Sunday, 22 May 2022

இசையால் வசமாகாத இதயம் எது

இசையால் வசமாகாத இதயம் எது 

காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும்  பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.

பாடலின் வரியையும் அதன் மெட்டையும்  அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார்.  மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான். தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால்  தந்தையார் பேருவகையடைந்தார். தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக  வருவான் என்று  மனதில் நினைத்துக் கொண்டார்.


" சிந்துநதியின்மிசை நிலவினிலே " என்ற அந்த.பாரதிபாடலைப் பாடிய அந்த குழந்தை வேறுயாருமல்ல, இந்தக்கட்டுரையாளர்  தான்! இந்தப்பாடலின் வரிகளை இன்று கேட்டாலும்  சொல்ல முடியும் என்று சொல்லுமளவுக்கு மனதில் பதிந்துவிட்ட பாடல் அது.


இந்த சம்பவம் சாதாரணமானது என்றாலும் தமிழ் சினிமாஇசையின் மெல்லிசை மலர்ந்து கொண்டிருந்த காலமொன்றைச் சேர்ந்த இனிய பாடல் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு சொல்கிறேன்.மூன்று வயது பையன் ஒருவன் பாடலின் பொருள் தெரிந்தா பாடியிருப்பான்? பாடலின் இசைதான்அதை சாத்தியமாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இங்கில்லை!


நமது   வாழ்க்கையோட்டத்தில்   மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் பாடல்கள் விதையாகி , செழித்து வளர்ந்தது இவ்விதமே.


கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த  பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறைக்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடியாழத்தின்  உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.


Music and Rythm find their way in to the secret places of the Soul - என்பார் பிளேட்டோ.


கடந்து கால  நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு  இசை ஒரு இலகுவான சாதனம். பழைய பாடல்களைக் கேட்கும்  போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்துவிடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்ககரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!


நினைவுகளின் ஓடையாக  இசை விளங்குகிறது. இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்துள்ளது. இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கிறது. இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம்  எழிலடைகிறது. உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து  நுண்ணறிவில்  சுவாலையை ஏற்படுத்துகிறது  இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.


வானலைகளில் நீந்தி ,காற்றுவெளியில் மிதக்கும் இசையலைகள் மனிதனின் காதுகளில் புகுந்து அவனோடு ரகசியம் பேசவும் , பலவித கற்பனைகளையும் ,உணர்வுகளையும் கிளர்த்துகின்றன.


காரண காரியங்கள் தெரியாமல் , காலகாலமாய் நாம் இசையைக் கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கின்றோம். பிறந்து வளர்ந்த காலம் தொட்டு இசையில் லயித்து வந்த நாம் எங்களுக்குப் பழக்கமான பாடல்களைக் கொண்டாடியும்  வந்திருக்கின்றோம். இன்பம்  தரும் பல இசைவகைகளின் சுமைதாங்கியாகவும் நாம் இருக்கின்றோம்.


தமிழ் மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த பாடல்கள் என்றால் அது திரையிசைப்பாடல்களே !   ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்க வழிவகுத்தன.


வாழையடி வாழையாய் வந்த ராகங்களில் அமைந்த பலவிதமான பாடல் வகைகள்   ,அவற்றில் மெல்லியதாய்  நுழைந்து , நமக்கு   அறிமுகமில்லாத இசைவகைகளையும் , வாத்தியங்களையும் இசையமைப்பாளர்கள் கலாபூர்வமாக இணைத்து  தந்த பாடல்களால்  நம் உணர்வுகள் கிளரப்பட்டிருக்கின்றன.


இவ்விதம் தமிழ் திரையிசைக்கு ஜீவசத்துமிக்க பாடல்களைத்தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்!


மரபு வழியின் தடம் பற்றி  திரையிசையின் மெல்லிசையில்  பரவசமும் , புதுமையும் ,உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறந்த பாடல்களையும் தந்து மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.


பழமைக்கும் புதுமைக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் புதுமையின் கை ஒங்க வைத்த பெருமை இவர்களையே சேரும். படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைப் பொழிந்தார்கள்.


அவர்கள் தந்த பாடல்களில் தான் எத்தனை உணர்வுகள் , எத்தனை பாவங்கள்..!


நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே- வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே....


மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழிவண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த   கலையன்னமே


இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது. பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அதனுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது.


அழகுணர்ச்சியையும் ,மன எழுச்சியையும் தூண்ட  நுட்பமும் ,செறிவும் ஒன்றிணைந்து கலாப்பூர்வமாக வெளிப்படும் கவிதை  அதை இனிதே எடுத்துச் செல்லும் தன்னிகரில்லாத இசை. இனிமையான குரல்களில்  வரும் இனிமையும்,  சோகமும் கலந்த அற்புதமான தாலாட்டு.


தங்களது குடும்பநிலை , உறவுகளின் பெருமை,மற்றும் பலவிதமான நிலை என  தாலாட்டு மரபின் அத்தனை அம்சங்களையும் உயர்வளித்து சொன்ன பாடல் அது!


இது போன்று  கதையின் சூழலை  கவிதையின் உயர்வான நடையில்  பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.


வானாடும் நிலவோடு கொஞ்சும் விண்மீன்கள் உனைக்கண்டு அஞ்சும் - எழில் வளமூட்டும் வினை மின்னல் உனைக்கண்டு அஞ்சும்


என்று கவிஞர் வில்லிபுத்தன்  எழுதிய " மாலாஒரு மங்கல் விளக்கு " பாடலை நாம் உதாரணமாக இங்கே தந்தாலும், அந்தப்பாடல் மிக அருமையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல் தானெனினும் , "மலர்ந்தும் மலராத" பாடல்  அளவுக்கு   வெகுமக்களிடம் சென்று வெற்றியடையவில்லை என்பதே உண்மை. மிகப்பெரிய வெற்றிப்படமான பாசமலர் படத்தின் வெற்றியும் இந்தப்பாடல் அதிக புகழ்பெற்றமைக்கான காரணமாகும்.


எனினும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த  இனிய மெட்டல்லவா அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது ! இது போன்ற பல இசைவார்ப்புகள் நம்மைக் கொள்ளை கொண்டு சென்றன. நெஞ்சை ஆட்சி செய்யும் வளமிக்க பாடல்கள் அவை !


இனிய இசையின் வெற்றி என்பதே இது தான்! அந்த இனிய இசைக்கு என்ன வரிகளை வைத்தாலும் இசை  வென்று விடும் என்பதே உண்மை.ஆனால் உயிர்த்துடிப்புமிக்க வரிகள் இணையும் போது நெஞ்சைப் பறி கொடுக்கும் ரசவாதம் பிறந்து விடுகிறது.


தமது அமரத்துவக் கானங்களால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகுலகைக் காட்டியதில் பெரும் பங்கு தமிழ் திரையிசையமைப்பாளர்களுக்கு உண்டு.அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லதகுந்த தனித்தன்மை மிக்கவர்கள் தான்  மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.


வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத  எத்தனை வகை , வகையான, எண்ணற்ற  இனிய பாடல்களால் தமிழ் இசை ரசிகர்களை இன்பத்தில் திணறடிக்க   வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.


பின்னாளில் எத்தனையோ புகழாரங்களை மெல்லிசைமன்னர்கள் பெற்றாலும் , அதில் அதியுயர்  பாராட்டாக, அதே துறையில் யாரும் எட்டாத சிகரங்களைத்   தொட்ட  இசைஞானி இளையராஜா , மெல்லிசைமன்னர்களின் இசை எவ்விதம் தன்னை பாதித்தது என்பதை விளக்க  முனைந்தமை சிறந்த பாராட்டாக அமைந்தது


" நான் ஒரு இசைக்கலைஞனாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதன் முக்கியமான காரணம்  அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி அவர்களுமே !  ஏனென்றால் நான் பிறந்த கிராமத்திலே இசை கற்றுக் கொள்ள  விரும்பினாலும் அங்கே சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அந்தக் கிராமத்திலே அவர்களுடைய பாடல்கள்  ஒலிக்காத நாளெல்லாம் விடியாத நாள் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன......உணர்வுமயமான     அவர்களது நாதம் என்னுடைய நாடி , நரம்பில், இரத்தத்தில் உடம்பில் எல்லாம் ஊறிப்போனதால்   தான் !


இது தான் மெல்லிசைமன்னர்கள் பெற்ற அதியுயர் பாராட்டு என்பேன். அவர்களின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பது அவர்களது இசை, ஒரு  மாபெரும் கலைஞனை உருவாக்குவதில் எவ்விதம் பங்காற்றியிருக்கிறது என்பதே!


பழைய பாடல்கள் என்றதுமே கருப்பு வெள்ளைப்  படங்களும் , வானொலிப்பெட்டியும் நம் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.வானொலி நம்மை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட சாதனமாகும். இதயத்தோடு இணைந்த எத்தனையோ பாடல்களைத் தந்து உணர்வு மிகுதியில்  நம்மைத் திளைக்க வைத்ததிருக்கிறது.இசையில்நம்மை தாலாட்டி வளர்த்த தாய்வீடு வானொலியே என்று சொல்லி கொள்வதற்குக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி


விருது பெறுவதால் மட்டும் ஒருவரின் திறமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் , தனது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.


அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில்  விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை  ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் தான்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் !


தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர், மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க  முடியும்  என்று நினைத்துப் பார்க்க முடியாத  காலத்து மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆயினும் அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது."உழைக்கத் தெரிந்தது , பிழைக்கத் தெரியவில்லை" என்பார்!


கேரளாவில் பாலக்காடு  மாவட்டத்தில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை  நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.


தமிழின் சகோதர மொழியான  மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.


