Sunday 20 February 2022

‘‘குற்றமும் தண்டனையும்’’

 ‘‘குற்றமும் தண்டனையும்’’

         


அந்தக் காலத்தில் மரணமுற்ற ஒரு நபருடைய மனக்கேதம் தீர்ப்பதற்காக, நெய் விளக்கினை நிவந்தமாக விடுவார்கள். அதுபோல என் மனதுக்கு நானே நிவந்தம் விட்டுக் கொள்ளும் பதிவுதான் இது. தஸ்தயேவ்ஸ்கியின் மகத்தான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை நான் படித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இந்த ஒரு மாத காலமும் தஸ்தயேவ்ஸ்கியின் நினைவுகளில்லாத நாட்களே கிடையாது. எனது தூங்கா இரவுகளின் பெரும் பகுதியை ரஸ்கோல்னிகோவும், காத்ரீனா இவானோவ்னாவும் கைப்பற்றியவாரே இருக்கிறார்கள். எனது தனிமையான நேரங்களில் எல்லாம் என் மனம் இந்த நாவலைப் பற்றியே எண்ணம் கொள்கிறது. நான் இருமும் போதெல்லாம் எனக்கு காத்ரீனாவுடைய ஞாபகம்தான் வரும். இப்படி ஒரு மாதகாலமாக என் மன உணர்வுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அரூப உருவம் கொண்ட ஒன்றினை... அர்த்தப்படுத்த முனைவதே இப்பதிவின் நோக்கம்.

              டால்ஸ்டாயைப் படித்தவர்கள் கண்டிப்பாக தஸ்தயேவ்ஸ்கியையும் படிக்க வேண்டும் என்றே நான் சொல்லுவேன்.காரணம் டால்ஸ்டாயினுடைய எழுத்து ஒருவனை நல்லவனாக மற்றிவிடும். ஆனால் நல்லவன் குற்றம் செய்யவே மாட்டான் என்பது கிடையாது. சந்தர்பமும் சூழலும் நல்லவைகளை விட பலம் கொண்டவை. அந்த சந்தர்ப சூழ்நிலையை கடந்து செல்லக் கற்றுத் தருவது தான் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து செய்கிற பணி . இந்த நாவலில் வரக்கூடிய கதாநாயகன் ரஸ்கோல்னிகோவ், பணத்துக்காகவும் தன் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் இரண்டு பெண்களை கொலை செய்து விடுகிறான். இந்த இரட்டைக் கொலைக்கான எவ்வித சாட்சியுமே இல்லை. ரஸ்கோல்னிகோவின் மீது யாருக்குமே சந்ததேகம் வரவில்லை. ரஸ்கோல்னிகோவிற்கும் கொலை என்ற வார்த்தைக்கும் கூட எவ்விதத் தொடர்பும் இல்லவே இல்லை என்றுதான் அவனைச் சூழ்ந்திருந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் கொலை செய்தது ரஸ்கோல்னிகோவ். அதற்கான ஒரே வாழும் சாட்சியும் அவன் தான். அப்படியென்றால் அவன் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் தானே இருக்க வேண்டும் என்று கேட்டால் அது தான் கிடையாது. அவன் செய்த குற்றத்துக்கு அரசாங்கம் அவனை தண்டிக்கவில்லை. அவன் மனமே அவனை தண்டிக்கிறது. அவன் அடையும் மன வேதனைக்குப் பதிலாக சிறையிலே தன் வாழ்நாள் முழுவதும் கழித்திருக்கலாம். அல்லது அரை நிமிட வலியோடு தூக்கிலே மாண்டிருக்கலாம். அப்படிப்பட்டதொரு மனவேதனைக்கு அவன் ஆட்படுகிறான்.

              அப்படி அவன் அடைந்த மனவேதனை என்னவென்று கேட்டால்... ஒரு நிமிடம் நீங்கள் நினைத்துப் பாருங்கள் தேன் எவ்வளவு இனிப்பான ஒன்று. ஆனால் அந்தத் தேன் ஒருவனுக்குக் கசப்பாக மாறினால் அவன் எவ்வளவு பரிதாபத்துக்குரியவன். அப்படிப்பட்டவன் தான் ரஸ்கோல்னிகோவும். மனித வாழ்வி இனிப்பாக இருக்கும் ஒரே விசயமான அன்பானது ரஸ்கோல்னிகோவுக்குக் கசக்கிறது. தன் தாயும், தங்கையும் தன் மீது காட்டுகிற அன்பு அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தாலும், அவனுக்கு அந்த அன்பு கசக்கத்தான் செய்தது. எந்த எதிர்பார்ப்புமில்லாத ரஸூமிகின் என்ற நண்பன் தன் மீது காட்டும் அன்பானது அவனளவில் கசக்கத்தான் செய்தது. ஒரு நல்லவன் குற்றம் செய்தால் அவன் என்ன பாடு படுவான் என்பதற்கு ரஸ்கோல்னிகோவ் ஒரு உதாரணம்.

