Thursday 24 March 2022

முப்பாட்டன் முருகனின் வள்ளியானாள் சாந்தினி....?

 முப்பாட்டன் முருகனின் வள்ளியானாள் சாந்தினி....?

'சாந்தினி... சாந்தினி...' அழைப்பது சித்தன் டி சில்வா...

கொழும்பின் உயர்தர உல்லாசப்பயணிகள் தங்கும் விடுதி இது

தனது கை தொலைபேசியில் வந்த அழைப்பை ஏற்று வரவேற்பாளர் மேசையை நோக்கி வேகமாக செல்கின்றாள் சாந்தினி

''உலாத்து' ஒன்று போக வேணும்.....'

உல்லாசப் பயணி ஒருவரை தனியாக வாகனத்தில் அழைத்துக் கொண்டு சுற்றுலாத் தலங்களை காட்டி வருவதை சாந்தினிதான் அந்த விடுதியில் இந்த சொல்லாடலை பழக்கியிருந்தாள் சகலருக்கும்

டி சில்வா இற்கு சாந்தினி மீது அளவுகடந்த பிரியம் மரியாதை

ஒரு சகோதரனாக தந்தையாக தனக்குள் உருவகித்துக் கொள்ளும் உறவு இது

சாந்தினியிற்கு கார் மட்டும் அல்ல இருசக்கர வேக வாகனமும் ஓட்டும் வல்லமை இருக்கு. இந்த வேலையில் சேர்ந்த பின்பு துணிச்சலாக இவற்றை பழகி இருந்தாள். 

அவளது தனிப்பட வாழ்கையில் ஒரு மிதி வண்டியைக் கூட சொந்தமாக வாங்கு முடியாத குடும்ப சூழலில் வாழ்பவள்

அது மட்டும் அல்ல உல்லாசப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சற்று தொலைவான இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று சலிக்காமல் அவர்களுடன் 'உலாத்தி' அவர்களின் நட்பாக பழகும் இனிமையானவள்... அழகானவள்...

மட்டக்களப்பு படுவான்கரையின் ஈரலிப்பும் சம்பா நெற்பயிற் போலல்லாது ஆறு மாத நெற் பயிற் போன்ற உயரமும் மாதுளம் பழ நிறமும் உடையவள்.

தலைமயிர் சுருளா அல்லது நேராக நீண்டு வளரும் தென்னம் கீற்று போன்றதா என்று கூற முடியாத அளவிற்கு கேரளத்து தேய்காய் எண்ணை வைத்து வளர்ந்தது போன்ற முடி.

அள்ளி முடிந்தாலும்... பின்னிக் கட்டினாலும்... பாதி தொங்க அவிழ்த்து விட்டாலும் அழகாகத் தோன்றும்....

காற்றில் பறந்து கவர்ச்சி காட்டும் அழகு நெற்றியில் வீழ்ந்து தானாக பின்னோக்கி ஓடும் காற்றுடன் விளையாடும் அழகி....

இது கிழக்கு மண்ணின் சீதோஷண நிலமைகளின் வெளிப்பாடுகள்.

புன்னகை இன்றி அவளைப் பார்க்க முடியாது.... 

பல் மருத்துவர் மூலம் ஒழுங்கு படுத்தியது போன்ற பல் வரிசை போன்றது அவள் பற்கள்.... 

சிறு வயதில் கரித்துண்டை சப்பி பல் துலக்கியது ஞாபகத்தில் வரும் அவள் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது 

'எப்படி சாந்தினி.... அழகு படுத்த செலவு அதிகம் செய்வீர்களோ..." 

என்று சக சிங்கள உல்லாசப் பயணத்து வழிகாட்டி அழகிகள் கேட்காத நாட்கள் இல்லை.