அதற்கு கைமாறாக அவர் தந்த இசை, தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன. 1940 களிலேயே கொடிகட்டி பறந்த ஹிந்தியின் மெல்லிசை , அதன் ஈர்ப்பால் 1950 களில் வீசிய  தெலுங்கு மெல்லிசை அலை போல 1960 களில் தமிழில் வீசியடித்த மெல்லிசை வீச்சின் சொந்தக்காரர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.


1952 இலிருந்து 1965 வரை ஒன்றிணைந்து இயங்கிய அவர்கள்   மனது மறக்காத பல பாடல்களைத்  தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றார்கள். அழகியல் நோக்கில் பல இனிமையான பாடல்களைத் தந்தவர்களின் பிரிவு பற்றிய துல்லியமான காரணிகள் யாராலும் பேசப்படவில்லை. அவர்களும் அது குறித்து பேசியதில்லை. இசை வேட்கை மிகுந்த இரு மேதைகளின் பிரிவு தமிழ் திரை இசைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பதை விட நல்லிசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என்பதே பொருத்தமானதாகும்.


மெல்லிசைக்கு புதுக்கட்டியங்   கூறிய இரட்டையர்களின் கூட்டு குறிப்பாக இறுதி 5 ஆண்டுகளில் [1960 - 1965] உச்சம் பெற்றது.ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் உதிரும் போது ஒளியைப் பாய்ச்சி  மறைவது போல , நல்ல பல பாடல்களை அள்ளிக் கொட்டியவர்கள் பிரிந்து சென்றனர்.


நம் வாழ்வின் நீண்ட பாதையில்  அவர்களது பாடல்களுடன் நாம் பயணித்திருக்கின்றோம்.


வானொலியில் பிறந்து காற்றலைகளில் மிதந்த அவர்களது பாடல்கள் நம் நெஞ்சங்களில் கலந்து நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.


ஆரம்பநாளில் மெல்லிசைமன்னர் இசையமைத்த "வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே " , "கூவாமல்  கூவும் கோகிலம் "  , "தென்றலடிக்குது என்னை  மயக்குது , "கண்ணில் தோன்றும் காடசி யாவும்" ,"கசக்குமா இல்லை ருசிக்குமா"   போன்ற பாடல்களை நினைக்கும் போதே மனம் ஒருவித போதையில் ஆழ்கிறது. நினைவு திரையில் மறைந்த உறவுகளும் , நினைவுகளும் , கழிந்து போன நாட்களும் நம்மை வருத்தம் தந்து வருடிச் செல்லும். மெல்லிசையில் ஒரு  துலக்கத்தை அந்தக் காலத்திலேயே காண்பித்திருப்பதையும்  அவரது திறமமையையும் எண்ணி வியக்கவும் வைக்கிறது .


மெல்லிசைமன்னர்கள் திரைப்படத்தில் நுழைந்து முன்னுக்கு வந்த காலத்தைக் கவனத்தில் எடுத்தல்  தேவையாகிறது. கர்னாடக செவ்வியலிசையின் கட்டுக்கள் தளர்ந்து மெல்லிசையின் துளிர்கள்  அரும்பிக்கொண்டிருந்த காலம் என்பதை திரையிசையை நோக்குபவர்கள் உணர்வார்கள். மெல்லிசைக்கான முகிழ்ப்புக்கு  , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய  மெல்லிசையையும் ஹிந்தி திரை இசையையும் ஆதர்சமாகக் கொண்டு   பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.




இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் கண்டார்கள்.


ஆயினும் அவர்களில் வயதில் இளையவராக இருந்த சி.ஆர்.சுப்பராமன், மரபில் நின்றதுடன் புதுமை விரும்பியாகவும் தனது படைப்பை தர முயன்றார்.அவரது அகால மரணம், அவரது அடியொற்றி வந்த புதுமை நாட்டம் மிகுந்த ஒரு புதிய பரம்பரையினரை அரங்கேற்றியது. ஏ.எம்.ராஜா , டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர் .பாப்பா , எம்.எஸ்.விஸ்வநாதன் , டி.கே.ராமமூர்த்தி போன்றவர்கள் புதுமை காண விளைந்தனர். புதுமை சகாப்தம் சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.


மெல்லிசை உருவாக்கத்தில் தீவிர ஆர்வம் காட்டிய மெல்லிசைமன்னர்கள், ஹிந்தி திரையிசையை முன்மாதிரியாகக் கொண்ட அதே வேளையில் தங்கள் தனித்துவத்தைக் காண்பிக்கவும் , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.


1950 களில் வெளிவந்த திரைப்படங்களை அவதானிக்கும் பொழுது ஜி.ராமநாதன் , ஜி. கோவிந்தராஜுலுனாயுடு , எஸ்,வி.வெங்கட்ராமன் ,ஆர்.சுதர்சனம் , எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எம்.எஸ்.ஞானமணி , பெண்டலாயா , எஸ்.ராஜேஸ்வரராவ் ,எஸ்.தட்சிணாமூர்த்தி , கண்டசாலா , சி.ஆர் சுப்பராமன் , லக்ஷ்மன் பிரதர்ஸ் ,ஆதி நாராயணராவ் , வி.நாகைய்யா , கே.வீ மகாதேவன் ,சி.என்.பாண்டுரங்கன் , ஏ. ராமராவ் ,எம்.டி.பார்த்தசாரதி சி.எஸ்.ஜெயராமன் , களிங்கராவ் , எச்.ஆர் .பத்மநாபசாஸ்திரி என பல இசையாளுமைகள் வெற்றிகரமாகக்   களமாடிக்கொண்டிருந்ததை   அவதானிக்க முடிகிறது.


இவர்களுடன் புதிய சந்ததியினரான விஸ்வநாதனின் இளவட்ட சகபாடிகளான டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர்.பாப்பா , ஏ,எம்.ராஜா,டி.சலபதிராவ் ,ஆர்.கோவர்த்தனம் ,வேதா , பி.எஸ்.திவாகர் போன்ற பலரும் தனித்தனியான இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள்


1940 களில் ஏற்பட்ட வளர்ச்சியின் அடையாளமாக மரபு வழி வந்த நாடக இசையின் மைந்தர்களான ஜி.ராமநாதன் , எஸ்.வீ.வெங்கட்ராமன் , பாபநாசம் சிவன் , எஸ்.எம் சுப்பையாநாயுடு,ஆர்.சுதர்சனம் போன்றவர்கள் முன்னணிக்கு வந்துவிட்டார்களெனினும் நாடக இசையின் வட்டத்தைச் சார்ந்தும், அதிலிருந்து விடுபடவும் ஓரளவு முனைப்பு காட்டினர் 1950 களில்   தியாகராஜா பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்து பாடும் பாணி மாறி புதிய மெல்லிசைப்போக்கின் பயணம் தொடங்கியது.


பாடி நடித்து பெரும்புகழ் பெற்ற தியாகராஜா பாகவதர் , பி.யூ.சின்னப்பா போன்றோருடன் அந்த சகாப்தம் நிறைவுற்றாலும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை பாடி நடிப்பதை பிடிவாதத்துடன் கடைப்பிடித்தவர்கள் டி.ஆர். மகாலிங்கம் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரே ! பாடும் ஆற்றல் வாய்ந்த எஸ்.வரலட்சுயும் இறுதிவரை ஆங்காங்கே பாடி நடித்தவர்களில் ஒருவர்.


பாடி நடிக்காத புதிய நடிகர்களான எம்.கே ராதா , ரஞ்சன் போன்றோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நடிகர் ரஞ்சன் ஒரு சில பாடல்களை பாடினாலும் ஒரு பாடகர் என்ற அளவுக்குப் புகழ் பெறவில்லை.


எஸ்.எஸ்.வாசனால் பெரும் செலவில் எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் , மங்கம்மா சபதம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்கள் எம்.கே ராதா , ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுடன் நடிகைகளான ருக்மணி [ நடிகை லட்சுமியின் தாயார்   ] , டி.ஆர்.ராஜகுமாரி போன்றோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் ருக்மணியால் வெற்றிபெறமுடியவில்லை.ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் ருக்மணி பாடினார் என்றும் பின்னர் இனிமை குறைவு எனக் கருதி   பி.ஏ.பெரியநாயகியைப் பாட வைத்து   டப் செய்தார்கள் என்கிறார் ஆய்வாளர் வாமனன்.


இனிமையாகப்பாடுவதில் புகழடைந்த டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் பாடுவதில் கணிசமான அளவு வெற்றியடைந்தவர் "நடிப்பிசைப்புலவர்" என்று அழைக்கப்படட கே.ஆர் ராமசாமி. இவரது வெற்றிக்கு திராவிட இயக்கம் பெருமளவு உதவியது.சிறைவாசத்துடன் தொடங்கிய தியாகராஜபாகவதரின் வீழ்ச்சியை, ஏற்கனவே பாடி நடித்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர் ராமசாமி போன்ற நடிகர்கள் நிரப்ப முனைந்தனர். ஆயினும் பாடி நடிக்கும் காலம் மெதுவாக மலையேறிக்கொண்டிருந்தது என்பதும் கவனத்திற்குரியது.


சி.ஆர்.சுப்பராமன் விட்டுச் சென்ற இசைப் பணிகளை முடித்துக்கொடுக்கும் வாய்ப்பு அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் , ராம்மூர்த்தியினருக்கு கிடைத்தது.ஆயினும் தனது இசையார்வத்தால் சி.ஆர்.சுப்பராமன் உயிருடன் இருந்த காலத்திலேயே தனித்து இசையமைக்க முயன்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.


வளரத் துடிக்கும் விஸ்வநாதனை தனது புதிய படத்தில் அறிமுகம் செய்ய விரும்பிய மலையாளபடத் தயாரிப்பாளர் ஈப்பச்சன், எம்.ஜி.ஆரை வைத்து ஜெனோவா என்ற படத்தை எடுத்தார்.புதிய இசையமைப்பாளர் விஸ்வநாதன் பற்றி எம்.ஜி ஆர் அறிந்த போது " ஆபீஸ் பையனாக இருந்தவனை இசையமைப்பாளனாகப் போட்டு என் படத்தை கெடுத்துவிடப் போகிறீர்கள் " என்று மறுக்க ,விஸ்வநாதன் தான் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக நின்ற தயாரிப்பாளர் " அவர் போடும் பாட்டுக்களைக் கேளுங்கள்,இல்லை என்றால் மாற்றிவிடலாம் " என்று கூற பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறது,இன்னும் நன்றாக இசையமைக்க வேண்டும்,உனக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பாராட்டினார் " என மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திரும்பிப்பார்க்கிறேன் என்ற ஜெயா டி.வி நிகழ்ச்சியில் தனது நினைவுகளை பகிர்கிறார்.


ஆனாலும் ஜெனோவா படத்தில் அக்கால இசையமைப்பாளர்களான எம்.எஸ்.ஞானமணி , டி.ஏ.கல்யாணம் போன்றோரும் இசையமைத்ததாக பட டைட்டில் தெரிவிக்கிறது.


காலமாற்றத்தின் விளைவாக திரைத்துறையில் வெவ்வேறு துறைகளிலும் புதியவர்களின் வருகையும் மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலத்தில் ஏற்படத்தொடங்கியது.


நடிப்பில் ......,,,,


எம்.ஜி.ஆர், [ராஜ குமாரி 1948 ,மந்திரி குமரி 1950 - மலைக்கள்ளன் 1953]


சிவாஜி, பராசக்தி [1952] ,,


பத்மினி ,வையந்திமாலா போன்றோரும்,


பாடகர்களில் ,,,


அபிமன்யூ [1948 ] படத்தில் திருச்சி லோகநாதன்


பாதாள பைரவி [1950 ] படத்தில் பி.லீலா


மந்திரி குமாரி [1950] படத்தில் டி.எம்.சௌந்தரராஜன்


மந்திரி குமாரி [1950] படத்தில் ஜிக்கி


சம்சாரம் [1951] படத்தில் ஏ.எம்.ராஜா


பெற்ற தாய் [1952] படத்தில் பி.சுசீலா


ஜாதகம் [1953] படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ்


பொன் வயல் [1954] படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்


போன்றோரும் ,இசையமைப்பில் மேற்குறிப்பிடட புதியவர்களும் அறிமுகமாகியிருந்தனர்.


பாடும் பாணியிலும் , இசையமைப்பிலும் புதிய முறை அரும்பிய காலம் என்பதை அக்காலப் பாடல்கள் சில நிரூபணம் செய்கின்றன.திரைப்படங்களில் சமூகக் கதையமைப்பு மாற்றமும் அதற்குத் தகுந்தற்போல இசையும் மெல்லிசைமாற்றம் பெறத் தொடங்கியது.பெரும்பாலும் அக்கால ஹிந்தி இசையை ஒட்டியே அவை அமைந்திருந்தன.


ஆயினும் ஹிந்திப்பாடல்களை தழுவாத வகையில் வாத்திய அமைப்பைக் கொண்ட பாடல்களும் ஆங்காங்கே வெளிவரவும் செய்தன.வலுவான ஹிந்தி இசையின் தாக்கத்தோடு போராடிய இசையமைப்பாளர்கள் காட்டிய சிறிய தனித்துவவீச்சுக்கள் தான் இவை என கருத வேண்டியுள்ளது.


ஆரம்ப காலத்தில் மெல்லிசைமன்னர்கள் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவர்களாயினும் படைப்புத்திறனில் வீச்சைக் காண்பிக்க ஆர்வத்துடன் முனைந்து செயற்பட்டனர்.அபூர்வமான சில பாடல்களை அப்போதே தந்ததை இன்று அவதானிக்க முடிகிறது அவை இன்றும் ஆர்வத்துடன் கேட்கப்படுகிறது. எண்ணிக்கையில் குறைந்தளவு படங்களுக்கு இசையமைத்தமையும்,அதிக புகழ்பெறாமையும் இவர்களது தனித்துவம் வெளிப்படாத காலமும் இவையாகும்.


1950 களில் ஒருவகை மெல்லிசைப்போக்கு உருவாகியிருந்தது. பொதுவாக "மெல்லிசை " என இங்கு குறிப்பிடப்படும் இசை என்பது பாடலமைப்பில் , பிரயோகங்களில் எளிமை என்றே கருதப்படுகிறது.அவை வெவ்வேறு காலங்களில் வாத்திய அளவில் கூடியும் , குறைந்தும் பயன்படுத்தப்பட்டிருந்தன.மெல்லிசையில் வாத்திய இசையின் பங்கு அல்லது அடிப்படை என்பதே மெட்டின் இசைப்பண்பை வாத்திய இசையால் மெருகூட்டுவது எனக்கருதப்படுகிறது .இது காலத்திற்கேற்ப உயிர்த்துடிப்புமிக்க இசையை தர முனையும் இசையமைப்பாளர்களது ஆற்றலையும் , தனிப்பாதையையும் காட்டி நிற்கும்.மெல்லிசை என்பது   திரையிலும் ,வானொலியிலும் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாத்திய எண்ணிக்கையின் அளவிற்பார்பட்டதே என்பதையும் நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.


வானொலியில் எண்ணிக்கையில் குறைந்த வாத்திய அளவும் ,திரையில் அதிகமானஅளவிலும் பயன்பட்டிருக்கிறது என்பதும் அவதானத்திற்குரியது.


1953 இல் இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னரின் சில பாடல்கள் சோடை போகவில்லை என்று சொல்லலாம்.அவர் அறிமுகமான ஜெனோவா படத்தில் வெளிவந்த சில பாடல்கள் அதற்கு சான்று பகர்கின்றன.


01 கண்ணுக்குள் மின்னல் காட்டிடும் காதல் ஜோதியே - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


02 தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன


03 துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் - - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


04 எண்ணாமலே கண்ணே நெற்று - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:குழுவினர் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


05 புதுமலர் வனம்தனை - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


06   பரலோக மாதா பரிதாபமில்லையா - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்: பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


போன்ற பாடல்கள் இசைத்தட்டில் உள்ளன. இதில் "கண்ணுக்குள் மின்னல் காட்டும்" , மற்றும் "பரலோக மாதா பரிதாபமில்லையா" போன்ற பாடல்கள் இனிமையின் இலக்கை எட்டியிருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.


விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின் இனிய தெறிப்புக்கள் பலவற்றை நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் " கண்ணுக்குள் மின்னல் காட்டும் " , " பரிதாபம் இல்லையா பரலோக மாதா " போன்ற பாடல்கள் இயல்பான நீரோடை போன்ற ஓட்டம் கொண்ட பாடல்களாக நம் நினைவில் நிலைத்து நிற்கின்றன.


அக்காலத்தில் வெளிவந்த திரைப்படப்பாடல்களோடு ஒப்பு நோக்கும் போது அதிபிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் காலத்தை ஒட்டிய இனிய பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.


இத்தைய பின்னணியில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அறிமுகமான காலத்துக்கு முன்னர் வெளிவந்த பாடல்களை சற்று நோக்கினால் சிறந்த பல பாடல்கள் வெளிவந்ததை அவதானிக்கலாம்.


01 ஆகா ஆடுவேனே கீதம் பாடுவேனே   - படம்:அபூர்வ சகோதரர்கள் 1949   - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.பானுமதி - இசை :எஸ்.ராஜேஸ்வரராவ் .


02 மானும் மயிலும் ஆடும் சோலை   - படம்:அபூர்வ சகோதரர்கள் 1949   - பாடியவர்கள்: பி.பானுமதி - இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்


03 பேரின்பமே வாழ்விலே - படம்:தேவகி 1952 - பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + பி.லீலா - இசை :ஜி.ராமநாதன்


04 ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே - படம்:சின்னத்துரை 1951 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + பி.லீலா - இசை :டி.ஜி.லிங்கப்பா


03 வானுலாவும் தாரை நீ இதயகீதமே - படம்:இதயகீதம் 1950 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + டி.ஆர்.ராஜகுமாரி   - இசை :எஸ்.வி.வெங்கட்ராமன்


04 பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா   - படம்:சின்னத்துரை 1951   - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் - இசை :டி.ஜி.லிங்கப்பா


05 ஒ..ஜெகமத்தில் இன்பம் தான் வருவது எதனாலே   - படம்:சின்னத்துரை 1951   - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + வரலட்சுமி   - இசை :டி.ஜி.லிங்கப்பா


05 சம்சாரம் சம்சாரம் சலகதர்ம சாரம்   - படம்:சம்சாரம் 1951   - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   - இசை :ஈமானி சங்கர சாஸ்திரி


06 அழியாத காதல் வாழ்வின் - படம்:குமாரி 1950   - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   - இசை :கே.வீ.மகாதேவன்


07 பேசும் யாழே பெண் மானே     - படம்:நாம் 1951   - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   - இசை :சி.எஸ்.ஜெயராமன்


08 ஆடும் ஊஞ்சலைப் போலே அலை - படம்:என் தங்கை 1952   - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :சி.என்.பாண்டுரங்கன்


09 காதல் வாழ்விலே கவலை தவிர்ந்தோம் - படம்:என் தங்கை 1952   - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :சி.என்.- இசை :சி.என்.பாண்டுரங்கன்


10 புது ரோஜா போலே புவி மேலே வாழ்வோமே -படம்: ஆத்ம சாந்தி [1952]- பாடியவர்கள் : டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :


தந்தை பெரியாரின் சீர்திருத்தக்கருத்துக்கள் புகழ்பெறத்தொடங்கிய இக்காலத்தில் அதன் ஆதிக்கம் சினிமாவிலும் எதிரொலித்தது. பொருளற்ற புராணப்படங்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களை பாடல்களால் சோபையூட்டிக்கொண்டிருந்த சினிமாவில் சமூகக்கதைகளை கொண்ட விழிப்புணர்வு கருத்துக்கள் தலையெடுக்கவும் தொடங்கின.எதற்கெடுத்தாலும் பாடிக்கொண்டிருந்த சினிமாவை உரையாடல் பக்கம் திருப்பியவர்கள் திராவிட கழகத்தினரே!


