
சில மதமார்க்கர் அனைத்து ஜீவராசிகளையும் படைத்தது இறைவனே என்பர். இறைவன்தான் அனைத்தையும் படைத்தார் என்றால் மனிதனை தவிர்த்து மற்ற உயிரினங்கள் இறைவனை தொழாதது ஏன் ? அனைத்து உயிரினங்களும் மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டவை என கூறி அதை இம்சித்து கழுத்தை மட்டும் அறுத்து துடிக்கவிட்டு இறந்தப்பின் இறைச்சியாக உண்ணும் சில மதமார்களும் உண்டு. தன்னுடலைப் பெருக்க அடுத்த ஜீவனை வஞ்சித்து துடிதுடிக்க கொன்று நாருசிக்க உண்ணும் படியும் தன் திருவிழாவைக் கொண்டாடும் படியும் கூறும் இறைவனை கருணை மிக்கவன் எனக்கூறுவது எப்படி சரியாகும் ?
ஹோமிநிட்ஸ், ஹோமோ எரக்டர்ஸ், ஹோமோசெப்பியன்ஸ் முதல் கற்கால மனிதன் வரை கடவுள் பற்றிய கான்சொப்ட் கிடையாது. மனிதனின் நாகரீக வளர்ச்சியின் முன்னேற்றத்தின் போது உருவாக்கப்பட்வர்தான் கடவுள்.
அப்படியென்றால் கடவுள் என்பவர் இல்லையா என்றால் அது ஒரு இயக்கம் மட்டுமே. இயங்கிக் கொண்டே இருக்கிறது. அது பிரபஞ்ச ஆற்றலின் சிப்பங்கள். இறை என்பது வியத்தகு ஆற்றலின் அருவம். இறைவன் என்பது அந்நிலையை அடைந்தவனுக்கு வழங்கப்படும் பதவி. குரங்கினத்தில் மேலோங்கி யோசித்தக் குரங்குகள் மட்டுமே மனிதனாகின. மற்றவை குரங்குகளாகத்தான் இன்னும் திரிகின்றன.மனிதனில் மேலோங்கிய சிந்தனைப் பெற்றவன் இறைநிலையை அடையகிறான். "கந்தகோட்டத்து வளர்தளமோங்கும் கந்தவேலே என பாடிய வள்ளலாரும் கூட இறுதியில் "தன்னையறிந்து இன்பமுமற வெண்ணிலாவே தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே" என பாடுகிறார்.
யோகம், யாகம், குண்டலினி எழுச்சி என மரணமில்லா பெருவாழ்வுப்பற்றி மேடைப் போட்டு பேசும் குருமார்கள் யாரும் மரணமில்லாது ஜீவித்ததற்கான சான்றுகள் இருக்கின்றனவா என்பதும் யோசிக்க கூடியதாகவே உள்ளது. ஆக இறைவனைப் பற்றிய உருவங்கள், கதைகள், பாதைகள் அனைத்தும் மாயை ! இறைவனைப் பற்றிய அறிவைப் பெற அவனைப் பற்றிய செய்திகளை அறிய வேண்டுமென்றால் சமயத்தின் முன்னோடி நூல்களை ஆர்வமுடன் படித்து அதனை ஆழ்ந்து சிந்திக்கும் போது மட்டுமே தெளிவுகிடைக்கிறது. ஏனெனில் இறைவனைத் தேடும் மனிதன் இறுதியில் தன்னிடம் இறைவனை உணர்கின்றான். ஆக மனித சக்தியே தன் சிந்தனா சக்தியில் மேலோங்கும்போது இறைநிலையை அடைகிறது என்பதே நிதர்சனம்.
இவண்,
ந.திருமலை
மேகம் இன் படமாக இருக்கக்கூடும்
36

No comments:

Post a Comment