Saturday 1 January 2022

காற்றுக்கு அழிவில்லை...

 பிரபல பின்னணி பாடகி இசையரசி கான குயில் பி.சுசீலா அவர்களின் பிறந்தநாள் 13.11.1935

💐💐💐💐💐
எதை விட்டு வைக்கவில்லை.. இந்த தேன் சிட்டு.. மயிலிறகாய் வருடும்.. பி.சுசீலா.. 86 வயசு!
💦
இசையரசி பி.சுசிலா 86-வது பிறந்தநாள்
சென்னை: "மொழி எதுவாயிருந்தால் என்ன,
இனிமையாக
உள்ளது குயிலின் குரல்" எங்கோ படித்த இந்த வரிகளின் அர்த்தம் இசையரசி பி.சுசிலாவுக்கு 100 சதவீதம் பொருந்தும்..
🌺
இந்திய மொழிகளில் எதைத்தான் விட்டு வைக்கவில்லை பி.சுசீலா.. சுமார் 25,000-க்கும் மேல் அம்மொழி பாடல்களைப் பாடி... 5 தேசிய விருதுகள், 10-க்கும் மேல் மாநில விருதுகள், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷன்.. அனைத்துக்கும் மேலாக கின்னஸ் சாதனை.. என விரியும் பட்டியலை நம் முன்வைத்து விட்டு இன்றும் அதே அமைதியுடன் காணப்படுகிறார் சுசிலா.
"அந்த காலத்தில் என் வேலை வெறும் பாட்டு பாடறது மட்டும்தான்.. அதனாலதான் நான் எத்தனை பாட்டு பாடினேன்னு கணக்கு வைத்து கொள்ளவில்லை" என்று சொல்லும் சுசிலாவின் தொழில் பக்தியில்தான் எத்தனை எத்தனை ஈடுபாடு!
💕
தாய்மொழி
தெலுங்கை தாய்மொழியாக வைத்து கொண்டு, அட்சர சுத்தமான தமிழில் எப்படி சுசிலாவால் பாட முடிந்தது? வார்த்தையின் உச்சரிப்புக்கு காரணம் சுசிலாவின் பால பாடம்தான்.. மாச சம்பளத்தில் ஏவிஎம்மில் வேலை பார்த்தபோது, மெய்யப்ப செட்டியார் தமிழ் உச்சரிப்பை சுசிலாவுக்கு கற்றுத்தரவே ஒரு ஆசிரியரை வைத்தாராம்.
💢
இனிமை
கர்நாடக இசை நாயகிகள் பி.லீலா, எம்எல் வசந்தகுமாரி ஆகியோரின் திரைவானில் உச்சத்தில் இருந்த நேரம்.. தென்றலென நடுவே புகுந்தார் பி.சுசிலா.. கணீர் என்ற வெண்கலக்குரல்களுக்கு நடுவே... மெல்லிய கீற்று ஒன்று சன்னமாக ஒலிக்க.. தேனினும்
இனிமையாக
.. மனசை வருட தொடங்கியது! இசையமைப்பாளர்கள் என்ன உணர்வினை எதிர்பார்க்கிறார்களோ, அதைவிட கொஞ்சம் அதிகமாகவே அள்ளி தெளித்துவிடுவார் சுசிலா... அதனால்தான் பின்னணி பாடகிகளில் முன்னணி பாடகி என்ற இடத்தை வெகுசீக்கிரத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டார்.
🦋
இலங்கை வானொலி
தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், குத்து என ஒவ்வொன்றிலும் ராகத்தின் செவ்வியல்தன்மை இவரது பாடல்களில் தென்பட்டது. நாம் எங்கு பயணப்பட்டாலும், எந்த நிலையிலிருந்தாலும் சுசிலாவின் இனிய குரல் காற்றிலே கலந்து செவிகளினூடே நுழைந்து நெஞ்சை தேனாய் நனைத்துவிடும். அன்றைய இலங்கை வானொலி பிரியர்களை அங்குமிங்கும் நகரவிடாது செய்தவர் சுசிலா!
☘️
வெளிப்பாடுகள்
உச்சஸ்தாயி-கீழ்ஸ்தாயி... எதுவாயிருந்தால் எனக்கென்ன, என்று அதனை தன் முகபாவனையில் காட்டிக் கொள்ளாமல், உதட்டை தவிர உடலில் வேறெந்த பாகமும் அசையாமல் பாடுவதே சுசிலாவின் சிறப்பு. எஸ்.எம்.எஸ் தொடங்கி, ரகுமான், வரை நெடிய பயணத்தை
இனிமையாக
முடித்து கொடுத்துள்ளார் சுசிலா. அவரது பாடல்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
🥀
நீடூடி வாழ வேண்டும்
தென்றலை கவுரப்படுத்தகூடிய குரல் அது.. இனிமை வற்றாத குரல் அது.. இயற்கையை வணங்கக்கூடிய குரல் அது... எண்ணற்ற ஆண்டுகள் கடந்தாலும் பழுதாகாத, கரைந்துபோகாத குரல் அது. .. உணர்ச்சிக்குரலில் பாவங்களை வெடிக்கும் திறன் சுசிலாவுக்கு மட்டுமே சொந்தம். அவர் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ வேண்டும் என்பதே அவரது இசை அடிமைகள் ஒவ்வொருவரின் நெஞ்சார்ந்த விருப்பம்.
காற்றுக்கு அழிவில்லை... மொழிக்கும், இசைக்கும் அழிவில்லை... சுசிலாவின் குரலுக்கும்!
❤️
குழுவின் சார்பில் பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
தெரிவித்துக் கொள்கிறோம் 💐
🙏🌹 நன்றி இணைய தளம்

No comments:

Post a Comment