அவர்களிடம் 'வயதும் வாலிபமும் என் அம்மாவும் என் தாய் மண்ணும் தந்ததே இவை எல்லாம்....." என்பதாக மனதுக்குள் நினைத்து புன்னகைத்து பதிலாக

'நன்றி.." என்பதற்கு சக சிங்களத்து கங்கை குயில்கள்

'கியல வெடக் நேய்..." என்று அவளின் அழகை நட்புடன் அங்கீகரிக்கும் நட்புகள்.... உறவுகள்

மூன்று மொழிகளுக்கு அப்பால் ஐரோப்பிய, ஆசிய மொழிகள் பலவும் ஒரளவு பேசக் கூடியவள் சாந்தினி

இதை உல்லாசப் பயணிகளுடன் பழகியதில் இருந்து பொறுக்கி எடுத்து அவர்களிடமே பேசும் போது திருப்பி பாவிக்கும் திறமையுள்ளவள். 

மிகச்சிலரிடம் மட்டும் இந்த புது மொழிகளை வேகமாக அறிந்து கொள்ளும் இலாவகம் ஏற்படுவதுண்டு அதில் சாந்தினியும் ஒருவர்

முப்பது வயதை அண்டும் 18 வயதுத் தோற்றம் உடைய உற்சாக ஜீவன்

கார் பயணம் என்றால் அதிகம் சேலையும், குறுகிய தூரம் என்றாலும் சேலையும் அணியவே விரும்புவாள் சற்று நீண்ட நேர பயணம் என்றால் சேலை தவிர்ந்து சூழலுக்கு ஏற்ற உடையை அணிவாள்.

எந்த உடை அணிந்தாலும் அந்த உடைக்கு அழகு சேர்க்கும் உடல்வாகு 

தினமும் 'உலாத்து' என்பதாக வேலைகள் அமைவதினால் இயல்பாக அமைந்த உடல், மனப் பயிற்சியினால் ஏற்பட்ட உடல்வாகுவோ இது...?

இந்த உலாத்தின் இறுதியில் உல்லாசப் பயணிகளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சாந்தினியின் கைகளில் 'டாலர்"களை அவர்களாக திணிக்கும் மாறுபட்ட கர அழுத்தல்களுடான நன்றிகள். 

இந்த அழுத்தல்களின் தன்மைகளை சரியாக புரிந்து அளவாக புன்னகைக்கும் சாந்தினியின் இலாவகம் இது வரை அனுபவங்களாக தொடருகின்றது  

'சாந்தினி இம்முறை உனக்கு பிடிக்காத தமிழ் பிரதேசத்திற்கு...' என்று தொடர்ந்தார் டி சிலவா

எங்கு என்பது போல் புருவத்தை உயர்த்த.... அழகாக பராமரித்த கண்களின் புருவம் கவிதை ஒன்றை பாடி நிறுத்தியது

இந்த அழகு பல்கலைக் கழக காதலியை... நினைவூட்டியது... டி சில்வாவிற்கு

கங்கையிற்குள் மிதக்க விட்ட துப்பாக்கிகளுக்கு பறிகொடுத்த அந்த 1970 புரட்சியைப் பற்றி நினைத்துக் கொண்டார். ஒரு கணம் கண்களில் இழப்பின் வலியை கண்ணீர்

 ஏற்படுத்தியது அவருக்கு

தனது புரட்சி அமைப்பு எந்த மலையக மக்களை இந்திய விஷ்தரிப்பு வாதம் என்பதன் வெளிபாடு என்று கொள்கைகளாக பார்த்ததோ அந்த மக்களே இலங்கை இராணுவத் தேடலில் இருந்து டி சில்வாவை அன்று காப்பாற்றிது.

கரையோரச் சிங்களவாரான அவரை கண்டிச் சிங்களவர் அதிகமாக காப்பாற்ற முயலாத போது இந்த நாடற்றவர்கள் காப்பாற்றி வாழ்வும் கொடுத்த அந்த தலை மறைவு வாழ்வில் அவர்களின் தமிழையும் நன்றாக கற்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

நிலமைகள் சீரான பின்புதான் தெரிந்து கொண்டான் தனது கண் அழகி காதலி சுகுணா தனது மொழி பேசும் துப்பாக்கியினால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு சுடபட்டு களனிக்குள் வீசப்பட்ட பலரில் ஒருவளாகிவிட்டாள் என்று

கரம் பற்றி இந்த மாகாவலி கங்கை கரையோரம் பாடிய காதல் கீதம்.... கொடுத்த முதல் முத்தம்.... என்று பலவுமாக அவனது வலிகளாக இனிய நினைவுகளாக அவனது மனதை ஆக்கிரமிக்க....

