Saturday 16 April 2022

அரிதட்டு – வடிதட்டுகளாகளாக வேண்டாம்?

 மற்றவர்கள் மீது சுட்டுவிரலை நீட்டுபவர்கள், மற்றவிரல் தம்மை காட்டுவதை மறக்கிறார்களா? அரிதட்டு – வடிதட்டுகளாகளாக வேண்டாம்?

காலிமுகத்திடல் போராட்ட களத்தில் “கோட்டா கோ கம” கிராமத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு படிப்பகம் (Library) அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் படிப்பகத்தில் இனப்பிரச்சனை தொடர்பில் கடும்போக்குவாதிகளால் எழுதப்பட்ட நூல்களும், சிறுபான்மையினர் பற்றி அவர்களின் உரிமைப் போராட்டங்கள், பிரச்சனைகள் குறித்து சிறுபான்மையினரால் எழுத்தப்பட்ட நூல்களும், சிங்கள பௌத்த தேசியவாத நிலையில் இருந்து எழுதப்பட்ட நூல்களும் வைக்கப்பட்டு உள்ளன. அந்த நூல்கள் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கங்களை அளிப்பதாகவும், நூல்களை படிக்க தூண்டுவதாகவும், அப்போராட்டத்தில் கலந்துகொண்ட என் ஊடக நண்பர் ஒருவர் கூறினார்.
அதுமட்டும் அன்றி அந்தப்போராட்டத்தில் இன மத மொழி பேதங்களை கடந்த பல அற்புதமான உரையாடல்கள், நிகழ்வுகள் இடம்பெறுவதாக கூறினார். ஆனால் நம்மவர் சிலர் வடிதட்டு வடித்தெடுக்கிறமாதிரி சக்கைகளைத்தான் தம் எழுத்துகளில் வெளிப்படுத்துகின்றனர்.
சமூக வலைத் தளங்களை திறந்தால் அவர்கள் மாறவில்லை – இவர்கள் மாறவில்லை – அவர் முன்பு என்ன சொன்னார்?, என்று மற்றவர்கள் மீது சுட்டுவிரல் நீட்டியே வாழ்வை இன்னும் தொலைத்துக்கொண்டு இருப்பவர்கள், மாறிவரும் சூழலுக்கேற்ப தம்மில் மாற்றம் இருக்கிறதா என மற்றவிரல், தம்மை சுட்டி நிற்பதை மறக்கிறார்கள்.
பிழைகள் மிண்டும் மிண்டும் தொடர்ந்திருக்கின்றன. அந்தப் பிழைகளை மீளாய்வு செய்வதற்கான காலம் – நேரம் –சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலமைகள் போல் அவர்களுக்கு முன்பு அமையவில்லை.
இப்போதும் அதற்கான பூரண வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது, அவர்கள் முழுமையாக மாறிவிடுவார்கள் என நான் சொல்ல வரவில்லை. ஆனால் 74வருடங்களின் பின் தெற்கு – தெற்கின் இளம் தலைமுறை நின்று நிதானித்து சற்று சிந்திப்பதற்கான சூழலை, ராஜபக்ஸ சகோதரர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் உருவாகியுள்ள அந்த சிந்தனை மாற்றத்தை முதலில் ஏற்றுக்கொள்ள, மதிக்க கற்றுக்கொள்ளுவோம். அது பெரிய அளவிலா? சிறிய அளவிலா என்பது முக்கியமல்ல.
மக்களுடனும், மண்ணுடனும் எந்த நெருக்கத்தையும் கொண்டிராத பலர், சமூக விலைத்தளங்களில் வக்கிரங்களை அள்ளிவீசுகிறார்கள்.
நாம் பாதிக்கப்பட்டோம். வஞ்சிக்கப்பட்டோம். வதைக்கப்பட்டோம். இன அழிப்புக்கு உள்ளோனோம். அதில் மாற்று கருத்தில்லை.
அவற்றுக்கான பொறுப்புக் கூறலும், நீதியும் கிடைக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை ஆளும் தரப்புகளுக்கு எதிராக நடத்தவேண்டும். அதேவேளை தமிழ் பேசும் மக்களின் நீதிக்கான போராட்டத்தில், தென்னிலங்கையில் ஏற்படுகின்ற சிந்தனை மாற்றத்தையும், சினேக பூர்வ புரிதலுடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மாறாக பழைய பல்லவிகளை பாடுவதோடு மட்டும் நிற்போமானால், சிறுதுளியளவிலாயினும் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுக்கத் தவறுவோமானால், தோல்விகளில் இருந்து எழுவதற்கான வாய்ப்புகளை மீண்டும் இழந்துவிடுவோம்.
அதுமட்டும் அல்ல, தமிழர்கள் வஞ்சிக்கப்படும் போது, JVP – சிங்கள முற்போக்காளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், இடதுசாரிகள், இளம் தலைமுறையினர் என்ன செய்தார்கள்? சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு துணை போனவர்கள் தானே என குற்றச்சாட்டுகளை பலர் முன்வைக்கின்றனர்.
உண்மைதான் அவர்களும் பாரிய தவறுகளை இழைத்திருக்கிறார்கள். அதற்காக இப்போ அவர்களிடம் ஏற்பட்டுவரும் குற்ற உணர்வுகளையும், சிந்தனை மாற்றத்தையும் ஏற்க பலர் மறுக்கிறார்கள்.
அவ்வாறாயின் விடுதலைப்புலிகள் அவர்களின் ஆதரவாளர்கள் மாற்று இயக்கங்கள் மீது வைத்த வைக்கின்ற விமர்சனங்கள் – மாற்று இயக்கங்கள் அவர்களின் ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் மீது வைக்கின்ற விமர்சனங்கள் குறித்தும், மக்கள் இவர்கள் அனைவரின் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் என்ன சொல்லப் போகிறார்கள்? கடந்த 3 தசாப்த்த போரில் ஆயுதம் தூக்கியவர்கள் குற்றமற்றவர்களாக, துய்மைவாதிகளாக, அறம்சார்ந்து இயங்கினார்களா? தவறுகள் செய்யாத தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், தலைவர்கள், விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகள் இருந்தால் சொல்லுங்கள். #ஞாபகங்கள்
Vimal Nathan, Allai Sri மற்றும் 115 பேர்
27 கருத்துகள்
24 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment