Friday 30 October 2020

வாலி

 கிருஷ்ண கான சபா .பெயரெல்லாம் பெரிதாகத் தான் இருக்கிறது.அப்போதைய சென்னையில் அது கீற்றுக்கொட்டகை தான்.பனகல் பார்க் அருகே ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டிருந்த அந்த நாடக அரங்கம் அன்று பரபரப்பானது.காரணம் ஒரு பிரபலம் நாடகம் பார்க்க ஒப்புதல் தந்திருக்கிறது.நாடகத்தின் பெயர் கவிஞனின் காதலி.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பது மக்கள் திலகத்தை.அன்று அவர் புரட்சி நடிகர்.நாடகத்தின் ஹீரோ பிற்காலத்தில் அமைச்சராக இருந்த திருச்சி சௌந்தரராஜன்.அவர் தான் மெனக்கெட்டு எம்.ஜி.ஆரை அழைத்திருந்தார்.

மனைவிக்கு சுகமில்லாத நேரம்.அருகிலிருந்து கவனிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்.இருக்கிற இடைவெளியில் வந்து தலைகாட்டிவிட்டு அப்படியே ஓடிவிடுவேன்.சம்மதமா?. ஆகட்டுங்க.நீண்ட நேரம் உங்களை காக்க வெக்கமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிக்கொண்டு தான் வர சம்மதித்தார்.ஆனால் மூன்று மணி நேரம் சோகத்தை மறந்து அப்படியே அவர் ஒன்றிவிட்டார்.காரணம் அந்த நாடக வசனங்கள் அவரை அப்படியே ஈர்த்திருந்தது.முடிவில் மைக்கைப் பிடித்து அதை அப்படியே கொட்டியும்விட்டார்.யாரப்பா ரைட்டர்.?. முடிவில் சௌந்தரராஜனிடம் கேட்டேவிட்டார்.எங்க ஊர்க்காரர் தாங்க .வாலின்னு பேரு.அந்தப் பெயரை அப்போது தான் முதன் முறையாக கேள்விப்பட்டார் எம்.ஜி.ஆர்.
பாரதிதாசனின் கவிதையைப் படிப்பது போல் இருக்கிறது நாடக வசனங்கள்.மைக்கைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு வாலியைப் பிடிக்கக் காரணம் அவரது தமிழ் என்று புரிந்தது.தமிழ் மீது எனக்கு அளவில்லாத காதலால் தான் எனது மனைவியின் உடல் நிலையையும் மறந்து மூன்று மணி நேரம் பிரமித்துப் போய் உட்கார்ந்துவிட்டேன்.விசாரித்தேன்.வாலி என்றார்கள்.ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம்.அவர் எப்போது மெட்ராஸ் வந்தாலும் என்னை வந்து பார்க்கலாம்.கொட்டை எழுத்துக்களில் மறுநாள் தென்றல் திரை ஏட்டில் அவரது முழு பேச்சும் வந்தது.வாங்கிப் படிக்கிறார் வாலி.சொல்லி வெச்ச மாதிரி மூன்றாம் நாள் எம்.ஜி.ஆர்.அலுவலகத்திலிருந்து ஒரு லெட்டர்.அதே தான் சென்னை வந்தால் சந்திக்கவும்.ஆனால் மெட்ராஸ் போக வாலியிடம் சில்லரையில்லை.திசை தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞனிடம் இருந்தது தமிழ் மட்டும் தான்.வாலியின் பிறந்த நாளில் அந்த மகத்தான கவிஞனை கொஞ்சம் நினைவு கூறலாமே.
