Saturday 5 February 2022

திருச்சபை வரலாறு பகுதி ---- 3 ***********- உரோமை ஆட்சியில் வேதகலாபனை:

திருச்சபை வரலாறு
பகுதி ---- 3
***********-
உரோமை ஆட்சியில் வேதகலாபனை:
******************************-************
பாலஸ்தீனாவில் முதல் நூற்றாண்டில் தோன்றிய இயக்கமாகிய கிறிஸ்துவ சமயம் படிப்படியாக உரோமைப் பேரரசு முழுவதும் பரவியது. யூதர்கள் வாழ்ந்த பாலஸ்தீனம் உரோமையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அகுஸ்துஸ் சீசர் (கி.மு. 29 - கி.பி. 14) உரோமைப் பேரரசை மிகவும் விரிவுபடுத்தியிருந்தான். மேற்கே ஸ்பெயின், வடக்கே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யப் பகுதிகள், கருங்கடல், தெற்கே இத்தாலி, சிசிலி, வட ஆப்பிரிக்கா, எகிப்து, கிழக்கே கிரிஸ், பெர்சியா, சிரியா, அர்மீனியா என இப்பேரரசு விரிந்து கிடந்தது.
பேரரசின் மேற்குப் பகுதி உரோமை நகரை மையமாகக் கொண்டிருந்தது. அங்கு இலத்தீன் மொழியும் கலாச்சாரமும் நிலவின. பேரரசின் கிழக்குப் பகுதி பைசான்சியம் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டிருந்தது. (இந்நகர் "கொன்ஸ்தாந்திநோப்புள்" என்ற கி.பி. 330ல் பெயர் பெற்றது; இன்று துருக்கி நாட்டில் இஸ்தான்புல் என்று வழங்கப்படுகிறது). இந்தக் கிழக்குப் பகுதியில் கிரேக்க மொழியும் கலாச்சாரமும் நிலவின.
பாலஸ்தீனாவில் கிறிஸ்தவ மறை திருத்தூதர்களின் பணி வழியாகப் பரவியது. இத்தாலியில் கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவியது. அதே காலக் கட்டத்தில் தெற்கு பிரான்சிலும் கிறிஸ்துவம் வளரலாயிற்று. வட ஆப்ரிக்காவில் 'குறிப்பாக எகிப்தில்' கிறிஸ்தவம் பாலஸ்தீனாவிலிருந்து பரவியது. கிரேக்க நாட்டுப் பகுதிகளில் புனித பவுல் கிறிஸ்துவ மறையைப் போதித்திருந்தார். அதுபோலவே, சிறிய ஆசியா என்றழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஜோர்தான், தெற்கு ரஷ்ய பகுதிகள்) கிறிஸ்தவ மறை பரவியது.
அக்காலத்தில் பல கடவுளை வழிபடும் பழக்கம் உரோமையில் நிலவியது. அரசனும் தெய்வப் பிறவியாகக் கருதப்பட்டான். ஆனால் கிறிஸ்தவர்களோ ஒரே கடவுளை மட்டும் வழிபட்டவர்கள். இவர்கள் உரோமைத் தெய்வங்களை வழிபடவும், அரசனைத் தெய்வமாக ஏற்கவும் மறுத்துவிட்டனர்; எனவே துன்புறுத்தப்பட்டனர்; வேதகலாபனையால் அவதியுற்றனர்.
'மறைச்சாட்சியரின் இரத்தம் திருச்சபையின் வித்து” என்று கூறினார் வட ஆப்பிரிக்கத் திருச்சபை அறிஞர் தெர்த்துல்லியன். வரலாற்று ஆசிரியர்கள் வேத கலாபனைகளைப் பத்தாகத் தொகுத்து அவற்றைப் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நிகழ்ந்த எகிப்திய கொள்ளை நோய்களுக்கு ஒப்பிடுகிறார்கள். நீரோ, தோமீசியான், திராயான், மாற்குஸ் அவுரேலியுஸ், செப்திமியுஸ் செவேருஸ், மாக்ஸிமினுஸ், தேசியுஸ், வலேரியன், அவுரேலியன், தியோக்லேசியன் ஆகிய 10 மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்தவையே இந்த வேத கலாபனைகள்.
ஆங்காங்கே எழுந்த வேதகலாபனைகள் நீரோ மன்னன் காலத்திலிருந்து (கி.பி. 54-68) பிலிப்பு மன்னன் காலம் வரை (கி.பி. 244-249) நிகழ்ந்தன.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விதத்தில் நடைபெற்ற வேதகலாபனைகள் தேசியுஸ் (கி.பி. 249-254) காலத்திலிருந்து தியோக்லேசியன் (கி.பி. 284-305) காலம்வரை நிகழ்ந்தன. கி.பி. 313 ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்தீன் பேரரசன் கிறிஸ்தவர்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கினான்.

(தொடரும் ) 

No comments:

Post a Comment