Thursday 17 February 2022

ஹிஜாப் பெண் அடக்குமுறையின் அடையாளம்..

 ஹிஜாப் பெண் அடக்குமுறையின் அடையாளம்.. ஆண்களையும் அவமதிக்கிறது என்கிறார் தஸ்லிமா நஸ்ரின்!

‛‛ஹிஜாப் என்பது அடக்குமுறையின் அடையாளம். இது பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவமானம்'' என வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பெண்ணிலைவாதியும், சமூக ஆர்வலருமான தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக மதஉரிமை என்பது அனைவரும் கல்வி பெறுவது தான் என நான் நம்புகிறேன். ஹிஜாப், புர்கா, நிகாப் ஆகியவை அடக்கு முறையின் அடையாளங்கள். முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் ஹிஜாப் அவசியம் என்றும், இன்னொரு தரப்பினர் அவசியம் இல்லை எனவும் நினைக்கின்றனர்.”
“7ம் நூற்றாண்டில் சில பெண் வெறுப்பாளர்களால் ஹிஜாப் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பெண்கள் வெறும் பாலியல் பொருளாக கருதப்பட்டனர்.
பெண்களை பார்த்தால் ஆண்களுக்கு பாலியல் ஆசை இருக்கும் என்று நம்பினர். இதனால் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்தனர். ஆண்களிடமிருந்து, அவர்களின் பார்வையில் இருந்து தங்களை மறைத்துக் கொண்டனர்.”
“தற்போதைய 21ம் நூற்றாண்டில் பெண்களுக்கும் சமஉரிமை உள்ளதை நாம் அறிந்துள்ளோம். அதனால் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை அடக்கு முறையின் அடையாளமாக உள்ளது. அதே நேரத்தில் பெண் என்பவர் குழந்தை பெற்றெடுக்கும் நபர் மட்டுமே எனும் நோக்கத்திலான பார்வை புர்காவால் குறைந்துள்ளது என நினைக்கிறேன். இருப்பினும் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் அவமானப்படுத்துகிறது” என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு பிற மாவட்டங்களிலும் பரவி, கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அத்துடன், கர்நாடக அரசும் பாடசாலைகள், கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
இந்த அமர்வு வழக்கு விசாரணை முடியும்வரை பாடசாலை, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கர்நாடகத்தில் தினமும் பாடசாலை, கல்லூரிகளுக்கு மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து சமூகமளிக்கின்றனர். ஆசிரியைகளின் கோரிக்கையை ஏற்று சில மாணவிகள் ஹிஜாப்பை அகற்றி பாடசாலை, கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.
சில மாணவிகள் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை. இதை விட்டுக்கொடுக்க முடியாது எனக்கூறி திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையிலும், சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஆசிரியை ஹிஜாப் உடை அணிந்து சென்றமை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. அதனால் வாதப் பிரதிவாதங்களும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் தொடர்கின்றன.
தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர். குறிப்பிட்ட மதம்சார்ந்த விஷயங்களை தனது எழுத்துக்கள் மூலம் கண்டித்து வருவதால் தொடர் சர்ச்சையில் சிக்கிவருபவர்.
மேலும் பெண்ணியம் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதி பிரபலமானவர். குறிப்பிட்ட மதம் சார்ந்த இவரது எழுத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
இதனால் வங்காளதேசத்தில் இருந்து வெளியேறிய அவர் அமெரிக்கா, ஐரோப்பா, சுவீடன் நாடுகளில் தஞ்சமடைந்திருந்தார். தற்போது இந்தியாவில் குடியேறி டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து இனங்களின் இன, மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களும், தனித்துவங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பது, எவ்வளவுக்கு முக்கியமானதோ, அதுபோல் இன மத கலாசார பண்பாட்டு விழுமியங்களின் பெயரால் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகளும் தடைகளும், அத்து மீறல்களும், அவற்றை அரசியலாக்கி இன முரண்பாடுகளை ஊக்குவிப்பதும் கண்டிக்கப்பட வேண்டும்.
அவை மீள்பார்வைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட வேண்டும். என்ற அடிப்படையில் தஸ்லிமா நஸ்ரினின்கருத்தை இந்கு பதிவிடுகிறேன்.
விவாதங்கள், விமர்சனங்கள் ஆராக்கியமானவையாக அமையட்டும்!

No comments:

Post a Comment