2022 புத்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள் எவை?
புத்தாண்டில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகர், நடிகைகள் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு தற்போது அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகளில் பழையபடி பார்வையாளர்கள் வருகைக்கு கெடுபிடி காட்டப்படுகிறது. இத்தகைய சூழலில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய வரவு படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
வலிமை
நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார், இயக்குனர் ஹெச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என, அதே வெற்றி கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் வலிமை. அதிரடி திரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை, ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, யோகி பாபு, மனோ பாலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வலிமை திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட நிலையில், நாயகன் அஜித்துக்காகவே மிகுந்த கவனமுடன் திரைக்கதையை எழுதியுள்ளதாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயக்குனர் ஹெச்.வினோத் கூறியிருந்தார்.
பீஸ்ட்
நடிகர் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளன்று பீஸ்ட் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதில், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். அடுத்த அப்டேட்டையும், முதல் சிங்கிளையும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, 100 ஆவது நாள் ஷூட்டிங் நிறைவடைந்ததை தெரிவிக்கும் விதமாக, நெல்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். 2022 பொங்கலுக்கு இந்தப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா அலைகளால் படப்பிடிப்பு தள்ளிப்போனதன் காரணமாக, ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Twitter பதிவின் முடிவு, 1
விக்ரம்
மாநகரம், கைதி, மாஸ்டரை என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாகிவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், கைதி புகழ் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தில், கமலுக்கு ஹீரோயின் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் திரைப்படம் கோடையில் வெளியாகும் என, சில தினங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Twitter பதிவின் முடிவு, 2
பொன்னியின் செல்வன்
தலைமுறைகள் தாண்டி பலரும் படித்துப் பரவசமடைந்து வரும் கல்கியின் புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன் கதையை, இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நடிப்புப்பட்டாளமே களமிறங்கியிருக்கும் இத்திரைப்படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளன. அதில், முதல் பாகம் முடிவடைந்து ரிலீசுக்கு காத்திருப்பதாக, குழுவில் உள்ள பலரும் தங்கள் வலைப்பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Twitter பதிவின் முடிவு, 3
எதற்கும் துணிந்தவன்
ஜெய்பீம் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் காத்திருப்பது எதற்கும் துணிந்தவன் படத்திற்காகத்தான். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ரத்னவேலு மேற்கொள்ள, டி.இமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தை, வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிட உள்ளதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Twitter பதிவின் முடிவு, 4
வெந்து தணிந்தது காடு
மாநாடு வெற்றிக்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், இப்போதிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. சிம்புவின் 47-வது படமான இது, எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடல்களை தாமரை எழுதுகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கௌதம் மேனன் ட்வீட் செய்திருப்பதால் இந்த ஆண்டே இப்படம் வெளியாகலாம் என கருதப்படுகிறது.
டான் & அயலான்
2022-ல் சிவகார்த்திகேயனின் இரு திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், 'டான்' திரைப்படம் உருவாகி வருகிறது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியங்கா மோகன். கல்லூரி கதைக்களத்தில், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனும் சூரியும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர்கள் பாலசரவணன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ஆர்.ஆர்.ஆர் & கே.ஜி.எஃப் 2
இவை தவிர, பெரும் பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள சில மொழிமாற்றுத் திரைப்படங்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன. அவற்றில், பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் மற்றும் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 ஆம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவசியம் குறிப்பிடப்பட வேண்டிய படங்கள்.
No comments:
Post a Comment