Sunday 27 February 2022

திருச்சபை வரலாறு பகுதி -- 27

 திருச்சபை வரலாறு

பகுதி -- 27

*************

நவீன காலத் திருச்சபை வரலாறு

(கி.பி. 1517 - 1900)

துறவற சபைகள்

இயேசு சபை

16ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் மறுமலர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் பெரிதும் துணை புரிந்தது இயேசு சபையாகும். புனித லொயோலா இஞ்ஞாசியார் (1491-1556) இதைத் தொடங்கினார். ஸ்பெயின் நாட்டில் பாஸ்க் பகுதியில் பிறந்த இவர் அரசவையில் கல்வி பயின்று பின் போர்வீரரானார். சண்டையின்போது ஒரு காலில் காயமுற்று குணமடைந்து வந்த போது உள்ளூர மனமாற்றம் அடைந்தார். "ஞானப் பயிற்சிகள்" என்ற நூலை எழுதினார். இனிமேலாக 'கடவுளின் உயர் மகிமைக்காக" அனைத்தையும் செய்வதாக உறுதிபூண்டார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இறையியல் கல்வி பயின்றபோது இஞ்ஞாசியாரும் சில நண்பர்களும் சேர்ந்து தங்களை மறைபரப்புப் பணிக்கெ அர்ப்பணித்தனர். இக்குழுவில் பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.

இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும் வெனிஸ் நகரில் 1537இல் குருப்பட்டம் பெற்றனர். இந்த நேரத்தில்தான் அவர் ஒரு மறைப்போதகச் சபையை உருவாக்க எண்ணினார். 1540இல் திருத்தந்தை 3ஆம் பவுல் இந்த சபையன் ஒழுங்குகளை அங்கீகரித்தார். இயேசு சபையின் முதல் தலைவராக இஞ்ஞாசியா உரோமையில் தங்கியிருந்து பணிகளை கவனித்தார்.

இயேசு சபை வளர்ந்தது. இச்சபை சீர்திருத்த சபையினரை எதிர்ப்பதற்காக நிறுவப்படவில்லை . மாறாக, திருச்சபையில் மறுமலர்ச்சி கொணரவும் விசுவாச வாழ்வை ஆழப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. திருத்தந்தைக்குத் தனிப்பட்ட விதத்தில் கீழ்ப்படியுமாறு இயேசு சபையினர் ஒரு வாக்குறுதி எடுத்தனர்.

இஞ்ஞாசியார் இறந்தபோது சுமார் 1000 உறுப்பினர்கள் இயேசு சபையில் இருந்தனர். 16 ஆண்டுகளில் இத்தகு வியப்புக்குரிய வளர்ச்சிபெற்ற இயேசு சபை ஆன்மீகத்தையும் உலக ஈடுபாட்டையும் இணைத்து பணிபுரிந்து வந்துள்ளது.

புதிய துறவற சபைகள்

****************************

இயேசு சபையைத் தவிர பிற பல துறவற சபைகளும் 16ஆம் நூற்றாண்டில் தோன்றின. பிரான்சிஸ்கு சபையில் ஒரு சீர்திருத்தப் பிரிவு எனத் தோன்றியது கப்புச்சியர் சபை (1526). தொடக்கத்தில் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி இச்சபை விரைவாக வளர்ந்தது. திருச்சபையின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தது. புனித கமில்லஸ் தே லெல்லிஸ் கடின நோயாளிகளைப் பராமரிக்க ஒரு சபையை நிறுவினார் (1585). புனித ஆஞ்செலா மெரீசி பெண்களுக்கென ஊர்சுலா சகோதரிகள் சபையைத் தோற்றுவித்தார் (1535).

கார்மேல் சபையில் புனித அவிலா தெரசா மற்றும் புனித சிலுவை யோவான் சீர்திருத்தம் கொணர்ந்தனர். மறைமாவட்ட குருக்கள் இணைந்து செயல்படுவதற்கான ஒரு குழுவை புனித பிலிப்பு நேரி தொடங்கினார் (1548).

புனித வின்செந்த் தே பவுல் (1581-1650) மறைபோதகச் சபையை 1624ல் நிறுவினார். குரு மாணவர்க்கும் குருக்களுக்கும் பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்தினார். பிறரன்புப் பணிபுரிய துறவறப் பெண்டிர் சபை ஒன்றை நிறுவினார் (1633). கப்பலில் கடின உழைப்பு செய்ய கட்டாயப்படுக்கப் அடிமைகளை இவர் மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வு அளித்தார். பிறருக்க எந்நேரமும் உதவி செய்வதில் கருத்தாயிருந்த புனித வின்செந்த் பிறான் பணிகளின் பாதுகாவலர் என்று போற்றப்படுகிறார். அவரது பெயரால் இன்று பணிபுரிவதே வின்செந்த் தே பால் சங்கம்". இதை 1833ஆம் ஆண்டு பிரடரிக் ஓசானாம் என்ற பொதுநிலையினர் தோற்றுவித்தார்.

(தொடரும்)

No comments:

Post a Comment