Monday 25 February 2019

சொர்க்கமும் நரகமும்

சொர்க்கமும் நரகமும் ❤️
புத்தர் தன் சீடர்களிடம் சொல்வார்," மெல்ல நடங்கள். ஒவ்வோர் அடியையும் விழிப்போடு வையுங்கள். " நீங்கள் ஒவ்வோர் அடியையும் விழிப்போடு எடுத்து வைத்தால் , நீங்கள் மெதுவாக நடந்தே ஆக வேண்டும்.நீங்கள் ஓடினால், அவசரப் பட்டால் , நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள மறந்து போவீர்கள். அதனால் புத்தர் மெதுவாக நடக்கிறார்.
மிக மெதுவாக நடக்க முயலுங்கள். பிறகு நீங்கள் வியந்து போவீர்கள். ஒரு புதிய தரமான விழிப்பு உடலில் ஏற்படத் துவங்கும். மெல்ல சாப்பிடுங்கள். நீங்கள் வியந்து போவீர்கள். அதில் ஒரு பெரிய ஓய்வு இருக்கிறது. எல்லாவற்றையும் மெதுவாக செய்யுங்கள். முதலில் உடல் முற்றிலும் ஓய்வு பெற வேண்டும், ஒரு சின்ன குழந்தையை போல். பிறகு தான் மனதோடு துவக்க வேண்டும்.
உங்கள் மதம் என்று அழைக்கப் படுபவை யெல்லாம் உங்களைப் பதற்றப் படுத்தி இருக்கின்றன. காரணம் அவை உங்களுக்குள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. என்னுடைய முயற்சி இங்கே உங்கள் குற்ற உணர்ச்சியையும், பயத்தையும் தூக்கிப் போடுவது தான். நான் சொல்ல விரும்புவது எல்லாம் நரகமென்று ஒன்றில்லை, சொர்க்கமென்று ஒன்றில்லை என்பதைத் தான். அதனால் நரகத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். சொர்க்கத்திற்காக பேராசைப் படாதீர்கள். எல்லாமே இந்த தருணத்தில் இருக்கிறது. இந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும். அது நிச்சயம் சாத்தியம். ஆனால் வேறு எங்கும் சொர்க்கம் என்றோ , நரகம் என்றோ இல்லை. நீங்கள் பதற்றத்தோடு இருக்கும் போது அது நரகம். நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அது சொர்க்கம். முழு ஓய்வு தான் விண்ணுலகம்.
❤️ ஓஷோ ❤️

No comments:

Post a Comment