Monday 26 October 2020

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

 

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

"ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." (திரு விவிலியம், லூக்கா 6:20)

இங்கே குறிப்பிடப்படும் "ஆண்டவரின் இராஜ்ஜியம்" என்பது மனிதர்களால் பூமியில் உருவாக்கப்படும் புதிய அரசைக் குறித்தது. ஆனால், பிற்கால கிறிஸ்தவர்கள் அதனை "பரலோகத்தில் உள்ள ஆண்டவரின் ராஜ்ஜியம்" என்று வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார்கள்.

உலகிலேயே மிகவும் பழமையான கிறிஸ்தவர்கள் யார்? அநேகமானோர் கத்தோலிக்கர்ள் என்று பதில் சொல்வார்கள். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்றால், கிரேக்க ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களை கைகாட்டுவார்கள். ஆனால், அவை இரண்டும் தவறானவை. வரலாற்றில் முதன் முறையாக இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் படி வாழ்ந்தவர்கள் "எபியோனி" (Ebionites) என்றழைக்கப் பட்ட யூதர்கள். ஹீபுரு மொழியில் எபியோனி என்றால் ஏழைகள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றுபவர்கள் ஏழ்மையான வாழ்க்கை வாழ வேண்டுமென போதித்ததாக, எபியோனி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். உண்மையில், அது வரையில் கீழானவர்களாக இழிவு படுத்தப்பட்ட ஏழைகளை, இயேசுவின் போதனைகள் மகிமைப் படுத்தின. ஏழைகள் தமது நிலைமைக்காக வெட்கப் படத் தேவையில்லை. அவர்களே ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இயேசு போதித்தார். "ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." என்று அவர்களை உற்சாகப் படுத்தினார்.

எபியோனி கிறிஸ்தவர்களின், சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிற யூதர்கள், அவர்களை "ஏழைகள்" என்று நினைத்து பரிதாபப் பட்டார்கள். அதனால், அந்தப் பெயரே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. அந்தக் காலத்தில், "கிறிஸ்தவர்" என்ற சொல் உருவாகி இருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் எல்லோரும் "எபியோனிகள்" என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஆதி கிறிஸ்தவர்கள், ஒரு பொதுவுடைமை சமுதாயமாக வாழ்ந்தனர். பொருளாதார தேவைகளுக்காக பிறரிடம் தங்கியிராமல், தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொண்டனர். தம்மிடம் இருந்த சொத்துக்களை துறந்து, ஏழைகள் போன்று வாழ்ந்தார்கள். அது ஒரு கம்யூனிச சமுதாயமாக இருந்தது. சோவியத் யூனியன், செஞ் சீனாவில் உருவான நவீன கம்யூன் அமைப்பை பெருமளவு ஒத்திருந்தது.

லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.

எபியோனி கிறிஸ்தவர்கள் உண்மையில் யூதர்கள் ஆவர். இன்றைக்கும் யூதர்களில் ஒரு சிறு பிரிவினர், இயேசு கிறிஸ்துவை 'மேசியா'வாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தம்மை பண்டைய எபியோனிகளின் வம்சாவளியினர் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவை, யூதர்கள் ஹீபுரு மொழியில் "யேஷுவா" என்று அழைப்பார்கள். இயேசு, அவரது தந்தை ஜோசெப், தாய் மரியாள் எல்லோரும் யூதர்கள் தான். இயேசுவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். அதனை எபியோனிகளும் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், யூத பண்டிகை தினங்களை கொண்டாடினார்கள். இயேசுவை பின்பற்றி, தாமும் சுன்னத்து செய்து கொண்டார்கள். வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்களையும் அவ்வாறு வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.