அதன் பின்பு அவன் நினைவில் சுகுணாவை தவிர வேறு யாரையும் பார்க்கவும் நினைக்கவும் விரும்பவில்லை.

கண்டிச் சிங்களவன் கரையோரச் சிங்களவன் என்று பாகுபடுத்திப் பார்க்கும் சோசலிசத்தையும் விலத்தி தான் உண்டு தன் வேலை உண்டு என்று படிப்பை நிறுத்திவிட்டு கண்டியில் இருந்து கொழும்பு நகர்ந்தான்.

உல்லாசப் பயணிகளுக்கான வழிகாட்டி என்று ஆரம்பித்து முஸ்லீம் ஒருவர் நடாத்தும் பிரபல்ய உல்லாச பயணிகள் தங்கும் விடுதியின் பிரதான முகாமையாளர்களில் ஒருவராக முயற்சியினால் அடைந்த உயர் நிலையில் இன்று

டி சில்வாவிற்கும் சாந்தினியிற்குமான உரையாடல் எப்போது தமிழ், சிங்களம் என்று இரு மொழிகளிலும் கலந்தே இருக்கும்

உல்லாசப் பயணிகளின் தரத்தை ஒரிரு நாட்களில் அறிந்து அவர்களின் 'தரமானவர்கள்' ஐ மட்டும் சாந்தினியிடம் ஒப்படைத்து தனியாக அழைத்துச் செல்வதற்கு அனுமதிப்பார்.

இதன் மூலம் சாந்தினியை காப்பாற்றும் நண்பனாக சமூவியலாளனான செயற்படுவதாக அவருக்குள் ஒரு திருப்த்தி. 

இதற்காகவே சாந்தினி அவரை நவீன கிருஷ்ணன் என்று பகிடியும் செய்வாள். இதன் அர்த்தத்தையும் அவளே ஒரு தடவை சில்வாவிடம் கூறியும் இருக்கின்றாள் 

'வேறு யாரும் இல்லை... அதுவும் பாசிக்குடா... உனக்குத்தான் அந்த இடங்கள் நல்லா தெரியும்..." என்ற விளக்கத்துடன் தொடர்ந்தார் டி சில்வா

'உன் சேலையையும் முதல்நாள் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரும் போது பஸ்சில் நீ கொடுத்த வரவேற்பும் இலங்கை பற்றிய விபரணமும் இந்த உக்ரெனியனுக்கு பிடித்துவிட்டது. அவன் உன்னை குறிப்பிட்டே கேட்டான் அதனால் உன்னைத் தெரிவு செய்தேன்...." 

'கடந்த இரு வாரம் இங்கு தங்கிய அவன் ஒரு இரவுக் கூட தனக்கு துணையாக எந்த பெண்ணையாவது அனுப்ப முடியுமா..? என்று கேட்காதவனாகவும் இருந்ததால்... உன்னைத் தெரிவு செய்தேன்..."

'இண்டோ சுசுக்கி கார் தயாராக உள்ளது அதனை எடுத்துக் கொண்டு மதியத்திற்கு முன்பு கிழம்பினால் போதும்...' என்றார்

'தங்குவது... எங்கெங்கு போக வேண்டும் என்ற பயண விபரங்களின் பிரதியும் காரினுள் வைத்துள்ளோம் என்றார். 

வீட்டிற்கு சென்று உனக்கு தேவையான பொருட்களை எடுத்தும் வருமாறு கூறினார். 

கூடவே சாந்தினி நிச்சயம் தனது தம்பி தங்கை அம்ம்மாவை சந்திப்பாள் என்பதினால் சிறிதளவு பரிசுப் பொருட்களும் பணமும் தனது அன்பின் வெளிப்பாட்டினால் வற்புறுத்திக் கொடுத்தார். 

வேறு யார் கொடுத்தாலும் இப்படியான பரிசுப் பொருட்களை சுய பாதுகாப்பு என்ற எச்சரிக்கையால் பொதுவாக வாங்க மறுக்கும் சாந்தினி டி சில்வா கொடுத்தால் மாத்திரம் அவரின் மனம் கோணாமல் முதலில் மறுப்பாள் அதனையும் மீறி அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்வது வழக்கம்.

'ஒரு இரவு தங்க வேண்டி வரும் அதற்கான ஒழுங்குகள் செய்தாகிவிட்டது...'

கொழும்பில் இருந்து கிழம்பி இரவு 7 மணியளவில் பாசிக்குடாவிற்கு அருகில் உள்ள உயர்தர தங்கும் விடுதிற்கு வந்தாகிவிட்டது. 

இரவு ஓய்வு எடுப்பதற்கும் சாப்பாடு போன்ற விடயங்கள் என்பன பற்றி ஒழுங்குகளை கேட்டறிந்த பின்பு அவனின் அனுமதியுடன் தனது உறவினர்கள் இங்கே அருகில் உள்ளதாக கூறி அங்கு அவர்களை சந்தித்துவிட்டு காலையில் 7 மணிக்கு எல்லாம் வருவதாக அவனிடம் அனுமதியும் பெற்று அதனை டி சில்வாவிடம் தெரிவித்துவிட்டு தனது தம்பி தங்கச்சி அம்ம்மாவை  பார்பதற்கு கிழம்பிவிட்டாள் சாந்தினி கிரானை நோக்கி....

--------------------------------------------------------------------------

சாந்தியிற்கு தற்போது உறவுகளாக அவளைவிட 15 வது குறைந்த தம்பி தங்கச்சி என்று இருவர்

சாந்தினியின் அப்பா யாழ்ப்பாணத்தின் தீவகத்தின் வேரில் பிறந்தவர் கடுகண்ணாவை கடை முதலாளியின் மகன். 

தன்னால் முடியாத படிப்பை தன் பிள்ளையிடம் எதிர்பார்த்து பட்டணத்து பாடசாலையில் படிக்க வைத்து வாத்தியார் ஆக்கியவர் கடுகண்ணாவை முதலாளி. 

தனது தகப்பனாரின்  விருப்பத்திற்கு மாறாக மட்டக்களப்பிற்கு இளம் வாத்தியாராக வந்தவர். 

இங்கு சாந்தினியின் அம்மாவை கண்டு காதலித்து கல்யாணம் செய்தார். அம்மா இளம் வயதில் யானை அடித்து இறந்து போக சாந்தினியையும் அவர் அண்ணாவையும் எனது 4 வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்தவர். 

அம்மாவின் நினைவாக அவரின் ஊரான கொக்கட்டிச் சோலையில் வாத்தியார் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்து வாழத் தொடங்கியவர்.

தெரியாத விவசாயம் பொய்க்க மீண்டும் எமக்காக கொக்கட்டிச் சோலை செரன்டிப் மீன் பண்ணையில் வேலையில் சேர்ந்தவர்.

பத்து வருடம் எம்மை வளர்த்தவர் சாந்தினி பெரிய மனுசி ஆக உறவுகளின் வற்புறுத்தலால் போரில் கணவனை இழந்து பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார் ஒரு பிள்ளையுடன். பின்பு இன்னொரு தங்கச்சியும் பிறந்தது அப்பாவிற்கு.

கொக்கட்டிச் சோலையின் செரன்டிப் ஆலை விமானக் குண்டு வீச்சில் அவர் இறந்து போனார். அவரைத் தேடி சென்ற அம்மாவும் திரும்பி வரவில்லை சாகடிக்கப்பட்டதாக அறிந்தோம்.

இது சாந்தினி வாழ்க்கையை திருப்பிப் போட்ட சம்பவமாக...

கொழும்பிற்கு வேலையிற்கு போன சாந்தினியின் அண்ணனை கொழும்பிற்கு ஆயுதங்கள் கடத்துவதற்கு இயக்கம் பாவித்துக் கொண்டது... அவர் வேலை செய்த உல்லாசப் பயணிகள் வாகனத்தில்.

அதில் பயணித்த இயக்கத்து பொடியன் பிடிபட அவரை தேடி மோட்டல் சென்ற இராணுவம் அவரை கைது செய்து கொன்றும் விட்டது.

அண்ணன் கொலை செய்யப்பட்ட செய்தி வந்த போது அதிர்ந்து போனாள் சாந்தினி. இதன் பின்பு தனது படிப்பை நிறுத்தி தம்பி தங்கச்சி படிப்பிற்காக பாதுகாப்பிற்காக கிரானுக்கு பலரைப் போலவே இடம் பெயர்ந்தாள்.

அம்மம்மா தான் பிறந்த மண் கொக்கட்டிச்சோலையை விட்டு வர மறுத்துவிட்டார்.

'அறுவான்கள் வரட்டும் சுளகால் விரட்டி அடிக்கின்றேன்' என்று துப்பாக்கிகளை சபித்துக் கொண்டார்.

அரசு வழங்கிய உலர் உணவும் தங்கியிருந்த வீட்டவரின் அரவணைப்பும்... அவ்வப் போது அம்மம்மா அனுப்பும் நெல்லும் சாந்தினி தம்பி தங்கையை காப்பாற்றியது.

இங்கும் அவர்களை இருக்கவிடாது கிரான் இலங்கை இராணுவததால் சுற்றி வளைக்கப்பட்ட போது ஒட்டமாவடி முஸ்லீம் கிராமமே சாந்தினி குடும்பத்திற்கும் அடைக்கலம் தந்தது.... புரியாணியும் போட்டது..... பள்ளிவாசலின் அரவணைப்பில் வாழ்ந்தார்கள்....

பள்ளிவாசலிடம் தம்பி தங்கை படிப்பிற்காக வேலை கேட்ட போது அரபு தேசத்திற்கு அனுப்புவதாக சொன்னார்கள்.

மதம் மாறினால் நாளையே பயணம்... ஏஜன்சிக் காசு விமான ரிக்கட் என்று ஏதும் இல்லாமல் போகலாம் என்றதற்கு

மதம் மாறவும் விரும்பவில்லை இலங்கையை விட்ட போக விரும்பவும் இல்லை... 

தங்கச்சி தம்பியை மாணவர் விடுதியில் படிக்க வைத்துவிட்டு அவர்களுக்காகவும் அம்மம்மாவிற்காவும் வாழுதல் என்று முடிவெடுத்தாள் சாந்தினி.

அதற்கான வேலை தேடலின் போது...

முஸ்லீம் ஒருவரால் கொழும்பில் நடாத்தப்படும் உல்லாசப் பயணிகள் விடுதியில் வேலை வாங்கிக் கொடுத்தார்கள் ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்.

இதற்கு சாந்தினியின் முன் வந்து பேசும் திறன், சிறிதளவு ஆங்கில அறிவு, அந்த மலர்சியான முகம் என்று பலதுமாக துணிவுடன் எங்கும் இலங்கையிற்குள் சென்று வேலை செய்யத் தயார் தனது குடும்பத்திற்காக என்ற தற்துணிவும் காரணம் ஆகியன.

கூடவே ஆண்டாண்டு காலமாக குழல் புட்டிற்குள் தேங்காய் பூவும் புட்டுமாக இணைந்து பிணந்து வாழ்ந்து தமிழ் பேசும் உறவுகளும் காரணமாயின

இதில் கிடைத்த அறிமுகம்தான் டி சிலவா

காரில் பாசிக்குடாவிற்கான பயணத்தின் போது...

தனக்கு ஒரு ரஷ்ய காதலி உள்ளார் என்றான் அந்த உக்ரேனிய உல்லாசப் பயணி. அவளும் தானும் ஒரே பல்கலைக் கழகத்தில் படிப்பதாகவும் கூறினான். 

அவள் போன்ற அழகி உலகில் யாரும் இல்லை என்று புகைப்படத்தையும் காட்டினான். மேற்படிப்பு ஒன்றிற்கான அவசரப் பரீட்சை தயார்படுத்தலால் அவளும் வருவதாக இருந்த திட்டம் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதாக வருந்தினான்.

ஜார் மன்னர் ஆட்சிக் காலத்தில் லெனின் தலமையில் புரட்சி வெடித்து சோவியத் அரசு உருவான போதும் தாங்கள் எல்லோரும் உக்ரேனியன், ரஷ்யன், ஜோர்ஜியன், ஸ்லேனியன்.... என்று வாழாமல் சோவியத்துகளாக ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளாகவே வாழ்ந்தோம்... போராடினோம்..... 

