Sunday 14 February 2021

பாலேந்திராவின் மேடைப் பக்கம் -1

 

பாலேந்திராவின் மேடைப் பக்கம் -1

ஒரு பொம்மையின் வீடு 1
நாடகர் பாலேந்திரா
லண்டன் அவைக்காற்றுக் கலைக்கழகம்

நாடகர் பாலேந்திரா ஈழத்தமிழ் மேடை நாடகங்களில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். கிராமிய, பாடசாலை சூழலில்களிலிருந்து தமிழ் நாடகக் கலையை வெளியே இழுத்துவந்து நவீனப்படுத்தி உலகத்தர விமர்சகர்களின் பார்வைகளுக்குச் சமர்ப்பித்தவர். அவரும், அவரது மனைவி ஆனந்தராணியும், இப்போது மகளும்கூடவே, லண்டந் மாநக்ரில், நிர்வகிக்கும் அவைக்காற்றுக் கலைக் கழகம் எமது அடுத்தடுத்த தலைமுறைகளிடம் இம் மாண்புமிகு கலையை ஒப்புவித்து வருகிறது. அவரது கலை அனுபவங்களை அவ்வப்போது சமூக வலைத் தளங்களிலும், இதர வழிகளிலும் பதிந்து வருகிறார். மறுமொழி வாசகர்களுக்காக அவரது அனுமதியோடு இக் கட்டுரை பிரசுரமாகிறது.


இன்று இணையத்தில் இப்ஸனின்  “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) நாடகம்.பார்க்கும் சந்தர்ப்பம் உண்டு . லண்டன் நேரம் மாலை 2.30 இல் இருந்து இன்று இரவு வரை YOUTUBE இல் பார்க்கலாம். இது குறித்து முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

லண்டன் LYRIC அரங்கில் இந்த நாடகத்தை கலைஞர்கள் சத்தியமூர்த்தி , சாம்சன்,  மனைவி ஆனந்தராணி ஆகியோருடன்  கடந்த வருடம்பார்த்தேன்.இதில் நோறா பாத்திரத்தில் சிங்கப்பூரில் பிறந்த ஒரு தமிழ் பெண் அஞ்சனா வாசன் சிறப்பாக நடித்துள்ளார். இப்படி நிகழ்வது  லண்டன் mainstream அரங்கில் நான் அறிந்த வரையில் முதல் தடவையாகும்.

நாடகம் எழுதப்பட்ட காலத்தில் (1879)  இந்தியாவிற்கு  நாடகக்  களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது . பிரதி ஆக்கம்: TANIKA GUPTA. இந்த நாடகம்  லண்டனில் நிலவும் இன, நிற வாதம் பற்றியும் பூடகமாக பேசும். இப்படிப் பல Classic நாடகங்கள் புதிய விளக்கங்களுடன் மீள் மேடையேற்றம் காண்கின்றன.

ஒரு பொம்மையின் வீடு
ஒரு பொம்மையின் வீடு

இந்த வருடம் Nora என்ற பெயரில் Young Vic அரங்கில் இந்த நாடகத்தின் வேறொரு வடிவம் மேடையேறியது. அரங்கில் சென்று பார்க்க திட்டம் இருந்தும், தற்போழுது நிலவும் அசாதாரண நிலைமையால் எனக்கு பார்க்க முடியவில்லை. வேற்றுமொழி  நாடகங்கள் ஆங்கிலத்தில் எப்போதும் மேடையேறிக்கொண்டு தான் உள்ளது.

தமிழில் நான் இலங்கையில் இந்த மொழி பெயர்ப்பு முயற்சிகள் செய்த போது எதிர்த்தவர்களும் தற்போது மாறியுள்ளதாக உணர்கிறேன்.  



திரு பி. விக்னேஸ்வரன் அவர்களது மொழிபெயர்ப்பு நெறியாள்கையில் கடந்த ஆண்டு கனடா நாட்டில் மிகவும் வெற்றிகரமாக மனவெளி அரங்காற்றுக்குழுவினால் 19வது அரங்காடலில் மேடையேற்றப்படடது இந்த நாடகம், கடந்த வருடம் ,லண்டனிலும் அண்மையில் இலங்கையிலும் வீடியோ பதிவாக காட்டப் பட்டது. 

உலக நாடக வரலாற்றில் நவீன நாடகத்தின் முன்னோடி என்று கருதப் படும் நோர்வேஜிய நாடகாசிரியர் ஹென்றிக் இப்ஸன் அவர்கள் 1879 இல் எழுதிய நாடகம் இது. 

இன்றும் சமகாலத்தன்மையுடன் உலகின் பல பாகங்களிலும் பல மொழிகளிலும் மேடையேறி வரும் நாடகம். உலகில் பல நாடுகளில் நாடகத்துறை மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக விளங்கும் இந்த நாடகம் ஈழத்தமிழருக்கும் முக்கியமான நாடகமாக விளங்குகிறது. இப்போது இலங்கையிலும் நாடகத்துறை மாணவர்களுக்கு பாடபுத்தகமாக உள்ளது.

நானறிந்த வரையில் நான்கு ஈழத்தமிழர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.( யாழ் தேவன், குழந்தை ம. சண்முகலிங்கம் , கா. சிவபாலன் , பி. விக்னேஸ்வரன் )

அரை நூற்றாண்டுக்கு முன்னரே யாழ்நகரில் மேடையேறியுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் நான் பயின்ற போது எனக்கும் ஆசிரியராக இருந்த யாழ் தேவன் அவர்களால் அப்போதிருந்த அரசாங்க அதிபர் அவர்களின் உதவியுடன் அப்போது மேடையேற்றப்பட்டது. இலங்கையின் நிகழும் நவீன மொழிபெயர்ப்பு நாடக முயற்சிகளுக்கு ஒரு முன்னோடி நாடகம் இது என்று கூறலாம்.



இப்ஸனின் An Enemy of the people  நாடகத்தை தழுவி “சமூக விரோதி” என்ற தலைப்பில் 2014 இல் லண்டனில் மேடையேற்றினேன்.  இவ் வருடம் யாழ்ப்பாணம் சென்ற போது அதனை அங்கு தயாரிக்க வேண்டும் என்றும் அங்கு உள்ள நீர் மாசடையும் பிரச்சினைக்கு நேரடி தொடர்பாக இருக்கும் என்றும், ஒரு  திட்டம் இருந்தது. அது இனி கைகூடுமோ தெரியாது. சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் இப்சன் எழுதிய நாடகம் இப்பொழுது மிகவும் சமூக பெறுமதி வாய்ந்ததாக காணப் படுகிறது.

சமூகத்தை பாதிக்கும் நுண் கிருமி பற்றிய உண்மையை வெளிப்படையாக சொல்ல வந்த விஞ்ஞானி எப்படி அதிகாரத்தால் “சமூக விரோதி ” ஆக்கப் படுகிறார் என்பதைக் கூறும்  உன்னதமான நாடகம் இது.

தற்பொழுது நிலவும் கொரோனா நெருக்கடியில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரமா? பொது நலமா? என்ற  கேள்வி எழும் போது, அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அன்றாடம்  நாம் எல்லா நாடுகளிலும் காண்கிறோம். “சமூக விரோதி”  நாடகம் இப்போதைய சூழலில்  எந்த நாட்டிலும்  மிகப் பொருத்தமாக அமையும்.  

No comments:

Post a Comment