வாலி என்ற ஸ்ரீரங்கத்து ரங்கராஜனை நிறையத் தடவை பேசி விட்டோம்.இருந்தாலும் அந்த மகத்தான மனிதன் தமிழ்த் திரையுலகிற்கு நிறையவே செய்துவிட்டுப் போயிருக்கிறார்.திருவரங்கத்து திருப்பராயத்துறை தான் வாலியை நமக்கு அடையாளம் காட்டிய மண்.காவிரியின் தென்கரையும் கொள்ளிடத்தின் வடகரையும் சங்கமிக்கும் செழிப்பான மண்.எங்கு திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் பூமி.சாப்பாட்டிற்குப் பஞ்சமில்லை.அப்பா வாங்கல் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு கரூர் தான் சொந்த ஊர்.அம்மா பொன்னம்மாள்.அன்பான இல்லத்தரசி.பையன் படிக்காமல் கொள்ளிடக் கரை கழுதை மண்டபத்தில் சதா பொழுதைக் கழிக்கிறானே என சங்கடம்.கூடப் படிக்கும் ரங்கராஜன் புத்தகமும் கையுமாக இருக்க எனக்கு வாய்த்தது பேப்பரை வைத்துக்கொண்டு எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறதே என்ற சங்கடம்.வாலிக்கு படிப்பை விட வரைவதில் இஷ்டம்.அப்படித்தான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது நண்பன் பாபு அவரை முதன் முதலாக வாலி என்று அழைத்தான்.அப்போதெல்லாம் விகடனில் மாலியின் கார்ட்டூன் பிரசித்தம்.அங்கொரு மாலி என்றால் இங்கொரு வாலி.நண்பர் கூட்டம் அவரை வாலி என்றே அழைக்க எங்க ஊரு ஆட்டுக்குட்டிக்குக் கூட அந்தப் பெயர் தெரியும் என பிற்காலத்தில் எழுதினார் வாலி.
வரைந்து தள்ளிக்கொண்டே கழுதை மண்டபத்தில் அமர்ந்துகொண்டு கவிதை புணைவதிலும் ஆர்வம்.அந்த மண்டபத்தில் தான் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் பிறந்தது.ஒரு கார்டில் எழுதிப்போட்ட பாடல் டி.எம்.எஸ்ஸைக் கவர்ந்தது.தண்ணீலே இருந்தா எருமை எப்படி விலை போகும்.மெட்ராஸ் வாய்யா.ரயிலடியில் டி.எம்.எஸ்.அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது.இப்படி பிரபலங்கள் அழைத்த சென்னை பிற்காலத்தில் அவரை கடுப்பேற்றியது வேறு விஷயம்.அன்னைத் தமிழ் என்னை வாழ வைக்கும் என்ற இறுமாப்போடு வண்டியேறிய வாலிக்கு வலிகள் தான் மிஞ்சியது.முட்டி மோதிய வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகள் தான் மிச்சம்.இளமையில் நேதாஜி என்ற கையெழுத்துப் பத்திரிகை போக நாடகங்கள் நடத்த வானொலி அழைப்புகள்.ஆனால் திரைத் துறை மட்டும் கதவை பலமாக அடைத்துக்கொண்டது.தி.நகர் க்ளப் ஹவுஸில் நான்காண்டு கால நரக வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்தது தான் ஒரே ஆறுதல்.58 ல் அழகர் மலைக் கள்ளனில் அத்தி பூத்தாற்போல் ஒரு வாய்ப்பு.தேவராஜ் அர்ஸின் தம்பி கெம்பராஜ் படமிது.ஜெயலலிதா அம்மா சந்தியாவை அவர் தான் சினி ஃபீல்டுக்கு கொண்டு வந்தவர்.நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒரு நாள் உனதம்மா.தனக்காக போட்ட பல்லவி.அந்த உலகம் எப்போது வாய்க்கும்.?. சுத்தமாகத் தெரியாது.61 ல் தான் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.அது நல்லவன் வாழ்வான் படத்திற்காக.
படத்திற்கு பாடல் எழுதும் திறமை அவரிடம் கொட்டிக் கிடப்பதை ஆரம்பத்தில் கண்டறிந்தவர்கள் இரு பாடகர்கள் தான்.ஐயா டி.எம்.எஸ்ஸூம் ஐயா பி.பி.எஸ்ஸூம்.திருச்சி வானொலி நிலையத்திற்கு மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட வாலியின் பாடல்களை அவர்கள் பாடியிருக்கிறார்கள்.அப்போதும் அதே பல்லவி தான் .வாய்யா மெட்ராஸூக்கு.படத்துறை தான் அவரை பாடாய்படுத்தியது.இதே மெல்லிசை மன்னர் நண்பர் கோபியிடம் காதோரம் இவரை ஊரைப் பார்த்து போகச் சொல்லுங்க என்ற வரலாறும் வாலிக்கு உண்டு.அதே மன்னர் தான் அடடா!.. எங்க இருந்தீங்க இவ்வளவு நாளும் என்ற கதையும் நடந்தது.பூ வரையும் பூங்கொடியே பூ மாலை சூடவா பாடலோடு வாலியின் பாமாலை பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பக் காரணமும் இதே மன்னர் தான்.ஒரு பாட்டுத் தான் தருவேன்.ஆரம்பத்தில் கன்டிஷன் போட்ட இயக்குநர் திலகம் மொத்த பாட்டும் அவரே எழுதட்டும் என பச்சைக்கொடி காட்ட வாலியின் காடெல்லாம் பச்சை பசேலென மாறிப் போன வரலாறு உலகறியும்.மக்கள் திலகத்தின் கடைக்கண் பார்வை பட்டதும் வாலி விண்ணைத் தொட்ட வரலாறும் நமக்கெல்லாம் தெரிந்தது தான்.