திராவிட இயக்கக் கருத்தோட்டம் முன்னணிக்கு வந்துகொண்டிருந்த இக்காலத்தில் ,அந்த இயக்கம் சார்ந்த கதாசிரியர்களான அண்ணாத்துரை , கருணாநிதி ,கண்ணதாசன் , நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் , கே.ஆர் ராமசாமி ,எம்.ஜி.ராமசந்திரன் , சிவாஜி கணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் முன்னனிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.


தங்கள் "இமேஜை " மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், தங்கள் பிரபல்யமாவதற்கும் திராவிட இயக்கக் கருத்தை ஏற்றார்கள்.அது போலவே வளர்ந்து வரும் நடிகர்களின் புகழைக் காட்டி தமது இயக்கத்தை வளர்த்துவிட முடியும் என்று அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள்.அவர்களுக்குச் சாதகமாக அமைந்த சினிமாத்துறையை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள் இன உணர்வு ,தமிழுணர்வு போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிபெறத் துடித்தனர்.


புராண ,இதிகாசப் படங்களுடன் ,கைநழுவிப் போய்க்கொண்டிருந்த நிலமானியக்கருத்துக்களை மையமாகக் கொண்ட உணர்ச்சிமிக்க கதைகள் கருப்போருளாகின.கதைகளுக்கேற்ற பாத்திர வார்ப்புகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்துக் கொண்டிருந்தனர்.


தங்கள் அரசியல் கருத்துக்களை அலங்கார வசனங்களைக் கொண்டு கட்டமைத்ததைப் போல , இசையிலும் கட்டமைக்க முயன்றனர்.திராவிடக் கருத்துக்களுக்கு சார்பான கவிஞர்களுள் பாரதிதாசன் பரம்பரைகவிஞர்கள் உருவானார்கள்.அவர்களில் உடுமலை நாராயணகவி முடியரசன் ,சுரதா , ஐயாமுத்து ,விந்தன் போன்றோர் 1950 களின் முன்னோடிக்கவிஞர்களாக விளங்கினர்


எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன்[1953] படத்தில் மக்களன்பன் எழுதிய " எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " பாடல் தி.மு.க வினரின் அரசியல் கொள்கையை பிரதி பலித்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


வசனகர்த்தாவாக வர விரும்பிய கண்ணதாசன் அதற்கு சரியான வைப்பு கிடைக்காததால் கன்னியின் காதலி [1949] படத்தில் பாடலாசியர் வாய்ப்பைப் பயன்படுத்தி அறிமுகமானார்.


பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவாளனாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.பாரதி , பாரதிதாசன் போன்ற பெருங்கவிகளின் கவிவீச்சைக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1954 இல் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.


விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் வளர்ச்சி மெதுவாகவே நகர்ந்தது.1952 ஆம் ஆண்டிலிருந்து 1959 வரையான காலப்பகுதியில் சுமார் இருபது படங்களுக்கு இசையமைத்தார்கள்.அவர்களின் சமகால இசையமைப்பாளர்கள் பல சிறந்த பாடல்களைத் தந்துகொண்டிருந்த வேளையில் தங்களையும் பேசவைக்குமளவுக்கு ஆங்காங்கே நல்ல பாடல்களையும் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.அவர்கள் சிருஷ்டித்துத் தந்த பாடல்கள் சில இன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளுபவையாக விளங்குகின்றன.


சொர்க்கவாசல் [1954] படத்தில் சில பாடல்கள் :


01 "கன்னித் தமிழ் சாலையோரம் " என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்திருக்கிறது.இந்தப்பாடலில் திராவிட இயக்கக்கருத்துக்கள் முழுமையாக வெளிப்படுகின்றன.தமிழரின் பழம்பெருமையையும் சேரன் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்த பெருமையையும் பறைசாற்றும் இனிமையான இந்தப்பாடலை தேஷ் ராகத்தில் அமைத்து நம்மைக் கனிய வைத்திருக்கிறார்கள்.இப்பாடலைப் பாடியவர் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி.


02 " நிலவே நிலவே ஆட வா நீ அன்புடனே ஓடிவா " என்ற பாடலையும் தேஷ் ராகத்தில் அமைத்து நெஞ்சில் இருக்க வைத்திருப்பார்கள்.குழந்தையை நிலவுக்கு ஒப்பிட்டு பாடுவதுடன் நிலவை விட குழந்தை அழகு என்பதாக அமைக்கப்பட்ட இந்தப்பாடலும் தேஷ் ராகத்திலேயே அமைக்கப்படுள்ளது.இப்பாடலைப் பாடியவர் கே.ஆர்.ராமசாமி.


03 " ஆத்மீகம் எது நாத்தீகம் எது அறிந்து சொல்வீரே " என்று ஆத்மா விசாரம் செய்யும் பாடல்


04 " மொழி மீது விழி வைத்தே முடிமன்னர் ஆண்ட தமிழ் நாடு " என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலும் தமிழ் பெருமையும் , திராவிட பெருமையும் பேசுகின்ற பாடல்.


05 " சந்தோசம் தேட வேணும் வாழ்விலே " என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு காதல்பாடல்.இனிமைக்கு குறைவில்லாமல் திருச்சி லோகநாதனும் டி.வி.ரத்தினமும் பாடிய பாடல்.


1955 இல் வெளிவந்த நீதிபதி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :


01 " தாயும் சேயும் பிரிந்தைப் பார் சதியதனாலே " [ பாடியவர் :சி.எஸ்.ஜெயராமன் ] என்ற உணர்ச்சி


ததும்பும் துயர கீதம்.இந்தப்பாடலில் காலத்தை மீறியதாக, புதுமைமிக்க அமைந்த கோரஸ் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம்.


02 " உருவம் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது " [பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + டி.எம்.சௌந்தரராஜன் ] என்று ஆரம்பிக்கும் நகைச்சுவைப் பாடல்.தங்குதடையற்ற நதியோட்டம் மிக்க பாடல்.கே.ஆர்.ராமசாமி , டி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.மெல்லிசைமன்னர்களின் இசையில் சௌந்தரராஜன் பாடிய இரண்டாவது பாடல் இது.


03 " பறக்குது பார் பொறி பறக்குது பார் " [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] இந்தப்பாடலும் திராவிட இயக்கக் கருத்தை பறை சாற்றும் பாடல்.


04 " வருவார் வருவார் என்று எதிர் பார்த்தேன் " [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] என்று தொடங்கும் நகைச்சுவைப்பாடல்.இருபக்க இசையாக ஒலிக்கும் இந்தப்பாடல் ஒரு இசைநாடகப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.


1955 இல் வெளிவந்த குலேபகாவலி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :


01 "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே " [ பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + பி.லீலா ] இந்தப்பாடல் பன்மொழியில் அமைந்த ராகமாலிகைப்பாடல்.


02 ஆசையும் என் நேசமும் [ பாடியவர் : கே.ஜமுனாராணி ] லத்தீனமெரிக்க இசையின் வீச்சையும் ,வாத்திய அமைப்பின் புதிய போக்கையும் , கோரஸ் இசையுடன் மிக அருமையாக அமைத்திருப்பார்கள்.


03 "சொக்கா போட்ட நாவாப்பு " - [பாடியவர் : ஜிக்கி ]


04 " கண்ணாலே பேசும் பெண்ணாலே " [பாடியவர் : ஜிக்கி ] மாயாலோகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வைத் தரும் கோரஸ் இசையுடன் அரேபிய இசையின் சாயலில் அமைக்கப்பட்டபாடலை ஜிக்கி வசீகர அதிர்வுடன் பாடிய பாடல்.


05 " அநியாயம் இந்த ஆட்சியிலே " [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] விஸ்வநாதன் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இதுவே.


06 " நாயகமே நபி நாயகமே " ;[ பாடியவர்கள்: எஸ்.சி.கிருஷ்ணன் + குழுவினர் ] இந்து - முஸ்லீம் ஒற்றுமை பற்றிய டைட்டில் பாடல்.எஸ்.சி.கிருஷ்ணன் உச்சஸ்தாயியில் அனாசாயமாகப் பாடிய பாடல்.


07 "மாயாவலையில் வீழ்ந்து மதியை இழந்து " [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] ஜி.ராமநாதன் பாணியில் அமைந்த இந்தப்பாடல் கரகரப்ரியா ராகத்தில் முதற் பகுதியும் நாட்டுப்புறப்பாங்கில் பிற்பகுதியும் நிறைவுறும் பாடல்


1956 தெனாலிராமன்


01 உலகெலாம் உனதருளால் மலரும் [ பாடியவர் :பி.லீலா ] டைட்டில்பாடல் , சிந்துபைரவி ராகப்பாடல்


02 சிட்டுப் போல முல்லை மொட்டு [ பாடியவர் :ஏ.பி.கோமளா ]


03 ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்


04 கண்களில் ஆடிடிடும் ,,,,கன்னம் இரண்டும் மின்னிடும் [ பாடியவர்;பி.பானுமதி ] அரேபிய பாணி .


05 பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் [ பாடியவர் : பி.பானுமதி ] சன்முகப்ப்ரியா நாட்டியப்பாடல்


06 புத்திலெ பாம்பிருக்கும் ,,,கோட்டையிலே ஒரு காலத்திலேயே [ பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரரராஜன் + வி.என்.நாகையா


07 உல்லாசம் தேடும் எல்லோரும் ஒரு நாள் [ பாடியவர் : கண்டசாலா ]


1955 போட்டர் கந்தன்


01 வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே - [ பாடியவர் : எஸ்.சி.கிருஷ்ணன் ]


1957 குடும்ப கௌரவம் [1957] படத்தில் " சேரும் காலம் வந்தாச்சு " [பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + கே.ஜமுனாராணி ]


1957 இல் வெளிவந்த மகாதேவி படம் மெல்லிசைமன்னர்களுக்கு மிக முக்கிய படமாக அமைந்தது.


