Thursday 7 February 2019

Oshoவில் ஈடுபாடு எப்படி வந்தது?

Oshoவில் ஈடுபாடு
எப்படி வந்தது?
என் நண்பரின் கேள்வி.
வித்தியாசமான கோணங்களில்,எதிர்பாரத அதிர்வலைகள், மடையென வந்த யதார்த்த சிந்தனைகள் என்னை ஓஷோவுடன் இணைத்தது " என்றேன்.
எப்படி?
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் புரியாமல் மனம் போன போக்கில் திரிந்தவனை, இதுதான் என்று பிடரியில் அடித்து பொறி கலங்க புரிய வைத்தவன் ஓஷோ.
எல்லா துக்கங்களையும் ஜீரணித்து நடைபிணமான என்னை, வாழ்வே ஒரு கொண்டாட்டம் என்று என்னையும் குதியாட்டம் போட வைத்தவன் ஓஷோ.
நான் யார்? என்று தேடியலைந்த என்னை தலையில் தட்டி எல்லாமும் நீ, நீயோ எல்லாம் என்று சிந்தனையை தூண்டியவன்.
Sex, காமம் என்றாலே தகாத வார்த்தைகள் என்றெண்ணி வளர்த்தப்பட்ட என்னன, காமமின்றி ஏது படைப்பு, நீ ஏது, நான் ஏது, ஜீவராசிகள் ஏது என்று காமம் ஒரு புனிதம் என்று என் அறியாமைத் திரையை எரித்தவன் ஓஷோ.
பெண்கள் மீது வருவதே காதல் என்று பிதற்றித் திரிந்த இந்த பித்தனை, காதல் என்பது பிரபஞ்ச தோற்றங்கள் அனைத்திலும்(பாரதி கூற்றுப்படி நிற்பதுவே, நடப்பதுவே) உண்டு என்று என் மனம் விரிந்து விரிந்து பிரபஞ்ச காதலனாக மாற்றியவன் ஓஷோ.
இசையும், உன்னை மறந்து ஆடும் நடனமும் தெய்வீகக் கதவை தட்டும் என்று உணர்த்திய மாயாஜாலக்காரன்.
மரணமும் ஒரு கொண்டாட்டமே என்று மரணத்தையே நேசிக்க வைத்த பித்தன்.
பயத்தை கேள்வி கேள் என்று வித்தியாசமான கோணத்தில் பயத்தை வேரறுத்த ஆன்மீக மருத்துவன்.
புத்தன் என்றால் என்னவென்று ஆராய்ந்து கொண்டிருந்த என்னை,
நீயே புத்தன்தான் என்று ஓங்கி அறைந்தவன் அவன்.
எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதி முழக்கத்தை போல, எல்லாமே தெய்வீகம் தான் இப்பிரபஞ்சத்திலே என்னையே தெய்வமாக உணரச்செய்த ஜாலக்காரன்.
Be at the moment என்று தறிகெட்டு ஓடிய மனமெனும் முரட்டு குதிரையை அடக்கும் வித்தையை கற்று கொடுத்த சித்தன்.
காமம் என்பது வெறும் புணர்ச்சியல்ல, அது தெய்வீகத்தை உணரக்கூடிய அற்புத திறவுகோல் என்று எல்லோரையும் அலறவைத்த அற்புத மனிதன்.
மூச்சை தியானமாக்கி உன்னுள் நீயே தொலைந்து போ என்று விரட்டிய அரக்கன் அவன்.
சுருக்கமாக, எண்ணங்களே வாழ்வாக என்னுள் நானே வழி தெரியாமல்,என்னையே நானே புரிந்து கொள்ளாமல் திகைத்த போது, வா இங்கே என்று என்னோடு ஆத்மார்த்தமாக கலந்து, நீயே சிவம், நீயே எல்லாம் என்று ஞானமெனும் குளத்தில் முங்கி முங்கி எடுத்து புனிதமாக்கிய ஆசான் அவன்.
வெற்றுப்படகாக என்னை மாற்றி, எண்ணமற்ற நிலைக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற மூர்க்கன் அவன்.
கடந்ததை மற, எதிர்காலத்தை துற, இந்தக் கணம் வாழ் என்ற சூத்திரத்தை புரிய வைத்த சூத்திரதாரி அவன்.
என்னுள் மூழ்க மூழ்க என்னை நானே தொலைக்க தொலைக்க, தொலைந்து போ என்று ஆசீர்வதித்தவன் அவன்.
ஒரு கணத்தில், இருட்டை வெளிச்சம் துரத்துவது போல, உன் கடந்தகால கர்மவினைகள் தொலையும் என்று நம்பிக்கை ஊட்டியவன் அவன்.
வாழ்வையும், அதன் நிகழ்வுகளையும் பார்வையாளனாக அனுபவி என்று நிதர்சனத்தை புரிய வைத்தவன் அவன்.
ஜென்னையும், சூஃபியைும் அறிமுகப்படுத்தி அறிவில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவன் அவன்.

No comments:

Post a Comment