கவிஞர்கள் எப்போதுமே கற்பனையில் மிதப்பவர்கள்.இப்படிச் சொல்லலாமா அப்படிச் சொல்லலாமா என யோசிக்கும் கவிஞர்களுக்கு மத்தியில் அருவியாய் கொண்டும் கவியரசு கோலோச்சிய காலத்தில் தான் வாலியின் திரைப் பிரவேசம்.உடுமலையார் தஞ்சையார் பட்டுக்கோட்டையார் காலம் முடிந்து கவியரசு தான் என்றிருந்த நேரத்தில் வந்து நின்றவர் வாலி.கப்பலுக்கு நடுவே கட்டு மரமாக வந்து நின்றேன் என அவரே ஒரு முறை சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்ட கவிஞரே குழம்பிப்போய் இதை நான் எப்பய்யா எழுதினேன் என யோசித்த நேரங்களும் உண்டு.கவிஞரே இது வாலி எழுதிய பாட்டு.அதானே பார்த்தேன்.என்னமா யோசிச்சிருக்காரு.போகப்போக அது அதிகமானதே தவிர குறையவே இல்லை.வாலி!.. உம் பாட்டை கேட்டேன்யா அருமையா எழுதியிருக்கே.உனக்குப் புடிச்ச வாட் 69 அனுப்பியிருக்கேன். எதிரே கடை விரித்தாலும் எப்போதுமே அந்த நெஞ்சில் குரோதமில்லை.இப்படித்தான் பட்டுக்கோட்டையை உச்சி முகர்ந்திருக்கிறார் கவிஞர்.அப்படிப்பட்ட கவிஞரோடு எத்தனை ஆண்டுகள் போட்டி போட்டு எழுதித் தள்ளினார் வாலி.
வற்றாத அருவியாய் கொட்டும் வார்த்தைகள்.காலம் மாற மாற கற்பனையில் மாற்றமில்லை.மூன்று தலை முறைகள் கடந்தபோதும் புத்தம் புதிதாக புத்துணர்வோடு வந்து நின்றார் வாலி.அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் கைகளில் எழுதவில்லை கண்ணீரில் எழுதுகிறேன்.எவ்வளவு காலத்திற்கு முன்பு எழுதியது.இறப்பதற்கு ஓராண்டு முன்பு அதே கற்பனை.ஆனால் இன்றைய தலைமுறைக்காக.
விழியல்ல விரலது ஓர் மடல் தான் வரைந்தது
உயிரல்ல உயிலது உனக்குத் தான் உரியது.
இமைகளின் இடையில் நீ
இமையாது நான் தவிக்கிறேன்.
லீலைக்காக ஷ்ரேயா கோஷல் பாடியது.ஏன் வாலியை வாலிபக் கவிஞர் என அழைக்கிறோம் என்றால் இதற்காகத் தான்.80 வயது உடலில் 18 வயது மனதோடு அவரால் மட்டுமே வலம் வர முடிந்தது.லேசா லேசா பாடலில் ஒரு வரி வரும்.தனிமையில் இருக்கையில் எரிகிறதே பனி இரவும் அனல் மழையாய் பொழிகிறதே.கற்பனையில் எப்போதும் அவர் புத்தம் புது மலராகவே வந்து நின்றார்.மாணிக்கம் என்ற மீனவனின் மனதில் குடி புகுந்த முத்தழகி காணிக்கையாக தன்னைத் தர நாணத்தோடு ஓடி வருகிறாள்.கேரளக் கரையோரம் அந்த தென்னை மரத் தோப்பில் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் என சுத்த தன்யாசியில் வந்த சத்தான வரிகளை இப்போதும் இளைஞர் கூட்டம் அசை போடக் காரணம் காதல் எப்போதுமே கொண்டாடப்படுவதால் தான்.அம்பிகாபதி காலத்து அதே காதல் அஜீத் காலத்திலும் வாலியிடம் வதைபட்டது மறுக்க முடியாத உண்மை.
பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று.இப்போது கூட
அருமையான
கவிதையிது.பூரண நிலவையும் புன்னகை மலரையும் இப்போதும் ரசிக்கலாம்.காய் பழுத்து கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா? . கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா?. வார்த்தைகளின் கோர்வையில் ஒரு ஓஹோ போடத் தோன்றும்.அறுபதுகளின் வாலி.அப்படியே கொஞ்சம் 80களில் அதே கற்பனை துள்ளாட்டம் போட்டிருக்கும்.தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன.?. நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடும் அழகை அப்படியே அள்ளித் தந்திருப்பார்.சோகத்திலும் சுகமான வரிகள் வாலியின் சொத்து.விதியே உன் கை நீட்டி வலை வீசலாம் ஊரார்கள் எனைப் பார்த்து விலை பேசலாம்.வலையும் விலையும் அலங்காரமல்ல.அந்த அபலையின் அழு குரல்.இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார் எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்.ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா என அழைத்த பாடல் இப்போதும் சாகா வரத்தோடு அப்படியே நிற்கிறது.
ஆன்மீகத்தை அப்படியே கரைத்துக் குடித்தவர் வாலி.வெறும் கவிஞரல்ல.சங்கீத சுர ஞானம் உள்ளவர்.எழுதும்போதே இது இந்த ராகத்தில் இருந்தால் எடுப்பாக இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிப்பவர்.பெரும்பாலும் அந்தப் பாடல் அதே ராகத்தில் தான் அமையப்பெற்றிருக்கும்.காது கொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்.ஆனந்த பைரவியை அப்படியே தந்தது.சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானனதோ அழகான பெஹாக்கில் வரும்படி எழுதினார்.மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ.சாருகேசியில் அம்சமாக வந்து உட்கார்ந்த வரிகள்.எப்போதுமே அவரது எழுத்துக்களில் எளிமையோடு கலந்த இலக்கியம் இருக்கும்.அஞ்சு விரல் பட்டால் என்ன அஞ்சுகத்தை தொட்டால் என்ன?. கொத்து மலர் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?. வெக்கம் வரும் வந்தால் என்ன வேண்டியதை தந்தால் என்ன?. வியக்க வைக்கும் அவரது வரிகள்.மக்களுக்கான மெஸ்ஸேஜை அப்படியே உள்ளே இறக்கிவிடுவார்.
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?. இந்த கொரோனா நேரத்தில் பாடிப் பாருங்கள் கச்சிதமாக பொருந்தும்.நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம் .எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை மனிதர்கள் அன்பின் வழி தேடி இயற்கையை வணங்குகிறார்.எப்போதுமே பொருந்தும் வரிகள்.இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் என்ற வரிகளில் இன்றும் வாழ்கிறார் வாலி.முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே.ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்கிறார் வாலி.
மனத்தாலே மனித குலம் மேம்பாடெய்தும் நல்ல மனங்கெட்டால் மாநுடம் தான் மெல்லச் சாகும்.திரைக்கு வெளியிலும் அவர் மாநுடம் பேசினார்.விலங்கு மனம் கொண்டிருந்தான் இலங்கை வேந்தன் அந்த விலங்கு இனம் தன்னாலே வீழ்ச்சியுற்றான்.ராமாயணம் அவரது கவிதை வழியே அழகாகப் புரிந்தது.கேரக்டர்களை அவ்வளவு அழகாக உள் வாங்குவார்.இலங்கை வேந்தனை இவ்வளவு அழகாக எடுத்துப் போடும் வாலி தனது பாண்டவர் பூமியிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார்.திரையிலும் அந்த வித்தையில் அவர் கெட்டிக்காரர்.ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது.அதில் கமலின் காதல் கை கூடாத சோகம்.மேடையின் எதிரே காதலி.வெறுத்துப் போய் அவன் பாரதியை துணைக்கழைக்கிறான்.வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா.அந்த ஆணுக்காக வாலி வரிந்துகட்டுகிறார்.அடிக்கடி மனம் மாறும் வஞ்சியின் நெஞ்சத்தை வாலி வார்த்தையால் குதறுகிறார்.ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்.எனக்கின்று தெரிந்தது.நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி.அப்படியே பின்னோக்கிப் போனால் உறவு என்றொரு சொல்லியிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் என எழுதியிருப்பார்.இதயம் என்றொரு இடமிருந்தால் ஏக்கம் என்றொரு நிலையிருக்கும்.அவ்வளவு அசத்தலான வரிகள்.
