Tuesday 19 March 2024

இசை உலகின் மாமா கே.வி. மகாதேவன்

              தேன் தமிழ் ஓசை வழங்கும் இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி: 

திரைப்பட இசைத்துறையில் பிரபல்யமான இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர்கள் இவர்களைப்பற்றி சிலாகிக்கும் ஓர் நிகழ்ச்சியாக இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றோம்! 

இன்றைய இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சியில் இடம்பெறுவது, இசை உலகில் மாமா என்று செல்லமாக அழைழைக்கப்படும் கே.வி. மகாதேவன். எழுத்துருவாக்கம் பேசாலைதாஸ், குரல் வடிவம் உங்கள் அபிமான அனுஷியா!

1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன், தனது 24-வது வயதில், 1942-ம் ஆண்டு, திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்தார் இவர். ‘மனோன்மணி’ என்கிற படத்துக்கு ஒரேயொரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில், இவர் இசையமைத்த பாடல் தனித்துத் தெரிந்தது.

கர்நாடக சங்கீதம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. ஆனால், தன் இசையால் கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தினார் கே.வி.மகாதேவன். எளிய மனிதர்களுக்கும் கொண்டு சேர்த்தார். இன்னும் சொல்லப் போனால், எந்தவிதமான பாடலாக இருந்தாலும், அங்கே கர்நாடக சங்கீத பாணியை மெல்லிய இழைபோல் பாட்டு முழுவதும் விரவவிட்டிருப்பார் மகாதேவன். ஒருகட்டத்தில், ‘இது கே.வி.மகாதேவன் பாணி’ என்றே ஆனது.
நிலவோடு வான் முகில் விளையாடுதே’ என்ற பாடல், முழுக்க முழுக்க இசை ஞானம் அறிந்தவர்களால் கூட சுலபமாகப் பாடமுடியாது. ஆனால், கிராமத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, இந்தப் பாட்டுப்புத்தகத்தை வாங்கிவைத்துக் கொண்டு, அச்சுஅசல் அதே ஏற்ற இறக்கங்களுடன் பாடினார்கள். அதற்குக் காரணம்... கே.வி.மகாதேவனின் கர்நாடக இசை. இன்னொரு காரணம். அந்த இசையை எல்லோர்க்குமாகக் கொண்டு சேர்த்த ஸ்டைல்!
முக்தா சீனிவாசனின் ‘முதலாளி’ படத்தில், ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே. நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’ என்ற பாடல், நகர்ப்புற மக்களாலும் பட்டிதொட்டி கிராம மக்களாலும் ரசிக்கப்பட்டது. முணுமுணுக்கப்பட்டது. ஒருபக்கம் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தன் படங்களுக்கு திரை இசைத் திலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அதேபோல், பி.ஆர்.பந்துலுவும் தன் படங்களுக்கு மகாதேவனின் பாடல்களும் இசையும் மிக அவசியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். தொடர்ந்து பயன்படுத்தினார்.
கே.வி.மகாதேவனின், காதல் பாடல்கள் பலாச்சுளை. சோகப்பாடல்கள் வீணையின் இதம். உற்சாகப் பாடல்கள், தபேலாவின் வேகம். தத்துவப் பாடல்கள் புல்லாங்குழலின் மென்மை. இப்படித்தான், கே.வி.மகாதேவனின் பாடல்கள், ஹிட்டடித்தன. ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்று உருகவைப்பார். ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்று கிறங்கடிப்பார். ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி’ என்றும் ‘பறவைகள் பலவிதம்’ என்றும் ‘கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்’ என்றும் ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன், பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார்.
’நலந்தானா நலந்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல், இன்றைக்கும் காதலர்கள் குசலம் விசாரித்துக்கொள்கிற பாடல். பேரறிஞர் அண்ணாவே வியந்து மகிழ்ந்து நெகிழ்ந்த பாடல். இவர்தான் ‘எலந்தபயம்’ பாடலையும் இசைத்து மிகப்பெரிய ஹிட்டாக்கினார் என்றால் நம்பவே மாட்டார்கள்.
