Monday 7 March 2022

நிலவில் கால் பதித்த முதல் மனிதரான

 நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய தருணத்தில் ஒரு வினோதமான ஒலியைக் கேட்டார். அந்த ஒலி என்னவென்று அப்போது அவருக்குத் தெரியவில்லை. எகிப்துக்கு அவர் ஒரு முறை சுற்றுலா சென்றிருந்தபோது அதே ஒலியை அவர் மீண்டும் கேட்டார். அது மசூதியில் 'பாங்கு' சொல்லும் ஒலி. அதன்பின் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார்."


"அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனில் இருந்து வரும் ஒலியைப் பதிவு செய்தது. அதன்மூலம் 'ஓம்' என்பதுதான் சூரியனின் ஒலி என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்."


இந்த இரண்டு தகவல்களுமே தவறானவை மட்டுமல்ல அறிவியலுக்கு முரணானவையும் கூட.

சூரியன் அல்லது விண்வெளியில் என்ன ஒலி கேட்கிறது என நாசாவின் பெயரால் இதைப்போல பல போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.


ஒலி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்க வேண்டுமானால், ஓர் ஊடகம் தேவை. அது காற்றாகவோ, நீராகவோ, ஏதாவது ஒரு திடப்பொருளாகவோ இருக்கலாம். இயக்க அலைகள் (mechanical waves) வகைப்பாட்டைச் சேர்ந்த ஒலி அலைகள் ஊடுருவிப் பயணிக்க பருப்பொருள் (matter) ஒன்று கட்டாயம் தேவை.


ஆனால், விண்வெளியில் ஒலி அலைகளைச் சுமந்து செல்ல எந்த பருப்பொருளும் இல்லை. விண்வெளியில் வெற்றிடம் மட்டுமே உள்ளது என்பதால் அதில் ஒலி அலைகளால் ஊடுருவிப் பயணிக்க முடியாது.


ஓய்வுபெற்ற இந்திய காவல் பணிகள் (ஐபிஎஸ்) அதிகாரியும், புதுவை துணை நிலை ஆளுநருமான கிரண் பேடியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாசா பதிவு செய்த சூரியனில் ஒலிக்கும் 'ஓம்' எனும் ஒலி என்று கூறி ஒரு காணொளியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.


அதைப் பலரும் சமூக ஊடகங்களில் எள்ளி நகையாடினர். அது ஒரு போலிச் செய்தி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

No comments:

Post a Comment