Sunday 27 February 2022

முகம் காட்டாமலும் காதலை உருகி வெளிப்படுத்திய கே.பி.ஏ.சி. லலிதா

 முகம் காட்டாமலும் காதலை உருகி வெளிப்படுத்திய கே.பி.ஏ.சி. லலிதா


ஒரு திரைப் படத்தில் முகம் காட்டாமலே தனது குரலின் மூலம் மாத்திரம் திரைப்படத்தின் முழுக் கதையின் நாயகியாக பயணித்தவர். அதுவும் படம் பார்த்து முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்பு அந்த காதல் கதையில்... மொழியில்... உருக்கத்தில்... நெருக்கத்தில்.... இருந்து எம்மை விடுவிக்க முடியாத கதாபாத்திரமாக மாறியவர்.

மலையாளத் திரை பட உலகில் சிறந்த நடிகரான மம்மூட்டி திரையில் முகம் காட்;டி நடிக்க இவர் திரையில் முகம் காட்டாது குரலை மட்டும் ஒலித்து அந்த திரைப்படத்திற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த 'நாராயணி' பெண் பாத்திரத்தை நடித்தவர் என்பதை விட வாழ்ந்தவர் என்றே கூறலாம்.

வைக்கம் முகம்மது பஷீர் என்ற மலையாளத்து கவிஞரின் வாழ்க்கையை வரலாற்றை திரைப்படமாக அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த போது திரையில் முகம் காட்டாது அதே வேளை மிகச் சிறந்த காதல் திரை ஓவியமாக படைக்க முற்பட்ட கதாபாத்திரத்திற்கு லலிதா வினால் உயிர் கொடுக்க முடியும். அந்த திரைப்படம் மதிலுகள் (Mathilukal) 

நிச்சயமாக இத் திரைப்படத்தை பார்க்காதவர்கள் ஒரு தடவை ஒன்றிப் போய் பாருங்கள் இது புரியும். சில நிமிடங்கள் மட்டும் அல்ல படம் முழுக்க அந்த உயிரோட்டம் இருந்து கொண்டே இருந்தது.

படத்தின் இறுதிக் காட்சியில் சிறையில் நீண்ட காலமாக வாடும் பஷீர்(மம்மூட்டி) ஐ  விடுதலை செய்வதாக அறிவித்தல் வந்த போது அடுத்த நாள் அந்த முகம் காணாத காதல் காதலியை மருத்துவ மனையில் சந்திப்பாக இருந்த ஓரே வாய்ப்பு நழுவிப் போவதை ஏற்க முடியாமல் துடித்து 'யாருக்கு வேண்டும் இந்த விடுதலை..." என்று காதலாகக் கத்தும் அளவிற்கு லலிதாவின்  மதிலுக்கு அப்பால் பெண்கள் சிறையில் கைதியாக வாழ்ந்த நாராயணியை மறக்க முடியாது.

அதுவானதுதான் மலையாள நடிகை லலிதாவிற்கான அடையாளம் என்று கூறலாம். இதற்கு அப்பாலும் பல படங்களை கூறமுடியும்.

மலையாளத் திரைப் படத் துறையில் முதன்மை துணைப் பாத்திரமாக அது அம்மாவாக அக்காவாக சேச்சியாக முத்தச்சியாக ஏன் சதிச்சு விளையாடும் வில்லியாக எத்தனை பரிமாணம் இத்தனை இயல்பான நடிப்பை நான் யாரிடமும் காணவில்லை... இனியும் காண்பது அரிது.

கே.பி.ஏ.சி. லலிதா பெயரால் நன்கு அறியப்பட்ட மகேசுவரி அம்மா(25 பெப்ரவரி 1947 - 22 பெப்ரவரி 2022) ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகையாவார். இவர் முதன்மையாக மலையாள நாடகத்திலும் மலையாளத் திரைப்படங்களிலும் பணியாற்றினார். இவரது நடிப்பு வாழ்க்கை இந்தியாவின் கேரளாவின் காயம்குளத்தில் ஒரு நாடக இயக்கமான கே.பி.ஏ.சி கேரள மக்கள் கலைக் கழகத்துடன் தொடங்கியது. 

கேரளாவில் பொதுவுடைமை கருத்துக்களை பரப்புவதில் இந்த அரசியல் அரங்கம் மிகவும் செல்வாக்கு செலுத்தியது. ஐந்து தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராக பதவி வகித்தார். மறைந்த மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குநர் பரதனை மணந்தார்.

பிரபல இயக்குநர் பரதன் மீது அளவில்லா காதல் கொண்ட மனைவி அது பரதனுக்கு சிறிவித்யாவிடம் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாமல் இரு பிள்ளைகளை பெற்று பரதனின் 50 வயதுகளில் மறைவின் பின் பல்வேறு கடன் தொல்லைகளுக்கு மத்தியிலும் வளர்தெடுத்த தாய்.

பணத்தை அதிகம் சேர்த்தவர் இல்லை திரைப்படத்தில் மட்டும் அல்ல குடும்ப வாழ்விலும் எளிமையாக வாழ்ந்தவர் மரண காலத்தில் மருத்துவ மனைச் செலவுகளை கேரள அரசு பொறுப்பெடுக்த அளவிற்கான வாழ்க்கை முறை எல்லோராலும் மதிக்கப்பட்டவர் சேவகியாக வாழந்தவர்.

கேரளத்து இடதுசாரி அரசின் இயல்பான மனிதாபிமானத்திற்கு அப்பால் லலிதாவின் கொள்கை சார்ந்த விடயமும் அவரை அரசின் கவனிப்பிற்குள் கொண்டு வந்தது என்ற விமர்சனத்திற்கு அப்பால் அதற்கான தேவைகள் அனைத்தையும் மலையாள திரைப்பட உலகமும் இந்திய திரைப் படை உலகமும் ஏன் முழு சினிமாவும் கொண்டிருந்தது என்பதே உண்மை.

1998 ஆம் ஆண்டில், தனது கணவர் பரதன் இறந்தபோது, இவர் சில மாதங்களுக்கு ஒரு இடைவெளியை எடுத்துக்கொண்டார், சத்யன் அந்திக்காடு இயக்கிய 'வேண்டும் சில வீட்டுக்காரியங்கள்' என்ற திரைப்படத்தில் பாராட்டப்பட்ட நடிப்புடன் திரும்பி வந்தார்.

அவரின் கணவரின் மரணத்திற்கு பின்பு பத்திரிக்கையாளர் ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பற்றிய கேள்விக்கு, தன் கணவருடன் வாழ்ந்த அந்த 19 வருட காலம் தன்னுடைய சுக்கிர திசை காலம். அதே நேரம் அந்த காலமே தன்னுடைய சனி திசை பிடித்த காலமும் என்கிறார். அவ்வளவிற்கு வெளிப்படையான பெண்ணியக் கருத்தியலை உடையவர்.

லலிதா 2013 ஆம் ஆண்டில் செருகாட் விருதை வென்ற காத தூதாரம் என்ற சுயசரிதையை வெளியிட்டார். தனது கணவர் பரதன் இயக்கிய அமரம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். 

ஜெயராஜ் இயக்கிய சாந்தம் (2000) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தனது இரண்டாவது தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் காதலுக்கு மரியாதை, இயக்குநர் மணிரத்தினத்தின் அலைபாயுதே, காற்று வெளியிடை போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை சாலினியின் தாயாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். 

தமிழ் திரைப்பட உலகிற்கு ஒரு மனோரம்மா என்றால் அதற்கு பல மடங்கு தகுதிகளும் திறமைகளும் உடையவர் இந்த லலிதா 

அண்மையில் அவரிளன் மறைவு என்னை அதிகம் பாதித்துவிட்டது.

இவரின் திரைப் படப் பாத்திரங்களைப் பார்த்தீர்களாயின் நீங்கள் வாழ்ந்த கிராம நகர பிரதேசங்களில் அவரை ஒட்டிய பாத்திரம் மனிதர்களை காணமுடியும். அவ்வாறு உணருவீர்கள் அவ்வாறு மிகவும் யாதார்த்தமான பாத்திரமாக மனிதர்களா பொருந்திவிடுவார்.

இதனை அறிந்திருந்த திரைப்படைத் துறையினர் அப்படியான பாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் கூப்பிடுங்கள் லலிதாவை என்றளவிற்குள் சினிமாவில் வாழ்ந்தவர்.

சினிமாவிற்குரிய பௌதிக அழகு அதிகம் இல்லாவிட்டாலும் அழகியல் என்றால் அந்த குரல் வளம் வட்டாரப் பேச்சு வழக்கு உச்சரிக்கும் பாவனை முகபாவனை சிறப்பாக வாயசைவுகள் அபாரம் மீண்டும் கூறுகின்றேன் முடிந்தால் மதிலுகள் திரைப்படம் கறுப்பு வெள்ளையாக 30 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திரைப் படத்தை பாருங்கள்.

லலிதா 2022 பிப்ரவரி 22 அன்று தனது 73வது வயதில் திருப்பூணித்துறையில் குரலிசை நடிப்பை நிறுத்திக் கொண்டார்.

No comments:

Post a Comment