நெஞ்சம் மறப்பதில்லை - இக்கட்டுரை எழுதிய பா. கவிதா குமார் அவர்களுக்கு நன்றி
மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள நடிகை தேவிகா வீடு குறித்து அண்ணன் Dhanaraj Sathiah எழுதிய பதிவைப் படித்தவுடன் சட்டென இசையரசி பி.சுசீலா தான் ஞாபகத்திற்கு வந்தார். அவர் பிறந்த நாளுக்காக எழுதப்பட்ட பதிவு இது.
மழைக்காலத்தில் வானவில்லை போலவே கருமேகங்களை ரசிப்பவன் நான்.
எத்தனை வண்ணப்படங்கள் வந்தாலும், கருப்பு வெள்ளை காலப்படங்களின் ரசிகன் நான். தொலைக்காட்சியில் பழைய படமோ, பாடல்களோ ஒளிபரப்பானால் பார்ப்பது வாடிக்கை. இன்று அப்படி ஒரு பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
தமிழ் சினிமாவில் என்றும் எனக்குப் பிடித்த பாடல்கள் என்ற பட்டியலில் இப்பாடலுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. ஏனெனில், அந்த பாடல் மட்டுமின்றி அந்த பாடலில் தோன்றி நடித்த கதாநாயகியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆண்டவன் கட்டளை படத்தில் இடம் பெற்ற
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா.
பாடல் தான் அது. அந்த காலத்திலேயே நவநாகரீக உடையெனச் சொல்லப்படுகிற சுடிதாரில் தேவிகா மிக அழகாகத் தோன்றியதுடன், இப்பாடலுக்கு அவர் காட்டும் பாவம் என்றென்றும் மறக்க முடியாது.
இந்தப் பாடல் இசையரசி பி.சுசீலாவின் மகத்தான ஹிட்பாடல்களில் ஒன்று.
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
என்ற கவியரசு கண்ணதாசன் வரிகளை மெல்லிசைமன்னர்கள் இசையில் இசையரசி, உன் தேவைகளை ஏன் மூடுகிறாய் என கேள்வியாய் கேட்கும் போதெல்லாம், அப்படியே ஜிவ்வென்றிருக்கும்.
பி.சுசீலாவின் குரல் அனைத்து நடிகைகளுக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், எனக்கு தேவிகாவின் குரலுக்கு மிகப் பொருத்தமாகத் தோன்றியது.
ஏனெனில், தேவிகாவிற்கு இசையரசி பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.
இசையரசியின் பிறந்த நாள் அன்று எனக்குப் பிடித்த அவரது குரலில் தேவிகாவின் பாடல்களைப் பற்றி இந்த பதிவைச் சமர்பிக்கலாம் என நினைக்கிறேன்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தேவிகாவிற்கு 200க்கும் மேற்பட்ட பாடல்களை பி.சுசீலா பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நிறைய படங்கள் நடித்த தேவிகா, எம்ஜிஆருடன் ஆனந்தஜோதி படத்தில் மட்டும் தான் நடித்தார்.
அன்றைய கால கட்டத்தில் கதையம்சத்துடன் இணைந்த பாடல்கள், பார்வையாளர்களின் சுக, துக்கங்களுக்கு மாமருந்தாக இருந்தது. இதன் காரணமாகவே இசையரசி சொல்வது போல, பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை.
தேவிகாவிற்கு முதல் முதலாக அன்பு எங்கே படத்திற்காக பி.சுசீலா பாடினார். "எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே" என்ற முதல் பாடலே முத்தான பாடலாக அமைந்தது.
கங்கை கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் பாடல் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளுண்டா? திரையிசை திலகம் கேவி.மகாதேவன் இசையில் டிஎம்.சௌந்தராஜனுடன், பி.சுசீலா பாடிய இந்தப் போட்டிப்பாடல் மிகுந்த கவிநயம் கொண்டது.
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
என்று டிஎம்எஸ் பாட, அதற்கு பி.சுசீலா பதில் அளித்து விட்டு அவர் கேள்வி எழுப்புவது போல இப்படி வரி வரும்..
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது
இங்கு துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..
இப்படி வித்தியாசமான நடையில் பி.சுசீலா பாடிய பாடல் புதிய அனுபவம்.
தேவிகாவிற்காக அவர் தனித்தும், டிஎம்.சௌந்தராஜனுடன் இணைந்து எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் பெரும் பாரம் மனதிற்குள் ஏறும். சொன்னது நீ தானா சொல் சொல் என அவர் கேட்க கேட்க விக்கித்து நிற்போம். பாலிருக்கும் பழமிருக்கும் என்று பாடும் போது உறக்கம் வராது தவிப்போம். வாழ நினைத்தால் வாழலாம் பாடும் போது தன்னம்பிக்கை பெறலாம். நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாத எனப் பாடும் போது முடியாது என்கிறோம். முத்தான முத்தல்லவோ பாடும் போது குழந்தையாகிறோம்.
மடி மீது தலை வைத்து விடியும் வரை பாடும் போது நிலவை அருகில் வைத்து வேடிக்கை பார்க்கிறோம். கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்ற போது தேடியலைகிறோம். அமைதியான நதியினிலே ஓடத்தை இமைக்காமல் ரசிக்கிறோம். இரவும் நிலவும் வளரட்டுமே என்ற போது விடியக் கூடாது என வேண்டுகிறோம். ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே பாடலைக் கேட்டும் போது பறவையாகிறோம். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் கேட்கும் போது ஆட்டோகிராப் வாங்க நினைக்கிறோம். காகித ஓடம் கடல் அலை மீது கேட்கும் போது துயரில் மூழ்குகிறோம். செந்தூர் முருகன் கோவிலிலே பாடலைக் கேட்கும் போது கோயில்மணி நாமாகிறோம்.
ஊமைப் பெண்ணொரு கனவு கண்டதை அறிய நினைக்கிறோம். கல்யாண ஊர்வலம் பாரு எனப் பாடும் போது பன்னீர் தெளிக்க விரும்புகிறோம். சொல்லடா வாய் திறந்து அம்மா என்று கேட்கும் போது மடி சாய்கிறோம். ஆயிரம் பெண் கேட்கும் ரசிக்கட்டுமே கேட்கும் போது உத்தரவு என்கிறோம். இன்னும் எத்தனையோ பாடல்களை தேவிகாவிற்காக பி.சுசீலா பாடியுள்ளார்.
நடிகை தேவிகாவை நினைக்கும் போதெல்லலாம், இசையரசி பி.சுசீலாவை நினைக்காமல் இருக்க முடியாது. இந்த பாடல்கள் தான் அதற்கு சான்று.
- ப.கவிதா குமார்
No comments:
Post a Comment