‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகம்!
அண்மையில் நோர்வே நாட்டில் நான் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு பதிவினை முகநூலில் இட்டிருந்தேன். இது லண்டனில் நான் தயாரித்து மேடையேற்றிய ஒரு நாட்டிய நிகழ்வு பற்றிய பதிவாகும்.
ஈழத்துக் கவிஞர்களான குறிஞ்சித் தென்னவன் அவர்களின் ‘குன்றுதோறும் ஏறிடுவாள்’ கவிதையையும் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் எழுதிய ‘காளி’ என்ற கவிதையையும் இணைத்து ஒரு நாட்டிய நாடக வடிவமாக எனது மாணவிகளைக் கொண்டு நான் தயாரித்து 1992ஆம் ஆண்டு மேடையேற்றியதுதான் ‘காளி எழுந்தாள்’.
அப்போது நான் லண்டனில் பிறென்ற் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பாடசாலையில் பரதநாட்டிய ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1992இல் இச் சங்கம் நடத்திய விழாவிற்காகத்தான் முதன்முதலாக ‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகத்தைத் தயாரித்தேன்.
இலங்கையில் 1981இல் பாரதியார் நூற்றாண்டையொட்டி பாரதியாரின் பெண் விடுதலைப் பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதனுடன் ஈழத்துக் கவிஞர் குறிஞ்சித் தென்னவன் எழுதிய ‘குன்றுதோறும் ஏறிடுவாள் எங்கள் மலைப்பெண்ணாள்” என்ற எமது தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் படும் அவலங்களைக் கூறும் பாடலையும் இணைத்து அதற்கு நாட்டிய அமைப்புச் செய்து நான் ஆடியிருந்தேன். இந்த நிகழ்ச்சி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் சார்பில் க. பாலேந்திரா மேடையேற்றிய நிகழ்வின் ஒரு அங்கமாக ‘நர்த்தனக் கோலம்’ என்ற தலைப்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. பின்னர் வேறு சில இடங்களிலும் ‘நர்த்தனக் கோலம்’ நிகழ்ச்சியை வழங்கியிருந்தேன்.
1983 காலப்பகுதியில் லண்டனில் நானும் பாலேந்திராவும் வசிக்க ஆரம்பித்த போது 83 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இங்கு நடைபெற்ற எழுச்சி விழாக்களில் ‘குன்று தோறும் ஏறிடுவாள்” பாடலுக்கு நான் நடனமாடினேன்.
பின்னர் பிறென்ற் தமிழ்ப் பாடசாலையில் நான் நடனம் பயிற்றுவிக்க ஆரம்பித்தபோது முற்றுமுழுதாக எமது தேயிலைத் தோட்டங்களில் கொழுந்தெடுக்கும் பெண்களின் அவலங்களை விளக்குவதாகவும் அவர்களின் எழுச்சி பற்றியதாகவும் ஒரு நாட்டிய நாடகத்தைத் தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. குறிஞ்சித் தென்னவனின் கவிதையுடன் வேறு எந்தக் கவிதைகளை இணைக்கலாம் என்று நான் யோசித்தபோது பாலேந்திரா எனக்கு சிவசேகரம் அவர்களின் ‘காளி’ கவிதையை எடுத்துத் தந்தார். இது அவர் தென்னாபிரிக்க மக்கள் எழுச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து எழுதிய கவிதை. இதில் வரும்
‘வாயு அசைந்தது சூறை பிறந்தது
சீறி எழுந்ததுவே
ஆழி விரிந்தது அலைகள் வளர்ந்தன
முகில்கள் நனைந்தனவே
மேனி நடுங்கிய பூமி அதிர்ந்தது
மலைகள் சரிந்தனவே
தீயுமெழுந்தது சுடர்கள் பரந்தன
பொறிகள் பறந்தனவே
வானமெரிந்திட மின்னல் படர்ந்தது
இடிகள் முழங்கினவே
காலன் நடுங்கினன் காளி எழுந்தனள்
கருநிற மேனியளே
கூவி எழுந்தனள் லோகம் அதிர்ந்தது
ஊழி பிறந்ததுவே’
என்ற வரிகளைச் சேர்க்கலாம் என்று நினைத்தேன்.
