Thursday, 24 March 2022
ஈஸ்வரி.
வங்க நகரின் கிணற்றடி குருசடியில் ஒரு சிலுவை.
வங்க நகரின் கிணற்றடி குருசடியில் ஒரு சிலுவை.
புனித ஜோசேவாஸ் இலங்கை வந்திறங்கிய வங்காலை இப்பகுதியில் அவரினால் நிலைநாட்டப்பட்ட ஞாபக சிலுவை காலப்போக்கில் சிதைவடைந்து அழிவுற்ற நிலையில், அவ்விடத்தில் 2022.03.22 மாலை 5.00 மணியளவில் வங்காலை பங்குத்தந்தை அருட்பணி. ம.ஜெயபாலன் அடிகளாரின் தலைமையில் பங்கு மக்களால் புதியதோர் திருச்சிலுவை நிறுவப்பட்டது.
புனித ஆனாள் ஆலய அருட்பணி பேரவையின் உதவியுடன் எமது மீனவர்களின் ஒத்துழைப்போடு இவ்வரலாற்று நிகழ்வு ஆசீர்வாதமாய் நிறைவேறியது.
இந்நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி இனிதே நிறைவேறிட கரம் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
விசேடமாக இம்மரச் சிலுவையை உருவாக்க உழைத்தவர்கள், உழவியந்திரம் தந்துதவியவர், கடல் போக்குவரத்துக்காக படகுச் சேவையினை வழங்கிய இரு நல்லுள்ளங்கள் மற்றும் சரீர உதவி புரிந்தோர் அனைவருக்கும் பங்கு மக்கள் சார்பான நன்றிகள்.
மேலுமாக, இந்நிகழ்வினை முன்னின்று வழி நடத்திய எம் பங்குத்தந்தை வண. பிதா. ஜெயபாலன் அடிகள், உதவி பங்குத் தந்தை அருட் பணி. பிரசாந்தன், அருட் சகோதரி ராத்தி ஆகியோருக்கும் எம் இதய பூர்வமான நன்றிகள்.
அத்தோடு இத்திருச் சிலுவை நிறுவும் பணியினை ஆரம்பித்த எமது முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி மார்க்கஸ் அடிகளாருக்கும் நன்றி கூறுவதில் நாம் புளகாங்கிதம் அடைகின்றோம்.
ஈற்றில் புனித ஜோசேவாஸ் முனீந்திரரின் இலங்கைக்கான வருகையின் வரலாற்றுப் பதிவு இன்றைய தினம் புதுப்பிக்கப்பட்டது.
இறைவனின் நாமம் போற்றப்படுவதாக..
டிஎம்எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?
டிஎம்எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? – சிவாஜி
வியட்நாம் வீடு சுந்தரத்தின் கௌரவம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோபாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு, இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டிஎம்எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள், இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி. இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது! காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம். ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார். இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?’
‘சுந்தரம்! டிஎம்எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார். பல்லவியில் ஒரு விதமான பாவம் ஆக்ரோஷம், அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி, மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டிஎம்எஸ். ஒரே வரியையே இரண்டு இடத்தில் ரிபீட் பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார். உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும்போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார். இப்படியெல்லாம் அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்காவிட்டால் இதைப் பாடிய டிஎம்எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?’ என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.

