Tuesday 21 September 2021

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலையம்

 கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலையம்



கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ள பகுதி, கொச்சிக்கடை எனப் பெயர்பெறக் காரணமும் அதன் வரலாற்றில் சில.

கொச்சிக்கடைப்பகுதி இயல்பாகவே இன்று பல மதங்களின் கேந்திரஸ்தானமாகவும், மையமாகவும், விளங்குகின்றது. குறிப்பாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் பல்வேறு மதச்சார்பான பல லட்சம் மக்களால் வழிபடப்படும் பிரபல்யம்மிக்க ஒரு தேவாலயமாகும். இத்தேவாலயம் இப்பகுதியில் அமைந்ததாலேயே இப்பகுதி

கொச்சிக்கடையெனப் பெயர்பெறமூலகாரணமாயிற்று.

இந்நாட்டின் வரலாற்றுப் பின்னணியினை நாம் எடுத்து நோக்கும் போது இலங்கைத்தீவானது ஒல்லாந்தர் ஆட்சியில் அகப்பட்டு இருந்த காலகட்டத்தில் கத்தோலிக்க மதமானது இலங்கையில் பின்னடைவினை எதிர்நோக்கிய ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத்தினை இலங்கையில் பரப்பிச் சீர்திருத்தம் செய்யும் வகையில் தென்னிந்தியாவில் இருந்து அதாவது கொச்சின் பகுதியிலிருந்து கொழும்புக்கு கொச்சின் அந்தோனியோ என்னும் மதகுரு ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆயினும் அக்காலகட்டத்தில் வெளிப்படையாகக் கத்தோலிக்க மதத்தை அனுஷ்டிப்பது, பிரசாரம் செய்வது என்பன

ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. இத்தகைய கட்டுப்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் கொச்சின் அந்தோனியோ கொழும்பு நகரின் மத்தியிலிருந்த மலிபன் வீதிப்பகுதியில் (Vivekanandha Hill) அமைந்துள்ள சிறிய குடிசையில் வந்து தங்கியிருந்து, இரவில்

கத்தோலிக்க மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு வந்தார். இவரது இம்முயற்சியினை அறிந்த ஒல்லாந்த ஆட்சியாளர்கள் அவரைக் கைதுசெய்ய முனைந்தனர். இதனால் கொச்சின் அந்தோனியோ அருகில் உள்ள மீனவர்களிடம் தஞ்சம் புகுந்தார். அக்கால கட்டத்தில் கொழும்பின் வடபகுதி கடலரிப்புக்கும், கடல் நீர் உட்புகுதலுக்குமான அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்த ஓர் இக்கட்டான காலப்பகுதியாகும், இந்நிலையில் மீனவரிடம் தஞ்சம் புகுந்த கொச்சின் அந்தோனியோ என்பவரிடம் மீனவர்கள் ஒரு வேண்டுகோளினை விடுத்தனர்.

நாட்டுக்குள் உட்புகும் கடலலைகளின் சீற்றத்தை இறை பிரார்த்தனையின் வாயிலாக கட்டுப்படுத்தும் வண்ணம் அவரிடம் வேண்டி நின்றனர். கொச்சின் அந்தோனியோவின் மூன்று நாள் பிரார்த்தனை மூலம் கடல் நீரானது கொழும்பு மாநகருக்குள் உட்புகுதல் முற்றிலும் தடைப்பட்டது. தனது ஆன்மீகப் பிரார்த்தனையின் பலத்தினால் கடலலைகளின் பாரிய அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்திய இறைவனுக்கு நன்றிக்கடனாக இறுதிவரை தன் வாழ்நாளை அவ்விடத்திலேயே

கழிக்க அவர் விரும்பியதன் காரணத்தால், அவருக்கு அக்கால ஆட்சியாளரது அனுமதியும், ஆதரவும், அனுசரணையும் வழங்கப்பட்டது. இச்செய்தியினைக் கேள்வியுற்ற அக்காலக்கவனர் கொச்சின் அந்தோனியோவிற்கு ஒரு சிறு துண்டு நிலத்தை அன்பளிப்பாக வழங்கியதுடன் அதில் கடை அமைக்க அனுமதியையும் வழுங்கினார். கொச்சின் அந்தோனியோ பகலில் தன் கடையை நிர்வகித்தும், இரவில் கத்தோலிக்க மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டும் வந்தார். 

கொச்சியிலிருந்து வந்து கடை நடத்தியதனால் இப்பகுதி கொச்சிக்கடை

எனப் பெயர்பெற ஏதுவாயிற்று. காலக்கிரமத்தில் கொச்சின் அந்தோனியோவின் ஆன்மீக அருள் பலத்தை உணர்ந்த ஒல் லாந்தர்

உட்பட பொதுமக்கள் அனைவரும் அவரால்

ஆரம்பத்தில் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு

வந்த அரிய சிலுவை இருந்த இடத்தில் புனித அந்தோனியாரின் உருவச் சிலையை தென்னிந்தியாவில் கோவா என்னும் இடத்தில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து தேவாலயம் அமைத்தனர். இத்தேவாலயமானது 1834 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.

இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்

வழிபாட்டுத் தலமாக அற்புதம் மிக்க இவ்வரிய தேவாலயம் விளங்குகின்றது. இன்று கொழும்பு மாநகரத்தின் கொழும்பு பதின்மூன்று என்று இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தபோதும், பொதுவாக, இது கொச்சிக்கடையெனப் பெயரிடப்பட்டே பிரபல்யம் பெற்றுள்ளது. தேன் தமிழ் ஓசைக்காக பேசாலைதாஸ்

No comments:

Post a Comment