Friday 6 May 2022

மலையாள மாந்திரீகமும் கண்டி நடனமும்.....

 

மலையாள மாந்திரீகமும் கண்டி நடனமும்.....


லாட்டா பிரதேசத்திலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கை வந்து சேர்ந்த விஜயன், இலங்கையின் பூர்வ குடிப்பெண்ணான குவேனியை மணந்து,அவளது உதவியுடன் பூர்வகுடியான இயக்கர்களை அழித்துவிட்டு தானே மன்னனாக முடிசூடிக்கொள்ள முனைந்தபோது, சிம்மாசனம் ஏறும்முன்   ராஜவம்சத்து பெண்ணை மணந்து கொள்ளவேண்டும் என்கிற  அவனது 700 தோழர்களினதும்  கோரிக்கைகளுக்கும்  செவிசாய்க்க, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு சென்று, அங்கு மன்னருக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். 

இதற்க்கு பாண்டிய மன்னனும் சம்மதித்து,இளவரசியுடன் விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். கூடவே ஆயிரக்கணக்கான ஊழியர்களும் சேர்த்து அனுப்பப்படுகிறார்கள். பாண்டிய  இளவரசி தன்னை மணக்க சம்மதித்து இலங்கை வந்ததை அறிந்த விஜயன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அரண்மனையில் விட்டுவிட்டு, குவேனியை எங்காவது  சென்றுவிட கூறுகின்றான். மனமுடைந்துபோன குவேனி  ஜீவஹத்த, மற்றும் திபெல்லான எனும் பெயருடைய இரு  குழந்தைகளையுமே தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுகின்றாள் .

குவேனிக்கு செய்த துரோகமோ என்னவோ விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் அரச வாரிசென்பது கிடைக்காமலே போய்விட இதனால் மனமுடைந்து கடும் நோய்வாய்ப்பட்ட விஜயன் இந்தியாவில் வாழ்ந்துவந்த தன்னுடைய சகோதரன் சுமித்தவின் மகனான பண்டுவஸ்தேவவை இலங்கைக்கு வரவழைத்து அவனிடம் அரச பதவியை ஒப்படைத்துவிட்டு இறந்துவிடுகின்றான். (விஜயன் இலங்கையை   கி .மு 543 – 505 வரை   ஆட்சிசெய்துவந்ததாக வரலாறு கூறுகின்றது) .   

அரசனான பண்டுவஸ் தேவவிற்கு இரவில் உறங்கும்போது சிறுத்தை ஓன்று தன்மீது  பாய்வதுபோல் அடிக்கடி கனவு  தோன்றவே,  சிறுத்தை என்பது பத்தினி தெய்வத்திற்க்கான அடையாளம் என்கின்ற காரணத்தினால், குவேனியின் சாபத்தினாலேயே இவ்வாறானதொரு கனவு தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்வதாக கருதி,கேரளாவின் மலையாள மாந்திரீகர்களை வரவழைத்து "கொகொம்ப கங்காரிய"எனும் பேயோட்டும் சடங்கினை செய்து, தீய கனவிலிருந்தும்  தனக்கேற்பட்டிருந்த தீராத நோயிலிருந்தும் மீளுகின்றான்.  இந்த கொகொம்ப கங்காரிய எனும் பேயோட்டும் சடங்கிலிருந்துதான் கண்டிய நடனத்தின் வரலாறு தோன்றியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 கேரளத்தின் கதகளி பாணியை ஒத்த இந்த நடனத்தில் இந்து புனித புராணக்கதைகள், புராண நாயகர்கள், மிருகங்களின் நடத்தைகள் போன்றவை ஆடப்படுகின்றன.சிங்கள நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் ஆரம்பத்தில் ஆடப்பட்ட இந்நடனமானது கண்டிய அரசர்களின் ஆதரவுடன் வளர்ந்து,19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியில் வீழ்ச்சியடைந்தாலும், சுதந்திரத்திற்குப்பின் ஆண்களால் மட்டுமே ஆரம்பத்தில் ஆடப்பட்டுவந்த இந்நடனம் பெண்களும் இணைந்து மேடைகளிலும் ஆடத்தக்க வகையில் பெரும் வளர்ச்சியடைந்து, இன்றைய இலங்கையின் கலாசார அடையாளமாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.  கண்டி பெரஹராவில்  இந்நடனத்திற்கு இன்றுவரை தனி சிறப்பிடம் உண்டு என்பதும் கண்கூடு !

இதைப்போலவே , கரையோர நடனம்  எனப்படும்"பாத்தரட்ட நெட்டும" என்பது,  தென்மாகாண ஐதீக கிராமிய நம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டது. பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்யங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும்வகையில் அகோரமான வண்ணவண்ண முகமூடிகளை அணிந்து தெய்வ ஆசிர்வாதம் வேண்டி "தொவில் "என்றழைக்கப்பட்டு ஆடப்படுகின்றது. களுக்குமாரயா, களுயக்கா, ரீரியக்கா, மகாசோன போன்ற பதினெட்டு பேய்களின் வடிவில் வேடமிட்டு,அவைகளிடமிருந்து மக்களை காக்கும்பொருட்டு நடைபெறும் பூஜைநடனமே  இந்த தொவில் .

No comments:

Post a Comment