Saturday 5 February 2022

மதில்.... மதகு.... மரத்தடி... மனசு....

 மதில்.... மதகு.... மரத்தடி... மனசு....

(முக நூலில் புகைப்படம் ஒன்றிற்கு நான் அளித்த கருத்து எனது நட்பு வட்டத்தில் ஏற்படுத்திய நினைவுகளை கிளறிய தாக்கம் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது அதனை முதலில் தருகின்றேன் பின்பு நான் தொடருகின்றேன்... கூடவே அவ புகைப்படத்தையும் பதிவு செய்கின்றேன்)
[ '....இல்லை இல்லை. உங்கள் கேள்வி ஒருமுறை என்னை கடந்த காலத்துள் புதைத்து விட்டது.
இது வெறும் மதில் அல்ல.
அன்றொருகாலத்தில் நம் வீட்டின், நாம் வாழ்ந்த ஒழுங்கையின் அடையாளம்.
பலரும் களைப்பாறிய பாலம். ஊரை இருள் கவ்வ
போதையில் வரும் பலர் தம் பேருரைக்கு அரங்காகி நின்ற இடம். பலரின் வரலாறு பதிந்த இடம். பலரின் மறக்கமுடியாத நினைவுகள் பதிந்த இடம். அங்கு வாழ்ந்த பலரது இரகசியங்களை இது மாத்திரமே அறிந்திருக்கும். அயலவர்களின் கொண்டாட்டங்களுக்கு அந்தக் கால (80, 90 கள்) சூட்டிங் ஸ்பொட். அந்த அழகான ஒழுங்கையில் வாழ்ந்த அத்தனை பேரது நினைவுகளைச் சுமக்கும் அல்பங்களில் தவறாமல் இடம்பிடித்துக்கொண்ட களம்.
இப்படி இந்த இடத்திற்கான பெருமையும் மரியாதையும் நினைவுகளும் எக்கச்கச்கம்..
ஆனால்,
காலத்தால் மாற்றப்பட்ட பலவற்றுள் இந்த நம் இனிய மதிலும் அடக்கம். சுற்றம் சிதறிப்போனாலும் அன்று நாம் வாழ்ந்த ஒழுங்கையை நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நம் வீட்டு இனிய மதில் கண்டிப்பாக மனக்கண்ணில் விரியும்.
கடந்த கால இனிய நினைவுகள் மீட்கப்படுகின்றபொழுது நிகழ்காலம் இன்னும் புதியதாகத் தெரியும்..." ]
நாம் எம் வாழ்வில் இவற்றை கடக்காமல் வந்திருக்க முடியாது. வாழ்வியலை நாம் பேசவேண்டின் இவற்றைப் பற்றியும் நாம் பேசியே ஆகவேண்டும்.
மதில்.. மதகு.... மரத்தடி... மனசு....இதனைத் தாண்டி நாம் வந்திருக்கவே முடியாது எம் கடந்த கால நினைவுகளை இவற்றை சுற்றியும் பல சுற்றுகள் சுற்றித்தான் வந்திருக்கின்றது. இங்கு மதில் என்று குறிப்பட்டாலும் அது பொதுவில் வேலியைதான் குறிக்கின்றது.
உலகம் முழுவதும் நகர வாழ்வை விட கிராமம் சார்ந்த வாழ்வே இன்று வரை மேலோங்கி இருக்கின்றது. இதுவே இனிமேலும் தொடரப் போகின்றது. இது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் பொருந்தியே இருக்கின்றது. ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு பயணிக்கு வேளைகளில் நாம் இதனைக் காணமுடியும்.
பயணத்தின் போது இந்த கிராமிய சூழலில் நாம் எல்லோரும் லயித்தும் போகின்றோம் இதில் வயது வேறுபாடுகளும் இல்லை நாட்டு வேறுபாடுகளும் இல்லை என் கால நிலை வேறுபாடுகளும் இல்லை.
இது அண்டாட்டிகாவில் இருந்து அலாஸ்கா வரை கிழக்கு மேற்காக வடக்கு தெற்காக துருவங்களிலும் மத்திய ரேகையிலும் சம தரையிலும் மலை முகடுகளிலும் ஏன் நீரினால் சூழப்பட்ட சிறு சிறு தரைப் புட்டிகளுக்கும் பொருந்தியே இருக்கின்றது.
