Monday 14 January 2019

Fr Jegan Coonghe அவர்களின் வலைப் பதிவிலிருந்து கல்லறைத் தோட்டம் பற்றிய சில வரிகள்:

Fr Jegan Coonghe அவர்களின் வலைப் பதிவிலிருந்து கல்லறைத் தோட்டம் பற்றிய சில வரிகள்:
இறந்த உடல்களை நாம் கல்லறை தோட்டத்தில் வைக்கின்றோம். இதனைப் பற்றித்தான் இன்று எழுத விளைகிறேன். கல்லறைத் தோட்டங்களை, ஆங்கிலச் சொல், செமிற்றி என அழைக்கிறது. இதன் மூலமாக கிரேக்கச் சொல்லான் கொய்மாவோ (κοιμάω sleep) என்ற சொல் இருக்கிறது. இந்த கொய்மாவோ என்ற சொல்லிலலிருந்து கொய்மாத்திரயோன் என்ற சொல் வந்தது, அதன் அர்த்தம் தூங்கும் இடம். பின்னர் இந்த சொல்லிலிருந்து கொமேதேரியும் என்ற லத்தீன் சொல் வந்தது. இதன் அர்த்தம் துயிலும் இல்லம், அல்லது இடம். இப்படியாக செமிற்றி என்றால், அது துயிலும் இல்லம். இது பல கிறிஸ்தவர்களுக்கு புரிவதில்லை என்பது துன்பமான விடயம். இதனால்தான் நம்முடைய கல்லறைத் தோட்டங்கள் எல்லாம், சவக்காலையாக மாறிக் கிட்கிறது, அல்லது காடுபற்றிப் போகிறது. கார்த்திகை இரண்டாம் நாள் மட்டும்தான் அங்கே திருப்பலியும் நடைபெறும் அழுகையும் மெழகுதிரியும் காணப்படும். அல்லது எவராவது இறந்தால் அவருக்கான இடம் மட்டும் துப்பரவாக்கப்படும்.
திருச்சபை கல்லறைகளை வணக்கத்துக்குரிய இடம் என பிரகடணப்படுத்தியும், நமக்கு அது பேய் வீடாகவே தெரிகிறது. மேலைத்தேய நாடுகள் கல்லறைகளை பூங்காக்களாக மாற்றியிருக்கின்றன். மலர்களோடு சேர்ந்து அங்கே நினைவுகளும் பூத்திருக்கின்றன. அங்கே
இறப்பு இல்லை, நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. வெளிநாடுகளில் இதனை நாம் பார்க்கிறோம், ஆனால் நம் தாய்நாட்டில் கல்லறைகள் புனிதப்படுத்த முயல்வதில்லை. இதனை என்னவென்று சொல்ல. இது நம் கிறிஸ்தவ மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான வன்முறை.
கல்லறைகள் நினைவிடங்கள், அவை நம் அன்பானவர்களின் துயிலும் இடங்கள், அங்கே அவர்கள் ஆண்டவருக்காக அமைதியில் உறங்குகிறார்கள். நாம் அங்கே அவர்களின் உடல்களைத்தான் புதைத்திருக்கிறோம், அவர்களின் நினைவுகளை அல்ல. கல்லறைகளில் பேயும் கிடையாது பிசாசும் கிடையாது!!! (அதிகமானவை நம் வீட்டினுள்…!!!).
இன்று மட்டுமல்ல, என்றும் கல்லறைகளின் தூய்மையைப் பேணுவோம். அங்கே நம்மவர்கள் நிம்மதியாக மட்டுமல்ல, அழகாகவும் தூங்கட்டும்.

No comments:

Post a Comment