தேவர் பிலிம்ஸ் தன் படங்களில், தொடர்ந்து கே.வி.மகாதேவனின் இசையையே பயன்படுத்திக் கொண்டது. படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுக்கிற மேஜிக், மாமா என்று அன்புடன் அழைக்கப்படுகிற கே.வி.மகாதேவனு க்கே உரிய ஸ்டைல்! ‘ஏதோ ஏதோ ஏதோவொரு மயக்கம், அது எப்படி எப்படி வந்தது எனக்கும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான்கு நிமிடத்துக்கு நாம் மயங்கிச் சுதாரிப்போம். ’திருமணமாம் திருமணமாம் ஊரெங்கும் திருமணமாம்’ என்ற பாடல், கல்யாண ஊர்வலத்தில் நம்மையும் ஒருவராக அழைத்துச் செல்லும்.
குரலால் தனித்துவம் மிக்க பாடகியாக மிகப்பெரிய பேரெடுத்த எல்.ஆர்.ஈஸ்வரியை அறிமுகப்படுத்தினார் கே.வி.மகாதேவன். ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்று மெல்லிசை மன்னரின் இசையில் முதன்முதலாகப் பாடினாலும் எஸ்பி.பி-யின் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலும் இசையும் மிகப்பெரிய கவனம் பெற்றது. அந்தப் பாடலின் நடுவே வருகிற ஒவ்வொரு இசையும் நம்மைத் துள்ளாடச் செய்யும். வரிகளும் இசையுமாக வந்து மனதை தள்ளாடச் செய்யும்.
இசையின் மகத்துவங்களை அறிந்த கே.வி.மகாதேவனின் முக்கியமான ஸ்டைல்... சைலண்ட். அதாவது மெளனம். பாடல் வந்துகொண்டிருக்கும். இசையும் வரிகளுமாகக் கலந்து கைகோத்து நம்மை என்னவோ செய்துகொண்டிருக்கும். 'என்னதான் ரகசியமோ இதயத்திலே/ நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள்... நடுநடுவே இசையே இல்லாமல் வரிகள் மட்டும் வந்து பச்சக்கென்று இன்னும் பாடலுடன் உறவாடத் தொடங்குவோம்.
அன்னத்தைத் தொட்ட கைகளிலே மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று பாடிக்கொண்டே இருக்கும்போது, ’உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர்போனாலும் தரமாட்டேன்... உயிர் போனாலும் தரமாட்டேன்’ என்று சொல்லும்போது இசையை மெளனமாக்கி, வார்த்தைகளை கனமாக்கி காதலுக்குள் மூழ்கடித்துவிடுவார் கே.வி.மகாதேவன்.
ஜெயலலிதா பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ’’ஜெயலலிதா குரலில் ஒரு மேஜிக் இருக்கு. அதனால இந்தப் பாட்டை அவங்களே பாடட்டும்’’ என்று எம்ஜிஆரிடம் சொல்ல, எம்ஜிஆரும் சம்மதம் தெரிவிக்க, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார் ஜெயலலிதா.
நாற்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிய மகாதேவன் மாமாவின் இசைப்பயணம் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தது. 1967-ம் ஆண்டில், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான்!
இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பல படங்கள் இசையை மையமாகக் கொண்டும் கலைக்கு முக்கியத்துவம் கொண்டும் உருவாக்கப்பட்டன. அப்படி அவர் உருவாக்கிய ‘சங்கராபரணம்’ படத்துக்கு கே.வி.மகாதேவனே இசையமைத்தார். தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழகத்திலும் தெலுங்கு மொழியிலேயே வந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்தப் படம். இந்தப் படத்தின் பாடலைப் பாடாத இசைக்கச்சேரிக்காரர்களே இல்லை. இந்தப் படத்துக்காக எஸ்பி.பி-க்கு சிறந்த பாடகர் விருதும் கே.வி.மகாதேவனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தன.
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...’ என்ற பாடலும் ‘மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக் கையைத் தொட்டு அள்ளியள்ளி அணைக்கத்தாவினேன்... நீயும் அச்சத்தோடு விலகி ஓடினாய்’ என்பதுமான எத்தனையோ ஆயிரமாயிரம் முத்துமுத்தான பாடல்களைக் கொடுத்த திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், கர்நாடக சங்கீதம் எனும் முரட்டுக்குழந்தைக்குத் திலகமிட்டு, பூச்சூட்டி, மெல்லிசையாக்கி அழகுபார்த்த செல்ல மாமா!
1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன். நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிற, போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற, கொண்டாடிக்கொண்டே இருக்கிற மகா இசைமேதை மகாதேவனின் 106-வது பிறந்தநாள் இன்று!
மகாதேவன் எனும் இசை மாமாவைக் கொண்டாடுவோம்! மீண்டும் மற்றுமொரு இன்னிசைப்பாடகன் நிகச்சி வழியாக உங்களை சந்திப்போம் நேயர்களே! அதுவரை எழுத்துர்வாகம் கொடுத்த பேசாலைதாஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி விடை பெறுவது உங்கள் அபிமான அனுஷியா

Friday 1 March 2024

சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்!

தேன் தமிழ் ஓசை வழங்கும் இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி! நேயர்களே, இன்னிசைப்பாடகன் நிகழ்ச்சி ஊடாக நாம் செவ்விதழ் இசைத்தமிழிலே பிரபல்யமான இசை அமைப்பாளர்க;, பாடலாசிரியர்கள், பாடகர்களைப்பற்றி அவ்,வப்போது சிலாகித்து வருகின்றோம்; அந்த வரிசையில் இன்று இடம் பெறுபவர், சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்! பிரதி ஆக்கம் பேசாலைதாஸ், தொகுத்து வழங்குபவர் உங்கள் அபிமான அனுசியா!


சில குரல்கள், எல்லோருக்கும் பிடித்தமான குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா இசையமைப்பாளர்களுக்கும் விருப்பமான குரலாக அமைந்திருக்கும். அப்படி, இசையமைப்பாளர்களின் உணர்வுக்குத் தக்க குரல் கிடைத்துவிட்டால், நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்!

அப்பா மிகப்பெரிய இசைக்கலைஞர். கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவர். ஆனாலும் எளிமையாகத்தான் வாழ்ந்தார்கள். மகனையும் மிக மிக எளிமையாகவே வளர்த்தார்கள்.
பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னைக்கு வந்தார் ஜெயச்சந்திரன். டிகிரி கையில் இருந்தது. மிருதங்கம் பக்கத்திலேயே இருந்தது. ஆனாலும் தனக்குள் இரண்டறக் கலந்திருந்த குரலின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது அவருக்கு!
1965-ம் ஆண்டு, போருக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மெய்யுருகப் பாடினார். இந்தப் பாடலை இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்பட்டவரும் இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமான ஏ.வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு இருவரும் கேட்டார்கள். உடனே ஜெயச்சந்திரனை அழைத்து கைகுலுக்கினார்கள். தோள் தட்டிப் பாராட்டினார்கள். ’குஞ்சாலி மரக்கார்’ எனும் படத்துக்கு பாடவைத்தார்கள். இதுவே அவருக்கு முதல் படம்; முதல் பாட்டு! ஆனால், இதையடுத்துக் கிடைத்த வாய்ப்பு, முதல் படமாக, முதல் பாடலாக அமைந்தது. ’களித்தோழன்’ படத்தில் ஜெயச்சந்திரனின் பாடல் ஒலித்தது. குரலில் கட்டுண்டுபோனார்கள் கேரள ரசிகர்கள்.
மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும் ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும் ‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்.
கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார். புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.
பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த ‘ஒருதலை ராகம்’ படத்திலேயே, ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம். அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று ‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.
‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல். ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல். ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார். ’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
குரலில் இன்னமும் அதே குழைவு. இப்போது உடலையும் கட்டுமஸ்தாக, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
மாயக்குரலால் வசீகரித்த ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒரு இரவு வேளையில், கேட்டுப்பாருங்கள். மறுநாள்... ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ என்று யாராவது நம்மிடம் கேட்டால்... அதற்கு, ‘ஜெயச்சந்திரன் பாட்டுகள்தான்’ என்று பதில் சொல்லுவோம். அப்படியொரு ஆனந்தமான குரல் அவருக்கு. நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிற குரல் ஜெயச்சந்திரனுடையது! சரி நேயர்களே மற்றுமொரு இசைப்பாடகன் நிகழ்ச்சியிலே சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அபிமான அனுசியா