மரபு ராகங்களில் அலங்காரம் செய்வதை அழகு பார்த்த அக்காலத்தில் ,அதன் வடிவத்திற்குள் உணர்ச்சிபாவம் கொப்பளிக்கும் அற்புதமான பாடல்களையும்   தந்தார்கள்.


01 சிங்கார புன்னகை கண்ணாராக் கண்டாலே சங்கீத வீணையும் ஏத்துக்கம்மா- பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதி தேவி + குழுவினர்


" பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கமா" என்ற அருமையான கவி வரிகளை தாலாட்டில் அளித்த இந்தப்பாடல் தாலாட்டு மரபில் முன்பு வெளிவந்த பாடல்களை உடைத்து புதுமரபை ஏற்படுத்தியது.மென்மையும் , இனிமையும், தாய்மையும் ஒன்று குழைந்து வரும் இனிய குரல்களுடன் , மகிழ்வின் ஆரவாரத்தை வெளிக்காட்டிட கைதட்டல் போன்றவற்றை மிக லாவகமாகப் பயன்படுத்திய பாடல்..


கேட்கும் தருணங்களிலெல்லாம்   மெய்சிலிர்ப்பும் , நெகிழ்வும் தருகின்ற பாடல்.இப்பாடலின் வெற்றியால் பின் வந்த காலங்களில் தாலாட்டு என்றால் ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணம் அமைத்துக் கொடுத்த பாடல் எனலாம்.இந்த பாடலின் வெற்றி "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல " பாடல் உருவானதின் பின்னணியில் இருந்தது என்று கூறலாம்.


"ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஓட்டுவோம் -" பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர்


விவசாயிகள் பாடுவதாக அமைக்கப்பட்ட கொண்டாட்டமும் , களிப்பும் பொங்கும் பாடல்.பாடலில் கோரஸ், கைதட்டல் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.பாடலின் நடுவே காதலர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில் " மனசும் மனசும் ஒன்றா சேர்ந்தா மறக்க முடியுமா " என்ற வரிகளில் கனிவும் , இனிமையும் பொங்கி வர செய்யும் இசை மனதை பறித்துச் செல்லும்!


காதல் பாடல்களிலும் மென்மையைக் காண்பிக்கும் "கண்மூடு வேளையிலும் காலை என்ன கலையே" , "சேவை செய்வதே ஆனந்தம்" போன்ற அழகான பாடல்களையும் , பட்டுக்கோட்டை க்கல்யாணசுந்தரம் எழுதிய கருத்துக் செறிந்த தத்துவப்பாடல்களான " குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ", " தாயத்து தாயத்து " போன்ற பாடல்களையும் அதனதன் இயல்புகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்கள்.


குறிப்பாக "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் " என்ற பாடலில் பட்டுக்கோட்டையாரின் அற்புதவரிகளை எழுச்சியுடனும் நெகிழ்சசியுடனும் இசைத்து உணர்ச்சியின் உச்சத்தை தொடுகிறார்கள். இந்தப்பாடலுக்கு அவர்கள்   தெரிந்தெடுத்த ராகம் அவர்களின் நுண்ணுணர்வைக் காட்டும்.


"காமுகர் நெஞ்சில் நீதியில்லை " என்று தொடங்கும் ஜமுனாராணி பாடிய நெஞ்சை உருக்கும் பாடல். படத்தின் நாயகி துயரத்தின் எல்லையில் நின்று பாடும் சோகத்தால் மனதை துருவித் துளைக்கும் பாடல்.


உணர்ச்சிமிக்க பாடல்களுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜெ.பி.சந்திரபாபு பாடிய " தந்தானா பட்டு பாடணும் " , "உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு " போன்ற பாடல்களையும் நாம் கேட்கலாம்


ஆரம்ப காலங்களில் மெல்லிசைமன்னர்கள் ஒருசில படங்களுக்கு இசையமைத்தாலும் படைப்புத் திறனில் வீச்சைக் காண்பிக்க முனைந்து செயல்பட்டனர் என்பதை உணரக்கூடியதாகவே உள்ளது.


மெல்ல மெல்ல தங்கள் தனித்துவத்தை காட்ட தலைப்பட்டதை இக்காலங்களில் காண்கிறோம்.


1959 இலிருந்து அவர்களது இசைப்பயணம் மெல்லிசையின் புது வண்ணத் தேடல்களை நோக்கிப் பயணித்தது.புதிய வாத்தியங்களும் , அவற்றில் எழும் நுண்ணிய ஒலியலைகளை கலையழகுடன் துணிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.


மேலைத்தேய இசையின் தலையீடு ஏற்படத் தொடங்கியவுடன் சினிமா இசையிலும் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.மேலைத்தேய இசையின் தாக்கம் உள்ளடக்கத்திலும் ம்மாற்றங்களை ஏற்படுத்தியது.ஆயினும் அவர்களது இசை மரபிசையின் பண்புகளுடனேயே இசைந்து வெளிப்பட்டது.


"பக்கமேளம்" என்று ஜி.ராமநாதனால் வர்ணிக்கப்பட்ட வாத்திய இசைச் சேர்ப்பு இவர்கள் காலத்திலேயே புதிய நிலையை எட்டியது.புதிய , புதிய வாத்தியக்கருவிகளின் தனித்துவக் கூறுகள் அக்கால வழக்கில் இருந்த ஒலியமைப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.


காலாவதியாகிப் போன மந்திர , மாயாஜாலக் கதைகளும் , புராணக்கதைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமாவில் 1950 களில் சமூகக்கதைகள் அரும்பத் தொடங்கின.அவை துரிதகதியில் முன்னேறி 1950 களின் நடுப்பகுதியில் தீவிரம் பெற்று வளந்தது இக்கால திரையிசையை அவதானிப்பவர்கள் செவ்வியலிசையின் பாரிய தாக்கத்தையும் தயங்கி நின்ற மெல்லிசையையும் அவதானிப்பர்.


ஆயினும் ஐம்பதுகளில் அரும்பிய மெல்லிசை ஐம்பதுகளின் இறுதியில் பெருகி அறுபதுகளில் பெரும் பாய்ச்சலைக்காட்டுகிறது.இந்தப்போக்கின், புதிய வாரிசுகளாக மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினை நாம் கருதவேண்டியுள்ளது.மெல்லிசை இயக்கத்தை செயலில் காட்ட உத்வேகத்துடன் செயல்பட்டனர்.


இசை என்பது கலை என்ற அம்சத்தில் திரை இசையின் கலைப்பெறுமானம் முக்கியமானதாக நோக்கற்படவேண்டும் என்பதும் புதிய வாத்தியக்கருவிகள் கலையம்சத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிற சீரியபார்வையும் இவர்களிடமிருந்தது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.


ஹிந்தி திரையிசையின் நவீனமும் , இனிமையுமிக்க இசை இந்தியாவெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் ,அது பற்றிப்பிடித்த வாத்திய இசைக்கோர்வைக்கு நிகராக தாங்களும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தததையும் மெல்லிசைமன்னர்களிடம் காண்கிறோம்.


இவர்களது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், சுப்பைய்யாநாயுடு, எஸ் .வி. வெங்கட்ராமன் மற்றும் அக்காலத்திலிருந்த , பல இசை ஜாம்பவான்கள் தந்த இனிய பாடல்களுக்கு மத்தியில் இவர்களது மெல்லிசை முயற்ச்சிகள் அரும்பின.


தமிழ் திரைப்படத்தின் பொற்காலப் பாடல்கள் என்று அக்காலத்திய பாடல்களைச் சிலர் சொல்லுமளவுக்கு தமிழ் செவ்விசை சார்ந்த மெல்லிசைப்பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமது.அவர்களின் ஆதிக்கத்தை எங்கனம் மீறினார்கள் என்பதும் சிந்திக்க வைக்கும் ஒன்றாகும்.


அக்காலத்தில் வெளிவந்த சில பாடல்களை நாம் உற்று நோக்கும் போது அப்பாடல்களின் வலிமையை நாம் உணரும் அதே நேரம் இவர்கள் எதிர் கொண்ட நெருக்கடியையும் விளங்கிக்கொள்ளலாம்.


உதாரணத்திற்கு 1956 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள் :


பூவா மரமும் பூத்ததே   -படம்: நான் பெற்ற செல்வம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி   - இசை :ஜி.ராமாநாதன்


இனிதாய் நாமே இணைந்திருப்போமே   -படம்: காலம் மாறிபோச்சு   [1956]- பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + ஜிக்கி   - இசை :மாஸ்டர் வேணு


அழகோடையில் நீந்தும் இள அன்னம்   -படம்: கோகிலவாணி   [1956]- பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் + ஜிக்கி   - இசை :ஜி.ராமநாதன்


திரை போட்டு நாமே மறைத்தாலும் -படம்: ராஜா ராணி   [1956]- பாடியவர்கள் : ஏ .எம்.ராஜா + ஜிக்கி   - இசை :டி.ஆர் பாப்பா


ஆகா நம் ஆசை நிறைவேறுமா -படம்: தாய்க்குப் பின் தாரம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி   - இசை :கே.வி மகாதேவன்


நாடகம் எல்லாம் கண்டேன் -படம்: மதுரைவீரன் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி   - இசை :ஜி.ராமாநாதன்


1956 ம் ஆண்டு வெளிவந்த, மெல்லிசைமன்னர்களின் சில பாடல்கள் :


1956 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் பாசவலை , தென்னாலிராமன் ஆகிய இரண்டு படங்களுக்கு மேல்லிசைமன்னர்கள் இசையமைத்தார்கள்.


பாசவலையில் " உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் ", " அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை ". போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.


மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்த முதல் படம் பாசவலை ஆகும்.


தென்னாலி ராமன் படத்தில் இடம் பெற்ற " ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் " என்ற செவ்வியலிசைப்பாடலும், " உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் " என்ற பாடலும் , " அலை பாயும் கண்கள் அங்கும் இங்கும் " என்று பானுமதி பாடும் அரேபிய பாணியிலமைந்த பாடலும் , " சிட்டு போலே முல்லை மொட்டுப்போலே " என்று ஏ.பி.கோமளா பாடிய பாடலும் குறிப்பிடத்தக்கன.


1957 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள்


*** வாடா மலரே தமிழ் தேனே -படம்: அம்பிகாபதி   [1957]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி   - இசை :ஜி.ராமாநாதன்


*** ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா   -படம்: மக்களைப் பெற்ற மகராசி     [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ்   + சரோஜினி   - இசை :கே.வி. மகாதேவன்


*** கம கமவென நறுமலர் மணம் வீசுதே -படம்: சமய சஞ்சீவி   [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + ஜிக்கி   - இசை :ஜி.ராமாநாதன்


*** தேசுலாவுதே தென் மலராலே -படம்: மணாளனே மங்கையின் பாக்கியம்   [1957]- பாடியவர்கள் : கண்டசாலா   + பி.சுசீலா   - இசை :ஆதி நாராயணராவ்


1957 ம் வருடம் வெளிவந்த இன்னும் சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும்


** பூவா மரமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே - படம் :நான் பெற்ற செல்வம் [1957] -இசை :ஜி.ராமாநாதன்


** இன்பம் வந்து சேருமா - படம் :நான் பெற்ற செல்வம் [1957] - இசை :ஜி.ராமாநாதன்


** இக லோகமே இனிதாகுமே - படம் :தங்கமலை ரகசியம் [1957] -டி.ஜி.லிங்கப்பா


** அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ   - படம் :தங்கமலை ரகசியம் [1957]


** இதய வானிலே உதயமானது - படம் :கற்புக்கரசி [1957] - இசை :ஜி.ராமாநாதன்


** கனியோ பாகோ கற்கண்டோ   - படம் :கற்புக்கரசி [1957] - இசை :ஜி.ராமாநாதன்


** நிலவோடு வான் முகில் விளையாடதே   - படம் :ராஜா ராணி   [1957] - இசை :கே.வி. மகாதேவன்


** வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே - படம் :மல்லிகா [1957] -டி.ஆர்.பாபபா


** வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே   - படம் :கோமதியின் காதலன்   [1957] - இசை :ஜி.ராமாநாதன்


** மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி - படம் :கோமதியின் காதலன் [1957] - இசை :ஜி.ராமாநாதன்


மரபுணர்வு மேலோங்கிய இசையமைப்பாளர்களை ஒட்டியே மெல்லிசை மன்னர்களும் பாடல்களைத் தரமுனைந்ததை 1950 களின் இறுதிவரையில் காண்கிறோம்.கதையின் போக்கு மற்றும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்ப வகைமாதிரியான பாடல்களைக் கொடுத்த முன்னையவர்கள் காட்டிய வழி தடத்திலேயே தங்கள் இசைப்பயணத்தை மேற்கொண்டு வாய்ப்புகளைத் தம் வசமாக்கினர்.


புதியவர்களுக்குரிய உத்வேகத்தையும் கற்பனை வீச்சையும் அக்காலப்பாடல்களில் நாம் காணவும் செய்கிறோம்.மரபு வழியில் நின்று கொண்டே தமது புதுமைக்கண்ணோடடத்தையும் மெதுவாக நகர்த்திய வண்ணமுமிருந்தனர்.






இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் :

செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள் தந்தமை  முக்கிய கவனம் பெறுகின்றன


அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த " வாடா மலரே தமிழ் தேனே " என்ற  புகழபெற்ற முகாரி ராகப்பாடலுக்கு இணையாக தம்மாலும் சோகம் ததும்பும் முகாரி ராகத்தில் " கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் " [ சிவகங்கைச் சீமை 1959] என்ற பாடலை அமைத்துக் காண்பித்தார்கள்.


"வாடா மலரே தமிழ் தேனே "பாடல் சோக ரசம் பொழியும் ராகத்தில் காதல் மகிழ்ச்சியை வெளிப்புத்தியது புதுமையாகப் பேசப்படட காலம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.


இவைமட்டுமல்ல ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதிலும்  ராகங்களின் பிரயோகங்களிலும் ஆழமும் , நுண்மையும் காட்டும் வல்லமை தங்ளுக்கு உண்டு என்று காட்டித்  தம்மை நிலைநிறுத்திக் காண்பித்தார்கள்.அக்காலத்தில் பெருகியிருந்த  செவ்வியலிசை சார்ந்த பாடல்களைக் கொண்டு நாம்நோக்குதல் பொருத்தமாக இருக்கும்.


மெல்லிசைமன்னர்களின் முன்னோடிகளினதும் அவர்களது  சமகாலத்தவர்களினதும் பாடல்களுடன் ஒப்பிடுப்பார்த்தால் புரியும். சில எடுத்துக்காட்டுக்கள் :


எல்லாம் இன்ப மாயம் – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன் நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை 1958 – பாடியவர் : பி.லீலா – இசை : எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு


வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை: எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு


ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயம் அருள் – படம்: ராணி லலிதாங்கி [1958] – பாடியவர்கள் :பி.லீலா + டி.பி.ராமசந்திரன் – இசை: ஜி.ராமநாதன்


தாயே உன் செயல் அல்லவோ – படம்: இரு சகோதரிகள் [1957] – பாடியவர்கள் :பி.லீலா + ML வசந்தகுமாரி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்


நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் – படம்: ராணிசம்யுக்தா 1962 – பாடியர்: பி.சுசீலா – இசை : கே.வீ.மகாதேவன்- ராகம் சாருகேசி


ஆடும் அழகே அழகு – படம்:ராஜ ராஜன் [1956] – பாடியவர்கள் :சூலமங்கலம் சகோதரிகள் + பி .லீலா – இசை: கே.வீ.மகாதேவன்.


இது போன்ற செவ்வியல் இசைசார்ந்த பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்களும் ஈடு கொடுத்து இசைத்தார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.


மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளியான செவ்வியலிசை சார்ந்த பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:


01  ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே- படம் : தென்னாலிராமன்[ 1956 ] - பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி


02  கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு - படம் :மகனே கேள் [1957] - பாடியவர்கள் : சீர்காகாழி கோவிந்தராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி


இரு பெரும் பாடகர்கள் "சவால்" என்று சொல்லத்தக்க வகையில் இணையில்லாமல் பாடிய பாடல்.பாலும் , தேனும் கலந்த இனிமை என்று சொல்வார்களே, அது தான் இந்தப்பாடல் என்று துணிந்து சொல்லிவிடலாம்.


பட்டுக்கோட்டையாரின் கவிநயம் மிக்க பாடல் வரிகளும்  கல்யாணி ராகமும் இணைந்த அசாத்திய பாடல் !


03  ஆடாத மனம் உண்டோ நடையாலங்காரமும் - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : லலிதா


03  முகத்தில் முகம் பார்க்கலாம்  - தங்கப்பதுமாய்  1959 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :கல்யாணி


04  அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - பாசவலை   1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :கரகரப்ரியா


05  மோகனைப் புன்னகை ஏனோ  - பத்தினித் தெய்வம்   1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் ++ பி.சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :மோகனம்


06  வருகிறார் உனைத்தேடி மணவாளன் நானே என்று   - பத்தினித் தெய்வம்   1956- பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி  + சூலமங்கலம் ராஜலட்சுமி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :அடானா


கற்பனையான அரசகதைகளும் சரித்திர மற்றும் புராண கதைகளும் வெள்ளப்பெருக்கென ஓடிய காலம் மாறி சமூகக்கதைகள் சார்ந்த திரைப்படங்கள் ஊக்கம் பெறத  தொடங்கியது 1950 களின் இறுதியிலேயேயாயினும்   அவற்றின் தொடர்ச்சி 1960 களிலும் சில  இடைச் செருகலாக ஆங்காங்கே வெளிவரவும் செய்தன என்பதையும்  மறுப்பதற்கில்லை.


உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில்  உயிரோட்டமாகப் படைப்பதில்  முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில்  கதாபாத்திரங்களின் மன உணர்வை  இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.


தங்கப்பதுமை படத்தில் , " வாய் திறந்து சொல்லம்மா " என்ற பாடலில் ஒரு மாறுதலாக ,மன எழுச்சி தரும் வகையில் உணர்ச்சிக்கு கொந்தளிப்பை ,மனதை கசக்கிப்பிழியும் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள்,


வாய் திறந்து சொல்லம்மா உன் மக்களின் கதை கேளம்மா - படம் :தங்கப்பதுமை [1959] - பாடியவர்: பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. செம்பும் கல்லும் தெய்வமென்று நம்புவோர்கள் பித்தரென்று


சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ? சிற்பிகள் செதுக்கி வைத்த


சித்திரச் சிலைகளுக்குள் தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ? ,,,,


என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கடவுளை சீண்டும் சிந்தனை வரிகள் கொண்ட உணர்ச்சிமிக்க பாடல். தான் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்பாடல் தான் என்று , மகத்தான பால பாடல்களைப் பாடிய பி.லீலா குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில்  உயிரோட்டமாகப் படைப்பதில்  முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில்  கதாபாத்திரங்களின் மன உணர்வை  இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.


1950 களின் ஒரு போக்காக " ட டா , ட டா, ட டா .டாடடா " என்ற ஓசை பிரயோகம் பரவலாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டது.சில பாடல்களில் இசை கரடு முரடாகவும் இருந்தது என்பதும் ,குறிப்பாக 1950 களில் வந்த ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களை நேரடியாகக் கொண்டமைந்த பாடல்களில் இத்தன்மையை நாம் காண்கிறோம்.


1950 களின் திரையின் மெல்லிசைப்போக்கை அவதானிப்பவர்கள் புதிய போக்கு ஒன்று அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சில பாடல்கள் மூலம் மெதுவாக வளர்ச்சி அடைந்து வந்ததை அவதானிக்க முடியும்.


ஒருபக்கம் பழமையை உயர்த்திப்பிடித்த அதே நேரம் மறுபக்கம் புதுமையையும் ஆங்காங்கே  உயர்த்திப்பிடித்து அற்புதமான பாடல்களைத் தந்து இசைரசிகர்களைக் கிறங்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி !


அதன் சாட்சியாக சில பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.


01  விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே-  படம்: புதையல் [1957] - பாடியவர்கள் :சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


02  தென்றல் உறங்கிய போதும் -  படம்: பெற்ற மகனை விற்ற அன்னை  [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


03  துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் -  படம்: தலை கொடுத்தான் தம்பி [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 04  கண்மூடும் வேளையிலும் கலை என்ன  கலையே  -  படம்: மகாதேவி  [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 05  தங்க மோகன தாமரையே -  படம்: புதையல்   [1957] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


06  என் வாழ்வில்  புதுப்பாதை கண்டேன்  -  படம்: தங்கப்பதுமை   [1957] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


07  சின்னஞ்  சிறு கண்மலர்   -  படம்: பதி பக்தி    [1958] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


08  வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே   -  படம்: பதி பக்தி    [1958 - பாடியவர்கள் :டி.எம்.சௌந்தரராஜன்  - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


08  ராக் அண்ட் ரோல்     -  படம்: பதி பக்தி    [1958 - பாடியவர்கள் :ஜெ.பி.சந்திரபாபு + வி.என்.சுந்தரம்   - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 09 மழை கூட ஒருநாளில்    -  படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :எம்.எஸ்.ராஜேஸ்வரி  - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


09 இல்லறம் ஒன்றே நல்லறம் என்றே     -  படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :பி.சுசீலா   - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


10 செந்ததமிழ் தென் மொழியாள்      -  படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம்   - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


11 நானன்றி யார்  வருவார்   படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் + ஏ.பி.கோமளா    - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி


செவ்வியல் இசையின் இறுக்கம் தளர்ந்து ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மெல்லிசைப் போக்கின் வேகத்தைச் சற்று அழுத்தம் கொடுத்து நகர்த்தியதுவே மெல்லிசைமன்னர்களின் பாரிய பங்களிப்பாக இருந்தமை இக்காலகடடத்தின் பங்களிப்பாக இருந்தது.


வெற்றிக்கனிகளைதட்டிப்பறிக்க விந்தைதரும் மாயாஜாலக் காடசிகளுடன் அமைந்த புராணக்கதைகள் மட்டுமல்ல சமகால சமூக வாழ்வை அழகுடன் சொன்னாலும் வெற்றியளிக்கும் என்பதை இயக்குனர் ஸ்ரீதர்  கல்யாணப்பரிசு [1959] படத்தின் மூலம் எடுத்துக்காட்டியமை தமிழ் திரை வரலாற்றில் புதிய உடைப்பை உண்டாக்கியது.அப்பாடத்தின் அபார வெற்றியும் , பாடல்களின் மெல்லிசை ஓங்கிய தன்மையும் மெல்லிசைக்கான புதிய பாதையை அகலத்திறந்து விட்டது எனலாம். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா புகழின் உச்சிக்கு சென்றார்கள்.ஏ.எம்.ராஜா சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்ற அடையாளமும் பெற்றார்.


கல்யாணப்பரிசு படத்தில்


" வாடிக்கை மறந்ததும் ஏனோ "


" ஆசையினாலே மனம்"


" உன்னைக்கண்டு நான்  ஆட"


" துள்ளாத மனமும் துள்ளும்


" காதலிலே தோல்வியுற்றான்"


போன்ற பாடல்கள் மெல்லிசையின் உயிர்த்துடிப்புகள் மேலோங்கி நிற்கும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இன்றும் விளங்குகின்றன.


"வாடிக்கை மறந்ததும்" ஏனோ பாடலில் சைக்கிள் மணி ஒலியும் ,"ஆசையினாலே மனம்"  பாடலில்  I see ,Really ,Sorry   ஆங்கில வார்த்தைகளை கல்லூரியில் படிக்கும் காதலர்கள் பாடுவதாக சமயோசிதமாக புதுமையாக ஆங்காங்கே பயன்படுத்திதுடன் ஹம்மிங்கையும் இணையாகப் பயன்படுத்திய பாடல்.


இயக்குனர் ஸ்ரீதர் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா கூட்டணியில் தொடர்ந்து வெளிவந்த தேன் நிலவு [1960] ,விடிவெள்ளி [1960] மற்றும் அன்புக்கோர் அண்ணி [1960] போன்ற படங்களில் மெல்லிசைப்பாடல்கள் விட்டுவிடுதலையாகிப் பறந்து கொண்டிருந்தன.


தேன்நிலவு படத்தில் " சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் " " நிலவும் மலரும் பாடுது " " காலையும் நீயே மாலையும் நீயே " " மலரே மலரே தெரியாதா " " ஊர் எங்கு தேடினேன் " " பாட்டுப் பாடவா"


விடிவெள்ளி படத்தில்


" எந்நாளும் வாழ்விலே " " பண்ணோடு பிறந்தது தாளம் " " இடை கையிரண்டில் ஆட " " நினைத்தால் இனிக்கும் சுப தினம் " " கொடுத்துப்பார் பார் பார் " " காரு சவாரி ஜோரு "


" நான் வாழ்ந்ததும் உன்னாலே "


அன்புக்கோர் அண்ணி படத்தில் " ஒருநாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும்"


ஆடிப்பெருக்கு படத்தில் " கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா "


" பெண்களில்லாத உலகத்திலே "


" காவேரி ஓரம் கவி சொன்ன காதல் "


" கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தான் "


" அன்னையின் அருளே வா வா வா "


" புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது "


" தனிமையிலே இனிமைக்கான முடியுமா "


உற்று நோக்கினால் எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த  மெட்டுக்களில்  , எளிய நடையிலமைந்த பாடல் வரியும் , மேலைத்தேய இசையைத் தொட்டு செல்லும் இயல்பு குன்றாத காதல் உணர்வும்,  துயரத்தில்  மூழ்கடிக்கும்  சோகரச இலக்கணமுமிக்க பாடல்களை மெல்லிசையின் போக்கிலமைந்திருப்பதையும்  அவதானிக்கலாம்.


" ஏ.எம் ராஜா , திரையிசையில் ஒரு முன்னோடி.அவருக்கு முன்னிருந்த இசையை மாற்றி , வடநாட்டுப்பாணியை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.ராஜாவின் சங்கீதம் மேன்மை , இனிமை , மென்மை ஆகிய மூன்றின் சங்கமம் "  என்பார் அவரது சமகாலப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.[ திரை இசை  அலைகள் -1 ,  வாமனன் ]


இக்காலங்களில் மெல்லிசைப்பாங்கை முன்னிறுத்திய முக்கிய இசையமைப்பாளராக முன்னணிக்கு வந்துகொண்டிருந்தவர்  மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவரான டி.ஜி.லிங்கப்பா. 1950 களிலிருந்தே சிறந்த பல பாடல்களைத் தந்தவர் .அவர் இசையமைத்த சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாகும்.


ஓ ,,ஜெகமத்தில் இன்பம் தான் வருவதும் எதனாலே - [மோகனசுந்தரம் 1950]


பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா - [ மோகன சுந்தரம் 1950] மதுமலரெல்லாம் புதுமணம் வீசும் - [கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி 1954]


தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ - ஒரு நாள் 1956]


அமுதை பொழியும் நிலவே - [ தங்கமலை ரகசியம் 1957]


இக லோகமே இனிதாகும்- [ தங்கமலை ரகசியம் 1957]


கானா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா 1958]


சித்திரம் பேசுதடி  எந்தன் சிந்தை மயங்கித்தாடி -  [சபாஷ் மீனா 1958] தென்றல் உறங்கிடக் கூடுமடி  எங்கள் சிந்தை உறங்காது - [ சங்கிலித் தேவன் 1960]


படிப்புத் தேவை முன்னேற படிப்புத் தேவை - [சங்கிலித் தேவன் 1960 ] தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே [ முரடன் முத்து 1965] ஏ.எம்.ராஜா ,டி.ஜி.லிங்கப்பா போன்றவர்கள் மெல்லிசைமுன்னோடிகள் என்பதையாரும் மறுத்துவிட முடியாது.துரதிஷ்டாவசமாக ஏ.எம்.ராஜா  ஒதுக்கப்படடமையும் , அல்லது ஓதுங்கியமையும் , டி.லிங்கப்பா , இயக்குனர் பி.ஆர் .பந்துலுவால் கன்னடப்படங்களில்   சிறப்பாகப்  பயன்படுத்தப்படடமையாலும் தமிழ் சினிமா இரு மாபெரும் இசையமைப்பாளர்களின் இசையை இழந்தது.


இசையமைப்பாளர்களின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அளவுக்கதிகமான தலையீடும் இனிய இசை தரமுனைந்தவர்களுக்கு கொடுக்கப்படட இடையூறுகள் கசப்பாகவே  இருந்தததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.இது பற்றி இசை ஆய்வாளர் திரு.வாமனன் "திரை இசை அலைகள் " நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.


ஏ.எம்.ராஜா


" படித்து படம் பெற்ற ராஜா , கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக்கவர்.தன் பணியைக் குறித்து படு சீரியஸான  கண்ணோட்டம்  உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க  வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு சுழிவுகளும் , சினிமா நபர்களிடம் பழகும் போது காட்ட வேண்டிய  நீக்கு போக்குகளும் ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்.....தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு விட்டு பேசாமல் வீட்டுக்கு சென்று விடக்கூடியவர் ராஜா."


