Tuesday 10 January 2023

ஆணின் சலிப்பிற்கு

 ஆணின் சலிப்பிற்குப் பெண்ணும் காரணமல்ல;

பெண்ணின் சலிப்பிற்கு ஆணும் காரணமல்ல.
இந்த மனச் சலிப்பு, அதாவது -- ஏமாற்றத்தை உணர, உளவியலின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும்.
ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர் பார்த்திருந்தால்தான், ஏமாற்றம், மனச் சலிப்பு, போதும் போதுமென்ற வெறுப்பு உருவாகும்.
எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றால், மனச்சலிப்பு எப்படி வரும்?
என்னைப் பாருங்கள். எனக்கு ஏமாற்றமே இல்லை.
கடைசி மூச்சுவரை இப்படியே வியக்கும் கண்களுடன் இப்படியே பார்த்துக் கொண்டுதானிருப்பேன்.
நீங்கள் வாழும் உலகில்தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எதிர்பார்ப்பு எதுவும் என்னிடம் இல்லாததால், எனக்கு மனச் சலிப்பே ஏற்படுவதில்லை.
அதனால், அதற்கான வாய்ப்பே என்னிடம் இல்லை.
பெண்களின் ஏமாற்றத்திற்குக் காரணமே, அவர்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதுதான்.
பாவம்! ஆண்களால் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முடியவில்லை.
பெண்களுக்குக் கற்பனை அதிகம்.
சாதாரண ஆண்மகனையும் அவர்கள் கதாநாயகன் ஆக்கி விடுகிறார்கள்.
சாதாரண மடையர்கள் கூட, அவர்களின் கற்பனைக் கண்களுக்குக் கெளதம புத்தர்கள் போல் தெரிகிறார்கள்.
அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்க்கும்போது, அந்த, மாமனிதர்கள் சாதாரண மனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.
அதனால்தான் ஏமாற்றம்.
எதையும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்வதால் வரும் விவகாரம் அது.
கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா, என்ன?
இன்றோ நாளையோ எதார்த்த உண்மை தெரியத்தானே செய்யும்?
விளைவு, ஆண்மகன் மனைவியால் தொடர்ந்து குறை கூறப்படுகிறவன் ஆகி விடுகிறான்.
ஆணுக்கு அவ்வளவு கற்பனை கிடையாது.
ஆனால், அவனது உடல் ரீதியான இயல்புணர்வு அழகற்ற பெண்ணையும் கிளியோபாட்ரா ஆக்கி விடுகிறது.
ஆண் மகனது கண்களை 'உயிரியல் பைத்தியக்காரத்தனம்' மூடி மறைத்து விடுகிறது.
'காதலுக்குக் கண்ணில்லை' என்பது தவறல்ல.
ஆண்மகன் கண்களை மூடிக் கொண்டுதான் பார்க்க ஆரம்பிக்கிறான்.
நாம் நினைத்திருப்பது போல் எதார்த்தம் இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் அவனுக்கு.
அதனால் கண்களைத் திறக்கவே பயப்படுகிறான்.
எவ்வளவு காலம்தான் கண்களை மூடிக் கொண்டே வாழ்வது?
இன்றோ நாளையோ கண்கள் திறக்கும்போது, எதார்த்தம் அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
பெண் அவனுக்கு ஏமாற்றம் தர ஆரம்பித்து விடுகிறாள்.
உடலியல் நிறைவு சீக்கிரம் போய்விடும்.
அது இரசாயன மாற்றம்; ஹார்மோன்களின் வேலை.
ஒரு பெண்ணுடன் கூடிக் கலந்து நிறைவு பெற்றவுடனே, எல்லாக் குருட்டுத்தனமும், பைத்தியக்காரத்தனமும் போய்விடும்.
அதற்குப் பிறகு நீங்கள் புத்தி பூர்வமாகப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.
பெண் அப்போது சாதாரணமாகி விடுவாள்.
அவளைப் புறக்கணிக்க நீங்கள் செய்தித் தாள் படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
தொலைக்காட்சி முன்னால் உட்கார ஆரம்பித்து விடுவீர்கள்.
இதிலுள்ள உளவியல் உண்மை சாதாரணமானது.
நீங்கள் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் எதிர்பார்ப்பை நம்பவும் ஆரம்பித்து விடுகிறீர்கள்.
ஆனால், உங்கள் எதிர்பார்ப்புகள் விரைவில் எதார்த்தத்தின் முன் சிதறுண்டு போய் விடுகின்றன.
ஆணும், பெண்ணும். ...எல்லாரும் ஏமாற்றமடைவது இதனால்தான்
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அம்சம் சலிப்பு.
இதற்கு முன்னால், மனிதன், வேறு எப்போதும், இவ்வளவு சலிப்படைந்ததில்லை.
முன் காலத்தில் மனிதன் வேட்டைக்காரனாக இருந்தான்.
அப்போது திருமண முறையும் இல்லை.
அதனால், சலிப்படைவதற்கும் வாய்ப்பில்லை.
அவன் சலிப்படையவும் இல்லை. அதற்கு அவனுக்கு நேரமும் இல்லை.
பெண் அப்போது சலிப்படையவில்லை.
புதிய புதிய ஆண்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவளுக்கு இருந்தது.
பாதுகாப்பின் பெயரால் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆனால், அது, புதியவை தேடும் வாய்ப்பை இழக்கச் செய்து விட்டது.
உருதுக் கவிஞர் ஒருவர், கடவுளை நோக்கி, இப்படிப் பாடுகிறார்:
"நீ திருமணத்தை ஆதரிப்பதானால், எனக்கு ஏன் இரண்டு கண்களைக் கொடுத்தாய்?
எனக்கு ஏன் புத்திசாலித்தனத்தைத் தந்தாய்?" என்கிறார், அவர்.
முட்டாள்களுக்குச் சலிப்பே கிடையாது....... பார்வையற்றவர்களுக்கும் சலிப்பே கிடையாது என்ற உண்மை உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்களோ, அந்த அளவு விரைவில் சலித்து விடுவீர்கள்.
அதுதான் அதன் அளவு.
மிகவும் புத்திசாலித்தனமான, உணர்வு மிக்க படைப்பாளிகளே மிகவும் சலிப்படைந்து போகிறவர்கள்.
அவர்களுக்கு ஓர் அனுபவமே போதுமானது.
திரும்பத் திரும்ப அதையே அனுபவிக்க விரும்புவதே முட்டாள்களின் குணம்.
உலகம் இப்போது பொருளாதாரத்திலும், சமுதாய நிலையிலும் மேலும் மேலும் நிறைவடைந்து வருகிறது
திருமணம், குழந்தைகள், கல்வி, ஓய்வு, ஒய்வூதியம், ஆயுள் பாதுகாப்பு என்றெல்லாம்.
வளர்ச்சி பெற்ற சில நாடுகளில், வேலையின்மைக்குக்கூட, ஊதியம் தருகிறார்கள்.
புதிய அனுபவங்கள் அடையும் வாயிலை இவை அடைத்து விடுகின்றன.
எல்லாமே கிடைத்து விடுகிற, நிறைவடைந்து விடுகிற, நிர்வகிக்கப்படுகிற ஒரு சமுதாயத்தில், குறிப்பாக -- மேலை நாடுகளில், புதிய அனுபவத்திற்கான ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் இருக்கிறது.
அதுதான் தற்கொலைக்கான ஆசை!
அது ஒன்றுதான் அறியப்படாத புதிய அனுபவமாக இருக்கிறது.
அவர்கள் உடலுறவை அனுபவித்து விட்டார்கள்; அது முட்டாள்தனமானது என்று கண்டு கொண்டார்கள்.
அவர்கள் போதை மருந்துகளைப் பயன்படுத்திப் பார்த்து விட்டார்கள். அது தங்களை ஏமாற்றுகிறது என்பதையும் தெரிந்து கொண்டு விட்டார்கள்.
அதில் கிளர்ச்சி, சாகசம், அறைகூவல் ஏதும் இல்லை.
அதனால்தான், பலரும், மேலும் மேலும், தற்கொலைக்கு முயல்கிறார்கள்.
ஒன்றை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும்.
ஏழை நாடுகளில் தற்கொலைகள் அதிகம் இல்லை!
ஏழை மக்களுக்குச் சலிப்புணர்வு குறைவு; ஏமாற்றமும் குறைவு.
அவர்கள் உணவைப் பற்றி, உடையைப் பற்றி, உறைவிடம் பற்றி மட்டுமே நினைப்பதால் சலிப்படைய நேரமில்லை.
அப்படியிருக்க அவர்களால் முடியாது.
எல்லாம் கிடைத்து விடுகிற செல்வ வளம் மிக்க சமுதாயத்தில், எவ்வளவு காலம்தான் திருப்தியுடன், பாதுகாப்புடன், அங்கீகாரத்துடன், உறுதியான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து தொலைப்பது?
அதனால்தான் மாபெரும் புத்திசாலிகள் தற்கொலை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
கீழை நாடுகளும் செல்வச் சிறப்போடு வாழ்ந்த காலங்கள் உண்டு.