குறிஞ்சித் தென்னவனின் கவிதை வரிகளுக்கு யாழ்ப்பாணத்தில் எனக்கு இசைக்கலைஞர் போல் திலகநாயகம் அவர்கள் இசையமைத்துத் தந்திருந்தார். அவரே எனது நடன நிகழ்ச்சிகளுக்குப் பாடியுமிருந்தார்.
சிவசேகரம் அவர்களின் ‘காளி’ கவிதை வரிகளுக்கு நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க லண்டனில் நிர்மலா அவர்கள் இசையமைத்துத் தந்தார். நடன நிகழ்ச்சி என்றபடியால் நிறைய ஸ்வரக் கோர்வைகள் எல்லாம் போட்டுத் தந்தார். நான் ஜதிகள் எல்லாம் போட்டு நடன வடிவமைப்புச் செய்து எனது மாணவிகளுக்குப் பழக்கினேன்.
தேயிலைத் தோட்டத்தில் பெண்களைக் கடுமையாக வேலை வாங்கும் கங்காணி பாத்திரத்திற்கு ஒரு மாணவி நடனமாடுவதைவிட ஒரு இளைஞன் நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, பாலேந்திரா தயாரிக்கும் சிறுவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜனனன் என்ற இளையவரைக் கங்காணியாக நடனமாட வைத்தேன். அவருக்கு நடன அசைவுகள் பழக்க எனக்குக் கூடிய நேரம் எடுத்தது.
‘வாயு அசைந்தது’ வரிகளுக்கு வெண்நிற உடைகளுடன் மாணவிகள் காற்றைப் போல மேடை முழுவதும் சுழன்று அசைந்து ஆடினர். அதே போல ‘ஆழி விரிந்தது’ வரிகள் வரும்போது நீல நிறத்திலும், ‘தீயுமெழுந்தது’ வரிகளுக்கு செம்மஞ்சள் நிறத்திலும் ஆடைகள் அணிந்து மாணவிகள் ஆடினர். பலே பாணியில் அமைந்த அசைவுகளையும் சேர்த்திருந்தேன். காளியின் நடனத்திற்கு பரதநாட்டியத்துடன் நாட்டுக்கூத்தினையும் இணைத்திருந்தேன். இந்த நாட்டிய நாடக மேடையேற்றத்திற்கு பாலேந்திரா பொருத்தமான ஒளியமைப்பைச் செய்திருந்தார். ஸ்ரீஜனனி, P. கிருத்திகா, ரேகா, விஜிதா, தனுஜா, றஜிதா, சுஜிதா, R. கிருத்திகா, ரதிகா இவர்களுடன் இன்னும் பல மாணவிகளும் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் எமது சிறுவர் நாடகங்களிலும் நடித்துள்ளனர்.
P. கிருத்திகா, தனுஜா ஆகியோர் தமது பிள்ளைகளையும் இப்போது எமது லண்டன் தமிழ் நாடகப் பள்ளியில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான இந்த நாட்டிய நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 92-93 காலப் பகுதியில் லண்டனில் வேறு இடங்களிலும் மேடையேறியது. பின்னர் 28.05.1994 அன்று நடைபெற்ற எமது நாடக விழாவிலும் பாலேந்திரா நெறியாள்கை செய்த இரண்டு நாடகங்கள், மற்றும் ‘கானசாகரம்’ ஈழத்து மெல்லிசை நிகழ்ச்சியுடன் ‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகமும் மேடையேறியது.
தொடர்ந்தும் இப்படியான வித்தியாசமான நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க எனக்கு ஆசை இருந்தபோதும் முழுநேரத் தொழில் புரிந்துகொண்டு, அத்தோடு வேறு பல துறைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த என்னால் நடனம் பயிற்றுவிப்பதைத் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் எமது சிறுவர் -இளையோர் நாடகங்கள் பலவற்றில் வரும் நடனப் பகுதிகளைத் தொடர்ந்து வடிவமைத்துப் பழக்குவது எனக்கு மன நிறைவைத் தருகிறது.
No comments:
Post a Comment