அது இரண்டாம் உலகப் போரில் இன்னும் நெருக்கமாகி சோவியத் பிரஜைகளாக இருந்தோம். வெற்றியும் கண்டோம்.

ஹிட்டர் உக்ரேனுக்கு ஊடாகவே ரஷ்யா மீது 2ம் உலகப் போரில் படையெடுத்த போது 10 இலட்சம் சோவியத்துகள் தம்மை அர்பணித்தே சோவியத் யூனியனையும் உலக மக்களையும் காப்பாற்றினர்.

இங்கு 15 நாடுகளாக.. மொழிகளாக.... நாம் பிரிந்திருக்கவில்லை.

சோவியத் ரஷ்யாவிற்கு எதிரியின் நுளைவாயில் உக்ரேன் என்பதை அன்று தாமதமாக புரிந்து கொண்டு போராடியதினால் 10 இலட்சம் சோவியத்துகளை அன்று இழந்தோம் என்று எங்கள் பாட்டனார் கூறுவார்.

எங்கள் பாட்டியும் 2ம் உலகப் போரில் செம்படையில் இணைந்து போராடியதாக தனக்கு கிடைத்த பதக்கத்தை தான் சாகும் போது தன்னிடம் ஒப்படைத்தாக கூறினான்.

சாந்தினி எப்போதும் ஒரு உல்லாசப் பயணியை எங்காவது அழைத்துச் செல்ல முன்பு அந்த பயணியின் நாடு பற்றிய அறிதலை கூகிளை பாவித்து அறிந்து கொள்வாள்.

இதனால் பயணிகளுடன் உலாத்தும் போது அவர்களுடனான உரையாடல் அவளுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் எப்போதும் சுவாரசியமாக அமைவதாக உணர்ந்தும் கொள்வாள். இது இன்றும் உதவித்தான் இருந்தது.

ஆனாலும் அவனின் விளக்கம் மேலும் பல புதிய தகவல்களை அறிய உதவியது.

கற்பதற்கு அறிதலுக்கு தயாராக இருக்கும் சாந்தினியின் இந்த பண்பு பல உயரங்களைத் தொடுவதற்கு வாய்புகளை ஏற்படுத்தியும் இருக்கின்றது.

பதிலுக்கு சாந்தினியும் 'எங்கள் ஊரிலும் இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு குருநாகல் முதலாளி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எமது பூட்டனார் பற்றிய கதைகள் உண்டு. அவர் கூறுவார் அன்று தமிழர், சிங்களவர், முஸ்லீம் என்ற பாகுபாடுகள் இருக்கவில்லை...' என்று எங்கள் நாட்டுப் புகழை சாந்தினி திருப்பிப் வரலாறாக பாடத் தவறவில்லை.

சாந்தினியின் அப்பா யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் கல்யாணம் கட்டியதினால் அவரின் யாழ்ப்பாணத்து உறவுகள் மட்டக்களப்பு பாயில் ஒட்டி விட்டான் என்று கூறினாலும் அப்பா தனது தகப்பனாரின் சிங்கள நாட்டு முதலாளியாக இருந்ததையும் அப்போது எல்லாம் எந்த வேறுபாடுகளும் இன்றி வாழ்ந்ததை பெருமையாக தனது பிள்ளைகளிடம் கூறுவர்.

சாந்தினியின் அப்பாவிற்கு இந்த சிங்கள கிராம மக்களின் அப்பாவித்தனத்தை தமக்கு சாதகமாக்கி வியாபரம் செய்வதில் உடன்பாடும் இருக்கவில்லை.

அவரின் தகப்பனாருக்கு மகனைப் தனக்கு வராத படிப்பை படிப்பீக்க வேண்டும் என்ற ஆர்வமே கடை வியாபாரத்திற்கு அப்பால் இந்த பிச்சை சம்பளக் காசிற்கு ஆசிரியராக்கி மட்டக்களப்பிற்கு அனுப்பிவிட்டது.

மறுநாள் காலை எழு மணிக்கு தனது தம்பி தங்கைகளை சந்தித்துவிட்டு பாசிக்குடா விடுதியிற்கு திரும்பி விட்டாள் சாந்தினி.

தனது உல்லாசப் பயணியின் அறையை தட்டினால் அவன் இன்னும் நித்திரையால் எழும்பவிலை.

கதவை திறந்தான் இரவு உடையுடன்....

நான் கீழே விருந்தினர் காத்திருக்கும் இடத்தில் இருக்கின்றேன் என்றதற்கு....

உள்ளே வருமாறு அழைத்தான்..... மன்னிப்பு கேட்டான்

ஏன் என்பது போல் சாந்தினி அவனைப் பார்க்க

'தாமதம் ஆகிவிட்டது.... உங்கள் நாட்டு குடிவகை ஒன்றை குடித்தேன் சற்று எல்லை மீறி குடித்துவிட்டேன் புதிய வகை குடி சற்று அதிகம் என்னை தூங்க வைத்துவிட்டது....'

"இங்கேயே இரு குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வருகின்றேன்..." என்றான்.

அரை மணி நேரத்தில் ஆற அடி உயரமான ரஷ்ய அழகியின் காதலன் தனது பொன் நிற தலைமயிரை கலைத்தபடி வெளியே வந்தான்.

இவனே இவ்வளவு அழகன் என்றார் அவனது காதலி உலக அழகியாகத்தான் இருப்பாள் என்று அவன் கூறியது உண்மைதான் என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள் சாந்தினி.

இருவரும் ஹோட்டல் இல் உள்ள உணவு விடுதியில் உணவு அருந்திவிட்டு சில தெரிவு செய்த மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளுக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அது ஒலுவில் கடற்கரை... களுதாவளை பிள்ளையார் கோவில்..... மாமாங்கம் பிள்ளையார் கோவில் கூழாவடி முகத்துவாரம் என்றாகி பயணங்கள் தொடர்ந்தன.

வயலும் வயல் சார்ந்த இடங்களும் ஓடைகளும் ஆறும் எளிய மக்களும் கால் நடைகளும் தயிரும் கஜுவும் இளநீரும் என்று ரொம்பவும் இரசித்தான்.

அந்த வீதி ஓர அப்பமும் கொத்து ரொட்டியும் காத்தான்குடி புரியாணியும் பிடித்துத்தான் போய்விட்டது அவனுக்கு.

முடிந்தளவிற்கு தன்னை அடையாளம் காணக் கூடியவர்கள் வாழும் இடங்களை தவிர்த்துக் கொண்டாள் சாந்தினி

மாலை 5 மணியளவில் பாசிக்குடா விடுதியிற்கு திரும்பி வந்தார்கள்

மாலை ஆனாலும் தனக்கு கடலில் குளிக்க வேண்டும் என்பதனை தெரிவிக்க 'குளிரும்...'என்பதற்கு 

'பனிக் குளிரில் வாழ்ந்த எங்களுக்கு இந்த குளிர் வெந்நீரில் குளிப்பது போன்று சுகமானது...' என்றான்

சாந்தினியையும் தன்னுடன் குளிக்க வருமாறு அழைத்தான் தன்னிடம் குளிப்பதற்கு அணியும் ஆடை இல்லை என்று வழமை போல் இலாவகமாக மறுத்துவிட்டாள்.

கடலில் ஒரு படகுச் சவாரியாக இருவரும் அவன் கடலில் குளித்த உடையுடனும் சாந்தினி உலர் உடையுடனும் ஒரு சுற்று சுற்றி பளிங்கு பாறைளையும் அரிய வகை மீன்களையும் பார்த்து இரசித்தனர்.

சூரிய வெளிச்சம் மறைய இரவு 9 மணி ஆவதால் அவர்களால் இந்த படகுப் பயணம் அதுவரை செய்ய முடிந்தது.

தங்கு இடம் வந்த இருவரும் சாப்பிடுவதற்காக உணவு விடுதியிற்கு சென்றனர் எங்கள் நாட்டு உணவு சாப்பிட விரும்புவதாக கூற இடியப்பம் சம்பல் சொதி சிங்க இறால் குழம்பு என்று எடுத்துக் கொடுக்க அப்பம் குழல் புட்டை அடுத்த மேசையில் கண்டு அதிலும் ஓரு பகுதி எடுத்து உண்டான் 

'நன்றாக இருக்கின்றது சற்று உறைப்பு...' என்றதற்கு 

'நாம் அவ்வாறுதான் சாப்பிடுவோம்..' என்றாள் சாந்தினி

'ஆனால் நீங்கள் சுவீட்டாக இருக்கின்றீர்கள்...' என்றான்.

'இன்று நான் குடிக்கவில்லை நேற்று குடித்ததே போதும் நாளை காலையில் கொழும்பிற்கு புறப்படுவோம் போகும் வழியில் இடங்களைப் பார்ப்போம்' என்றான்

இரவு 10 மணியிற்கு அறையின் வாசலில் அவனிடம் விடை பெற முயன்றாள் சாந்தினி

'இன்று குடிக்கவும் இல்லை... நித்திரை வராது நீ இங்கு எனது அறையில் இரண்டு கட்டில் இருக்கின்றது ஒன்றில் தூங்கலாம் எனக்கு பேச்சுத் துணைக்கு நீ வேண்டும்' என்றான். 

மேலும் 'காலையில் எவ்வளவு வெள்ளனவாக கிழம்பலாமோ அவ்வளவு வெள்ளனவா கிளம்பினால் மலையத்தின் ஊடு பயணித்து போகும் போது அழகுகளை ரசிக்கலாம்...' என்பதற்கு

மறுப்பு தெரிவிக்க முடியாமல்...

டி சில்வாவை அழைத்து விடயத்தை கூறிவிட்டு 

அவரும் 'சமாளிச்சுகோ....' என்று கூற அங்கு தங்குவதாக ஒப்புக் கொண்டாள்...

தமது நாடு என்று உக்ரேன் என்று ஆரம்பித்து ஹிட்டர் செய்த கொடுமைகள் என்றும் கதைகள் விரிந்தன. 

தனது காதலியைப் பற்றி அடிக்கடி பேச்சின் இடையே இழுத்து வருவான் 'உன் தலைமயிர் மட்டும் பொன் நிறமாக இருந்தால் நீ என காதலியை விட அழகாக இருப்பாய் இனிமையாக இருப்பாய்..' என்பான்.

சாமம் 12 மணியளவில் இருவரும் அவரவருக்கான கட்டிலில் தூங்கச் சென்றனர்.

சாந்தினியற்கு தூக்கம் வரவில்லை. 

எங்கள் கலாச்சாரத்தில் ஒரு அந்நிய ஆடவனுடன் தனியாக ஒரு அறையில் அதுவும் இரவு தூங்குவது என்ற பழக்கம் அற்றவர்கள் நாங்கள் என்று பலதுமாக கலங்கியபடி... சாந்தினி 

நாளை முழுவதும் கார் ஓட வேண்டும் அதுவம் மலையகப் பாதை வழியே என்று எண்ணியவாறு தன்னை அறியாமலே கண் அயர்ந்து போனாள்

தனது கட்டில் அருகில் இருட்டில் ஒரு அரவம்....

திடுக்குற்று சாந்தினி கண் முழிக்க....

உக்ரேன் ஆடவன் அவள் கரத்தை மெதுவாக பற்றிய வண்ணம் கட்டில் விளிம்பில் இருப்பதை உணர்ந்தாள்...

 உடல் நடுங்கியது... கரங்களை விலத்த முயன்றாள்...

உன் உறவினன் போட்ட விமானக் குண்டால் என் தந்தையை பறி கொடுத்து நான் அனாதையானேன் அன்று....

இன்று உனக்கு என் கட்டிலில் இடம் தந்து...? என் தம்பி தங்கையை நான் அனாதைகளாக்காமல் இருக்க வேண்டுகின்றேன் உகந்தை முருகனே...! என்று முருகனின் வள்ளியாளானா..? சாந்தினி....!

36 கருத்துகள்

Uthaya Siven

இப்படி முடித்து விட்டீர்களே

No comments:

Post a Comment