            எனக்கு இந்த நாவலில் மிகவும் பிடித்தமானதும், இந்த  நாவலின் உச்சமாக நான் கருதுகிற ஒரு பகுதியும் உண்டு. ஒரு குடிகார குமாஸ்தாவான மர்மலதேவ் என்பவன் ஒரு விபத்தில் இறந்து விடுவான். மர்மலதேவ் ரஸ்கோல்னிகோவின் நண்பன். மர்மலதேவின் இறப்புக்குப் பிறகு மர்மலதேவின் மகள் சோனியாவைக்கான ரஸ்கோல்னிகோவ் செல்வான். ஒரு ஒண்டுக் குடித்தனத்திலே தனியாக வாழ்ந்து வரும் சோனியா ஒரு விலைமாது .அவளைக் காண வந்த ரஸ்கோல்னிகோவ் திடீரென்று சோனியாவை பைபிளுடைய ஒரு பகுதியை வாசிக்கச் சொல்வான். தோலால் பைண்டு செய்யப்பட்ட ஒரு பைபிளை கையில் எடுத்து யோவான் சுவிசேஸத்திலுள்ள லாசரஸ் உயிர்த்தெழுதல் பகுதியை அழுது கொண்டே வாசிப்பாள். தன் தகப்பனை இழந்த சோனியாவை லாசரஸின் மரணமும், ஏசு லாசரசுக்குத் தந்த மீட்சியும் அவளைத் தொடர்ந்து வாசிக்க விடவில்லை. இருந்தும் அழுகின்ற குரலில் அவள் பைபிபைபிளை வாசித்தாள். பைபிள் எவ்வளவு புனிதமான ஒன்று. அந்த மாபெரும் புனிதத்தை ஒரு விபச்சாரப் பெண் வாசிக்க அதை ஒரு கொலைகாரன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறானே... நாம் தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி என்ன சொல்ல இயலும்.

           இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாப்பாத்திரம் காத்ரீனா இவானோவ்னா தான். ஒரு காச நோயாளியான இந்தக் காத்ரீனா, இந்த நாவலில் வரும் போதெல்லாம் என் கண்ணில் அனிச்சையாய் நீர் ஊறும். காத்ரீனா ஒன்றும் பிரம்மாதமானவளல்ல. குடிகாரக் கனவனால் சீரழிந்து போகும் பல பெண்களில் அவளும் ஒருத்தி. இந்த நாவல் முழுவதுமே காத்ரீனா வெறும் இருமலாகத் தான் காட்சி படுத்தபடுகிறாள்.அவள் ஒவ்வொரு முறை இருமும் போதும் அவளது கைக் குட்டைகள் இரத்தத்தால் நனையும். அவள் இருமும் போதெல்லாம் நெச்சுக் கூடில் ஏற்படும் வலியின் காரணமாக தன் நெஞ்சிலே கையை வைத்துக் கொண்டு இருமுவாள். அப்படி அவள் இருமும் போது எனக்கும் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று குறு குறுக்கும். தன் கனவனுடைய இறப்பை ஒட்டி நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் தொடர்ச்சியாய் வரும் இருமலின் காரணமாக பொங்கி வரும் குருதியை தன் கைக்குட்டையால் அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே பேசுவாள்.இருமலைத் தாங்க இயலாத போதும் அவள் பேசிக் கொண்டே இருப்பாள். இறுதியாக அவளது மரணமும் கூட  சோகமானதாகவே இருந்தது. இதனால் தான் என்னவோ அசோகமித்திரன் தஸ்தயேவ்ஸ்கியை சித்தரவதைச் சாதகம் என்று சொல்கிறார். ஆம் இலக்கிய உலகிலே டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியர் என்றால், தஸ்தயேவ்ஸ்கிதான் சோபாக்லீஸ்.‘தஸ்தயேவ்ஸ்கி தன்னை விட மேம்பட்டவர் என்பதால் தான் டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தை விமர்சிக்கவில்லை’ என்று அசோகமித்திரன் தனது கட்டுரையில் (படைப்பாளிகள் உலகம் ) கூறுவார். இந்த சிறுவனைப் பொறுத்தமட்டில் டால்ஸ்டாயும் தஸ்தயேவ்ஸ்கியும் இருவரும் மகத்தானவர்களே.

           இந்த நாவலின் முடிவுதான் மிக அருமையாக இருக்கும். சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ரஸ்கோல்னிகோவ், ஒரு நதிக்கரையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பான். நான் கொலை செய்ததில் எனக்கு வேதனையைத் தவற ஒன்றுமே கிடைக்கவில்லை. அதற்கு மாறாக நான் அன்பை மட்டுமே காட்டியிருந்தால் நான் சந்தோசமாக வாழ்ந்திருப்பேனே என்கிற அவனது ஆற்றாமையோடு இந்த நாவல் முடியும். இதைத் தான் டால்ஸ்டாயும் வலியுறுத்துகிறார். ஏன் மனிதனை நேசிக்கும் அத்தனை பேரும் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறார்கள். ஆம்... அர்த்தமற்ற மனித வாழ்வு, அன்பால் மட்டுமே அர்த்தப்படுத்தப்படுகிறது.

- தமிழ் மகன்

No comments:

Post a Comment