இந்தக் காட்சிகள் நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தின் மதில்களையும், மதகுகளையும், மரங்களையும் எமது மனதிற்கு இழுத்து வந்து அசை போட்டு சங்கீதம் பாட வைத்து விடுகின்றது. இதில் நாம் ஒவ்வொருவரும் நாம் கடந்து வந்த பாதைகளின் அனுபவங்களுக்கு ஏற்ப வேறு வேறு சங்கதிகள் இணைத்து சங்கீதங்களை இசைக்க ஆரம்பித்துவிடுகின்றோம்.
இந்த ரீங்காரங்கள் அன்பு பரிமாற்றத்தின் போதும் உரையாடல் பரிமாற்றத்தின் போதும் இன்னும் அதிக இராகங்களை எமக்கு புதிது புதிதாக உருவாக்கி ஒரு கச்சேரியை நடத்தி விடுகின்றன. இதில் நாம் கேட்கும் கானங்கள் பல்வேறு இசைக்கருவிகளால் இசைக்கப்பட்டவையாக இருக்கின்றன.
இதில் லயித்து இழந்து விட்ட வாழ்வை எண்ணி ஏங்கி இனி வரும் வாழ்வில் இவற்றை நாம் பெறவேண்டும் என்ற தேடலுக்குள் எம்மை ஆழ்த்திவிடுகின்றது. எனவே தான் வாழ்க்கை அழகானது என்கின்றனர் எல்லோரும். மரணத்தை தவிர்த்து வாழ்வை நேசிக்கின்றனர்.
புதிய இலத்திரனியல் உலகம் இந்த மதில்களையும், மதகுகளையும், மரத்தடியையும் பூட்டி அறைக்குள் தனிமையில் இருந்து தேட முனைந்து தோற்றுப் போகின்றது.
உலகத்தின் மறுமுனையில் இருக்கும் முகம் தெரியாத ஒருவருடன் மணிக்கணக்கில் தொடர்பில் இருந்து தேட முனைகின்றது. இந்த தொடர்பு அறுந்ததும் அந்த மதில்களும், மதகுகளும், மரங்களும் மறந்து போய்விடுகின்றன.
மறு நாள் இதே நபருடன் அல்லது இன்னொருவருடன் இதே பூட்டிய அறையில் அதே பல மணி நேரம் தொடர்பில் இருந்தாலும் கடந்த நாள் மதில்களும், மதகுகளும், மரங்களும் எம் நினைவலைகளில் எடுத்து வரமுடிவதில்லை.... இவை எம் மனங்களில் ஆக்கரமிப்பை ஏற்படுத்துவதும் இல்லை.
செயற்பாடுகள், உடற்பயிற்சி அற்று புரொய்லர் கோழிகளாக வளர்க்கப்பட்டு நிறை வந்ததும் வெட்டி விற்கும் வியாபாரப் பண்டம் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் நாம் இப்போது.
கண்ணையும் கண் நோக்கி.. ஸ்பரிசித்து... அளவளாவி.... அன்பை பரிமாறி.... அனுபவங்களைப் எடுத்தியம்பி இயற்கை சூழலில் பிராண வாயுவை சுவாசித்து இயற்கையுடன் ஒன்றிப் போவதற்கு பதிலாக ஒன்று(1) பூச்சியம்(0) என்ற தொழில் நுட்பத்தின் பிடியிற்குள் மாத்திரம் மூழ்கிப் போய்விட்டோம். இவை எம்மை சிறை பிடித்துவிட்டன.
நாம் ஒவ்வொருவரும் தனித் தனி உலகமாகி ஒரு வீட்டினுள் தனித் தனி அறைகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றோம். இணைந்த கரங்களாக தோரணங்களை கட்டுவதும், பந்தல் போடுவதும், பந்து விளையாடுவதும் வெள்ளம் ஏற்பட்டால் அணை போடுவதும், ஊரை துப்பரவு செய்வதும். என்றில்லாமல் வீதியில் விழுந்த மனிதனை அன்புலன்ஸ் பார்த்துக் கொள்ளும் என்றும் கடந்து போய்விடுகின்றோம்.
நல்ல கலை நிகழ்சியில் என் பிள்ளை பாடிய பின்பு.... ஆடிய பின்பு நாளைக்கு வேலை என்று கூறிக் கொண்டு பிள்ளைகளை இழுத்துக் கொண்டு தனி வாகனத்தில் பொது வாகனப் பாவிப்பை தவிர்த்து நகர்ந்து விடுகின்றோம் கூடி வாழுதல் கூட்டுறவாக வாழுதல் குழாவுதல் கும்மியடித்தல் எல்லாம் இல்லாமல் போய் கொண்டிருக்கின்றது.
கோவிலில் கூட்டத்தில் சற்று இடிபட்டு பிரசாதம் வாங்கி கிடைக்காதவர்களுக்கு பகிர்ந்தும் எனக்கு கிடைத்த சந்தனத்தை மற்றவர்களின் நெத்தியில் வைத்து உறவு பாராட்டும் பழக்கங்கள் அருகி வருகின்றன.
உலகின் புதிய ஒழுங்கு உங்களை தனித்தனியாக வைத்திருக்கவே விரும்புகின்றது. நீங்கள் இணைந்த கரங்களாக புறப்பட்டால் இந்த மூலதனங்கள் தனி ஒருவனின் கையில் மேலும் மேலும் திரளுவதை கேள்வி கேட்பீர்கள்... போராடுவீர்கள்.... இதற்கான தடா போடவே இந்த தனிமையும் தனி உலகக் கோட்பாடுகளும் தனி வங்கி கணக்குகளும்.
தனித்தனியாக இருப்பவனுக்கு மரத்தடி நினைவும் இல்லை.....! மதகடிக் கனவுகளும் இல்லை....!! மதகுடன் பேசிய இரகசியங்களும் இல்லை...!!!
இந்த மரங்கள், மதில்கள், மதகுகளுக்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு எமது வாழ்வை சந்தோஷங்களை இழப்புகளை, இயலாமைகளை, வெற்றிகளை, தோல்விகளை, காதல்களை, நட்புகளை கூறிய வரலாறு உண்டு.
பல மதில்களுக்கும், மரங்களுக்கும், மதகுகளுக்கும் மட்டும் தெரிந்த பல இரகசியங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் மீட்டுப் பார்த்து பெரு மூசசு விடுவதும் ஏங்குவதும் எமது வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிய இயற்கையுடன் வாழ்ந்த வாழ்வுகள் அவை. இங்கு மதில்கள் எனபதை விட வேலிகளுக்கே அதிகம் இந்த ரம்மியங்கள் இரகசியங்கள் அன்புப் பரிமாற்றங்கள் அதிகம் தெரியும்.
இவைகளிடம் ஒரு கரித் துண்டை எடுத்துக் கொடுங்கள் அவை 'கள்ளிக் காட்டு" இதிகாசங்களை கிறுக்கியே தீரும். இவை எழுதும் நவீன புறநானூறுகள் நாம் வாழந்த வாழ்வை எடுத்துக் கூறும்.
நாம் வாழ்ந்த அந்த இனிய நினைவுகளை சுரமாக்கி எமக்கு கீதங்கள் பாடித் தரும். இந்த சுகங்களில் லயித்துப் போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஒவ்வொரு ஊரிலும் இந்த மதில்களும், மதகுகளும், மரங்களும் ஏதோ ஒரு இனம் தெரியாத இழந்த கீதங்களைப் பாடிய வண்ணமே இருக்கின்றன.
எம்மிடம் இருக்கும் சில புகைப்படங்களின் பின்புலமாக இவை இருப்பதினால் இந்த புகைப்படங்களை நாம் காணும் போதெல்லாம் அந்த குழந்தைப்பருவத்தின் இளமைப் பருவத்தின் ரம்மியங்களை அவை ராகங்களாக எமக்கு பாடிக்கொண்டே இருகின்றன.
