Saturday 5 February 2022

யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?

 

யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக காணாமல் போனோரின் உறவுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, தலைமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு கடந்த ஒரு வார காலத்திற்குள் 100 மில்லியன் ரூபாயை அரசு வழங்கியுள்ளதாக அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

''காணாமல் போனோர் விடயத்தில் முடிவொன்றை காண வேண்டும். சிலர் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். அது அவர்களின் உரிமை. ஆனால் நாங்கள் எங்களது கடமையை செய்ய வந்துள்ளோம். யாராவது காணாமல் போயிருப்பார்களானால், எங்களிடம் வாருங்கள். எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் தேடி பார்க்கின்றோம். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டை கொடுப்போம். அவர்களுக்கு தேவையான மரணச் சான்றிதழ் வேண்டுமானால், அதையும் கொடுப்போம்.

அதில் ஏதாவது குற்றச் செயல் இருக்குமானால், காவல்துறையிடம் ஒப்படைப்போம். ஒரு பெயர் பலகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காணாமல் போனோர் அலுவலகத்தை, இன்று மனிதர்களுக்கு முன்பாக கொண்டுவந்துள்ளோம். காணாமல் போனோர் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க, இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் பேசி, 300 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளேன். பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் விகிதம், 100 மில்லியன் ரூபாய் கொடுக்கிறோம்" என அலி சப்ரி தெரிவித்தார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி

பட மூலாதாரம்,MINISTRY OF JUSTICE SRILANKA

'எங்கள் பிள்ளைகளுக்கு மரண சான்றிதழா?

இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி இவ்வாறான கருத்தை வெளியிட்ட போதிலும், தாம் எந்தவொரு இழப்பீடையும் பெற்றுக்கொள்ளவில்லை என 'தமிழர் தாயகம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க'த்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமக்கு இழப்பீடோ அல்லது மரண சான்றிதழோ தேவை இல்லை என கூறிய அவர், தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.

மேலும், "வரும் மார்ச் மாதம் (2022) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வு ஆரம்பமாகவுள்ளதால், இலங்கை அரசாங்கம் தமது நாடகத்தை அரங்கேற்றி வருகிறது" என்றும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், ''நாங்கள் இழப்பீடு கேட்கவில்லை. எங்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றே வெளிநாடுகளை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இழப்பீடுக்கு நாங்கள் சம்மதிக்கவும் இல்லை. எந்தவொரு தாயும் அதை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை. " என அழுத்தமாக குறிப்பிடுகின்றார் ஜெயவனிதா.

ஜெயவனிதா

மேலும், 100 மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்து தொடர்பாக, காசிப்பிள்ளை ஜெயவனிதாவிடம் கேள்வி எழுப்பியபோது,

''இவ்வளவு காலம் இல்லாதவர், இப்போது எதற்கு இந்த மாதம் வந்து 100 மில்லியன் என்று கூறுகின்றார்? அவரை நாங்கள் சந்திக்கவும் இல்லை. நாங்கள் பேசவும் இல்லை. வெளிநாடுகள் வந்து தான் தீர்வு தர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருக்கின்றோம். நாங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நாடகம் ஆடுகின்றார்கள். அந்த நாடகத்திற்கு நாங்கள் தயார் இல்லை" என்றார்.

மேலும் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படும் கருத்து ஒரு பொய் கதை என்றும் அவர் கூறுகிறார்.

"அது ஒரு பொய் கதை. இங்கு எந்த தாய்மாருக்கு வழங்கினார்கள்?. ஒருவருக்கும் இல்லை. ஐநா பேச்சுவார்த்தை மார்ச் மாதம் தொடங்க போகிறது. அதற்காக இந்த ஒரு நாடகத்தை ஆடுகின்றார்கள், ஐ.நா முடிந்த பின்னர், அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள்" என தெரிவித்தார்.

ஐந்து வருட காலமாக தாம் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறிய அவர், இந்த காலப் பகுதிக்குள் அலி சப்ரி ஒரு நாள் கூட தம்மை சந்திக்க வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் அலுவலகத்தை தாம் தொடர்ந்தும் நிராகரிப்பதாக காசிப்பிள்ளை ஜெயவனிதா கூறுகின்றார்.

"எங்கட பிள்ளைகளுக்கு மரண சான்றிதழை வழங்க இவர் யார்?" என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

மனித உரிமை செயற்பாட்டாளரின் கருத்து

2021 மார்ச் 23ம் தேதி இலங்கைக்காக 16 பரிந்துரைகள் அடங்கிய பிரேரணை (திட்ட வரைவு) ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் (தூதர்) நிறைவேற்றியுள்ளதாகவும், அந்த பிரேரணையின் முன்னேற்றத்தை இலங்கை இந்த முறை ஐநா அமர்வில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் குறிப்பிட்டார்.

மேலும், காணாமல் போனோர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து ஐநாவில் இம்முறை தெளிவூட்ட வேண்டும். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு எவ்வாறான விடயங்களை அரசாங்கம் செய்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது ஆகியவற்றை, ஐநா மனித உரிமை பேரவை இலங்கையிடம் கோரியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

''2021ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த பிரேரணைக்கான முன்னேற்றத்தை இலங்கை அரசாங்கம் தற்போது காண்பிக்க ஆரம்பித்துள்ளது.

பிரதீபா மஹனாமஹேவா

பட மூலாதாரம்,PRATHIBA MAHANAMAHEWA'S FACEBOOK

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 11 வாக்குகளும், இலங்கைக்கு எதிராக 22 வாக்குகளும் ஐநாவில் காணப்படுகின்றன. இதில் வாக்களிக்காத நாடுகளும் இருக்கின்றன. 14 நாடுகள் வாக்களிக்காது வெளிநடப்பு செய்திருந்தன. வெளிநடப்பு செய்தவர்களில் இந்தியாவும் உள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், மூன்று அரசாங்கங்கள் ஆட்சி அமைத்துள்ளன. இந்த நிலையில், இந்த காணாமல் போனோர் விவகாரத்தில் ஒரு சரியான முயற்சியை முன்னெடுக்காது, ஏன் இந்த அரசாங்கங்கள் இவ்வாறு காலம் கடத்துகின்றன என அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

''ஐநாவில் 2015ம் ஆண்டு இந்த பிரேரணையை முன்வைத்து, அதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தார்கள். அதன்பின்னர் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அந்த பிரேரணையிலிருந்து வெளியேறி, 46ஃ1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணையிலும் காணாமல் போனோர் தொடர்பிலேயே கேள்வி எழுப்பப்படுகின்றது.

இதற்கு நாம் கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை எட்ட வேண்டும். சரியோ தவறோ, இதற்காக செயற்படுகின்ற சர்வதேச அமைப்புகளுடன் கலந்துரையாடி, தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகளை பெற்று, இனியும் இவ்வாறான விடயங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

இந்த விடயத்தின் முன்னேற்றத்தை காண்பித்து, அதற்கான செயல்முறையை செயல்படுத்த அரசாங்க கொள்கையொன்றை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், இந்த விடயம் இன்னும் முன்னோக்கி செல்லும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment