Friday 4 December 2020

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?

 

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?

#ஜெய்ஸ்ரீராம்.

ராமர் பாலம் மிதக்காது.அதுமட்டுமின்றி அது கல்லே இல்லை.. அட நம்புங்க..

ராமர் பாலத்தின் கற்களை பற்றி பார்க்கும் முன்பு அந்த பாலத்தை பற்றிய நமது நம்பிக்கைகளை பார்ப்போம்.

(Disclaimer: என் பதில படிச்சுட்டு என்ன ராமருக்கு எதிரானவன் அப்படினு சொன்னிங்கனா.. அந்த ராமர் மேல சத்தியமா நா உங்களுக்கு சாபம் குடுத்திடுவேன்)

ஒரு விஷயம்.... ஒரே விஷயம் ஆனா அதை இரண்டு வெவ்வேறு விதமாக சொன்னா கூட நம்ம மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ராமர் பாலம்.

எப்படினு கேக்கறீங்களா.

1) இலங்கையிலிருந்து திரும்பி ராமேசுவரத்தில் சீதையால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூசை முடித்த பின் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்காக தனது வில் முனையால் அந்த பாலத்தை ராமரே உடைத்ததாகவும் அதனால் சிதறிய பாகங்கள்தான் இன்றளவும் ஆங்காங்கே மிதந்து கொண்டு காணப்படுகிறதுனு ஒரு நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கு. இத நம்ம ஏத்துக்கிட்டோம்.

2) இல்ல ராமர் பாலம் உடையல, செயற்கைகோள் ல இருந்து பாத்தா தெரியுதே அதுதான் ராமர் பாலம். இதயும் நாம ஏத்துக்கிட்டோம்.

என்னிக்காவது யோசிச்சதுண்டா? செயற்கைக்கோள் மூலமாக நாம் பார்க்கும் அந்த பாலம் மிதப்பது கிடையாது. ஆனால் மிதக்கும் கற்களால் ராமர் பாலம் உருவாக்கப்பட்டது இது தான் அந்த கல் னு யாராச்சும் சொன்னா அதையும் ஏத்துக்கறோம்.

எப்படி ரெண்டுமே சாத்தியம்.? 🙄

சரி விஷயத்துக்கு வர்றேன்.

ராமர் பாலம், ராமாயணத்தின் படி :

ஒரு யோஜனை என்பது குத்து மதிப்பாக 12. 87கிமீ கள்

ராமாயணத்தின்படி ராமர் பாலம் 100 யோஜனை நீளமுடையது, அதாவது 100 × 12.87 = 1287.48 கிமீ கள். ஆனால் ராமேசுவரத்தின் அரிச்சல் முனையில் இருந்து இலங்கைக்கு வெறும் 20கிமீ தான். அதுக்கு ஏன் இவ்வளவு நீளமான பாலம் கட்டனும். ராமாயண காலத்தில் பூகோள அமைப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

ராமர் பாலம், பூகோளத்தின் படி:

இந்தியாவை பொறுத்தவரை ராமர் பாலம் என்றும். உலக அளவில் ஆதாம் பாலம் என்றும் கூறப்படும் இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பரப்பு ஆகும். தலை மன்னாரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆராய்ச்சி படி இது 18,400 வருடங்களுக்கு முன்பு உருவான இயற்கை நிலப்பரப்பு ஆகும்.ஆராய்ச்சி செய்தது நம்ம மெட்ராஸ் யுனிவர்சிட்டி தான். இது மொத்தமாக 48 கிமீ நீளமுள்ள பாலம் போன்ற அமைப்பு ஆகும். இதன் பெரும்பாலான பகுதிகள் கடலில் 10மீ ஆழத்திற்கு மூழ்கியும் சில பகுதிகள் மட்டும் வெளியே தெரியும்படியும் இருக்கும். செயற்கைகோளின் மூலம் பார்க்கும்போது சிறிய பாறைகள் மற்றும் மணற்திட்டுகளாலான நீளமான பாலம் போல காட்சி தரும். 1480ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாகவே இது கடலுக்குள் மூழ்கியது அதற்கு முன்பு வரை இதன் மீது மனிதர்கள் நடந்து செல்ல ஏதுவாக இருந்துள்ளது.

பூகோளமும் ராமாயணமும்:

இது இயற்கையாக உருவான அமைப்பு அல்ல என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எனவே ராமரே இதனை கட்டி இருக்கலாம். ராமர் கட்டிய இந்த பாலம் (அல்லது இயற்கையாக உருவான) எந்த சூழ்நிலையிலும் மிதக்க வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் இந்தியா இலங்கைக்கு இடையே உள்ள கடல் மட்டத்தின் ஆழம் குறைவானதே அதன் மீது நிலையான பாலம் அமைக்க ஏதுவானதே. அவ்வாறு கற்கள் மிதந்தால் அதன் மீது அதிக எடை கொண்ட போர் ஆயுதங்களுடன் வானரப்படை கடந்து செல்லும் போது கற்கள் அவர்களை கவிழ்ந்து விட்டிருக்காதா?.

ராமர் பாலத்தின் பாறை ஒன்று கோவை, சூலூர் குமரன் கோவில் வளாகத்தில் உள்ளது. பக்தர்கள் தொட அனுமதி உண்டு. அதை நாம் தொடும்போதே நம் எடை தாங்காமல் அது நீருக்குள் மூழ்கும். கிட்டத்தட்ட தெர்மாக்கோல் போல.. கையின் எடையையே தாங்காத அந்த கல் படையினரின் எடையை எவ்வாறு தாங்கி இருக்கும். அந்த பாலத்தின் மீது அனுமனும் ராமரும் ஆடியபடியே கடந்து சென்றனர். அந்த ஆட்டத்தில் கற்கள் கலைந்து போய் மூழ்கடிக்காதா? எனவே ராமர் பாலம் நிலையாக இருந்தது என்பதே மெய். பாலத்தை கடக்கும் போது ஆங்காங்கே இடைவெளியை நிரப்ப பவளப்பாறைகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். எனவேதான் இது இன்றளவும் புனிதமாக பூஜிக்கப்படுகிறது.

ராமர் பாலத்தின் மிதக்கும் கல்:

மிதக்கும் கல் என கூறப்படும் அது உண்மையில் பவளப்பாறை ஆகும். பைப் கோரல் வகையை சார்ந்தது. பைப் கோரல் பவளப் பாறைகளில் உள்ள பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது என்பது அறிவியல் ரீதியான உண்மை. மேலும் கடல் நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளதும் மற்றொரு காரணமாகும்.

இந்த பாறைகள் இந்திய இலங்கை கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இதுவே இலங்கை பகுதியில் ஏற்படும் புயலிலிருந்து நம் நாட்டை பாதுகாக்கிறது. இதனை அழிப்பது குற்றமாகும். ஆனாலும் விஷமிகள் இதனை வியாபார நோக்கத்தோடு அழித்து விற்று வருகின்றனர்.

தான் கடவுள் என்று வெளிப்படுத்தாமல் மனிதனாகவே வாழ்ந்த அவதாரம் தான் ராம அவதாரம். எனவே மிதக்கும் பாலத்தை மனிதனால் உருவாக்கி இருக்க முடியாது அப்படி உருவாக்கினால் அவர் மனிதனாக இருக்க முடியாது.

இந்துக்கள் மட்டுமின்றி ஆபிரகாம் நம்பிக்கை மதங்கள் இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது புனிதமான பாலமாகும். இலங்கையில் உள்ள ஒரு பெரிய பாத சுவடு சிவனுடையது என இந்துக்களாலும் புத்தருடையது என புத்தர்களாலும். ஆதாமுடையது என இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்வர்களாலும் நம்பப்படுகிறது. ஆதாம் இங்கு தான் இறங்கியதாக நம்பப்படுகிறது. அவன் ஏவாளை அடைய இலங்கையில் இருந்து இந்த பாலத்தை அமைத்து அதன் மூலம் அரேபியா சென்றதாக கூறப்படுகிறது. எனவே உலக அளவில் இது ஆதாம் பாலம் என்றே அழைக்கப்படுகிறது.

#ஜெய்ஸ்ரீராம்

No comments:

Post a Comment