Thursday 31 January 2019

பனைபடு கிழங்கின் பவளக்கூர்வாய்!

பனைபடு கிழங்கின் பவளக்கூர்வாய்!
இலங்கையிலும், இந்தியாவிலும் தமிழர்களுக்கு இயற்கை கொடுத்த கொடைகளில் பனைமரம் முக்கியமானது. இரு நாடுகளிலும் தமிழ்ப் பிரதேசங்களிலேயே பனை அதிகமாக உள்ளது. எமது சிறுபராயம் பனைகளின் நிழலிற் கழிந்தது. பனையின் அத்தனை பயன்களையும் தீர அனுபவித்தவர்கள் நாங்கள். பனையோலையால் வேயப்பட்ட கூரை, மண்வீடு என்று இயற்கையின் அற்புதமான சுவாத்தியத்தை அனுபவித்தவர்களால் நவீன கட்டிடங்களுக்குள் உறங்க முடிவதில்லை.

ஒரு வீடு வேய்வதற்கான நாட்களில் இருக்கும் கொண்டாட்டம் ஈடிணையற்றது. பல குடும்பங்கள் இணைந்து வேலை செய்வதும் அனைவரும் ஒன்றாக உண்டு, உறங்குவதும் இப்போது வெறுங்கனவு! பனையின் உணவுகள் ஏராளம். அதில் பனம்பழமும், கிழங்கும் முக்கிய இடம் பிடிப்பவை. பனாட்டும், பூரானும்தான்!

இவ்வாறு ஊரே இணைந்த வாழ்வை இழந்து, இப்போதைய வாழ்வை நாகரிகம் என்கிறோம். கூடியிருந்து பனையைக் கொண்டாடும் நாட்கள் இனியும் வரவேண்டும். அதற்கு,அழிக்கப்பட்ட பனைகள் மீள வரவேண்டும். யுத்தம் தின்ற மரங்களில் பெரும்பகுதி பனைகள்தான். அடுத்த தலைமுறை இப்படிப் பழங்களையும், கிழங்குகளையும், பூரானையும் மகிழ்வோடு கூடி உண்ணவேண்டுமெனில் இப்போதிருப்பதைவிட நூறு மடங்கு 
பனைகளை நடவேண்டும்; நடுவோம்!

பனை, தென்னை மரத்தில் ஏறிக் கள் இறக்கி சொந்த பயன்பாட்டுக்கோ, நண்பர்கள் உறவினர்க்கோ கொடுப்பது குற்றமாகாது. மாறாக விற்பனைக்கு மட்டுமே தடை என்பது தான் தமிழகத்தில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. ஆனால், எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் தான் பனை ஏறுவதே குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட சில சாராய உற்பத்தியாளர்களின் லாப நோக்கத்திற்கு தடையற்ற வணிகம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் சுதந்திரம் பெற்ற போது சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன.எம் ஜி ஆர் தடை அறிவித்த போது கூட சுமார் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. ஆனால், தற்போது வெறும் மூன்றரைக் கோடிப் பனை மரங்களே உள்ளன. அவையும் கூட போதுமான பயன்பாடு இல்லாத நிலையில் வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுகின்றன. பனை என்பது தமிழகத்தின் தேசிய மரமாகும். பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும் என்பது நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது.பனையிலிருந்து பதனீர், பனங்கிழங்கு, நுங்கு, பனைவெல்லம் , பனங்கற்கண்டு மற்றும் நூற்றுக்கணக்கான கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பனையை, தீண்டத் தகாததாக மாற்றிய சூழ்ச்சி காரணமாக இன்று நாம் இயற்கை சார்ந்த வாழ்க்கையிலிருந்தே அன்னியப்படுத்தப் பட்டுள்ளோம்.

கேரளாவில் கள்ளுக்கு அனுமதி தரப்பட்டு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், அங்கு பனை, தென்னை விவசாயம் தழைத்தோங்கியதோடல்லாமல், 25000 பனைஏறும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இத் தொழிலாள்ர்கள் நாள்தோறும் ரூ1000 முதல் ரூ2000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். குடிப்பவர்களின் உடல் நிலையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.பீகாரிலும் இது தான் நிலை.ஏனெனில், கள்ளில் ஆல்கஹாலின் பங்கு வெறும் 4.5% தான்! அத்துடன் பனங்கள்ளில் நல்ல தரமான குளுகோஸ், சுக்ரோஸ், புரதம் எலும்பிற்கு பலம் தரும் கால்சியம் மற்றும் விட்டமின்கள் உள்ளன. அதனால் தான் சித்த மருத்துவர்கள் பனங்கள்ளின் மருத்துவ குணங்களை பட்டியலிட்டு வைத்துள்ளனர். இது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் பலம் தரவல்லது.

