Saturday 31 October 2020

கடலுக்கென்ன மூடி ...

 காற்றுக்கென்ன வேலி

கடலுக்கென்ன மூடி ...
ஒரு பாடலில் பெருங்கதையை-காப்பியத்தையே அடக்கிவிடுகிற வல்லமை அசாதாரணமானது. பாலச்சந்தர் பாடல்களை திரைப்படுத்துகையில் சற்று அதீதத்தை தோற்றுவிக்க விரும்புவார். அதிகமான ஷாட்கள் மிக்ஸிங் பல்வேறு உத்திகள் தொடங்கி பாடல்களில் பயன்படுத்தப் படுகிற பொருட்கள் வரை எல்லாமே வித்யாசமாக இருந்தாக வேண்டும் என நினைப்பார். ஒரு வகையில் பாடல் என்பது பட இயக்கத்துக்கு உள்ளே வெளியே இயங்குகிற இரட்டைத் தன்மை கொண்டது என்பதன் காரணமாக அதனை முழுவதும் தன் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயல்வாகக் கூட இருக்கலாம். எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசன் பாலச்சந்தர் கூட்டு சேர்ந்த பல பாடல்களில் பாலச்சந்தரின் மேற்சொன்ன முகாந்திரம் தெரியும்.
"அவர்கள்" படத்தில் ஒரு பாடல்..
முதல் இரண்டு வரிகளிலேயே முழு சதத்தை எட்டியிருப்பார் கண்ணதாசன்.
"காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி"
எத்தனை படமாக்கினாலும் தீராத பேரிலக்கிய வரிகள் இவை என்பது தான் நிதர்சனம். இந்த வரிகளை எடுத்து வைத்துப் பேச ஆரம்பித்தால் பல பொழுதுகள் கரைந்து போகும். அத்தனை தத்துவார்த்தம் பொதிந்த வரிகள் இவை.
"கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது"
கண்ணதாசன் தான் வாழ்ந்த காலத்தை, கொடுத்து வைத்த காலமாக மாற்றிய கவி. அவர் அள்ளித் தந்த செல்வந்தம் அத்தனை அத்தனை வரிகள்.
"அவர்கள்" படத்தில் இந்த பாடல் எந்த இடத்தில் வந்து நிற்கிறதோ அது வரையிலான கதையை கச்சித அற்புதமாய் கவிதையாக்கினார் கண்ணதாசன். மொத்தப் படமுமே இறுக்கமும் இருண்மையும் படர்ந்து நகர்வது தான். அதில் சட்டென்று ஒரு கதவை திறந்து கோடி பூக்களை கொட்டினாற் போல் இந்தப் பாடலின் சூழலின் வருகை நிகழும். இசை தோரணங்களில் புகுந்து விளையாடி இருப்பார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். ஜானகியின் குரல் குழந்தமையும் மேதமையும் ஒருங்கே தழுவி ஒலிக்க வல்ல குரல். இதில் கவனிக்க வேண்டியது குழந்தமையும் மேதமையும் உறுத்தாமல் இணைவது தான். அதனை வேறு யாராலும் நிகழ்த்தவே முடியாது எனச் சொல்லக் கூடிய அளவில் ஜானகி இந்த பாடலை எடுத்தாண்ட விதம் உலகத் தரம்.கோரஸ் என்கிற உடனொலி குரல்களுக்காக ஒரு தேசிய விருதை தரலாம் என்று கூறத் தக்க அளவில் இந்தப் பாடலின் நகர்வு முழுவதுமே கோரஸ் குரல்களால் அமைந்திருந்தது.
பெண் மன உணர்வுகளின் நுட்பமான அகழ்தலைக் கண்ணதாசன் அளவுக்கு இன்னோர் கவி எடுத்துச் சொன்னதில்லை என மெச்சத் தக்க அளவில் பல பாடல்களை உதாரணப் படுத்த முடியும். இந்தப் பாடல் மட்டுமல்ல இந்தப் படமே நாயகியை மையமாகக் கொண்டு அமைவதும் தீர்வதுமான கதை தான். அதில் நாயகியாக சுஜாதா ஒப்பில்லா நடிப்பை வழங்கினார். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியுமே எந்தச் சமரசமும் இல்லாமல் தன்னை அரிந்து எடுத்தெழுதிய வரிகள் என்றால் அது மிகையல்ல.
"நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும் போது
காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது
ஆசைக்கென்ன தட்டுப்பாடு"
மெல்லிசை மன்னர் உற்சாக வெள்ளத்தை கட்டில்லா மெட்டொன்றை கட்டமைத்து தர அன்னை பொறுமையோடு பாடலை உருக்கொடுத்தார் கண்ணதாசன். கையில் இருக்கிற இனிப்பை ஒட்டுமொத்தமாய் தன் பிள்ளைக்கு தந்துவிடாமல் முதலில் கொஞ்சம் பிறகு கொஞ்சம், அதன் பின் மீதம் என்று பல துண்டங்களாய் தன் அன்பை பகுத்து தருகிற தாய்மை தன் கையில் ஒட்டியிருக்கும் கடைசி துணுக்கையும் தான் கொள்ளாமல் தன் குழந்தைக்கே தந்துவிடுகிற பேரன்பு ஈட்டித் தருகிற அனுபவ-பரவச-உணர்வெழுச்சியை இத்தனை அழகாக பாடலில் கொண்டு வருவதென்ன எளிய காரியமா..? விஸ்வநாதனின் இசை குழந்தையாய் ததும்ப கண்ணதாசனின் மொழி தாய்மையாய் கசிந்தது இந்தப் பாடலின் பெருஞ்சிறப்பு.
"தேர் கொண்டுவா தென்றலே
இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா சொந்தமே
இன்று தான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்
பேசி பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில் போனேன்
குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்"
இந்தப் படத்தின் கதையை இத்தனை சுருக்கமும் செறிவுமாய் இன்னொருவரால் சொல்லவே இயலாது என்று பந்தயமே கட்டலாம். இதில் தெறிக்கிற பண்ணழகை என்ன சொல்லி வியந்தொலிக்க..? சீர் கொண்டு வா என்பதற்கு அடுத்த சொல்லாக சொந்தமே என்ற ஒரு சொல்லின் வருகைக்கு மாற்றாக வேறு எதை இட்டாலும் அது சரிவராது என்பது வியக்கத்தக்கது. இந்த பாடலின் கடைசி வரி, கதைசொல்லும் ஞானவாக்கியம் என்பது தகும்!
..ஆத்மார்த்தி

No comments:

Post a Comment