Saturday, 1 January 2022

எந்த மனிதனும், தன் உண்மை சொரூபத்தை வெளியேக் காட்டுவதில்லை

 ' ஒரு மனிதன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.

அவன் அவ்வப்போது துயரத்திலும், கஷ்ட்டத்திலும் வாழ்ந்து வந்ததால், அவனது வாழ்க்கை மட்டும்,
மற்றவர்கள் வாழ்க்கையை விட, கடினமானதாக இருப்பதாக நினைத்தான்.
' இறைவா, நான் மிகத் துயரமுடையவனாக இருக்கிறேன்.
எனது வாழ்க்கை கடினமானதாக உள்ளது.
என்னைத்தவிர, உலகில் வாழும் அனைவரும் இன்பமாக வாழ்வதை நான் பார்க்கிறேன்.
மற்றவர்கள் எவரும், என்னைப்போல அதிகமான துயரங்களை சுமப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை.
நான் உங்களிடம் அதிகமாக எதையும்
கேட்க வில்லை.
என்னுடைய துயரத்தை
வேறு எவரிடமாவது தந்து விட்டு,
அவரது துயரங்களை எனக்கு மாற்றித் தாருங்கள்.
நான் அதை சுலபமாக சமாளித்து விடுவேன்.
மற்றவர்களது மகிழ்வான முகத்திலிருந்தே,
அவர்களது துயரத்தின் சுமைகள் என்னைவிட மிகக் குறைவு என்பதை
நான் உணர்கிறேன்.' என்றான்.
அன்றிரவே அவன் ஒரு கனவுக் கண்டான்.
வானத்திலிருந்து,
அனைவருக்கும் பொதுவாக,
உரத்தக் குரலில் கடவுள் பேசினார்.
' என் அருமை பிள்ளைகளே,
நீங்கள் அனைவரும் இதுவரை அனுபவித்த துயரங்களையும்,
இனிமேல் அனுபவிக்கும் போகும் துயரங்களையும் ஒரே
மூட்டையாகக் கட்டி, உங்கள் அருகில்
சில நாழிகைகள் வைக்கிறேன்.
அதற்குள், அந்த துயர மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு உங்கள் அருகில் இருக்கும் கோயிலுக்கு வாருங்கள்.
உங்கள் மூட்டையை கோயிலில்,
கீழே தரையில் வைத்து விடுங்கள்.
'என்னுடைய மூட்டை பெரியது ' என்று நினைப்பவர்கள்,
அங்கிருக்கும் சின்ன மூட்டையை மாற்றிக் கொள்ளுங்கள்.
எப்படி மாற்றிக் கொள்வது என்று,
நீங்கள் கோவிலுக்குள் வந்த பின்னர் சொல்கிறேன்.
மூட்டையை மாற்றிக் கொண்டப் பிறகு, இனிவரும் காலங்களில்,
உங்கள் துயரங்களின் அளவு
குறைந்து போய்விடும் ' என்றார்.
அனைவரும் மகிழ்ந்தனர்.
சிறிது நேரத்தில், அனைவரின்
துயர மூட்டைகளும், அருகிலிருக்கும் கோயிலுக்குள் வந்தன.
ஆனால் ஒரு ஆச்சர்யம்.
இறைவன் சொல்லியபடி யாரும் மூட்டையை கீழே வைக்காமல், அவரவர் துயர மூட்டைகளை கை யிலேயே பிடித்திருந்தனர்.
கடவுளிடம் வேண்டிய மனிதனின் மூட்டை,
மற்றவர்களின் துயர மூட்டையைவிட,
சின்னதாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
பலர் பெரிய மூட்டையை வைத்துக்கொண்டு,
அவர்களது இயற்கையான
சிரிப்பு முகம் மாறாமல் நின்றிருந்தனர்.
' இறைவா... எனது மூட்டையே சின்னதாகத்தான் உள்ளது.
நான் எனது மூட்டையுடனேயே எனது வீட்டிற்கு சென்று விட்டால்,
உனக்கு நன்றி சொல்வேன் ' என்று வேண்டினான், கடவுளை முதலில் பிரார்த்தனை செய்த, அந்த மனிதன்.
இருப்பினும், அவனுக்கு ஒரு விஷயம் புரிய வில்லை.
பெரிய மூட்டையை வைத்திருப்பவர்கள்,
மூட்டையை சின்னதாக
மாற்றிக் கொள்ள விரும்பாமல்
ஏன் கையிலேயே வைத்திருக்கிறார்கள் ?
அவன் அருகில் நின்றிருந்த,
பெரிய மூட்டையை வைத்திருந்தவரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டான்.
அவர் அமைதியாக சொன்னார்.
' நமது துயரங்கள், கவலைகளும் பற்றி நமக்கு ஓரளவிற்காவது தெரியும்.
ஆனால் அடுத்தவர்கள் படுகிற துயரங்கள் நமக்கு பழக்கமில்லாத வை.
மேலும், அடுத்தவரின் துயரத்தின் தாக்கம் எப்படிப் பட்டது,
அதன் பாதிப்பு வேகம் எப்படி இருக்கும் ? என்றுத் தெரியாமல்,
துயரத்தின் அளவை,
எண்ணிக்கையை மட்டும் குறைத்துக் கொள்ளவதால் என்ன பயன் ?
அது ஆபத்தானது.' என்றார்.
கடவுளின் உத்தரவு கிடைத்ததும்,
அங்கு வந்தவர்கள், தங்களது சொந்த துயர மூட்டையுடனேயே, ( வேறு எதையும் மாற்றிக் கொள்ள மனமில்லாமல் ) அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
கனவு கலைந்து எழுந்தவன்,
மீண்டும் ஆண்டவனை மிகுந்த பக்தியுடனும், நன்றியுடனும் பிரார்த்தித்தான்.
' நீங்கள் மிகவும் கருணை உள்ளவர்.
என்னை பெரிய சகதியிலிருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள்.
மக்கள் எவ்வாறு தங்கள் துயரங்களை மறைத்துக் கொண்டு,
மகிழ்ச்சி மிக்கவர்கள் போல
வெளித் தோற்றமளிக்கிறார்கள்
என்பதை என் கனவின் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.'
****. ****.
ஓஷோ அவர்களின் இந்த கதை மூலமாக, அவரது சிந்தனை :-
" உலகில் எந்த மனிதனும்,
தன் உண்மை சொரூபத்தை
வெளியேக் காட்டுவதில்லை. "

No comments:

Post a Comment