தமிழக அரசு அரை மனதோடு தென்னையிலிருந்து நீரா இறக்க அனுமதியளித்தது. இதில் ஏகப்பட்ட கெடுபிடிகள், கண்டிஷன்கள் போட்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் வெறும் 19 பேருக்கு மட்டுமே அனுமதி தந்தனர். அதிலும் மூன்று நிறுவனங்கள் மட்டுமே இன்று விற்பனைக்கு அனுமதி பெற்று நாளொன்றுக்கு மொத்தமே 1500 லிட்டர் நீரா மட்டுமே உற்பத்தி செய்யும் அவல நிலை உள்ளது. இது தான் பதனீர் விஷயத்திலும் நடக்கிறது. நீராவும், பதநீரும் பன்னாட்டு குளிர்பான விற்பனைக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் விவசாயிகளின் தொடர் வேண்டுகோள் காரணமாக கள் பயன்பாடு கொண்டு வருவது குறித்து நீதிபதி கே பி சிவசுப்பிரமணியம் கமிட்டி ஒன்று அமைத்து அறிக்கை பெறப்பட்டது. ஆனால், டாஸ்மாக் ’லாபி’ காரணமாக இன்று வரை அந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது.அந்த அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தினால் டாஸ்மாக் என்ற பொற்குவியல் தங்கள் கைகளிலிருந்து நழுவிவிடுமோ என்ற அச்சமே ஆட்சியாளர்களை தடுத்துள்ளது.

சாவித்திரி கண்ணனின் பதிவில் இருந்து


இயற்கையோடு இணையும் வாழ்வு தமிழரது என்பதைச் சொல்லும் இப்படங்கள் பனை ஓலைக் குடுவை பயிற்சி ஒன்றின்போது எடுக்கப்பட்டவை. இடம்: பண்ணைவிளை, பனைநாடு!!
(படமும் மூலப்பதிவும்: Godson Samuel)
பனையோலைக் குடுவைப் பயிற்சி என்பது பனை சார்ந்த ஒரு பெட்டியினை செய்து வீட்டிற்கு கொண்டு செல்லும் ஓர் எளிய பயிற்சி அல்ல. பனை ஓலைப் பொருளாதாரத்தை குறிவைக்கும் மலினமான எண்ணமும் அல்ல. இது பனை எனும் கலாசாரத்தின் வேர்களை அறிந்துகொள்ளும் ஒரு தவம். தமிழ்க் கலாசாரத்தில் நாம் இழந்த ஓர் உன்னத கலை வடிவத்தை மீட்கும், களத்தில் போராடும் போராளிகளின் களம். இது நமது மொழியை மீட்டுருவாக்கும் செயல் கூட. குடுவை சார்ந்த தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் கல்விக்கூடம். எண்ணியலின் அரிச்சுவடி. நமது பாரம்பரியத்தை நவீன உலகில் உலவவிடும் அருங்காட்சியகம். தற்சார்பு என்பதன் தூல வடிவம். உலகம் வியக்கும் உன்னத கலைவடிவம்.
ஓலை, குருத்தோலை, சாரோலை, காவோலை, கடஞ்சிலக்கு, மூக்கோலை, இலக்கு, ஈர்க்கில், மட்டை, கருக்கு நார், அகணி நார், புறணி நார், சோற்று நார், பண்டி, கருக்கு மட்டை, தும்பு, பொத்தம்பு, ஆக்கத்தி, பிச்சாத்தி, பாளையருவாள், கல்லா, கழுத்து, வாய் மட்டம், கண்ணி, தாலி, மொடச்சி, பொத்து, உமி, சுருக்கு பிடி, இடி கம்பு, முக்கு, குத்து, அடி, அடி பொளி, குடுவை, அக்கானி, சுண்ணாம்பு, வாறுகடை.
தமிழகத்தில் இது தொடர்பில் வழக்கிலுள்ள இத்தனை சொற்களோடு, ஈழ வழக்கிலுள்ள பட்டை, கொட்டைப்பெட்டி, கடகம், பெட்டி, நீத்துப்பெட்டி போன்றனவும் இணையும்.

No comments:

Post a Comment