Sunday 22 May 2022

ஹிந்துஸ்தானி ராகங்கள்.

 ஹிந்துஸ்தானி ராகங்கள்.

மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம் கேட்காத சில ராகங்களையும், முக்கியமாக ஹிந்துஸ்தானி ராகங்களையும் பயன்படுத்தி தங்கள் பாடல்களை வளப்படுத்தினார்கள்.


குறிப்பாக ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தித் தங்கள் பாடல்களை புதுமையாக காட்டினர். சில பாடல்களைக் கேட்கும் போது அவை நமக்குத் தெரிந்த ராகங்களின் சில சாயல்களை சார்ந்து இருப்பதும், அதில் சில வித்தியாசங்கள் இருப்பதையும் உணர்கிறோம். சில பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ராகங்களை நினைவூட்டவும் தவறுவதில்லை. கேட்டு அனுபவிக்கும் போது அது குறித்த சிந்தனை நமக்குள் எழுகிறது. தமிழில் மரபாக பயன்படுத்தப்பட்டு வரும் ராகங்களை பயன்படுத்தி பாடல்களை அமைப்பதிலும் பார்க்க ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தும் போது பாடல்கள் மிகவும் வித்தியாசமான தொனிகளைத் தருவதால் அவை புதுமையாக இருக்கும் என்பதாலும் மெல்லிசைமன்னர்கள் அந்த ராகங்களில் அதிகமான பாடல்களைத் தந்திருக்கின்ற உத்தி சிறப்பானதாகும்.


தமிழ் இசையும் ஹிந்துஸ்தானி இசையும் அடிப்படையில் ஒன்றாக இருந்த போதும் பாடும் முறையில் வித்தியாசங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ராகங்களில் ஒரே மாதிரியான அமைப்பு காணப்படினும் ,அவற்றிலும் பல வகைகள், நுட்பம், மற்றும் நுண்கூறுகளில் , சாயலில், மெல்லியதான நுட்ப வேறுபாடுகளிலுமமைந்த பல ராகங்களும் இரு இசைகளிலும் காணப்படுகின்றன. ஆயினும் ஹிந்துஸ்தானி இசையில் சுதந்திரமான இனிய கலவைகளைக் கொண்டதாக புதிய, புதிய ராகங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல மெல்லிசைக்கு உகந்ததாகவும் விளங்குகின்றன.


அதிஸ்ரவசமாக சினிமா இசையமைப்பாளர்கள் தனியே ராக இலக்கணங்களுக்குள் நின்று சுழலாமல் அதிலிருந்து உணர்வின் வெளிப்பாடுகளை கட்டுப்பாடற்ற முறையில் தருவதற்காக , சுவைக்காக வேறு ராகங்களையும் சில இடங்களில் கலந்து மக்களைக் கொள்ளை கொண்டார்கள்.


பொதுவாக இசையில் ராகங்களில் தூய்மைவாதம் பேசப்படுவது வழமை. எந்த ஒரு கலைவடிவமும் பழமை பேசிக் கொண்டு, பயன்படாமல் இருந்தால் அவை காலத்தால் மறக்கப்பட்டு வழக்கொழிந்து போய்விடும். இவை மனித சமூகத்தின் அனுபவமாக உள்ளன. ராகங்களை பற்றி விரிவாக ஆராய்ந்த அறிஞர் ஆப்ரகாம் பண்டிதர் ஆதிகாலத்தில் தமிழ் மக்கள் ராகங்களை உருவாக்கும் முறை குறித்து நன்கு அறிந்து வைத்திருந்ததாகவும், அந்த முறைப்படி 12,000 ராகங்கள் பயன்பாட்டில் இருந்ததாகவும். அவை வர வரக் குறைந்து இன்று சில நூறு ராகங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று விளக்குகிறார்.


பழந்தமிழர்கள் ராகங்களை உருவாக்கிய முறையை கண்டுபிடித்த ஆப்ரகாம் பண்டிதர் ஆரோகணமாக வரும் 1800 ராகங்களையும், அவரோகணமாக வரும் 1800 ராகங்களையும் ஒன்றோடுடொன்றாகச் சேர்க்க வரும் ராகங்களை விபரிக்கின்றார். 1800 x 1800 = 32 ,40,000 என்றும் அவை விக்ருதிகளை ஏற்காத ,அதாவது மாற்றங்களை ஏற்காத சுத்தமான ராகங்கள் எனவும் அதனுடன் 72 விக்ருதிகளை ஏற்கும் பொழுது அதாவது மாற்றங்களை ஏற்கும் பொழுது அவை 32,40,000 x72 = 23,32,80,000 ராகங்கள் உருவாக்குகின்றன என்கிறார் பண்டிதர்!  


இன்று சில நூறு ராகங்களை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு ஏகப்பட்ட குழப்பங்களுக்கு உள்ளாகியிருக்கும் இசை இத்தனை ஆயிரம் ராகங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் அவை பற்றிய தெளிவு இல்லாமலும் இருப்பதற்கு யார் பொறுப்பு?


ராகங்கள் குறித்து பழமை பேசுவதும், தூய்மை பேசுவதும் , மாற்றங்களை மறுக்கும் போக்குகளால் ஒருவிதமான தூய்மைவாதம் நிலைநாட்ட சிலர் முனைகின்றனர். இந்த தூய்மைவாதம் என்பது பாசிசத்தன்மை அடைகின்றது. பல இனமக்கள் கலப்பதால் அவர்களிடையே புதிய அழகு பிறப்பது போல ராகங்களில் கலப்புகள் என்பது நல்ல இனிமையான, புதுமையான ராகங்களை தந்துள்ளன. பலவிதமான மக்கள் கலந்தது போலவே மக்களால் இசையிலும் மாற்றங்கள் வந்தன. இவை எல்லாம் கடவுள்கள் உருவாக்கிக் கொடுத்தவையல்ல; மக்களால் உருவானவை. மக்கள் அவற்றைப் பயன்படுத்தும் போது அவை சில மாறுதல்களுக்கும் உட்பட்டு உயிர் பெறுவதுடன் பழையமரபின் புதிய வடிவமாகவும் தொடர்கிறது.


கர்னாடக இசை போல இறுக்கமிக்கதாக அல்லாமல் இனிமையாலும், எளிமையாலும் கேட்போரை உள்ளிழுக்கும் தன்மைமிக்கதாகவும் ஹிந்துஸ்தானி இசை இருந்து வருகிறது. பெரும்பாலும் ராக ஆலாபனைக்கு அங்கே முக்கியத்தும் வழங்கப்பட்டு வருவதும், ஆலாபனைகளை விரித்து, விரித்துப் பாடுவதாலும் பல இனிய சங்கதிகளைக் கேட்க முடியும். இந்திய இசையின் உயிர் ராகம் பாடுவதில் தான் உள்ளது என்பதையே பல அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் பாடும் முறையும், அவர்களது குரல்வளமும் கேட்போரை வியக்க வைக்கும் படியாக இருக்கும். ஹிந்துஸ்தானிபாடகர்கள் பற்றி பாரதி தனது கட்டுரை ஒன்றில் வியந்து பின்வருமாறு எழுதுகிறான்.


// சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீ காசியில் வாஸஞ் செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிரமற்றப்படி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும்இருப்பதன் காரணமென்ன? இதைப்பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். "வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள்: புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலே தான் தொண்டை கேட்டுப் போகிறது" என்றனர். பின்னிட்டு, நான் யோசனை செய்து பார்த்ததில், 'மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம் தான்' என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்யவேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும்.//


கர்நாடக இசைப் பாடகர்களின் நசிந்த குரல் குறித்த பாரதியின் கவலையை தமிழ் சினிமா போக்கியது என்பதை நாம் கண்டோம்.


தனது இசையமைப்பில் காலத்திற்கு காலம் வித்தியாசங்களைக் காட்ட முனைந்த விஸ்வநாதன் காலநகர்வில் மெதுவாக வந்தடைந்த இடம் ஹிந்துஸ்தானி இசையாகும். பொதுவாக அவர் பாடும் முறையும் பயன்படுத்தும் சங்கதிகளும் அந்த இசையில் அவருக்கிருந்த ஆழந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் காட்டுவதாக இருப்பதை காணமுடியும்.


1960 களில் அதிகமாக லத்தீன் அமெரிக்க இசையில் அதிக கவனம் செலுத்திய விஸ்வநாதன், ராமமூத்தியை விட்டு பிரித்த பின்னர் தனியே இசையமைத்த படங்களில் ஹிந்துஸ்தானி இசையை அதிகமான அளவில் பயன்படுத்த தொடங்கினார். ஹிந்துஸ்தானி இசையின் இனிமைமிக்க ராகங்கள், அதன் எளிமை இசையமைப்பிற்கு வளமான களமாக இருந்தது, அதன் மூலங்களிலிருந்து மன எழுச்சிகளை உண்டாக்கும் வியக்கத்தக்க பாடல்களையும் தந்தார்.  


மெல்லிசைமன்னர்கள் தீவிரமான ஹசல் இசை ரசிகர்களாகவும், அதில் தீவிர ஈடுபாடு காட்டியவர்களாகவும் இருந்தனர். அந்தரீதியில் அவர்களது இசை தமிழ் எல்லைகளைக் கடந்து செல்லத் தயங்கவில்லை. இனிமையும், எளிமையுமிக்க பாடல்களைத் தர முனைந்த அவர்கள் தங்களது இசைக்கான அகத்தூண்டுதலாக ஹிந்திப்பாடல்களையும் முன்னுதாரணமாகக் கொண்ட அதேவேளையில், ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் பாதிப்பிலும் பாடல்களை உருவாக்கினார்கள்.


கதாபாத்திரங்களின் உணர்வுக்கு நேரடியாக எளிமைமிக்க பாடல்களை வழங்கிய அவர்களது இசையில் சங்கீதவித்துவத்தனம் குறுக்கிடவில்லை. ராகங்களின் ஜீவன்களைத் தொட்டுக்கொண்டு, காற்று படப் பட ஓங்கிவளரும் தீ போல ஒவ்வொரு பாடலிலும் இனிய சங்கதிகளை ஊதி, ஊதி ராகத்தின் உயிர்நிலைகளை விரித்து, விரித்து இசைக் கோலங்களாக்கினார்கள். ராகங்களின் தன்மைகளை யாரும் எதிர்பார்க்க்காத வண்ணம் பல கோணங்களில், பலதிசைகளிலும் அமைத்து இசையில் மாயவித்தை காட்டினார்கள்.


ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை என இரு இசையிலும் சில ராகங்கள் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருப்பதும், சில ராகங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடியும். அதனால் பலருக்கு மயக்கங்களும் உண்டாகின்றன.

No comments:

Post a Comment