அந்தக் காலத்தில், இன்றைக்கு நாங்கள் வைத்திருக்கும் விவிலிய நூல் தோன்றி இருக்கவில்லை. மார்க்கு, மாத்தேயுஸ், லூக்கா, பவுல் போன்ற பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தனித் தனியாக இருந்தன. எபியோனி கிறிஸ்தவர்கள், மாத்தேயுஸ், மார்க்கு ஆகியோரின் சுவிசேஷங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சித்தாந்த எதிரியான பவுலின் சுவிசேஷத்தை நிராகரித்தார்கள். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், "இயேசு கடவுளின் குமாரராக மரியாள் என்ற கன்னித் தாய்க்கு பிறந்தார்..." என்பதை எபியோனி கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு எல்லா மனிதர்களையும் போல, சாதாரண தாய், தந்தைக்கு மகனாக பிறந்தார் என்று நம்பினார்கள். அவர் வளர்ந்த பின்னர், ஆண்டவரால் தத்தெடுக்கப் பட்டார் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். "இயேசு மரியாள் என்ற கன்னித் தாய்க்கு மகனாக பிறந்த கதை", இகாரியுஸ் ஹீபுரு மொழியில் எழுதிய சுவிசேஷத்தை, கிரேக்க மொழியில் தவறாக மொழிபெயர்த்தமையினால் ஏற்பட்ட தவறு என்று கூறுகின்றனர்.

அப்போஸ்தலர் பவுல் இன்றைய துருக்கி நாட்டில் பிறந்தவர். கிரேக்க மொழியை தாய் மொழியாக கொண்டவர். அவர் கிறிஸ்துவின் போதனைகளை கிரேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். கிரேக்க மக்களுக்கு அதனை போதித்தார். கிறிஸ்தவராக மதம் மாறுவோர், சுன்னத்து செய்வது போன்ற யூத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்தார். அதனால், அவர் பின்னால் பெருமளவு கிரேக்க மக்கள் சேர்ந்தனர். எபியோனி கிறிஸ்தவர்களின் கொள்கைக்கு மாறாக, பணக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால், பவுலின் குழுவினருக்கு, கொரிந்தியாவில் வாழ்ந்த பெரிய வணிகர் போன்ற சில வர்த்தகர்களின் பணக் கொடை தாராளமாக கிடைத்தது.

புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.

உண்மையில் பிற்கால கிறிஸ்தவ சமூக-பொருளாதார கட்டமைப்பு பவுலின் காலத்திலேயே உருவாகி விட்டதெனலாம். பிஷப் என்ற பெயரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருக்கள் அதிகார பலம் பெறத் தொங்கியதும் அந்தக் காலத்தில் தான். அந்தியோக்கியா நகர பிஷப் இக்னாத்தியுஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது, கிறிஸ்துவின் மகிமைக்குள் வாழ்வதை பெருமையாக நினைக்க வேண்டும்...." என்றெல்லாம் எழுதி இருக்கிறார். இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என பவுல் எதிர்பார்த்தார். ஆனால், வர்க்க வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருந்த கிரேக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் என்ற சொல்லைக் கேட்டவுடன், இன்று பலர் ரஷ்யாவையும், சீனாவையும் நினைக்கும் அளவுக்கு, முதலாளித்துவம் எமது மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நடைமுறைப் படுத்த எண்ணிய கம்யூனிசம், நவீன காலத்திற்கேற்ப இயங்கியல்-பொருள்முதல்வாத கோட்பாட்டின் வழியே உருவாக்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சியில், சோஷலிச சமுதாயமும், அதன் வீழ்ச்சியில் கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பது அவர்களது தத்துவார்த்த முடிவுகள். கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே, 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி François-Noël Babeuf கம்யூனிச கொள்கையை முன்மொழிந்தார். மேலும் அன்னார்கிச அமைப்புகளின் தத்துவ ஆசிரியர்களான பகுனின், புரூடொன் போன்றோரும் கம்யூனிச சமுதாயத்தை மனித குலத்தின் விடிவுக்காக தெரிவு செய்தார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான  கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள்  வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.

No comments:

Post a Comment