டி.ஜி.லிங்கப்பா கல்யாணம்  பண்ணியும் பிரம்மச்சாரி படத்திற்கு இசையமைப்பதில் லிங்கப்பாவுக்கு ஒரு சங்கடம் இருந்தது.பந்துலுவுக்கு மெட்டுப் போட்டுக் காட்டுவார்.ஓகே ஆகும்.நீலகண்டன் அவற்றை நிராகரிப்பார்.வேறு மெட்டுக்கள் போடச்  சொல்வார். " நீலகண்டன் சொல்ற மாதிரிச் செய்திடு " என்று இயக்குனருக்கு வீட்டுக் கொடுத்தார் தயாரிப்பாளர் பந்துலு. " கர்நாடக பாணியில் லைட்டா கொடுத்தா  பந்துலுவுக்குப் பிடிக்கும், ஆனா நீலகண்டன் பாமரமான இசையைத் தான் கேப்பார்.


நீலகண்டனுக்கு இருந்த இன்னொரு பழக்கமும் லிங்கப்பாவிற்கு நெருடலாக இருந்திருக்கிறது.


லிங்கப்பா மெடட்டமைத்தவவுடன்  திரைப்படக் கம்பனியில் வேலை பார்க்கும் டிரைவர் ,ஆபீஸ் பையன் எல்லோரையும் கூப்பிட்டு " எப்படி இருக்கு " என்று இசையமைப்பாளரின் முகத்திற்கு நேரேயே கேட்பாராம் நீலகண்டன். " நான் சங்கீத பரம்பரையியிலிருந்து வந்தவன்யா ...என் ரத்தத்திலே  இசை ஓடுது .......நீ யார் யாரையோ கேட்டுக்கிட்டிருக்கே .!?


இது போன்ற ஒரு சம்பவத்தை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்," நான் ஒரு ரசிகன் " என்ற விகடன் தொடரில்  தனக்கு நேர்ந்த அனுபவத்தை  மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு எழுதுகிறார். "...கொஞ்ச நாட்கள் கழித்து வாசன் ஸாரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.நானும் ராமமூர்த்தி அண்ணாவும் அவரைப் பார்க்கச் சென்றோம்." வாருங்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களே !" என்னு வெளியில் வந்து எங்களை அவரே வரவேற்றார். உள்ளே அழைத்து உட்க்காரச் சொன்னார்  பெரியவர் என்ற மரியாதையுடன் நாங்கள் நின்றுகொண்டே இருந்தோம். " நான் உட்காரச் சொல்றேன் .. உட்காருங்க .." என்றார் அன்போடு.நாங்கள் உட்கார்ந்தோம்.


" நீங்கள் பல படங்களுக்கு இசையமைச்சு நல்ல புகழோடு இருக்கீங்க ..என்னோட அடுத்த தயாரிப்பு " வாழ்க்கைப்படகு "! இந்தப் படத்துக்கு உங்களைத்தான் மியூசிக் டைரக்டரா  போடணும்னு எனக்கு வேண்டியவங்க, டிஸ்ரிபியூட்டர்கள் , நடிகர்கள் ,, ஏன் என் வீட்டில்கூட சொல்லிட்டாங்க... நான் உங்களை ரொம்ப இம்சை பண்ணுவேன். நான் நிறைய ஆட்களை வைச்சிருக்கேன் . இது நொள்ளை அது நொள்ளை குற்றம் சொல்லிக்கிட்டிருப்பாங்க .." என்று வாசன் சார் சொன்னார்.எனக்கு ஒன்றுமே புரியலே.ராமமூர்த்தி அண்ணனோ தொடய்யக் கிள்ளி " என்ன ...விசு .. போயிடலாமா ?"னு கிசுகிசுத்தார்.முழுசாத்தான் கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு " ஏன் சார் அப்பாடிச் சொல்றீங்க?"னு நான் கேட்ட்டேன்.


" இங்கே நிறைய ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து வெச்சிருக்கேன் அபிப்பிராயம் சொல்றதுக்கு .. இவங்கள்லாம் ஏதாவது சொல்லணுமென்கிறத்துக்காக சொல்வாங்க.... உங்களை ரொம்ப " பன்ச் " பண்ணுவாங்க .."  பன்ச் " பண்ணுவாங்க ..இதையெல்லாம் நீங்க சகிச்சுப்பீங்களா ?னு  வாசன் சார் கேடடார் .


யோசிக்கிறதுக்கு இரண்டு நிமிட டயம் கேட்டேன். " நான் வேணும்னா வெளியே போய் இருக்கட்டுமா ?" ன்னார் அவர் ரொம்ப பெருந்தன்மையோட. நாங்க போறதா சொல்லிட்டு வெளியே வந்தோம்.


மெல்லிசைமன்னருடன் இறுதிக்காலம் வரை பணியாற்றிய கவிஞர் காமகோடியான் எம்.எஸ்.வி பற்றிய  ஒருசம்பவத்தை  பின்வருமாறு நினைவு கூறுவதை பாருங்கள்


காமகோடியன் : பார் மகளே பார் படத்திலே , கவ்ஞர் கண்ணதாசன் வந்தாச்சு ,ஒரு பாட்டு எழுதி முடிச்சாச்சு.எம்.எஸ்.வீ நல்லா விசில் பண்ணுவாரு,நீரோடும் வைகையிலே பாடலை விசிலிலேயே பண்ணிட்டிருக்கிராரு ..நால்லாயிருக்கேடா பல்லவி போட்டிடுவோம் என்கிறார் கண்ணதாசன் ! கவிஞரே உங்க வேலை இன்னகைக்கு  முடிஞ்சுது.நாளைக்கு உட்காருவோம்.இது வந்து full song விசிலிலேயே பண்ணப்போறேன்.டேய் ,டேய் நல்லாயிருக்கிடா டுயூன் ,வார்த்தை போட்டா நல்லாயிருக்கும்.இதை புதிசா பண்ணுவோமே, நாளைக்கு சந்திப்போம்! கண்ணதாசன்  எழுந்திரிச்சு போயி நேரா சிவாஜி வாகினியில் இருப்பதை அறிந்து அங்கே  வாகினியிக்கு கார் எடுத்திட்டு போயி [ரெக்கார்டிங் நடப்பது ஏ.வீ. எம்மில் ] சிவாஜி சாரை கூட்டிக்கிட்டு நேரே இங்கே வந்திட்டாரு! சிவாஜி எம் எஸ் வீயை பார்த்து " என்னமோ ஒரு டியூன்  போட்டியாமே , எங்கே ஒருக்கா வாசிச்சுக் காட்டு !இவ்வளவு அருமையான டுயூனுக்கு 4 நிமிஷம் விசிலே  அடிச்சா சனங்களுக்கு போய் சேருமா பாட்டு !? கவிஞர் எழுதட்டும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு !


[Endrum Nammudan MSV - 16/08/2015 | SEG 01 ]


1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவன  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை நகர்த்தியது.


கதைகளின் நாயகர்களாக நடிப்பது மாறி தாங்கள் அடைந்த புகழால் மட்டுமல்ல, தங்கள் அரசியல் இயக்கத்தின் பின்புலத்தோடும் தமிழ் திரையின் மிகப்பெரிய நாயகர்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னணிக்கு வந்தார்கள்.


கதைகளில் நடிப்பது என்பது மாறி இந்த நடிகர்களுக்காக செயற்கையாகக்  கதைகள் தயாரிக்கப்படும் புதிய கலாச்சாரம் தமிழ் திரையில் உதயமாக  இருநடிகர்களும் மூல காரணமாயினர்.


வீரதீர சாகசம் புரிபவராகவும் , தாயன்புமிக்கவராகவும் ,நேர்மை, வாய்மையாளனாகவும் ,ஏழைகளின் நண்பனாகவும் , காதலிகளால் மட்டும் காதலிக்கப்படும்  கதாநாயகனாகவும்  எம்.ஜி.ஆரும் , துன்பத்துயரில் தவிக்கும் கதாநாயகனாகவும் , சோகத்தை வாரிச்சுமக்கும், நாயகனாகச் சிவாஜியும் தங்களுக்கெனத் தனிப்பாதையில் வலம்வரத் தொடங்கிய காலம்.இந்நிலையில் படித்த சாதாரண மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாயகராக ஜெமினி கணேசனும் முன்னணிக்கு வந்தார் . 1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள்  பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.புதையல் , பதிபக்தி  , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை நகர்த்தியது.


பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , கவிஞர் கண்ணதாசனால் தயாரிக்கப்படட "மாலையிடட மங்கை " பட இசையால் மெல்லிசைமன்னர்கள் பெரும் புகழ் அடைந்தார்கள்


1950 களில் வீச ஆரமபித்த மெல்லிசைகாற்றில் ஆங்காங்கே புது புது நறுமணங்களை தூவி ரசிகர்களைக் கவர்ந்து புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.


1950 களிலேயே தலைதூக்கிய தெலுங்கு திரையின் மெல்லிசை, பத்து வருடங்கள் முன்னோக்கியதாவே இருந்தமை  மெல்லிசைமன்னர்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என நம்பலாம். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் தெலுங்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து சிறந்த பாடல்களையும் தந்து  கொண்டிருந்தார்கள்.தென்னிந்திய இசையுலகில் எழுந்த இசையலையின் போக்குகளையும் மெல்லிசைமன்னனர்கள் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பர் என்றும் கருதலாம். எனினும் தெலுங்கு திரையிசை மெல்லிசைக்கு மடைமாற்றம் பெற்ற வேகத்தில் நிகழாமல் , தமிழில் அதற்கான காலம் 1960 களில் கனியும் வரை பொறுத்திருக்க நேர்ந்தது.


தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியில் சற்று விலகிவர முனைந்ததும்  ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.

No comments:

Post a Comment