Monday 26 October 2020

கிரேக்க புராணக் கதைகள்

கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 

நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 18



(பதினெட்டாம் பாகம்)


"பெலோப்பெனோஸ் நாட்டிற்கு எகிப்தியர்கள் எவ்வாறு வந்தார்கள்? இந்த கிரேக்கப் பகுதியில் எவ்வாறு அரசர்களானார்கள்?" - ஹெரோடொதுஸ் (வரலாறு, VI.55) 


 ஐரோப்பியர்கள், தமது நாகரீகம் பிறந்த இடம் என்று பெருமைப் படும், கிரேக்கத்தில் வாழ்ந்த ஹெரோடொதுஸ் என்பவர் தான், முதன் முறையாக கிரேக்கர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாகரீகம் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஹெரோடொதுஸ் எழுதிய குறிப்புகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் எழுதியவை எல்லாம் உண்மைகள் அல்ல. பல நாடுகளை, மக்களை பற்றிய தவறான தகவல்களும் அவரது எழுத்துக்களில் காணப்படுகின்றன. அனேகமாக, பிற இனங்களின் நாகரிக முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட ஒருவரின் கருத்துக்களாகவே அவை தெரிகின்றன. ஆயினும், பண்டைய கால ஐரோப்பா பற்றி மட்டுமல்ல, மத்திய கிழக்கு, எகிப்து போன்ற நாடுகளை பற்றி அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில், கிரேக்கத்தின் பெலோப்போனோஸ் பகுதியில், எகிப்தியர்கள் (கறுப்பினத்தவர்) வாழ்ந்து வந்ததை ஹெரோடொதுஸ் எழுதிய சரித்திரத்தில் இருந்து தெரிகின்றது. நான் ஒரு சுற்றுலா பயணியாக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த பொழுது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே, சுருளான தலைமுடியுடன் ஆப்பிரிக்க கறுப்பின தோற்றத்தை கொண்ட ஒரு பெண்ணின் சிலை ஒன்று இருந்தது. அதைத் தவிர, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில், கறுப்பின மக்கள் போன்று தோற்றம் கொண்டவர்களின் ஓவியங்கள் காணப்பட்டன. ஆகவே, ஒரு காலத்தில் இன்றைய கிரேக்கப் பகுதிகளில் கறுப்பின மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.


இன்றைய எகிப்துக்கும், கிரீஸுக்கும் நடுவில் கிரேட்டா  (Creta) தீவு அமைந்துள்ளது.  அந்த தீவை ஆண்ட மீனோ அரச வம்சத்தினர், அந்தப் பிராந்தியத்தில் வல்லமை மிக்க கடற்படையை கொண்டிருந்தனர். கிரேக்க நாடு அவர்களுக்கு அடங்கி திறை செலுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் இயற்கைப் பேரழிவு, கிரேக்கப் படையெடுப்புகள் காரணமாக, கிரேட்டாவின் மீனோ நாகரீகம் அழிந்து விட்டது. அதன் பிறகு தான் கிரேக்க நாகரீகம் ஆரம்பமாகியது. இதிலே கவனிக்கப் பட வேண்டிய விடயம், கிரேட்டா நாட்டவர்கள் கிரேக்க இனத்தவர் அல்ல. அவர்கள் தனியான மொழியை பேசினார்கள். எகிப்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். ஆகவே அவர்கள் பண்டைய எகிப்தில் இருந்து குடியேறிய இனமாக இருக்கலாம். கிரேட்டா அரச வம்சமான மீனோ என்ற பெயர், தமிழ்ச் சொல்லான மீனில் இருந்து வந்திருக்கலாம் என, பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அதனை நிரூபிப்பது போல, அண்மையில் ஆராயப்பட்ட கல்வெட்டு ஒன்றில், "மீனு ரொஜா" (மீன் ராஜா) என்று மன்னரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது.


ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட இந்தியாவிலும், சீனாவிலும், வெள்ளையினத்தவர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்த காலம் அதிகமில்லை. எப்படியும், மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அந்த குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அனேகமாக, இன்று நடைபெறும் குடிசனப் பரம்பல் போன்று, தனி நபர்களாக, சிறு குழுக்களாக வந்து குடியேறினார்கள். கறுப்பினத்தவரின் நாடுகளில், மன்னர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளாக இருந்துள்ளனர். அவ்வாறு இராணுவத்தில் சேவையாற்றிய வெள்ளையின ஆண்கள், உள்ளூர் பெண்களை மணம் முடித்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களின் மொழிகளை பேசக் கற்றுக் கொண்டனர். அந்தக் காலங்களில், இன்றிருப்பதைப் போன்ற இன/மத துவேஷங்கள் இருக்கவில்லை. அந்நியர்களாக இருந்தாலும், குடியேறிய நாட்டின் மொழியை பேசி, அந்நாட்டு மக்களைப் போன்றே வாழ்வதற்கு தடையேதும் இருக்கவில்லை. அதனால் தான், இன்றைக்கு வெள்ளை நிறம் கொண்ட மக்கள், பல்வேறு மொழிகளை பேசுகின்றனர். அரபு மொழி பேசும் நாடுகளில் குடியேறியவர்கள் அரபி பேசினார்கள். சமஸ்கிருதம் பேசும் இந்திய நாடுகளில் குடியேறியவர்கள், சமஸ்கிருதம் (இன்று உருது அல்லது ஹிந்தி) பேசினார்கள்.


வெள்ளையின மக்கள், கறுப்பின அரசர்களின் கூலிப் படைகளாக இருந்ததால், இராணுவ அறிவு கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவரின் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலங்களில், புதிதாக தோன்றிய ராஜ்யங்களில் வெள்ளையின அல்லது கலப்பின மக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் மத்தியில் இருந்து புதிய அரச வம்சங்கள் தோன்றவாரம்பித்தன. உண்மையில், அவர்களின் தோல் நிறம் மட்டுமே வெள்ளையாக இருந்தது. ஆனால், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் மாறுபட்டிருந்தது.


உதாரணத்திற்கு, லைபீரியா என்ற நாட்டில் பெருமளவு அமெரிக்க கருப்பர்கள் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கும், சுற்றவர உள்ள பிற ஆப்பிரிக்க இனங்களுக்கும் இடையில் தோல் நிறத்தில் மட்டுமே ஒற்றுமையுண்டு. மற்றும்படி, அவர்களது மொழி, கலாச்சாரம், நடையுடை பாவனை யாவும் அமெரிக்கர்களை போன்றிருக்கும். அவ்வாறு தான், பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள், எகிப்தியரிடம் இருந்து நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். அவ்வாறு நாகரீகமடைந்த வெள்ளையர்கள், தமது அயலில் வாழ்ந்த பிற வெள்ளை இனங்களை "காட்டுமிராண்டிகள்" என்று அழைத்தார்கள். வட ஈராக்கில் தோன்றிய மித்தானி என்ற நாட்டை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அங்கு அரச கரும மொழியாக சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழி அல்லது, புராதன இந்திய மொழி கோலோச்சியது. நமக்கு நன்கு அறிமுகமான இந்து மத தெய்வங்கள், புராணக் கதைகள் என்பன, இன்றைய ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை நாம் விரிவாக ஆராய்வோம்.


விநாயகர் என்ற இந்து தெய்வத்திற்கு, கணபதி, கணேஷ் என்ற பெயர்கள் உண்டு. கணபதி என்றால், இராணுவ தளபதி என்ற பொருள் படும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வெள்ளையின மக்கள், இராணுவ மயமாக்கப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வந்தனர். ஸ்பார்ட்டா (தென் கிரேக்கம்), ஹதூசா (மத்திய துருக்கி) போன்ற இடங்களில் தோன்றிய ஆதி கால வெள்ளையின நாகரீகங்கள், முழுக்க முழுக்க இராணுவ அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆண்கள் சிறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்களது வாழ்நாளில் பெரும் பகுதியை இராணுவ முகாம்களில் கழிக்க வேண்டும். அந்த நகர-தேசங்களின் வளங்கள் முழுவதும் இராணுவத்தை பராமரிப்பதிலேயே செலவிடப் பட்டன. அவ்வாறான இராணுவவாத கொள்கை கொண்ட சமுதாயத்தில், "கணபதி" என்ற தெய்வத்தை  வழிபட்டிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. 