கவிஞரின் சாயலில் தோன்றினாலும் சில இடங்களில் வாலியின் குறும்பு அழகாக வெளிப்பட்டு நம்மை அட போட வைக்கும்.புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே என தன்னையே அந்த பாத்திரத்தில் கொண்டு போய் வைத்திருப்பார்.நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் கடமையும் வந்தது கவலையும் வந்தது.அந்த நாள் ஞாபகம் அத்தனையும் அவருக்கானது.ஆனால் காதலென்று வந்துவிட்டால் வாலிபம் அங்கே விளையாடும்.அலை போல் குழலசைய சிலை போல் நடை பயில வளையோசை இசை கொடுக்க வாகாக வந்து நிற்பார்.புருவம் வில்லாக பார்வை கணையாக பவளமென விரல் நகம் பசுந்தளிர் போல் வளைக்கரம் என பட்டையைக் கிளப்புவார்.தாளக்கட்டில் அவரது வரிகள் எப்போதுமே தளிர் நடம் புரியும்.தத்தை போல தாவும் பாவை பாதம் நோகுமென்று மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு.மீட்டருக்குள் மேட்டரை கச்சிதமாக கொண்டு வருவார்.நான் அள்ளி கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்லவே புரியும்.பூவை என்பதோர் பூவைக் கண்டதும் தேவை தேவை என வருவாள் என புளகாங்கிதம் அடைய வைப்பார்.
எப்போதோ எழுதிய வரிகளை காலம் கடந்தும் பயன்படுத்தியிருக்கிறார்.58 ல் எழுதிய வரிகளை எம்.பி.சீனிவாசனிடம் சான்ஸ் கேட்டுப் போகும்போது காட்டினார்.நல்லாயிருக்கு ஆனா சிச்சுவேஷனுக்கு சூட்டாகாதே என ரிஜெக்ட் ஆன பாடல் 67 ல் அழகாக சூட்டானது.அது தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்.?. அவரது வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் போட்ட உடனே சூடாக விற்ற பாடல்.அறிஞர் அண்ணாவிற்கு பிடித்தமான பாடல்.என்ன எதிர் நீச்சல் சௌக்கியமா என கேட்கிற அளவிற்கு அவரை பாதித்த பாடல்.கே.பிக்குப் பிடித்தது அந்த கொத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ.நண்பர் குமார்
அருமையாக
மெட்டமைக்க கே.பி.அனுபவித்து எடுத்த பாடல்.ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ சுமை கொண்ட பூங்கொடி என ஜெயந்தியை அட்டகாசம் செய்திருப்பார்.சுவை கொண்ட தேன் கனி உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு.அடடா!.. கலக்கலான கற்பனையில் வந்து விழுந்த வார்த்தைகள்.
வாலி தனது துணையை மனதில் வைத்து வரைந்த கவிதை தான் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழ் கேட்டு.69 ல் அவர் எழுதியது.இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போல முள்ளும் மாறும்.சுப்பையா நாயுடு
அருமையாக
மெட்டுப் போட்டிருப்பார்.ரமண திலகத்தை அவர் நாடகத்தில் தான் சந்தித்தார்.ஏ.வி.எம்.ராஜனுக்கு நாயகியாக வந்தவரை தனது நாயகியாக மாற்ற அவர் படாத பாடுபட்டார்.பத்மினியும் ஈ.வி.சரோஜாவும் தைரியம் தர திருப்பதிக்கு இழுத்துக்கொண்டு ஓடினார்.வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்ற காலத்து பழக்கம் அந்த நடிகைகளோடு.எம்.ஜி.ஆருக்குக் கூட சொல்லாமல் ஒரு அவசரத் திருமணம்.கண்ணனின் சந்நிதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனி மேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொண்மணிக்கென்ன குறை என அழகானதொரு குடும்ப வாழ்க்கையில் ஒரு ஆண் வாரிசு.தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன் பாலூட்டச் சொன்னால் நானெங்கு போவேன் என பம்பரமாக வாலி சுழன்ற காலங்கள்.மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டியதிலிருந்து தொடங்கிய ஓட்டம்.அன்றோர் கோயிலை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உனை ஆக்கி வைத்தேன் என ஆடிப் பாடிய காலங்கள் சட்டென மறைந்தபோது கவிஞர் தளர்ந்து தான் போனார்.ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லையே.ஆதரவான வார்த்தையைப் பேசி அருமை மிகுந்த மனைவியை நேசி என பலருக்கும் பாடமெடுத்த வாலியின் வாழ்வில் வசந்தம் தொலைந்தது.அப்படியே அதிகம் பொது வாழ்வில் தன்னைக் கரைத்தார்.
இயல் இசை நாடக மன்றத்தின் சேர்மனாக வாலி இருந்திருக்கிறார்.ராஜீவ் காந்தி தொடங்கிய சௌத் ஜோன் கல்ச்சரல் சென்ட்ரலில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.அதன் பொருட்டு பல மாநிலங்களுக்கும் பறந்திருக்கிறார்.66ல் மணி மகுடம் ஷூட்டிங்கில் எஸ்.எஸ்.ஆர்.தான் கலைஞரை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.அன்று முதல் கலைஞரோடு அவ்வளவு நெருக்கம்.இருவரையும் இணைத்தது தமிழன்னை.மாநிலத்தில் கவியரங்கம் எங்கு நடந்தாலும் வாலி நீங்களும் உண்டு என வலிய இழுத்துப்போட்டது கலைஞர் தான்.ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப்போக வாலியின் இலக்கிய விருந்தை எல்லோரும் பருகக் காரணம் கலைஞர் தான்.எம்.ஜி.ஆரோடு நெருக்கத்தில் இருந்தாலும் கலைஞரை அவர் விட்டுத் தந்ததில்லை.மூன்று தமிழ் தோன்றியது அவன்கிட்டேயா?. மக்கள் திலகம் கிண்டலடித்தாலும் வாலி முத்துவிற்காக
அருமையான
பாடல்களைத் தந்தார்.எவ்வளவு ஆண்டுகள் கடந்தும் அந்த கவிக்குயில் பாட்டுக் கோட்டைகளை கட்டிக்கொண்டேயிருந்தது.ஹீரோக்களை தூக்கிப் பிடிக்க அனைவரும் வாலியிடம் தான் வந்தார்கள்.பண விஷயத்தில் அவர் நண்பர் நாகேஷ்.தசாவதாரத்திற்கு பாட்டு ரெடியாண்ணே?. கேஷூ ரெடியாண்ணே.?. அதெல்லாம் கரெக்டா இருக்கு.ஐம்பதாயிரம் வாங்கி பாக்கெட்டில் போட்டு விட்டு அப்படியே எழுதியதைத் தர லட்ச ரூபாய் தரலாமே என ஆனந்தமானார் கமல்.அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அட்சரம் பார்க்காது.சைவத்தை விட வைணவம் பிரமாண்டம் எனக் காட்ட வைணவ வாலிபர் வரைந்த வரிகளில் அவரது மேதமை தெரிந்தது.கதைப்படி முக்கியமான பாடல்.கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லைத் தெரியாது.அதே கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் தான்.ஆனால் வளர்ந்து நின்ற வாலி இப்போது வானளாவ நின்றிருந்தார்.சின்னச் சின்ன கம்பெனிகளுக்கு கண்டு கொள்ளவேமாட்டார்.பெரிய பட்ஜெட் என்றால் விடவும் மாட்டார்.ஹீரோக்களை எங்கேயோ கொண்டு செல்வார்.இதே பாடலில் கமலை அவர் அழகாக காட்டியிருப்பார்.அவரது பெற்றோரை அட்டகாசமாக கொண்டு வந்து ஒட்ட வைத்திருப்பார்.ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் தான்.சீனிவாசன் சேய் இந்த விஷ்ணு தாஸன் தான்.சைவம் என்று பார்த்தால் தெய்வம் கிடையாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது.அது தான் வாலி.அவரது புகழ் என்றென்றும் நீடூழி வாழி.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
130
110 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி

கருத்துகள்

18 கூடுதல் கருத்துக்களைக் காட்டு

No comments:

Post a Comment