இங்கு முகாரி ராகமும் இல்லாமல் இல்லை ஆனாலும் இதற்குள் ஒரு மோகன ராகம் இணைந்தே இசைத்துக் கொண்டு இருக்கும்.
ஈழவிடுதலை போராட்டத்தின் போது வேலி தாண்டி விளையாட்டு வீரனைப் பற்றி கூறும் வேலிகள் பல உண்டு. இவனி(ளி)ன் உயரம் பாய்தல்தான் இன்றுவரை ஒலிம்பிப் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படாத அதி உயரம் பாய்ந்த பாய்சலாக இருக்கின்றது.
மதகின் குழாய்களில் நீர்ப் பாய்சலுடன் எமது நட்புகளின் காதல்களின் கலந்துரையாடல்களின் பகிடிகளின் ஏன் வசைபாடல்களின் ஒலியோட்டமும் கலந்து பாய்ந்து சமுத்திரத்திற்குள் கலந்து அது சர்வ தேசம் எங்கு பரம்பிய செய்திகள் அதிகம்.
இவை ஒரு வாழ்வியலை ஒரு ரம்மியத்தை ஒரு களியாட்டததை நினைவலைகளை எமது மனதில் வருடிச் செல்வதை யாரும் மறுக்க முடியாது. இது நாம் வாழந்த காலத்து வரலாறுதான்.
அந்த மதில்களிலும் மதகிலும் மரத்தடியிலும் காலாட்டி இருந்து கனவு கண்ட காலங்கள்...மது போதைப் பிரியர்களின் சரணாலயமாகவும் இருந்ததும் இதே இடங்கள்தான். போதையில் வரும் கானங்களை தனியே பாடி... ஆடிக் காட்டியதும் இங்கேதான்.
சினிமாக்களைப் பற்றி அலசி ஆராய்ந்து பிரிசுரிக்காத விமர்சனம் எழுதிய நாட்களும் இங்குதான்.
எம்ஜிஆர், சிவாஜி கமல், ரஜனி அஜித், விஜே தனுஸ், சிம்பு என்று தலை உருண்ட விவாதங்கள் போகிற போக்கில் 'பொலிஸ்" என்றதும் அது எமது வீட்டுக்காரரை உணர்த்த மதகிலும் மரத்தினுள்ளும் வேலிக்க்குள் மறைந்ததும் மறைய முடியாவிட்டால் கிடைத்த கண இடைவெளில் உருவாக்கி சொன்ன கற்பனைக் கதைகளில் நாம் பெரிய கதாசரியர்களாக மாறிய அந்த கணங்கள் பாலசந்தரின் திரைப்படத்து திருப்பங்கள்.
கரித்துண்டினால் என்னவளின்(ன்) பெயரை பிறருக்கு புரியாமல் கிறுக்கிய அந் நினைவுகள் புரிந்த என்னவனி(ளி)ன் பதில் கிறுகல்கள்தான் எமது முதல் காதல் கடிதம்.
இந்த காதல் காவியங்கள் அழிக்க முடியாத காவிங்களாகவும் சில கண்ணீர் கதைகளாக மாறினாலும் அறுபதை கடந்தாலும் இதயத்தின் ஒரு மூலையில் நெருடிக் கொண்டும் இனித்துக் கொண்டு இருக்கும் அலைகள் ஓய்வதில்லைகள்.
இதனைப் கேட்டுதானோ பாரதிராஜ தனது 'அலைகள் ஓய்வதில்லை" வடிவமைத்திருப்பாரோ....? கௌதம் மேனன் 'வாரணம் ஆயிரம்" செதுக்கி இருப்பாரோ...?
வாழ்க்கையை அர்தமுள்ளதாக்க பூச்சியம் ஒன்று என்ற இலத்திரனில் உலகிற்குள் மூழ்கி தனிமையில் பூட்டிய அறையில் மதில்களையும் மதகுகளையும் மரங்களையும் தேடாமல் கண்ணும் கண் நோக்கி அளவளாவி அன்பை பரிமாறி ஸ்பரிசித்து இயற்கையுடன் இயந்து இசைபாடுவோம் தோழர்களே

No comments:

Post a Comment