"கணேஷ்" என்ற பெயரில் ஒரு பண்டைய நகரம் இருந்தது. ( Kanesh, http://en.wikipedia.org/wiki/Kültepe) இன்றைய துருக்கி நாட்டில், Kayseri எனும் நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அது உள்ளது.  கணேஷ் நகரம் பாபிலோனியருடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் வெளிநாடுகளிலும் உணரப் பட்டது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு வாகனமாக விலங்கினங்கள் இருந்துள்ளன. எலி, மாடு, மயில் போன்ற விலங்கினங்களை வாகனங்களாக கொண்ட இந்து மத கடவுளரை இது நினைவுபடுத்துகின்றது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள், ஹித்தித் அல்லது ஹத்தி இனத்தவர் எனத் தெரிகின்றது. ஏதோ காரணத்தால் கணேஷ் நகரம் கைவிடப் பட்டு, ஹதூசா என்ற புதிய நகரம் உதயமாகியது. அவர்கள் அங்கிருந்த படியே ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள்.


இன்றைய துருக்கி பகுதிகளில் வாழ்ந்த வெள்ளயின ஹித்தித் மக்களுக்கும், இன்றைய ஈராக்கில் வாழ்ந்த அசிரியர்களுக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. அவை எல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போர்களே அன்றி, இன மேலாண்மைப் போர்களல்ல. அவர்களுக்கு சவாலாக விளங்கிய அசிரிய பேரரசன் ஒருவனின் பெயர் "நரம் சின்". இந்தப் பெயர், விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன் என்ற மன்னனை நினைவு படுத்துகின்றது அல்லவா? அசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களால் தோற்கடிக்கப் பட்ட நாடுகளில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். அதனால், அவர்களால் பாதிக்கப்பட்ட பிற இனங்கள் அசிரியர்களை கொடியவர்களாக கருதியிருக்க வாய்ப்புண்டு. அனேகமாக, இந்து மத புராணங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் "அசுரர்கள்" என்ற சொல் அங்கிருந்து தோன்றி இருக்கலாம். ஏனெனில், அசிரியர்களின் தலைநகரத்தின் பெயர் "அசுரா"! 


அசிரியர்களின் சாம்ராஜ்யத்தில் பல்லின மக்கள் வாழ்ந்தனர். அந்தக் காலத்திலேயே பிரஜைகள் மதித்து நடக்க வேண்டிய சட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்பது ஒரு சிறப்பம்சம். இருந்தாலும் சில சட்டங்கள் பிற்போக்கானவையாக இருந்தன. உதாரணத்திற்கு, பெண்கள் வெளியே போகும் பொழுது, உடலையும், முகத்தையும் மூடும் பர்தா (அல்லது பூர்க்கா) என்ற ஆடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. விலை மாதுக்கள் மட்டுமே முகத்தை மூடாமல் ஆடை அணிந்திருக்க வேண்டும். (The Code of the Assyrians, http://www.fordham.edu/halsall/ancient/1075assyriancode.asp) இந்த வழக்கம் பிற்காலத்தில், பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப் பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, வட இந்தியாவை சேர்ந்த இந்துப் பெண்களும், கிரேக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண்களும், முகத்தை மூடி பர்தா அணிந்து தான் வெளியே சென்றனர்.


கற்பு என்ற ஒழுக்க நெறி கூட, மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த கலாச்சாரம் தான். பெரியாரும், திராவிட இயக்க அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்தனர். நான் முன்பு ஒரு தடவை எழுதியது போல (பார்க்க: கோயிலில் பாலியல் தொழில்) தமிழர்களும் ஒரு காலத்தில் தாய்வழிச் சமுதாயமாக இருந்தனர். மத்திய கிழக்கில் மாறிக் கொண்டு வந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு, தமிழர் மத்தியிலும் பரவியது. திராவிட கொள்கையாளர்கள், அதனை ஆரியர்கள் புகுத்தினார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் யார் அந்த ஆரியர்கள்? தமது கலாச்சாரம், மொழி என்பனவற்றை அவர்களால் எவ்வாறு எம்மீது திணிக்க முடிந்தது ?


உண்மையில், நாங்கள் தான் அந்த ஆரியர்கள்! அங்கிலேயரின் காலனிய ஆட்சிக் காலத்தில், நாங்கள் ஆங்கில மொழி பேசவும், ஆங்கிலேயரை போன்ற நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொள்ளவில்லையா? அதே போன்று,  நாங்களாகவே  ஆரியரின் மதத்தை, கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினோம்! அந்தக் கருதுகோளை நிரூபிக்கும் ஆதாரங்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், ஈரானில் இருந்து வந்த வெள்ளை இனத்தவர்கள். அவர்கள் தமது ஈரானிய (ஆரிய) கலாச்சாரத்தை கொண்டு வந்து புகுத்தி இருப்பார்கள். ராஜராஜ சோழன் காலத்தில் சைவ மதத்துடன், ஆரிய மயமாக்கலும் விரைவாக பரவியது.


பண்டைய காலத்து வரலாற்றை தேட வேண்டுமானால், அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம். உலகம் முழுவதும் வென்ற அலெக்சாண்டர் இந்தியாவில் தோற்று திரும்பினான். இந்த வரலாறு ஒரு பாதி மட்டுமே உண்மை. இன்னொரு பாதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வட-மேற்கு இந்தியாவில் சில பகுதிகளை அலெக்சாண்டரின் படைகள் கைப்பற்றின. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில், உள்ளூர் பெண்களை மணம் முடித்துக் கொண்டு, அலெக்சாண்டரின் கிரேக்க படையினர் தங்கி விட்டார்கள். பிற்காலத்தில் அங்கே பல வெள்ளையின ராஜ்ஜியங்கள் தோன்றின. அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தமது ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்தார்கள். அவர்கள் மூலம் கிரேக்கர்களின் கலாச்சாரம், இந்தியாவில் பரவி இருக்கலாம் அல்லவா? கிரேக்க கலாச்சாரம் என்றால் என்ன?


கிரேக்கர்களின் புராணக் கதைகளில், "மெடூசா" என்ற அரக்கி பற்றிய கதை பிரபலமானது. தலையில் பாம்புகள் நெளியும், விகாரமான தோற்றம் கொண்ட சூனியக் கிழவி போன்ற மெடூசாவின் கதையை, குழந்தைகளை பயமுறுத்த சொல்லப் படுவதுண்டு. அந்தக் கதையின் படி, மெடூசா ஒரு காலத்தில், கிரேக்க நாட்டின் பேரழகியாக இருந்தவள். அவளை மணம் முடிப்பதற்கு எத்தனையோ ஆண்கள் போட்டி போட்டார்கள். ஏதென்ஸ் நகர தேவதையான அதினாவின் கோயிலுக்கு, மெடூசா வழிபட செல்வது வழக்கம். ஒரு நாள், யாருமற்ற நேரத்தில் அங்கு வந்த பொசெய்டொன், மெடூசாவை கோயிலில் வைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். தனது கோயிலிலேயே இவ்வாறான அக்கிரமம் நடந்ததால், அதினா கோபமுற்றாள். ஆனால், பொசெய்டொன் கிரேக்கர்களின் சமுத்திரக் கடவுள். அதனால் அவனை தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணான மெடூசா மீது பழி போடப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் கற்பிழந்த மெடூசா, அந்தக் கணமே விகாரமான வயோதிப மாதுவாக மாற வேண்டுமென சபிக்கப் பட்டாள். 


"சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான்..." என்று பெண்ணின் கற்பை பத்திரமாக பாதுகாக்கக் கோரும், பிற்போக்கான இந்தியக் கலாச்சாரம் உங்கள் மனக்கண்ணில் வரலாம். கிரேக்கர்கள் மத்தியிலும் அதே மாதிரியான கலாச்சாரம் இருந்ததை மெடூசா கதை மூலம் அறிய முடிகின்றது.  ஹோமர் எழுதிய காவியமான "ஒடிசி"யிலும், ஒரு திருமணமான பெண், கணவன் கடல் கடந்து சென்று வருடக் கணக்காக திரும்பி வரா விட்டாலும், சோரம் போகாமல் கற்பெனும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று போதிக்கின்றது. ஹோமர் எழுதிய ஒடிசி எனும் காவியத்தில், பல இடங்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன. ஒடிசி காவியத்தில்,  த்ரோய் நாட்டவரால் கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க அரசியை  மீட்பதற்காக பெரும் போர் நடந்தது. இராமாயணத்தில் இலங்காபுரியை சேர்ந்த இராவணனால் கடத்தப் பட்ட  சீதையை மீட்பதற்காக போர் நடந்தது.  "யாராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்த கதை", இராமாயணத்திலும், ஓடிசியிலும் ஒரே மாதிரி சொல்லப் படுகின்றது.


த்ரொய் நாட்டுடன் போருக்கு சென்ற ஓடிசியின் கப்பல், திரும்பி வரும் வழியில் திசை மாறி கடலில் தத்தளிக்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல புதிய நாடுகளை கண்டு, அங்கெல்லாம் தீரச் செயல்களை செய்து களைத்த ஒடிசி, இறுதியில் தாயகம் திரும்புகின்றான். வீடு வந்து சேர்ந்த பின்னர், தனது மனைவி இத்தனை வருடங்களாக கற்புடன் இருந்தவளா என்று சோதிப்பதற்காக ஒரு பரீட்சை வைக்கிறான். இது சீதையின் கற்பை சோதித்த இராமனின் கதையை நினைவுபடுத்துகின்றது. இதே நேரம், ஒடிசி கண்டுபிடித்த நாடுகளில் எல்லாம், பல பெண்களுடன் உறவு கொள்கிறான். இந்தக் காவியத்தை எழுதிய ஹோமருக்கு, அது தவறாக தெரியவில்லை. அதாவது, வெளிநாடு சென்ற  ஆண் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால், கணவன் வெளிநாட்டுக்கு  சென்றதால் தொடர்புகள் அறுந்து விட்ட நிலையிலும், அவனை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாலும்,  தனிமையில் வாடும் மனைவி, வேறெந்த ஆண்  மகனையும் மனத்தால் கூட தீண்டக் கூடாது. அதுவே பெண்களை மகிமைப் படுத்தும் கற்பெனும் ஒழுக்க நெறி.   கிரேக்க புராணக் கதைகள் போதிக்கும் நீதி நெறியும் அது தான்.இந்திய புராணங்களையும், கிரேக்க புராணங்களையும் ஒப்பிட்டால், இது போன்ற பல ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு "கற்பின் சிறப்பை" எடுத்துக் கூறும் கிரேக்க கதைகள் பல உள்ளன.


கிரேக்கர்களின் ஒர்பெயுஸ் (Orpheus), எயுரிடிசே (Eurydice) என்ற புராணக்கதையும், இந்தியர்களின் சத்தியவான்-சாவித்திரி கதையும் ஒரே மாதிரி அமைந்துள்ளன. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒபெயுஸ் ஒரு சிறந்த இசைக் கலைஞன். அவன் யாழ் இசைத்துப் பாடினால் மயங்காதவர் எவருமில்லை. ஒபெயுஸ், எயுரிடிசே என்ற அழகிய நங்கையை காதல் திருமணம் செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அவர்களது மணவாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. சத்தியவான், சாவித்திரி கதையிலும் அவர்களின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது. எயுரிடிசே காமுகன் ஒருவனால் கானகத்தில் விரட்டப்பட்டு, பாம்பு கடித்து இறந்து போகிறாள். அவளது உயிர் மாண்டவர் வாழும், (எமலோகமான) பாதாள லோகத்திற்கு செல்கின்றது. சத்தியவான் கானகத்தில் கனி பறிக்க சென்ற வேளை உயிர் பிரிகிறது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத ஒர்பெயுஸ், எமலோகத்திற்கு சென்று உயிரை மீட்டு வருவதாக சூளுரைக்கிறான். யாரும் துணியாத காரியமாக, பாதாள லோகம் நோக்கிச் செல்கிறான். 


கணவனின் இழப்பை ஏற்றுக் கொள்ளாத சாவித்திரி, சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமதர்மனை பின்தொடர்ந்து செல்கிறாள். கிரேக்க பாதாள லோகத்தில், அதன் அதிபதியான ஹாடெஸின் (எமதர்மன்) காவல் நாய்கள் (எருமை வாகனம்?) ஒர்பெயுசை மேற்கொண்டு செல்ல விடாது தடுக்கின்றன. அதனால் வாசலில் உட்கார்ந்து கொள்ளும் ஒர்பெயுஸ், யாழ் எடுத்து கல்லும் கரையும் வண்ணம் சோக கானத்தை இசைக்கிறான். அவனது இசை காலனையும் கரைய வைக்கிறது. இசையினால் இளகிய ஹாடெஸ், எயுரிடிசேயை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என வரம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. ஒர்பெயுஸ் திரும்பிப் பாராமல் நடந்து செல்ல வேண்டும். அவன் மனைவி அவனைத் தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவன் மனைவி மீண்டும் எமலோகத்திற்கே திரும்பி விடுவாள். நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஒர்பெயுஸ், தனது மனைவியை கூட்டிச் செல்கிறாள். வழி நெடுகிலும், அவள் தன்னை பின்தொடர்ந்து வருகின்றாளா என்ற சந்தேகம் வருகின்றது. ஒர்பெயுஸ் பூலோகத்தை வந்தடையும் நேரத்தில், சந்தேகம் வலுக்கவே திரும்பிப் பார்க்கிறான். அந்த நிமிடமே எயுரிடிசே மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் சென்று விடுகிறாள். கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் மனைவியின் உயிரை மீட்டு வந்து பறிகொடுத்த ஒர்பெயுஸ், எமலோகம் சென்று திரும்பிய அனுபவத்தை பாடி பொழுதைப் போக்கினான். கிரேக்க மக்கள் மத்தியில் ஒர்பெயுஸ் - எயுரிடிசே கதை காலத்தால் அழியாத காவியமாகி விட்டது.


"சத்தியவான்-சாவித்திரி-எமதர்மன்" கதை, வட இந்தியர்களுடையது. வட இந்தியர்களும், ஈரானியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஐரோப்பிய இனமான கிரேக்கர்களுக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒரே மாதிரியான புராணக் கதைகளை கேள்விப்பட முடிகின்றது. இந்த மக்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், சில பாரம்பரிய பிணைப்புகள் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது நவீன கால தேசியவாத கற்பிதங்களை தகர்க்கின்றது. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு மொழிகளை பேசி வருகின்றனர். அது தான் உலக நியதி.


இந்து மத கடவுளரும், இந்திய புராணக் கதைகளும், அசுரர்கள் பற்றிய கதைகளும், சமஸ்கிருதத்திற்கு முந்திய புராதன இந்திய மொழியும்; ஈராக், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியிருக்கலாம் என்பதை பார்த்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தால், அதாவது இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள ஈரானுக்குள் நுழைந்தால், இதை விட ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும்.  இந்திய இந்துக்கள் எம தர்மனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிப்பதில்லை. எமனை அச்சத்திற்குரிய மரண தேவதையாக உருவகிக்கின்றனர். இது அனேகமாக, கிரேக்க கலாச்சாரத்தின் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கிரேக்கர்களின் மரண தேவதையான ஹாடெஸ், எமனைப் போன்ற பாதாள லோகத்தின் அதிபதி ஆகும். ஆனால், எம தர்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. ஈரானில், எம தர்மன்  ஒரு தேசத்தை ஸ்தாபித்த அரசனாக போற்றப் படுகிறான். ஆதி கால ஈரானிய அரசர்கள், எமனின் பெயர் வருமாறு பதவிப் பெயரை சூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஈரானியரின் புராதன தலைநகரமும் எமனின் பெயரால் சிறப்புற்று விளங்கியது. சில நேரம், கற்பனையை விட நிஜம் எம்மை ஆச்சரியக் கடலுக்குள் மூழ்கடித்து விடும். 

No comments:

Post a Comment