ஆனால், இவை தற்கொலைக்கு மாற்றுக் கண்டு பிடித்திருந்தன. அதுதான் சன்னியாசம்!
கெளதம புத்தரைப் போன்றவர்கள், எல்லா வசதிகளும் பெற்றிருந்தும், அதில் சலிப்படைந்துதான் துறவை மேற்கொண்டார்கள்.
இருபத்தொன்பதாம் வயதில், புத்தருக்கு, இந்த உலகம் போதும் என்றாகி விட்டது.
அவர் எல்லாவற்றையும் அனுபவித்து முடித்து விட்டார்.
இனி இந்த உலக வாழ்வில் புதிய வாய்ப்புகளுக்கு வழி இல்லை என்ற நிலையில், அவர் அதை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
ஒரு நாள் நள்ளிரவில், அவர் தம் பாதுகாப்பை விட்டு, அரசை விட்டு, அரச போகங்களை விட்டுத் தப்பி வெளியேறினார்.
எல்லாவற்றையும் அவர் தூக்கி எறிந்தார். ஒரு பிச்சைக்காரர் ஆனார்.
என்றும் அழியாத, என்றும் முதுமையடையாத, என்றும் சலிக்காத ஒன்றை அவர் தேட ஆரம்பித்தார்.
என்றும் புதிதாய் இருக்கும் ஒன்றைத் தேடிச் செல்வதுதான் துறவு.
உங்களுக்குள், என்றும் புத்தம் புதியதாய் இருக்கும் மூல அம்சம் ஒன்று இருக்கிறது. அது பழசாவதும் இல்லை; சலிப்புத் தருவதும் இல்லை.
நான் இதைச் சொல்வதும் கூட அந்த மூலத்திலிருந்துதான்.
அதிலிருந்துதான் என் சொற்கள் வருகின்றன.
இவற்றை நீங்கள் சுவைத்தால், உணர்ந்தால், அந்த தொலைதூரத்துப் பிரதேசத்தைக் கொஞ்சமாய்ப் பார்த்ததாகப் பொருள்.
அங்கே எல்லாமே புதியதாய், கணம் கணம் புதுமை கொண்டதாய் இருக்கும்.
அங்கே கண்ணாடியின் மீது தூசு படிவதில்லை.
அந்த உலகம் உங்களுக்குள் இருக்கின்றது.
ஆனால், உங்களுக்குப் பெண் மீதுதான் ஆசை.
பெண்ணுக்கு ஆணின் மீது தான் ஆசை.
உங்களது அழியாத ஆனந்தத்தின் மூலத்தை அறியப் பெண்ணால் முடியாது.
பெண்ணின் மீது உங்கள் கவனம் இருக்கும்வரை, அது உங்களாலும் முடியாது.
நாமெல்லாம் மற்றவர் மீதே கவனம் செலுத்தி வருகிறோம். அது உங்களுக்குப் பரமானந்தம் தருகிறது.
ஆனால், நீங்கள் உங்களுக்குள் பார்ப்பதே இல்லை.
உங்களுக்கு நெருக்கமானவர் நீங்கள் மட்டுமே.
அதனால்தான் நீங்கள் உங்களை இழந்து விடுகிறீர்கள்.
உங்களை உங்களிலிருந்து பிரித்து எடுக்கவே முடியாது.
எங்கே உங்களை அழைத்துச் சென்றாலும், நீங்கள் உங்களுடன் இருந்து கொண்டேதான் இருப்பீர்கள்.
பிரிக்க வழியில்லை.
அப்படியிருந்தும், 'என் அழகான நானே!' என்று உங்களால் சொல்ல முடிவதில்லை.
உங்களுக்குள் பிரவேசிக்கும் கலையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் புறநிலையை விட அதிகம் அகநிலைப் பார்வைக் கொண்டவராக இருக்க வேண்டும்.
அகநிலை நோக்குதான் ஆன்மிகத்தின் சாரம்.
நீங்கள் உள்ளே பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
அதைத்தான் தியானம் என்கிறோம்.
அது உள்ளே பார்ப்பது தவிர வேறில்லை.
உங்களுடைய வாழ்க்கை மூலத்தின் மையம் நோக்கிப் பாய்ந்து செல்வதுதான் அது.
அதைத் தொட்டுவிட்ட மாத்திரத்தில், சலிப்பெல்லாம் பறந்துவிடும்.
அப்புறம் வாழ்க்கை நித்தியக் கொண்டாட்டம்தான்.
இல்லாவிட்டால் உன் வாழ்வின் தலைவிதியே சலிப்பாக ஆகிவிடும்.
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
176
23 கருத்துகள்
83 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment