Monday 29 November 2021

பாட்டும் பதமும்

பாட்டும் பதமும்

பாட்டும் பதமும் என்ற இந்த நிகழ்ச்சி ஊடாக, சினிமா பாடல்களில் உள்ளடங்கும் சின்ன சின்ன விடயங்களை இசைச்சங்கதிகளை தொகுத்து வழங்க இருக்கின்றோம் தேன் தமிழ் ஓசைக்காக தொகுத்து வழங்குபவர் பேசாலைதாஸ்

நிகழ்ச்சியில் அடுத்து வரும் பாடல் காதல் நிலவே கண்மனி ராதா நிம்மதியாக தூங்கு! என்ற பாடல் இது 1965 இல் வெளிவந்த ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்,, பாடியவர் ஶ்ரீனிவாசன், பாடல் வரிகள் கண்ணதாசன் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

அடுத்து வரும் பாடல் தாமரை கண்ணங்கள் தேன் மலர் கிண்ணங்கள்,,,பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா குரலில் என்றும் ரீங்காரமிடும் காதல் பாடல். படத்தில் நாகேஷூக்கும், ஜெயந்திக்கும் உள்ள கனவு டூயட் பாடல். படம் முழுவதும் வேஷ்டி சட்டையில் வரும் நாகேஷூக்கு, இந்த பாடலில் மட்டும் கோட்டும் சூட்டும் கொடுத்திருப்பார் பாலசந்தர். ஆரம்ப இசையே வயலின், குழல், அக்கார்டியன், பியானோ என்று அசத்தி இருப்பார் வி.குமார்.பாடல் முழவதுமே வேகமாகவும், துள்ளலாகவும் மெட்டும், இசையும் தந்து கடைசிவரை நம்மை இனிமையில் கட்டிப்போடும் அபூர்வ இசை அமைப்பு. “மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது கைகளை மன்னித் தேன்”  வழக்கம்போலவே வாலி வார்த்தைகளில் கவிதையையும், இளமையையும் கலந்து கொடுத்திருப்பார். படம்: எதிர்நீச்சல் இசை: வி.குமார் வரிகள்: வாலி குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா

“தாமரைப் பூ குளத்திலே  சாயங்கால பொழுதிலே” பாடல் 76 , 1950 களில் மெல்லிசைப்பாங்கை முன்னிறுத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் டி.ஜி.லிங்கப்பா. அவரது இசை மேதைமைக்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்.எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில் இயல்பு குன்றாத காதல் உணர்வை மெல்லிசையின் இனிமையில் கொடுத்திருப்பார். தயாரிப்பாளர்களுடன் சமரசம் செய்து கொள்ள முடியாததால் லிங்கப்பாவால் தமிழில் நிலைக்க முடியவில்லை. பி.ஆர் .பந்துலுவால் கன்னடப்படங்களில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ் சினிமா ஒரு மாபெரும் இசையமைப்பாளரின் இசையை இழந்தது. எளிய வரிகளில் நாட்டியமாடும் கவிதை…அது என்றும் இனிமை… “மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே பள்ளம் போட வந்தானே பரிசு ஒண்ணு தந்தானே” படம: முரடன் முத்து இசை: டி.ஜி.லிங்கப்பா வரிகள்: கண்ணதாசன் குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா

அடுத்து வரும் பாடல், “தை பொங்கலும் வந்தது” மகாநதி படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுத கமலும் ரா.கி.ரங்கராஜ னும் இணைந்து வசனம் எழுதி சந்தானபாரதி இயக்கினார்.படத்தின் மிகப் பெரிய பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி நமக்குள் இசைவழியே கடத்தியிருந்தார் இளையராஜா. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாடல் தொட்டு ‘தை பொங்கலும் வந்தது’ பாடல் வரை பாடல்களிலும் பின்னணியிலும் கதையின் உணர்வுகளைக் குலைக்காமல், அதேசமயம் அதை இன்னும் மிக கனமாக நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார் இசைஞானி.காவிரி கரையின் செழிப்பையும், பசுமையையும் காட்சியாக காமிரா படம் பிடிக்க, மண்ணின் மனம் கமழும் மங்கல கருவிகளோடு இசையாக படம் பிடித்திருப்பார் ராஜா… பொங்கல் என்றாலே கமல், இளையராஜா கூட்டணியின் ’தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’ பாடல் என்றாகிவிட்டது. படம்:மகா நதி இசை: இளையராஜா குரல்: K.S.சித்ரா வரிகள்: வாலி

தை மாத மேகம் அது தரையில் ஆடுது-பாடல், ஒரு பாடல் என்பது எவ்வளவு தூரம் மனதை சாந்தப் படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம். இப்படத்தில் வந்த “தேவன் வந்தான் தேவன் வந்தான்” பாடல் மத நல்லிணக்கத்துக்கான தேசிய விருதைக் கவியரசருக்குப் பெற்றுத் தந்தது… இதில் பத்மினி அம்மா மூன்று திருடர்கள் நடுவில், அவர்களால் கடத்தி வரப்பட்ட குழந்தையைப் பேணிக் காக்கும் ஆயாவாக அற்புதமாக நடித்திருப்பார். அந்தக் குழந்தைக்காக அவர் பாடும் இந்த பாடல், சுசீலாம்மா பாடிய தெய்வீக ராகம்… துவக்க ஹம்மிங்கிலேயே நம்மையும் குழந்தையாக்கி விடுவார் சுசீலாம்மா பாடலுக்கும் மற்றவர்கள் பாடலுக்கும் உள்ள பெரிய வேறுபாடே அவர் சொற்களுக்கு அழகூட்டும் இனிமை. தாளத்தையும், சுருதியையும் விட்டு விலகாமல் எந்த இடத்தில் சங்கதியை பரிமாற வேண்டும், எங்கே ஆலாபனை செய்ய வேண்டும் எங்கே குரலை ஏற்றி அதை எப்படி பிசிறில்லாமல் கீழே இறக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். அது சொல்லித்தந்து வருவதில்லை. இப்பாடலை கூர்ந்து கவனித்தால் இந்த விந்தைகளை இரசிக்கலாம். நிலவைப் பற்றி கவியரசர் பல இடங்களில் பலவிதமாகச சொல்லி இருப்பார்.இங்கு நிலவை கடவுளே ஏற்றி வைத்த குலவிளக்கு என்கிறார்…வானில் இருந்த வெண்ணிலவு நமக்காக தரையில் இறங்கி வந்து பாடுவதை கேட்போம்…

படம்: குழந்தைக்காக (1969)
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடியவர்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா”பாடல்  புரட்சித்தலைவி காப்பித்தோட்ட தொழிலாளிகளின் கைக் குழந்தைகளை மரங்களின் நிழலில் தொட்டிலில் இட்டும் தரையில் அமர்த்தியும் இப்பாடலை பாடுகிறார்.“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” சுசீலாம்மா பல்லவியின் முதல் வரியை ஆலாபனை செய்வதை கேளுங்கள்…ஆஹா! பல்லவியை பாடும்போதே நாம் தூங்கிவிடுவோம்…அதை உணர்ந்துதான் பல்லவி முடிந்து ‘அஹ அஹ அஹ ஆரிரரோ’ என்ற ஹம்மிங்கை தொடர்ந்து பாங்கோஸும் சிம்பல்ஸும் தரும் ஒரு துள்ளல் ட்ரீட். இதே ட்ரீட் முதல் சரணத்தின் முடிவிலும் உண்டு. தொடர்ந்து மாண்டலின்… வயலின்…கிளாரினெட், நாயகியின் ஆடலுக்கு ஏற்ப துணை வரும். சரணம் தொடங்கும்போது ஒரு உருளலுடன் துவங்கும் தபலாவின் தாளம், கே.வி.மகாதேவன் அவர்களின் முத்திரை. இடையிசையில் முதலில் மணியொசை போன்றதொரு ஒலி அந்த இடத்திற்கு அப்படி ஒரு பொருத்தம். ( இது என்ன இசைக்கருவி என்று தெரிந்தவர்கள் கூறவும்) தொடர்ந்து வயலின், குழல் மாயங்கள்…சுசீலாம்மா மொட்டை ஸவரம் பாடினாலே நாளெல்லாம் கேட்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு உயிரூட்டும் சங்கதிகள் அவர் பாடும்போது தேனாக, தானாக வந்து விழுகிறது. “ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்” உண்மையான வரிகள். பாடல் முடிந்தும் வெகு நேரம் நெஞ்சை தாலாட்டும் தேவதையின் கீதம்… படம்: அன்னமிட்ட கை இசை: கே.வி.மகாதேவன் வரிகள்: வாலிகுரல்: பி.சுசீலா

“எண்ணிரண்டு பதினாறு வயது”பாடல் கணக்கை கண்டு ஓடுபவர்கள்கூட சினிமா பாடல்களில் கவிஞர்கள் போட்ட கணக்குகளைப் பார்த்து மயங்கியது உண்டு. கவியரசர் கண்ணதாசனின் இந்த பாடலைக் கேட்டுவிட்டு நண்பர் ஒருவர் கவியரசரிடம், தேவிகாவிற்கு பதினாறு வயது என்று எப்படி எழுதினீர் என்று குறும்பாக கேட்டாராம். கவியரசர் சிரித்துக்கொண்டே ‘எண்ணி, இரண்டு பதினாறு வயது என்றால் முப்பத்திரண்டு வயது ஆகிறது அல்லவா!’ என்றாராம். சிவாஜி தன் காதலியின் அழகை நண்பன் முத்துராமனிடம் கூறுவதாக காட்சி. டி.எம்.எஸ்ஸின் குரலில் காதலும், வாஞ்சையும் அதையும் தாண்டிய ஒரு உணர்ச்சி, அதாவது நேரில் காட்சி கொடுத்த தெய்வத்தை விவரிக்கும் பக்தனின் பரவசத்தையும் கானலாம். பாடலில் அவர் குரல் எந்தவித பின்னணி இசையின்றி ஒரு அசரீரியின் வசீகரத்தோடு ஒலிக்கும். ஆர்மோனியம் ஆரம்பத்திலும் இடையிசையிலும் அருமையாக இசைக்கப் பட்ட பாடல். வயலின், சிதார், குழலும் இசை சேர்க்கும். பாட்டுக்குத்தான் மெட்டு என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்த கே.வி.மகாதேவன், கவியரசின் வரிகளுக்கு இவ்வளவு இனிமையான மெட்டை தேர்ந்தெடுத்தது அவரது இசை ஆளுமைக்கு சான்று…

படம்: அன்னை இல்லம்
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
—————————–

என்றும் பதினாறு வயது பதினாறு-பாடல்  “வயது பதினாறு அருகில் வா வா விளையாடு…” ஒரு ஆடவனைப்பார்த்து இப்படி பாடினால் அவன் எப்படி ரியாக்ட் பன்னுவான்…காட்சியில் புரட்சித்தலைவரின் உடல் மொழிகளை பாருங்கள். உங்களுக்கும் இளமை திரும்பிவிடும். இது ஒரு ராக் அண்ட் ரோல் பாணியில் இசை அமைக்கப்பட்ட பாடல். ஜெயலலிதாவின் நடன அசைவு களும் அதேபோல்தான் இருக்கும். அக்கார்டியன், பேஸ் கிடார் மற்றும் வயலின் கொண்ட இனிய பின்னணி. தாளத்திற்கு பாங்கோஸ் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கும். சுசீலாம்மாவின் குரல் பற்றி சொல்லாமல் இந்த விமர்சனத்தை முடிக்க முடியுமா! ஆனால் இதே பாடலை ஈஸ்வரியம்மா பாடியிருந்தால் அது வேறு ஒரு சுவையாக இருந்திருக்கும். காட்சியை பார்த்தால் பாடும் குரல் எம்.ஜி.ஆர் என்று அடித்து சொல்லலாம். அப்படி ஒரு மாடுலேஷன் ஏழிசை வேந்தனுக்கே உரியது. “கன்னம் சிவந்தது எதனாலே” என்று அவன் கேட்க அவளோ, “உன் கைகள் கொடுத்த கொடையாலே” என்கிறாள். சென்ஸார் காரணமாக இதழ்கள், கைகளாக மாறி இருக்கலாம்….

இளமை துள்ளும் இனிய பாடல்.
————————-
படம்: கன்னித்தாய்
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: பஞ்சு அருணாசலம்
குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா

“வா பொன் மயிலே”

காதல் கொண்ட இளைஞன் காதலியை வர்ணித்துப்பாடும் பாடல் இது. சினிமாப் பாடல்களில் இதைத் தவிர்க்கமுடியுமா ?

பெல்ஸ், டிரம்ஸ், புல்லாங்குழல் ஆகியவை ஒரு வெஸ்டர்ன் அமைப்பில் ஒலிக்க, டிரம்ஸில் கெட்டிலில் பிரஸ் வைத்து ஒரு ஜாஸ் இசை போல ஆரம்பித்து முடிய, பாடல் ஆண்குரலில் “வா பொன்மயிலே” என்று ஆரம்பிக்கிறது.

அப்போது தபேலா சேர்ந்து கொள்ளும் போதுதான் ஆஹா இது இளையராஜா என்று பொறி தட்டுகிறது. பல்லவி இரண்டாம் முறை ஒலிக்கும் போதுதான் கிராண்ட் வயலின் குழுமம் சேர்ந்து கொண்டு வரிகளுக்குப் பதில் சொல்வது போல் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒலித்து பாடலை ரிச் ஆக்குகிறது.

முதல் பிஜிஎம்மில் வயலின் குழுமம், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை ஒலித்து முடிய சரணத்தில் தபேலா சேர்ந்து கொள்கிறது.

2ஆவது பிஜிஎம்மில் கீபோர்டு வயலின் பெல்ஸ் ஒலித்து முடிக்க 2-ஆவது சரணத்திலும் தபேலா வந்து வேறுபடுத்திக் காண்பிப்பது இளையராஜாவின் பிரதான ஸ்டைல். இதுவே MSV காலத்திலும் இருந்தது.

பாடலை எழுதியவர் மறைந்த பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலை எழுதும்போது அவருக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும், கவிதைக்கும்,காதலுக்கும் வயது ஒரு தடையில்லை அல்லவா.

அட அடா நம் கவிஞர்கள் தான் பெண்களை மானென்றும் மயிலென்றும் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தில் இவர்களுக்கு தயக்கமுமில்லை, அலுப்புமில்லை, எப்போதும் ஒருவித மயக்கம்தான்.

இங்கு வெறும் மயில் கூட இல்லை. பொன் மயில் என்று கூறுகிறார். நிறத்தைச் சொல்கிறார். நம் ஆண்களுக்குத்தான் சிவப்பு அல்லது பொன்னிறம் என்றால் பெரும் கிரக்கமயிற்றே. அதனாலல்லவா சிவப்பாக்கும் கீரிம்கள் இந்தியாவில் பெரும் வியாபாரமாக இருக்கிறது. இந்த மாயையிலிருந்து எப்போதுதான் நாம் மீளுவோமோ ?.

அதற்கடுத்த வரிகளில், கண்ணழகு, முன்னழகு தேர், கனி, இளமையின் நளினமே, இனிமையின் உருவமே என்று வர்ணித்துத் தள்ளி விடுகிறார். “இளமையின் நளினமே ” என்ற வரி சிந்திக்க வைத்து கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டது.

அடுத்த சரணத்திலும் மேனியின் மஞ்சள் நிறத்தை சிலாகித்து ஆரம்பிக்கிறார். “உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ” என்ற வரிகள் சிலிர்க்க வைக்கின்றன. எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம்.

எஸ்.பி.பியின் இளமைக்கால குரல் சொக்க வைக்கிறது. இளைஞனின் மனதை இளமைக்குரலில் வெளிப்படுத்தும்போது, இளமையுடன் இனிமையும் சேர இனிக்கிறது பாடல். எனக்கு ஒரு சந்தேகம்.


படம்: பூந்தளிர் (1979)
இசை: இளையராஜா
வரிகள்: பஞ்சு அருணாசலம்
குரல்: எஸ்.பி.பி

“மணமகளே மருமகளே வா வா” ரஜினிக்கு முதன் முதலில் சில்வர் ஜூப்ளி படம் கொடுத்தவர், நடிகர் ஜெய்சங்கருக்கு முரட்டுக்காளை படத்தின் மூலம் மறுவாழ்வு அளித்தவர், இசைஞானி இளையராஜாவை ‘அன்னக்கிளி’ படம் மூலம் திரை உலகில் அறிமுகப் படுத்தியவர், கிட்டத்தட்ட 600 படங்களுக்குக் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர், கதாசிரியர், திரைக் கதை எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குநர் என்ற திரைத்துறையில் பல அவதாரம் எடுத்த பஞ்சு அருணாசலம் அவர்களின் பேர் சொல்லும் பாடல். ரிலீஸ் நெருக்கடியில் படத்தில் ஒரு பாடல் சேர்க்க வேண்டிய சூழல். கவிஞர் ஊரில் இல்லாத சூழலில் அவசரமாக பஞ்சுவை எழுதச் செய்த ஒரு பாடல்தான் இன்றுவரை கல்யாண வீடுகளின் பேவரைட் & ஆல்டைம் ஹிட்டான ‘ மணமகளே மருமகளே வா வா’!.நிறைய பேர் அதை கண்ணதாசனின் பாடலாகவே இன்றுவரை நினைக்கின்றனர். மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில். மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது. “தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது” வறுமையையும் செழுமையாக்கி காட்டும் வரிகளில் கவிஞரின் புலமை பளிச்சிடும் பாடல்…


படம்: சாராதா (1962)
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: பஞ்சு அருணாசலம்
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி

“தென்றலுக்கு என்றும் வயது”பாடல்  இடையிசைகளில் பியானோ, வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் அமர்க்களப் படுத்தும் பால். பல்லவியில் வயலின்- டபுள் பாஸ் பின்னணியில் இனிமையான இசைக்கோர்ப்பு. ஆர்கெஸ்ட்ரேஷன் பாடலுடன் பின்னிப் பிணைந்து, பின்னணியில் ஒரு ஆட்சியே நடத்திக் கொண்டு, அதே சமயம் ஒரு முறை கூட முன்னணியில் வந்து மூக்கை நுழைக்காமல் இருக்கும். எஸ்.பி.பி யின் குரலில் அப்படி ஒரு துள்ளல். சின்ன சின்ன இடங்களையும் ரொம்ப அனுபவித்து நெளித்தும் வளைத்தும் அலங்காரப்படுத்தி பாடியிருக்கிறார் பாலு. அவ்வப்போது எட்டிப்பார்க்கும் குழல் இனிமையை வாரி தெளிக்கும். இடையிசைகளில் சிறிது வித்தியாசம் காட்டியிருப்பார் மெல்லிசை மன்னர்.

படம்: பயணம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: எஸ்.பி.பி
வரிகள்: கண்ணதாசன்

“வண்ணக்கிளி சொன்ன மொழி” காட்சி அழகு, வரிகள் அழகு, இசை அழகு, காட்சியில் மக்கள் திலகம், சரோம்மா அழகோ அழகு…..பாடல் ஆரம்பமே ஒரு பியானோ லீடுடன்… கேள்வி பதிலாக பாடல்…துவக்க இசையில் (prelude) சீரான பியானோ, டிரம்ஸ் இசை துவங்க ‘வண்ணக்கிளி’ என்று பாடகர் துவங்கிய வுடன் செமிடோன் பாணியில் கிட்டாரின் பின்சேர்ப்பு (counter) பதிலளிப்பு புதுமை. இந்தப் பாடலுக்கு உயிரூட்டியது இந்த கிட்டாரின் ஸ்வர அடுக்குகள் (CHORDS) என்றால் அது மிகையில்லை.‘புள்ளி மயில்’ அனுபல்லவிக்கு முன்னர் வரை இடையிசையை பியானோ நிறைக்க மெலிதாக நுழையும் வயலின் இதமாக வருடிக் கொடுத்து மறையும். சரணத்துக்கு முன்னர் வரும் இரண்டாம் இடையிசையைப் புல்லாங்குழல் பிரதானமாகத் துவக்கி வைக்க, வயலின் இரண்டு முறை வந்து பதில் தரும். இடையே மென்மையாக நுழையும் மேண்ட லினுக்கு, எலக்டிரிக் கிட்டார் கௌண்டர் தரும். மூன்றாவது இடையிசையில் மற்றொரு பரிமாணம். வழக்கம் போலவே பியானோவின் பின்னணியில் புல்லாங்குழல் துவங்க, வயலின் கௌண்டர்; சில நொடிகளில் ‘ஆஹா ஹா’ என்று பி.சுசிலாவின் ஹம்மிங்…அதனோடு இணைவது விசில். இம்முறை இவற்றுடன் சேர்வது கிடாரின் டாம்பிங் (damping) அடுக்குகள். ( அதாவது கிடார் கம்பிகளை மீட்டியவுடன் உள்ளங்கையால் அழுத்தி அதிர்வுகளை அடக்கும் உத்தி.) பாடல் முடிந்த பிறகு பியானோ துணையோடு கிட்டார் நம்மை ஆனந்தம் பொங்க வழியனுப்பி வைக்கும் முடிவிசையும் (postlude) உண்டு. ஒரு தவறான நரம்பில் விரல் பட்டாலும் முழுப்பாடலையும் மறுபடியும் எடுத்தாக வேண்டும். இன்றைய டிஜிட்டல் முறைப் பதிவு கிடையாது. அசாத்தியமான திறமை கொண்ட அக்கால கலைஞர்களை எப்படி பாராட்டுவது? வாலி நாயகியின் பேச்சை வண்ணக்கிளி போன்ற மொழி என்றும் அவள் தோற்ற த்தை கண் போன்ற புள்ளிகள் கொண்ட அழகுமயில் என்றும் உவமிக்கிறார். அத்திப் பழம் போன்ற கன்னம். இதை வாலி‘ அத்திப்பழக் கன்னத்திலே முத்தமிடவா?’ என்று எழுதியிருந்தாராம். பின்னர் படக்குழுவினர் இது தணிக்கையில் பிரச்சனை ஆகுமென பயமுறுத்த ‘கிள்ளிவிடவா’ என்று மாற்றினாராம். வஞ்சி மொழி என்றால் மணிமேகலை பிறந்த வஞ்சிமாநகரத்து பெண்கள் பேசும் மொழி என்றும் பொருள் கொள்ளலாம்.

படம்: தெய்வத்தாய்
இசை: எம். எஸ்.வி, ராமமூர்த்தி
குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா
வரிகள்: வாலி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்” தென்மேற்கு பருவ மழை காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடி இடங்களில் ஆடி மாதத்தில் புதுப்புனல் பொங்கிவரும். இதை ஆடிப்பெருக்கு என்று உழவர்கள் போற்றி மகிழ்ந்து, காவிரி தாயை பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இந்த படத்தின் கதைக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆனால் ஏ.எம்.ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் காவிரியின் புதுப்புனல் போல் என்றும் உவகை தருவது உண்மை. வால்ட்ஸ் இசை ஆஸ்திரிய நாட்டு பாரம்பரிய இசை ரூபம். பொதுவாக பால் ரூம் டான்ஸ் ( Ballroom dance) என்று சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சிகளில் மகிழ்வான சூழ்நிலையில் ஆண் பெண் இணைந்து ஆடும் காதல் ரசம் ததும்பும் நடனம். மேலும் கீழும் ஏறி இறங்கும் வால்ட்ஸ் இசை பெரும்பாலும் ‘1-2-3’, ‘1-2-3’ என்ற தாளத்தில் சற்று மெதுவான தாளகதியில் பியானோ இசையின் பின்னணியில் கேட்க பரவசத்தை உண்டாக்கும். இந்த பாடல் காட்சியிலும் நாயகனின் கவியாளுமைக்கு கிடைத்த வெற்றிக்கு ஒரு விழா. வால்ட்ஸ் இசையில் இளமங்கையர் நடனம். ஆனால் இங்கே பாடும், நாயகனின் முன்னாள் காதலியின் பாவத்தில் சோகமும் கோபமும். A M ராஜா, வால்ட்ஸ் இசையை இங்கே ஒரு சோகமான பாடலுக்கு பயன்படுத்தி பெரும் வெற்றி பெற்றுள்ளார். பியானோ, கிளாரினட், வயலின் இவற்றுடன் தாள லயத்திற்கு தபலாவை உபயோகித்து இருப்பது அவரது இசை ஆளுமைக்கு சான்று. மனதை நெருடும் பாடல். ஆழ்ந்த அர்த்தமுள்ள கவிதை வரிகள். சுசீலா அம்மா வின் குரல் அப்படியே காட்சிக்கு ஒன்றிப் போக, சரோஜாதேவி மற்றும் ஜெமினி யின் முக பாவங்களில் வியத்தகு நளினம்.

“அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனமாறி உறவாடுவார்
கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்
தன்னை எளிதாக விலை பேசுவார்”

சில சுயநலம் மிக்க ஆண்களின் இரட்டை வேடத்தை எளிய நடையில் இனிய மெட்டில் சாடும் பாடல்…

படம்: ஆடிப் பெருக்கு (1962)
இசை: A M ராஜா
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கே.டி.சந்தானம்

காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு,,,,,,தமிழர்களின் காதல், வீரம், மானம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சங்க காலத் தமிழர்கள் தங்கள் நாட்டு வளத்தை புகழ்வதில் எடுத்துக் காட்டாக இருந்தனர். அதிலும் காவிரி நதியை பாடாத புலவர்கள் யாருமே இல்லை என்று கூறும் அளவுக்கு சங்க இலக்கியத்தில் காவிரி ஆறு அனைவராலும் போற்றப்பட்டுள்ளது. காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரத்தில் “பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகு அசைய நடந்தாய்! வாழி காவேரி”

(சிலம்பு 7-8) என்ற பாடலில்
பூக்கள் மலிந்த சோலையில் மயில்கள் ஆடும்; குயில்கள் விரும்பி இனிதாக இசை பாடும்: விருப்பம் விளைவிக்கும் மாலைகள் அருகிலே அசையும்; இவற்றி னூடே காவிரியும் நடந்ததாகவும், காவிரி நெடுநாள் வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கவியரசு காதலர் பாட்டில் காவிரி கரையின் எழிலை புகழ்ந்து துவங்குகிறார்.
பஞ்சவர்ணக் கிளியாக எம்.ஜி.ஆரும், பழுத்து வந்த பழமாக சரோம்மாவும் காட்சியில் எழிலூட்டும் பாடல். பாடல் முழுவதும் பாடகர்களின் ஒவ்வொரு வரியையும் அக்கார்டியன் பின்னிருந்து ஒத்து ஊதுவது சிறப்பு. டி.எம்.எஸ், பல்லவியின் கடைசியில் “காவேரிக் கரையிருக்கு….” என்ற வரியை மேலிருந்து கீழ் ஸ்தாயியில் இனிமையான சங்கதியோடு முடிக்க… மேலெழும்பும் அக்கார்டியன் இசை அதை தொடரும் கிடார் ஒரு இன்ப கிளர்ச்சியை தர பின்னர் குழல், மீண்டும் பாஸ் கிடார் அதே ஸ்வரங்களை இசைக்க அதை அப்படியே வாங்கிக் கொண்டு மீண்டும் அக்கார்டியன் சரணத்திற்கு கொடு க்கும் ஒரு சின்ன லீட்…இன்பமோ இன்பம். “காவேரிக் கரையிருக்கு” என்று இரண்டாவது சரணத்திற்கு முன்பு, சுசீலாம்மா இறங்கி வரும் சங்கதியோடு முடிக்க, மீண்டும் அதே இசை ஜாலத்தில் இரண்டாவது சரணத்தை இணைத்தி ருப்பார் திரை இசைத்திலகம். காவேரிக் கரையிருக்க,கரை மேலே பூவிருக்க, பூப் போலே பெண்ணிருக்க, புரிந்து கொண்ட ஆணிருக்க, கண்ணதாசன் கவி வடிக்க, இசைத்திலகம் பின்னிசைக்க, இசைக்குயில்கள் அதை ஒலிக்கவேறென்ன வேண்டும் இறைவா செவியின்பம் உந்தன் வரம்.


படம்:தாயைக் காத்த தனயன்
இசை:கே.வி. மஹாதேவன்
குரல்:டி.எம்.எஸ்,பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

“நாளை முதல் குடிக்க மாட்டேன்”பாடல்  நீதி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாராய போதையில் இன்னொரு குடிகாரனைப் பார்த்துப் பாடும் இந்தப் பாடல் அந்த நாட்களில் மிகவும் பிரபலம் ! அந்த நாட்களில் ஒரு பாடல் பிரபலமாகவேண்டுமேன்றால், பாடல் வரிகளில் சொல்லியிருப்பது தெளி வாகப் புரியும்படி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது ! கவிஞர் கண்ணதாசனுடைய இந்தப் பாடல் வரிகள் பிடித்துப் போனதற்குக் காரணம், நாம் எல்லோருமே சாராய போதை தேவைப் படாம லேயே, எதையும் நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறவர்களாக இருப்பது தானோ என்று அவ்வப்போது தோன்றும் ! பாடலை கவிஞர் கண்ண தாசன் எழுதும் போது, ‘இன்று முதல் குடிக்க மாட்டேன்’ என்று எழுதினாராம். எம்.எஸ்.வி. அவரிடம், “எந்தக் குடிகாரனாவது இன்னை யிலேர்ந்து குடிக்க மாட்டேன்னு சொல்வானா?” என்று கேட்டாராம். தப்பை உணர்ந்த கவிஞர் உடனே ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்-சத்தியமடி தங்கம்’ என்று மாற்றி னாராம். இந்தப் பாடலில் அனுபல்லவியாக வருகிற ‘போதை வந்த போது புத்தியில்லையே, புத்தி வந்த போது நண்பரில்லையே’ என்கிற வரிகள் சிந்திக்க வைக்கிற வரிகள். அந்தப் பாடலில் வருகிற பல வைர வரிகளில் இன்னொன்று : ‘ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்’ ரெகுலர் ஆத்திகர்களை விட நாத்திகராக இருந்து ஆத்திகரானவர்கள் கடவுளிடம் கொஞ்சம் உபரி உரிமை எடுத்துக் கொள்கிறார்களோ?

படம்: நீதி
இசை: எம்.எஸ்.வி
குரல்: டி.எம்.எஸ்
வரிகள்: கண்ணதாசன்

“மயக்கம் என்ன…… இந்த மௌனம் என்ன’

உயிரோடிருக்கும் காதலிக்காக வசந்த மாளிகை கட்டி அதை தன் காதலிக்கு காட்ட அவள் பிரமிப்பு அடைய, பாடல் ஆரம்பம்.

காதல் தேனில் குழைத்த கவிதை வரிகளும், இனிமையான மெட்டும், உணர்வு பூர்வமான குரல்வளமும் நிறைந்த பாடல் இது. இணைப்பிசையில் மகாதேவன் காட்டி இருக்கும் வித்தியாசங்கள் (வெரைட்டி) குறிப்பிடத்தக்கவை.

பல்லவி முடிந்ததும் வரும் முதல் சரணத்துக்கு கொடுத்திருக்கும் இணைப்பிசைக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கோரஸ் பாடகியரைப் பயன்படுத்தி இரண்டாவது சரணத்துக்கு இணைப்பிசையை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

மூன்றாவது சரணத்துக்கோ பல்லவி முடிந்ததும் வரும் இணைப்பிசையில் கொஞ்சம், அடுத்த சரணம் முடிந்ததும் வரும் இணைப்பிசையில் கொஞ்சம் என்று எடுத்துக்கொண்டு இரண்டையும் கலந்து கொடுத்திருக்கும் இணைப்பிசை புருவங்களை உயர்த்த வைக்கிறது.

இந்தப் பாடல் காட்சியில்தான் ஸ்லோமோஷன் முறை முதல் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது என்கிறார்கள்.

“வசந்த மாளிகை” படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நடிகர் திலகத்தின் ஆருயிர் அன்னையான ராஜாமணி அம்மாள் காலமாகிவிட்டார். தாயின் மரணத்தால் படிப்பிடிப்பு தடைப் பட்டிருந்த நேரம்.

ராஜாமணி அம்மாள் மறைந்த ஐந்தாவது நாள் நடிகர் திலகத்திடம் இருந்து வசந்த மாளிகை படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு. “வீட்டில் இருந்தா அம்மாவோட நினைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாளைக்கே ஷூட்டிங் வச்சுக்கலாம். நான் வரேன்”.

அவசர அவசரமாக படப்பிடிப்பு குழுவினர் ஒன்று சேர மறுநாள் காலையில் தனது வழக்கப்படி குறித்த நேரத்தில் நடிகர் திலகமும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்.

தனது தாயார் மறைந்த சோகத்தை சற்றுக்கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடிக்க வந்த அன்று படமாக்கப்பட்ட காட்சி இந்த “மயக்கமென்ன” டூயட் பாடல் காட்சிதான்.

பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் கூட அந்த மாபெரும் கலைஞனின் ஈடுபாடு நம்மை பிரமிக்க வைக்கும். தனது சொந்த சோகத்தின் வெளிப்பாடு கடுகத்தனை அளவுகூட தெரியாத வண்ணம் அற்புதமாக இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார் சிவாஜி.
————————–
படம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
குரல்: TM சௌந்தர்ராஜன், சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”

சொல்லாத காதலின் வலியை மிக அற்புதமாகச் சொல்லிய பாடல் இது. ஜெயச்சந்திரன் மற்றும் சுசீலா… ஆண் பெண் குரல்கள் அழகாக இணைந்து வரும் பாட்டு.

ஒருவர் விட்ட இடத்தில் மற்றொருவர் தொடங்க, சாருகேசி இராகத்தில் ராஜாவின் அருமையான கற்பனை. பாடல் முடியும் பொழுது விழியோரமாய்த் துளிர்க்கும் இரு சொட்டு கண்ணீர் தான் இந்த பாடலின் அற்புதம்…

1980களில் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே
வந்திருந்தன. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் கலையரசி என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல
படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா.

இந்தப் பாடல் கவிஞர் வாலி அவர்கள் கலையுலகில் 25 ஆம் ஆண்டு பூர்த்தியான போது எழுதிய பாடல். அவர் தான், தன் முதல் பாடலைப் பாடிய சுசீலாவே இதையும் பாடவேண்டும் என்று சொல்ல, உடனே இசைஞானி அவர்கள் அதை நிறைவேற்றினார்.
நமக்கும் ஒரு இனிய பாடல் கிடைத்தது.
—————————–
படம்: நானே ராஜா… நானே மந்திரி (1985).
இசை: இளையராஜா.
வரிகள்: வாலி
குரல்: ஜெயசந்திரன் & பி. சுசீலா.

“உன் பேர் சொல்ல ஆசைதான்”

உவமை மற்றும் உவமிக்கப் படும் பொருள் இரண்டையும் சந்தத்தில் பொருத்தி ஓரிரு வரிகளில் அடக்கிவிடும் ஆற்றல் பெற்றவர் கவிஞர் நா.முத்துக்குமார்.

இந்த பாணியை இவர் காதல் பாடல்கள் முழுவதிலும் காணலாம்..

“நாணம் வந்து மேகம் கொண்டு
மூடும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும்
மூடும் அழகென்ன”

கே.எஸ்.ரவிகுமாா் அவா்கள் தளபதி விஜய் அவா்களுடன் கைகோா்த்த முதல் திரைப்படம் மின்சார கண்ணா.( கடைசி படமும் இதுதான் என்று நினைக்கிறேன்)

விஜய் அவா்களுக்கு ஜோடியாக நடிக்க இயக்குநா் முதலில் அணுகியது நடிகை சிம்ரன் அவா்கள் என்றும்,
ஆனால் இப்படத்தில் நடிகை குஷ்பு அளவிற்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இல்லை என்று சிம்ரன் நடிக்க மறுத்து விட்டதாக கேள்வி.

பின்னா் இந்த ஹீரோயின் கதாபாத்திரம் போஜ்புரி மொழி நடிகையான மோனிகா கேஸ்டலினோ என்ற புதுமுத்திற்கு கிடைத்தது.

பிரம்மனை கஞ்சன் வள்ளல் என்று ஒரு பாடலில் வித்தியாசமாக வர்ணித்திருப்பார் கவிஞர் வைரமுத்து…

இங்கே அதை அடுத்த எல்லையில் தூக்கி வைக்கிறார் முத்துக்குமார்.

“பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னைப் படைத்ததாலே”என்று.

பாடலின் வார்த்தைகளின் பொருளுக்குத் தகுந்தாற்போல குரலை ஏற்றியும், இறக்கியும் பாடும் ஹரிஹரன் குரலோடு சுஜாதாவின் குரல் இணைந்து கொடுத்த இனிய மெலடி இது.

ஆரம்பத்தில் சிதார் இசையுடன் ஷெனாய் ஒலி போன்ற இசைக்கலவையுடன் மென்மையாக பல்லவி தொடங்கும். முதல் இடையிசையில் கம்பி வாத்தியங்கள் இனிய இசை எழுப்ப கூடவே காதலர்களின் ஹம்மிங், அதை முடித்து வைக்கும் குழலோசை என்று வித்தியாசமான பின்னணியை கொடுத்திருப்பார் தேவா.

இரண்டாவது நிரவல் இசையில் கோரஸ் குரல்கள், கம்பி இசை தொடரும் குழல் என்று மாற்றி இருப்பார். சரணங்களின் நடுவே ஒரு சின்ன stick play வருவது துள்ளல் இசை.

காட்சி, பனிமலை, பசும் புல்வெளிகள் என்று அழகான சூழலில் வெளிநாட்டில் கண்ணுக்கு விருந்தாக படமாக்கப் பட்டிருக்கும்.

தேவாவின் சிறந்த பாடல்களில் ஒன்று.
————————–
படம்: மின்சார கண்ணா
இசை: தேவா
குரல்: ஹரிஹரன், சுஜாதா மோகன்
வரிகள்: நா.முத்துக்குமார்

“என்ன பார்வை உந்தன் பார்வை”

தமிழ்த்துறையில் அதுவரை ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த காமிராவை, சுற்றிச் சுற்றி பல புதுமையான கோணங்களில் படமெடுத்து கதை சொல்ல வைத்தவர் இயக்குநர் ஸ்ரீதர்.

இந்தப் பாடலின் கடைசியில்,
காஞ்சனா நடனமாடுவதை காரின் முன்புற கண்ணாடியுனூடே படமெடுக்கும் காமிரா, காரில் உட்கார்ந்து ரசிக்கும் முத்துராமனையும் Rear view mirrorல் காட்டும்.

பாட்டு முடிந்ததும் காரில் இருவரும் கிளம்புவார்கள். அப்போது ஓபனில் இருக்கும் கார், கொஞ்சம் கொஞ்சமாக டாப் பகுதி மூடிக்கொண்டே வரும். அந்த காலகட்டத்தில் ரசிகர்களை வாய் பிளந்து ரசிக்க வைத்த காட்சி இது.

காதல் ஜோடிகளை, சிங்கார சென்னையின் பின்னணியுலும், ஆழியாறு அணைப்பகுதியிலும் ரம்மியமாக காட்டியிருப்பார் ஸ்ரீதர்.

முகப்பிசையில் பியானோ கட்டைகளில் விரல்கள் தவழ்வதுபோல, காஞ்சனா படிகட்டுகளில் மேலும் கீழும் தத்தி தத்தி ஆடுவார்.

சுசீலாம்மா குரல் பாவம்…
“மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா….ஆ..”
குரலிலேயே காதலின் பரவசத்தை பகிர்ந்துவிடும் அதிசய குரல்.
இணைந்து பாடும் ஜேசுதாஸ் தன கந்தர்வ குரலால் தமிழர்களை வசீகரிக்க தொடங்கிய கால கட்டம் அது. ஐம்பதாண்டுகள் கடந்தும் அதன் மாயம் அகலவில்லை.

மெல்லிசை மன்னர்களின் பியானோ, வயலின், கிடார் மற்றும் ஆஸ்தான பாங்கோஸ் நம் நெஞ்சைத் தொட்டு கொஞ்சும் சுகம் அம்மம்மா!
—————————–
படம் : காதலிக்க நேரமில்லை
இசை : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
குரல் : ஜேசுதாஸ், சுசீலா
பாடல் : கண்ணதாசன்

“எந்தன் பருவத்தின் கேள்விக்கு”

“எந்தன் பருவத்தின் கேள்விக்கு” என்று ரேடியோவில் கேட்ட பாடல், திரைப்படத்தில் “எந்தன் பார்வையின் கேள்விக்கு” என்று மாற்றப் பட்டிருக்கும். பருவம் என்ற சொல்லே கெட்ட வார்த்தையாய் உலவிய காலம் அது.

குமுதம் பத்திரிகையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ரா.கி.ரங்கராஜனின் ‘இது சத்தியம்’ என்ற கதை ‘சுமைதாங்கி’ என்னும் திரைப்படமாக வெளியானது. அதில் ஜெமினி , தேவிகா ஆடிப்பாடுவதாக வரும் பாடலிது. வெளிவந்த காலத்தில் இளம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு இன்றும் காலத்தால அழியாத பாடல்களில் ஒன்றாக விளங்கும் பாடல்.

இப்பாடலில் மிகவும் பரவசமான அம்சம், பாடலின் ஆரம்பக் காட்சியில் சில கணங்கள் ஜெமினியும், தேவிகாவும் பார்வையாலேயே பல்வேறு உணர்வுகளுடன் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுப் பதிலும் கூறுவார்கள்.

பாடலின் கூறுபொருளும் அதுவே. அதனையே ஆரம்பத்தில் பாடல் தொடங்குவதற்கு முன் அமைத்த இயக்குநர் ஶ்ரீதரின் ரசனை போற்றத் தகுந்த ஒன்று.

கேட்பதற்கு இனிமையான, எளிமையான சொற்களில் காதலர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய பாடல்.

“காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா” என்று கேட்டார் வைரமுத்து.

“உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா” என்று காதலி சார்பில் அப்போதே பதில் தந்துவிட்டார் கண்ணதாசன்.

“நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம்
ஏனடி ராதா” என்ற காதலனின் புரட்சிகரமான கேள்விக்கு

“அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா” என்ற ஆணித்தரமான பதிலையும் வைக்கிறார் கவிஞர். ஊருக்குத் தெரியாமல் வைக்கும் உறவில் பலியாவது அப்பாவி பெண்ணினம்தானே!

“ராதா .. ராதா .. ராதா” என்று அழைக்கும் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் உண்மைக் காதலின் பாவத்தை உணரலாம். ஆனால் அதற்கு பதிலாக ஜானகி அம்மாவின் “ராஜா.. ராஜா.. ஓ ராஜா…” என்ற விளி… அது ஆன்மாவை உருக்கும் குரல்..

பாடல் முழுதுமே இந்த இணை குரல்கள் செய்யும் ஜாலம்…அதை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. கேட்டு அனுபவிப்பது நாம் பெற்ற இன்பம்.

——————————
படம்: சுமைதாங்கி
இசை: எம்எஸ்வி, ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி

சிரித்தாள் தங்க பதுமை”பாடல் 63

அடடா அடடா என்ன இனிமை என்று சொக்க வைக்கும் பாடல்.

வழக்கம்போல் கனவு காட்சி. புரட்சி தலைவி கனவு காணுகிறார். கனவில் ‘ஆசைக்கனவு’ என்ற பெட்டியில் இருந்து தலைவியும் ‘இன்ப உலகம்’ என்ற பெட்டியில் இருந்து (புரட்சி) தலைவரும் வெளியே வர, அப்புறம் என்ன…

மனதை, பதுமை, புதுமை… மூன்றே எழுத்து வார்த்தைகள். ஆனால் இசையரசி அதை பாடும்போது உட்புகுத்தும் சங்கதிகளை கேளுங்கள். முழு பாடலுக்கும் இவை சின்ன சாம்பிள் எனலாம்.

டி.எம்.எஸ் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு பாடும்போது லேசான நேசல் ( Nasal) குரலில் அலட்டி கொள்ளாமல் பாடினாலும் அந்த குரலில் சொட்டும் காதல் ரசம்…அதிசய மாடுலேஷன்.

பின்னணி இசையில் எம்.எஸ்.வி, அக்கார்டியன், சிதார், குழல் மற்றும் வீணை இவற்றை பயன்படுத்தி அருமையான பின்னணி இசையை தந்துள்ளார்.

பாடிய குரல்களின் இனிமை, இசையமைத்தவரின் திறமை, இவற்றையும் மீறி பாடல் வரிகள் ஒரு படி மேலோங்கி நிற்பதாகவே தோன்றுகிறது .
———————
படம்: கண்ணன் என் காதலன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்: T M S, P சுசீலா
பாடல்: ஆலங்குடி சோமு

“நீலநயனங்களில் ஒரு நீண்ட”

மெல்லிசைமன்னரின் மெலடி திருப்பங்கள், அவர் இயல்பாகவே கொடுக்கும் பங்க்சுவேஷன்கள் என்று எத்தனை முறை கேட்டாலும் புதிய கோணத்தில் ரசிக்க வைக்கும் பாடல்.

பியானோ, வயலின், குழல் என அமர்க்களத்துடன் பாடல் தொடங்குகிறது.

நீல ந.ய..ன..ங்..களில்
ஒரு நீ ஈ ஈ ஈ ண்ட கனவு வந்தது

என்ற அழ்கான வரியைத்
தொடரும் ஒரு ‘ஹார்ப்” நம்மை ஒரு கனவுலகுக்கே அழைத்துச்சென்று நிறுத்துகிறது.

“கைவளை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட ”

என்ற வரியில் மன்னர் கொடுக்கும் GLIDE DOWN – ஆஹா !

கனவில் சஞ்சரிக்க மீண்டும் ஹார்ப் !

தொடர்வது அனுபல்லவி :

“கனவு ஏன் வந்தது
………………………..”

என மன்னர் கொடுக்கும் வரியில் கேள்வி பாவம் அழகாக தொக்கி நிற்க, மயங்கி நின்ற நம்மை திரும்பிக் கேட்கிறார் மன்னர்,

“கனவு ஏஏஏஏஏன் வந்தது” .

அதுவும், “கனவு” என்ற வார்த்தையின் “க” வை எடுக்கும் இடத்தைப் பாருங்கள் !! என்ன ஒரு பஞ்ச் !

மனதைவருடும் இடையிசையைத்தொடருவது சரணம் 1 :

“பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
பக்கம் நின்றாடுமோ ஓ ஓ ஓ”

இந்த வரியில் “ப”(ச்சை) வை எடுக்கும் இடம்
அந்த வரியின் GLIDE DOWN –

கனவு விமானத்தில் கீழ் நோக்கி மிதக்கும் அனுபவம் !

“பக்கம் நின்றாடுமோ ஓ ஓ” வரியில் “மோ ஓ ஓ” வில் அவர்
தரும் சிறு ஸ்கேல் மாற்றம் ! – ‘கர்நாடக’ இசை வித்தகர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்து ஆனால் மயங்கி ரசிக்க, நாமோ மகிழ்ச்சியில் கிறங்குகிறோம் !!

தொடர்ந்து,

“அந்த நாள் என்பது
கனவில் நான் கண்டது
அந்த நாஆ ஆ ள் என்பது…….

என்ன ஒரு அழ்கான “நா ஆ ஆ ள்”

தொடந்து வரும்

“மாயக்கண் கோண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்தோ ஓ ஓ ஓ
………………………………….”

மேற்கூறிய அதே அழகு !!

இப்பாடலின் முழுவதுமாக் வரும் தாள நடை –
இடை இசைகள் எல்லாமே அழகின் எல்லைகள் !

நன்றி வத்ஸன் (MSV forum)
—————————-
படம்: நாளை நமதே (1975)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: வாலி
குரல்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா

“இளமை கொலுவிருக்கும்”

பெண்ணினத்தின் பெருமைகளை உரைநடையில் சொன்னால் உள்ளத்தில் ஏறாதென்று கவிதையிலே வடித்து வைத்த கவியரசின் பாடல்.

தமிழ் திரைப்படங்களால் விளைந்த மிகப் பெரிய நன்மை அதன் இசை எனலாம். தமிழினத்தின் நீண்ட மரபோடு இணைந்திருந்த இசையை மீட்டெடுத்து, மற்ற கலைகளை விட சிறப்பான இடத்தை பெற திரைப்படங்கள் உதவின.

பெண்ணை தாயாக, சகோதரியாக, மணைவியாக, மகளாக பிறப்பிலிருந்து இறப்புவரை பேணி போற்றிய தமிழர், பெண்களை தெய்வமாகவும் வழிபட்ட மரபும் தொடர்கிறது.

“பொன்னும் பொருளும்
வந்து மொழி சொல்லுமா -ஒரு
பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
இன்று தேடி வரும்
நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி
அமுதிடுமா – எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா”

பணம் காசு நிலையில்லை என்றும் மலர்ந்த முகத்துடன் உணவு தரும் பெண்மைக்கு நிகர் எதுவுமில்லை என்றும் ஆணித்தரமாக சொல்கிறார் கவியரசு.

குழலும், மாண்டலினும், வயலினும் இனிமையை வாரி வழங்கி இருக்க, அந்த பின்னணி இசைக் கருவிகளின் மென்மைக்கு மேன்மை சேர்க்கும் வகையில் சுசீலா அம்மா பாடியிருப்பார்.

வரிகளில் பொதிந்துள்ள கிண்டல், குறும்பு இவற்றை
தன் குரலில் வெளிப்படுத்தி பாடிய இனிமையை வார்த்தையில் விவரிக்க இயலாது. கேட்டு அனுபவிக்க வேண்டும்.

சாவித்திரியம்மாவின் குறும்பு காட்சியில் வெளிப்பட சுசீலா அம்மாவின் குரல் உள்ளத்தை கொள்ளையடிக்கும்….
————————-
படம்: ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
இசை:எம்.எஸ்.வி, ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.சுசீலா

“ஆண்டவனின் தோட்டத்திலே”

படத்தின் கதையை கதாநாயகியின் கண்ணோட்டத்திலே சொல்லவரும் அருமையான வரிகளை கொண்ட பாடல்.

லலிதா என்ற முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரமிளாதான், அரங்கேற்றத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடித்திருக்கிறார். 

அப்போதெல்லாம் படத்துக்கு ஆழமான கதை இருக்கும். அதைக் கதையின் போக்கில் கேரக்டர்கள் உலவுவார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிப்பது போல், பாடல்கள் வைப்பார்கள்.

அந்தப் பாடல்கள், கதையைச் சொல்லும்; கதாபாத்திரங்களின் தன்மையைச் சொல்லும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, கதாபாத்திரங்கள் நம் நிஜ வாழ்க்கையின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும்.

இந்த ரசவாதத்தை மிகத் துல்லியமாகவும் அழகாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் நமக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன்.

பாலசந்தர் படங்களில், பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இரண்டரை மணி நேரக் கதையை, நாலரை நிமிஷப் பாடல் சூசகமாகச் சொல்லிவிடவேண்டும் என கே.பாலசந்தர் நினைத்தார்

கண்ணதாசனின் வரிகள் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ள சவால்கள் என்ன என்று சொல்கிறது.

“குழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு
அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு”

சுசீலா இப்பாடலில் ஒவ்வொரு சிரிப்பிலும் ஒவ்வொரு பாவத்தை வெளிப்படுத்தி இனிமை பொங்க பாடி இருப்பார்.

எம்.எஸ்.வி தமிழ் திரையிசையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், தன் இசைத் திறனால் தனித்து ஆட்சி செய்தவர் வி.குமார். ————————-

படம்: அரங்கேற்றம்
இசை: வி.குமார்
குரல்:: பி.சுசீலா

வரிகள்: கண்ணதாசன் ———————-

  1. “சிலர் குடிப்பது போலே நடிப்பார்”

மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் . ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் பின்பு பலமாகச்
சிரித்தார் .

சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”

கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?

புரிந்து கொண்டார் கண்ணதாசன்… !

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்தது..
உடனே ‘சங்கே முழங்கு’ படப்பிடிப்புத் தளத்திற்குப் புறப்பட்டார். அங்கே எம்ஜிஆர் கவிஞரை வரவேற்றார். பாடல் எழுத தயாரானார்..! கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்” பாடலுக்கான பல்லவியில்… 
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!

“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”

“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :

“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது”

“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில முற்போக்கான விஷயங்களை சொல்ல வேண்டாமா..?

“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்…

“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!

மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ..?

நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு.. !”

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போது தெரிகிறதா..?”

ஆம்…!
யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் வித்தை ..கவிஞருக்கும் தெரிந்திருந்தது.
———————–
படம்: சங்கே முழங்கு
இசை :எம் .எஸ் .விஸ்வநாதன்
பாடியவர் :டி .எம் . எஸ்
வரிகள் :கண்ணதாசன்

“ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”

க­தைப்­படி, தன் தாய், தந்­தை­யு­டன் எம்.ஜி.ஆர்., இருக்­கும் வீட்­டிற்கு, அனா­தை­யாக வந்து சேரு­கி­றார் சரோ­ஜா­தேவி. அவர்­க­ளுக்கு இடை­யில் எழுந்த காதல் உணர்வு இந்த பாடலில் இனி­மை­யாக வெளிப்­ப­டு­கி­றது.

முதல் நான்கு வரி­களை நாயகி பாட, கடை­சி­யில் மாலை­யா­கத் தொடுக்­கப்­பட்ட சொற்­களை நாய­கன் பாடு­கி­றான். இதே உத்தி மற்ற சர­ணங்­க­ளி­லும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. அவை அந்த காலகட்டத்தில் மிக­வும் புது­மை­யாக இருந்­தன.

ஒரே சொல்லை இரண்டு முறை அடுக்­கும் பழக்­கத்தை நேர்த்­தி­யான முறை­யில் கையாண்­ட கவியரசு, ஒரு படி மேலே சென்று, இப்பாட­லில் ஒரே சொல்லை மூன்று முறை ரிப்­பீட் செய்­துள்ளார்.

பி. சுசீ­லா­வின் குர­லி­னி­மை­யும் உணர்ச்­சிப்­பெ­ருக்­கும் நன்­றாக வெளிப்­பட்ட இந்த பாட­லில், டி.எம்.எஸ். அவ­ரு­டைய பங்கை அருமையாக செய்திருப்பார்.

‘ஏதோ ஏதோ ஏதோ, எப்­படி எப்­படி எப்­படி’ என்ற முத்­த­மிழ் (!) முழக்­கம் ஒரு புறம் என்­றால், பாட­லின் சர­ணங்­க­ளில் இன்­னொரு புதிய அமைப்பு இருந்­தது.

முதல் சர­ணத்­தின் முதல் நான்கு வரி­க­ளைப் பாருங்­கள்:

‘‘நில­வைப் போலே பள­ப­ளங்­குது
நினைக்க நினைக்க கிறு­கி­றுங்­குது
மல­ரைப் போலே குளு­கு­ளுங்­குது
மன­சுக்­குள்ளே ஜிலு­ஜி­லுங்­குது’’.

இந்த ‘பள­பள’, கிறு­கிறு, குளு­குளு, ஜிலு­ஜிலு என்று வரும் வரி­க­ளுக்கு மகு­டம் வைப்­பது போல­வும், இவற்­றின் உணர்ச்­சி­யைக் கூட்டி உரைப்­பது போல­வும், இவை கடை­சி­யில் ஒன்­றா­கத் தொடுக்­கப்­பட்டு, ‘‘பள­ப­ளங்­குது, கிறு­கி­றுங்­குது, குளு­கு­ளுங்­குது, ஜிலு­ஜி­லுங்­குது’’ என்று சர­ணம் முடிக்­கப்­படுகிறது.

பள­ப­ள, கிறு­கி­று, குளு­கு­ளு, ஜிலு­ஜி­லு என்று எதைக் குறித்­துக் காதலி பாடு­கி­றாள்? புரட்சித்தலைவர் முகத்­தைக் குறித்­துத்­தான்!

பாட­லி­ல் நாட்­டுப்­புற மணம் இருந்தாலும் பாம­ரத்­தன்மை இல்லை. கலை­யின் விலா­சம் இருக்­கி­றது.
———————–
படம்: குடும்பத்தலைவன்
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: டி.எம்.எஸ் & பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

“ராஜாவின் பார்வை”

வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை புரட்சித்தரைவர் ஓட்ட
பக்கத்தில் சரோம்மா தலையில் கிரீடம் அணிந்து ராணியாக. இது ஒரு கனவுப்பாடல்….

குதிரைக் குளம்பொலி special effect மீசை முருகேசன் கொடுக்க சாரட்டின் சக்கரங்கள் சுழலும் பாடலுடன்..
கூடவே ஒலிக்கும் கோவில் மணி….மெல்லிசை மன்னரின் கற்பனையின் விரிவு…

இந்தப் பாடலில் சுசீலாம்மா குரலில் ஏதோ ஒரு அமானுஷ்ய மாயம் (mystic) மயக்குவது போல இருக்கும்.

“ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் மூடுதே சொர்க்கம்,
கை மூடுதே வெட்கம்,
பொன் மாலை மயக்கம்….
பொன் மாலை… மயக்கம்….”

வாலியின் வரிகள் ‘கம்..கம்…
என்று முடிவது ஒரு அழகு என்றால் அதை சுசீலாம்மா பாடியிருப்பது இன்னும் அழகு….

தலைவர் பாடும் முன் வரும் அந்த குழல்…அதற்கு இசைவாக கையில் இருக்கும் கயிறை லாவகமாக இழுத்து விடும் தலைவரின் ஸ்டைல்…..

ராணியின் முகமே,
ரசிப்பது சுகமே…
பூரண நிலவோ…
புன்னகை மலரோ…
அழகினை வடித்தேன்,
அமுதத்தைக் குடித்தேன்,
அணைக்கத் துடித்தேன் …..

ஒவ்வொரு தேனிலும் ஒரு இழு இழுப்பார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆருக்காக கொஞ்சம் nesal த்வனியில் பாடி இருப்பார். சரணத்துக்கு முன் வரும் கோரஸ்….அது ஒரு தனி லெவல்…

சுசீலாம்மா ஆரம்பிக்கும் முன் ஒரு அக்கார்டின் லீட்…

உனக்கெனப் பிறந்தேன் ,
உலகத்தை மறந்தேன்,
உறவினில் மலர்ந்தேன்

பாடல் தந்த மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் பாடல் உங்களுடன்…
———————————
படம்: அன்பே வா
இசை: M.S.V
பாடியவர்: T.M.S & P.சுஷீலா
வரிகள்: வாலி

“பார்வை ஒன்றே போதுமே”

“பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா”
என்கிறான் காதலன்.

‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்ற வள்ளுவரின் வாக்கை எளிமைப்படுத்தி தருகிறார் கண்ணதாசன்.

“பேசாத கண்ணும் பேசுமா” என்று கேள்வி கேட்கிறாள் நாயகி. அவளது விழியின் வீச்சு அவளுக்கே தெரியவில்லையோ!

“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது” இதற்கும் வள்ளுவரே பதில் தருகிறார். அதாவது, கள்ளத்தனமாக என்னை நோக்குகின்ற இவளது சிறுபார்வையானது, காதல் இன்பத்தில் பாதியன்று; அதற்கும் மேல் என்கிறான் தலைவன்.

இந்­தி­யில் வெளி­வந்த ‘வஹ் கவுன் தீ’ என்ற வெற்­றிப்­ப­டம் தமி­ழில் ‘யார் நீ’ என்று தயாரிக்கப் பட்டு ஜெய்­சங்­கர்- – ஜெய­ல­லிதா இளம் ஜோடி­யாக சில படங்­க­ளில் இணை­வ­தற்கு, பிள்­ளை­யார் சுழி போட்­டது.

இந்தப் பாடலில் ஜெய்­சங்­க­ரு­டன் பாடல் காட்சியில் இணைந்திருப்பது குமாரி ராதா. ‘ஷோக் நஸர் கீ பிஜ்­லி­யான்’ என்று இந்­தி­யில் ஒலித்த பாடலின் தமிழாக்கம்.

ஆரம்பத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் அசத்தல் ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்கும். டி.எம்.எஸ்­சின் குர­லி­னிமை கவர்ந்­தி­ழுக்­கும் வண்­ணம் மென்மையாக ஒலிக்கும். எல்.ஆர்.ஈஸ்வரியும் அனுபவித்து பாடியிருப்பார்.
குறிப்பாக ‘பேசுமா’ ‘போதுமா’ என்று கடைசி எழுத்தை ஒரு கொக்கி போட்டு தூக்கி நிறுத்துவது அருமை.

வேதா வழக்கம்போலவே ஹிந்தி வடிவத்தைவிட மேலான இசையை தந்து அசத்திய பாடல்.
——————————–
படம்: யார் நீ (1966)
இசை: எஸ். வேதாச்சலம்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ் & எல்ஆர்.ஈஸ்வரி

“தாழையாம் பூ முடிச்சு”

தொலை தூரத்தில் ஒரு உழவனின் குரலாக “தந்தான தான தன்னா…” என்று எம்.எஸ்.வி குரலில் ஒலிக்கும்
தெம்மாங்கு சத்தம் ஒன்றே நீண்டு விரிந்து விளைந்திருக்கும் வயற்காட்டினைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது..

பாடல் முழுவதும் ஒரு கிராமிய மணம்.கவித்துவமான தமிழர் பண்பாடு கூறும் கவியரசரின் வரிகள்..அந்த கிராமிய மணத்தை வாரி வழங்கும் பின்னணி இசை….அதுவும் அந்த உறுமி மேளம் போல ஒலிக்கும் தாள வாத்தியம்….! இந்த பாடலுக்கு மொத்தம் மூன்று இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தினாராம் மெல்லிசை மன்னர்.

ஒரு கை ஊனமான இளைஞனாக நடிகர் திலகம், அச்சு அசலான கிராமத்து அழகியாக சரோஜா தேவி……
தாழம்பூ முடிந்த கூந்தல்…
நாயகியைப் பார்த்துப் பாடும் நாயகன்..

“தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து…என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா…”

எனக்கு சொல்ல வந்த சேதி என்ன என்று கேட்க நாணத்துடன் பெண்மை சொல்கிறது

“பாளை போல் சிரிப்பிருக்கு…பக்குவமான குணமிருக்கு…ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லய்யா”

கண்ணியத்தோடு பதில் கூறுகிறாள்..

தான் வாழ்க்கைப் பட்டு வருகின்ற வீட்டுக்குத் தாய் வீட்டு சீதனமும்,சகோதரர்களின் பணமும் மட்டும் கொண்டு வந்தால் போதுமா?அது மானாபி மானங்களைக் காக்குமா?

அவன் கேள்விக் கணைகளை அள்ளி வீச அவள்

“மானமே ஆடைகளாம் மரியாதைப் புன்னகையாம்..நாணமாம் துணையிருந்தால் போதுமே, எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை பேசுமே”..

பளிச்சென்று தேங்காய் உடைப்பது போல பதில் சொல்கிறாள்.

மனம் கனிந்த அவன் தன் குறையை அவளிடம் சொல்லி அவனைப் போன்றவரை மணக்க எந்தப் பெண் தயாராக இருப்பாள் என்பதை
“அங்கம்குறைந்தவனை…
அழகில்லா ஆண்மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா? மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?” என்று ஆதங்கப் படுகிறான்.

தனது சம்மதத்தை அவள் சொல்லும் நயம்
“மண்பார்த்து விளைவதில்லை…
மரம் பார்த்து படர்வதில்லை…
கன்னியரும் பூங்கொடியும் கன்னய்யா…அவர் கண்ணிலே களங்கமுண்டோ சொல்லய்யா?கண்ணிலெ களங்கமுண்டோ சொல்லய்யா…” சம்மதம்…
ஊனம் ஒரு பொருட்டல்ல அவளுக்கு அவனின் குணத்திலே அடிமையாகிறாள் அவள்…

ஒரு அழகான காதல் பாடல்….சுகமான சோகத்துடன் ஒலிக்கும் வரிகள்…தமிழ் மண்ணுக்கே உரிய பெண்களின் நாணம், மன உறுதி…முழுக்க முழுக்க கிராமிய மணம் வீசும் உடை, படமாக்கப் பட்டிருக்கும் களம்….இது நம் மண்ணின் பாடல்.
—————————-
படம்: பாகப்பிரிவினை
இசை: எம.எஸ்.வி, ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ், பி.லீலா

“மாமரத்து பூ எடுத்து”

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு ஆர்ட் பிலிம்தான் எடுக்கத் தெரியும் என்ற மாயையை உடைத்து,
தமிழ்சினிமாவில் புதிய டிரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘ஊமை விழிகள்’.

‘ஒரு இளைஞன் அழகான கண்கள் கொண்ட பெண்ணைக் காதலிக்கிறான்; அவள் ஏமாற்றி விடுகிறாள். அதன் பிறகு பழிவாங்கும் படலமாக அவன் அழகான பெண்களின் கண்களைப் பறிக்கிறான்’ இதுதான் கதை.

இளங் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், காதோதரம் நரைத்த முடியுடன் மத்திய வயது கதா பாத்திரத்தில் ஒரு டூயட் கூட இல்லாமல் நடித்திருப்பார்.

இந்த பாடலில் தோன்றும் முதலிரவு ஜோடி கார்த்திக், சசிகலா. கடற்கரை விடுதியில் அழகான இயற்கை பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல். தொடங்கும் போது காலை உதயத்தை காட்சிப் படுத்தி இருப்பார்கள்.

முதல் நிரவல் இசையில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் சேர்ந்திசையை உறுமி மேளத்தின் பின்னணியில் இனிமையாக கோர்க்கப் பட்டிருக்கும்.

இரண்டாவது நிரவலில் பொழுது சாய்ந்துவிட, இரவின் இருளில் சூனியக்கார கிழவியின் கூர்மையான பார்வை, இளஞ்சோடியின் மேல் நிலை குத்தி நிற்க, வரப்போகும் ஆபத்தின் அறிகுறியாக இசையை படர விட்டிருப்பார்கள்.

மனோஜ் கியான் இரட்டையரின் முதல் தமிழ்த் திரை பிரவேசம்…

தமிழ் சினிமாவில் முதன்முறையாக இரவில் நடக்கும் காட்சிகளை இரவிலேயே படமாக்கினார்களாம்.

S N சுரேந்தர், சசிரேகாவின் மென்மை குரல்களில் எப்போதும் இனிக்கும் காதல் பாடல்.
————————
படம்: ஊமை விழிகள் (1986)
இசை: மனோஜ்
வரிகள்: ஆபாவாணன்
குரல்: S N சுரேந்தர், சசிரேகா

“வான் போலே வண்ணம் கொண்டு”

பாலுவும் ஷைலஜாவும் இடையிடையே அழகான ஆலாபனைகளோடு பாடிய கண்ணன் பாடல்.

தன் கலையை சமரசம் செய்து கொள்ளாத நடன கலைஞன் கமல், பாடல் காட்சியில் நாயகியோடு கிருஷ்ண லீலையை பரதநாட்டிய பாணியில் நடனமாட
தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொள்வார்.

நடன இயக்குநர் ஆத்திரமாகி “நான் சொல்லிக் கொடுத்ததை ஆடுடான்னா… இவனா ஒண்ணை ஆடறான்? இதுக்குத் தான் சாஸ்திரம் தெரிஞ்சவனையெல்லாம் அசிஸ்டெண்டா வச்சிக்கக் கூடாதுங்கறது” என்று சொல்லிவிட்டு அவரே காட்சியை விவரிப்பார்.

பிறகு கமலும் கீதாவும் நம் சினிமாக்களுக்கே உரித்தான அசைவுகளுடனான நடனத்தை ஆடுவார்கள். ஆடி முடித்ததும் மரத்திற்குப் பின்புறம் பல்லைக் கடித்து ஆத்திரத்தை மென்று கண்ணீர் தளும்ப நிற்பார் கமல். கிளாசிக் ஆக்டிங்!

துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத்தொடங்க அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது.

அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார் மகாகவி பாரதியார்.

‘பொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல
புண்ணியவாளர்தம் புகழினைப்போல்
தையலர் கருணையைப் போல் – கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்
பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்தப்
பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்
வண்ணப் பொற் சேலைகளாம் –அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!’

அதையே வைரமுத்து வேறு விதமாக சொல்கிறார். கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே என்று ஒரு cinematic ஜோடனை.

“பெண்களுடை எடுத்தவனே
தங்கைக் குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே”

பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதானாம். கண்ணனின் விருப்ப குழலை, பாடல் முழுக்க லீலைகள் புரிய வைத்திருப்பார் ராஜா. கூடவே ஸ்ட்ரிங் அரேஞ்ச்மெண்ட். நடுவே சலங்கை ஒலி, நாதஸ்வர ஓசை என்று மனதை மயக்கும் இசையமைப்பு.

உள் மனதின் உணர்ச்சிகளை கிளர்த்தெழுப்பும் பாடல்.
————————-
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
குரல்:எஸ் பி பி, எஸ்.பி ஷைலஜா

“ஆசையே அலை போலே”பாடல் 28

பாடும் குரலையும் பாடலின் இசையையும் கொண்டு ஒரு வேள்வியையே நடத்தி இருக்கிறார் மகாதேவன்.

இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும், இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வையும் எளிதாக விளக்கி இருப்பார்…

செட்டி நாட்டு கவியரசுக்கு கணக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன? வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்…

“வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு….இருப்பது கனவு..!
காலம் வகுத்த கணக்கை இங்கே……..யார் காணுவார்!”

ஒரு முறை கோடம்பாக்கம் ரயில்வே க்ராஸிங்கில் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, சட்டென்று ஏற்பட்ட அகவெளிப்பாட்டை சிகரெட் பாக்கெட் அட்டையில் எழுதி வைத்தாராம்.

சிகரெட் பெட்டியில் சிந்திய தத்துவ முத்துக்கள் இன்றும் தமிழக மக்களின் காயம்பட்ட மனதிற்கு ஆறுதல் மருந்தாகிறது.
———————–
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: திருச்சி லோகநாதன்

“இன்னும் பார்த்து கொண்டிருந்தால்”

ஆரம்ப இசையில் கிடார் கார்ட்ஸ் இசைக்க அதன் மேல் வயலின்கள் அலைபோல ஆர்பரித்து எழுந்து பின் செல்லோ கருவியின் பாஸ் சத்தத்துடன் இணைய, அவற்றை சட்டென அமைதிக்கு கொண்டு வரும் பியானோவின் முத்தாய்ப்பு.

அந்த கன நேர அமைதிக்குப் பின் தொடங்கும் சுசீலாம்மாவின் குயில் குரல்….

“இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது”

இந்தியின் தமிழாக்கம் என்றாலும் இடையிசையில் ட்ரம்பெட், வயலின் மற்றும் பாங்கோஸை கொண்டு வேதா படைத்திருக்கும் நிரவல் ஒரு
இசை மேதாவிலாசம். சரணத்தில் பட்டையை கிளப்பும் தபலாவின் துள்ளல் நடை…அப்பப்பா!

விசை படகில் ஜெய்சங்கர், விஜயலட்சுமி ஜோடி… இந்த படத்தில் சி.ஐ.டி சங்கர் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி “தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்கிற பட்டப்பெயரை பெற்றார் ஜெய்சங்கர். டி.எம்.எஸ் குரல் ஜெய்சங்கர் குரல் போலவே ஒலிப்பது மற்றொரு அதிசயம்.

“நான் கேட்டதை தருவாய் இன்றாவது” என்று நாயகி கேட்க,
“நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது” என்கிறான் காதலன். அதாவது அவள் மனதில் என்னதான் உள்ளது என்பதை திறந்து சொல்லச் சொல்கிறான்.

சரணத்திற்கு தேவையான படி பல்லவியை அமைத்துக் கொண்ட கவிஞர், சரணத்தில் தன் முழு கற்பனையையும் கட்டவிழ்த்து விடுகிறார் காதலர்கள் வழியாக.

பாடியவர்கள் திறனுக்காகவும், இனிய மெட்டிற்காகவும் எப்போது கேட்டாலும் இனிக்கும பாடல்…
————————-
படம்: வல்லவன் ஒருவன் (1966)
இசை : வேதா
குரல்: பி.சுசீலா & டி.எம்.எஸ்
பாடல்: கண்ணதாசன்

“பார்வை யுவராணி கண்ணோவியம்”

சமூகப் படங்களில் பிரம்மாண்டம் என்பது ‘சிவந்த மண்’ படத்திலிருந்து தொடங்கியது எனலாம். படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட, எஞ்சிய காட்சிகளை எகிப்திய பிரமிட், போர்த்துக்கீசிய கப்பலின் உள்வடிவம், அரண்மனை, ஆறு என்று பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்துப் படமாக்கினார்கள்.

வாஹினி ஸ்டுடியோவில் ஆறு செட்டுக்காக பிரம்மாண்டத் தொட்டிகள் கட்டப்பட்டுத் தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில் தொட்டியில் உடைப்பெடுத்தது. இரண்டு லட்சம் கேலன் தண்ணீர் ஸ்டுடியோ முழுக்கப் பரவி, வடபழனி சாலை முழுவதும் ஓடியதும், மீண்டும் இரவு பகலாகத் தண்ணீர் நிரப்பி படப்பிடிப்பு நடந்ததும் அன்றைய நாளிதழ்களில் செய்தியானது.

“பார்வை யுவராணி கண்ணோவியம்’’ என்று தொடங்கும் இந்த பாடலை ஈபிள் டவரில் படமாக்கிக் கொண்டிருந்தபோது, இயக்குநர் ஸ்ரீதரின் தாயார் காலமாகிவிட்டதாகத் தகவல் வர, உடனே அனைவரும் திரும்பி வந்தது தனி கதை.

எம் எஸ் வி யின் ஆரம்ப இசையே அமர்க்களமாக ஆரம்பிக்கும். கண்ணதாசன் பாடல். எந்த வரியைத் தலைப்பாக்குவது என்று திணற அடிக்கும் பாடல் வரிகள்.

மிகவும் மனோகரமான டியூன். பல்லவி ஒரு கவர்ச்சி என்றால் சரணம் தனிக்கவர்ச்சி! டி எம் சௌந்தர்ராஜன் மிக அருமையாக அனுபவித்துப் பாடியிருக்கிறார். இது ஒரு டூயட் பாட்டாக அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
——————————
படம்: சிவந்த மண் (1969)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.சௌந்தரராஜன்

“வாரத்திருப்பாளோ வண்ணமலர்”

“குத்து விளக்கெரிய கூடம் எங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க”

கவிஞரின் இந்த இரண்டு வரிகள் முழு காட்சியையும் படம் பிடித்துவிடும் நேர்த்தியை என்னென்பது!

ஒரே வீட்டில் இருந்தும் கட்டுப்பாடு காக்கும் காதலர்கள் பாடல். காட்சியில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் நடிப்பிலும் பாவத்திலும் அந்த கண்ணியமான நெருக்கத்தை பாவத்தோடு வெளிப்படுத்தி இருப்பார்கள்.

சோகப்பாடல் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உருக்கம் நிறைந்த செனாய் வாசிப்பு…குறிப்பாக,
கட்டுப்பாட்டுடன் அருகில் நிற்கும் காதலனைப்பார்த்து

“பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேன் இருக்க
உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன் “

என்ற வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் செனாய் இசை , காதலனின் இதய வேதனையை வெளிப்படுத்துகிறது.

அதே சமயம் இடையிசையில் குழல் வயலின் உற்சாக இசை தரும். எனினும் பாடல் முழுவதும் காதலின் ஏக்கத்தை சோகமாக பரவ விட்டிருப்பது போல தோன்றும். பாடலின் மெட்டும் மிதமான வேகமும் காரணமாக இருக்கலாம்.

இலக்கிய நயம் வரிகளில் மிளிர, காதலும் சோகமும் குரல்களில் தெரிய, சுகமான உணர்வை ஏற்படுத்தும் மெல்லிசைப் பாடல்.
——————————
படம்: பச்சை விளக்கு (1964)
இசை: M S V, T K ராமமூர்த்தி
குரல்: டி.எம்.எஸ் – P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

“தண்ணீரிலே தாமரைப்பூ”பாடல் 79

திலக் காமோத் என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்ததாம் இப்பாடல். நெஞ்சை உருக்கும் பாடல்.

“மௌனமே பார்வையாய் ஒரு பாட்டு பாட வேண்டும்” மற்றும் “ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்” பாடல்களை மெல்லிசை மன்னர் இதே ராகத்தில் படைத்திருப்பார்.

படத்தின் இயக்குனர் பாடலின் காட்சியை விவரிக்கும் பொழுது இசை அமைப்பாளர் மனக்கண்ணில் காட்சியின் இசை தோன்ற தொடங்குகிறது.

அந்த இசையின் உந்துதலின் அடிப்படையில் தனக்கு இசை பிறக்கின்றது” என்று எம்.எஸ்.வி கூறுவார்.

மேலும் அந்த காட்சிக்கு ஏற்ப பாடல் வரிகள் பிறக்கும் பொழுது அந்த வார்த்தையிலும் இசை உள்ளது என்றும் கூறுவார்.

இதை விளக்கும் பாடல் இது

ஒரு நீர் நிலையில் தாமரை மலர்கள் மிதப்பதை முதலில் மனக்கண் கொண்டு பாருங்கள்.

அந்த மலர் நீரின் மீது மிதப்பதில் ஒரு லயம் (TEMPO) இருப்பதை உணரலாம். அந்த லயத்திற்கு ஏற்ப வரும் பாடலின் வேகம் அந்த மலர்கள் எந்த லயத்தில் அசையுமோ அதே லயத்தில் இருப்பதை உணர முடியும்.
———————-
படம்: தங்கை
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ்

“ஆயிரம் தாமரை மொட்டுக்களே”பாடல் 81

பருவமடைந்த குமரியின் பெருமிதம் கலந்த வெட்கம் போன்ற ஒரு செழிப்பு இப்பாடல் இசையில் இருக்கிறது.

கோடையில் எதிர்பாராமல் ஆரம்பிக்கும் மழை போல கைத்தட்டல் ஒலியுடன் துவங்கி, மிருதங்கம் தொடர, உச்ச ஸ்ருதியில் சேர்ந்திசை குரல்கள் தொடர்ந்து, சட்டென நிற்கும் மழைபோல….

எல்லாமும் ஓய்ந்து ஒரு ரகசிய தொனியில் ஜானகி துவங்கும் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மயக்கம் பாடல் முழுவதுமே பரவியிருக்கும்.

படப்பிடிப்பு துவக்குமுன்பே பாடல் பதிவு முடிந்து விட்டதாம். முதலில் கதையில் ஒரு பிராமண வாலிபனுக்கும், இஸ்லாமிய யுவதிக்குமான காதல் பற்றிய கரு இருந்தது. எனவே வைரமுத்து “கோயிலில் காதல் தொழுகை” என்று எழுதியிருந்தார்.

பின்பு திரைக்கதையில் மாற்றம் வந்து கிறிஸ்துவப்பெண்ணாக முடிவு செய்யப்பட பிறகும், பாடல் வரிகளில் மாற்றம் செய்ய யாருக்கும் மனம் இல்லாமல் அப்படியே விட்டு விட்டார்களாம்.

சேர்ந்திசை குரல்களுக்கென ஒரு மரியாதை கொடுத்தது ராஜாவின் காலத்தில் தான். அதன் ஒரு உதாரணம் இந்த பாடல்.

ஒரு பரிட்சார்த்த முயற்சியாக சரணம் ஆரம்பிக்கும் போது, வார்த்தைகள் இல்லாமல் ஹம்மிங்கில் துவங்கி பின்பு வார்த்தைகள் சேரும். முதல் சரணத்தின் முடிவில் ஒரு தனித்த வயலின் பகுதி, தொடரும் சேர்ந்திசைகுரல்கள்.

அதை படமாக்கியிருக்கும் விதம் காதலர்கள் நீருக்குள் நெருங்கி நிற்கும்போது, அவர்களை சுற்றி தாமரைப்பூக்கள் வட்டமிடும்.

இதற்காக பாரதிராஜாவின் உதவியாளர்கள் (மனோபாலா உட்பட) கையில் தாமரைப்பூவுடன் நீரில் மூழ்கி நடந்தார்களாம்.

இரண்டாவது சரணத்தில், ஹே..வீட்டுக்கிளியே..எனும்போது பின்னணியில் ராஜா ஒரு குயில் கூவலை பயன்படுத்தியிருப்பார். கூடவே நம் மனதும் கூவும்..

இறுதிப் பல்லவியில், ஜானகி ஆயிரம் தாமரை என்று நிறுத்தி நநநந.. ஆயிரம் தாமரை, நநநந நநந நநந.. என்பார்.. பாடல் முடியப்போகிறதே என்று வருத்தமாயிருக்கும்.

வைரமுத்து பேனாவுக்குள் காதலை ஊற்றி எழுதியிருப்பார். இங்குத் தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று..

இரும்பு கோடலியால் பிளக்க முடியாத பாறையை துளைத்து வேர் விடும் பசுமரம் போன்ற மிருதுவான உறுதி காதலில் மட்டும் தானே உண்டு.

மிக அழகான ராதா.. இளமையான கார்த்திக்…பாடல் படமாக்கப்பட்டது நாகர்கோயில், இரணியல் அருகிலுள்ள ஒரு குளத்தில்
———————
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

“கண்மணியே..காதல் என்பது கற்பனையோ”

எஸ்.பி.பி யும் ஜானகியும் சேர்ந்து கனிந்துருகி நம்மையும் உருக வைத்துவிடுவார்கள் .

மூச்சு விடாமல் பாடப்பட்ட நீண்ட பல்லவி உள்ள பாடல் இது என்று இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் சொன்னதாக நினைவு…

மேனாட்டு இசைக் கலப்போடு மோகன ராகத்தில் பின்னப்பட்ட இதயம் தொடும் அழகான மெலடி.

ரிதம் கிடாரின் நீண்ட அதிர்வுகள் பாடலின் ராகத்தை கோடிட்டு காட்ட லீட் கிடார் உட்புகுந்து கேட்பவர்க்கும் காதல் ‘மூட்’ ஐ உண்டாக்க தொடர்ந்து வயலின் ஒரு சின்ன பிட்…

சிம்பல்ஸ் (cymbals) ட்ரம்ஸ் பிரஷ்ஷிங் பின்னணியில் மீண்டும் ரிதம் கிடார் ஒரு நீண்ட அதிர்வலைகளை
இசைத்து முடிக்க ஜானகி பல்லவியை துவங்குவார்.

முதல் இடையிசையில் கிடார், வயலின் இசையினை தொடர்ந்து குழல் ஜாலங்கள்…அதற்கு பின்னணி காங்கோ ட்ரம்ஸ் போன்ற தாளம்…

இரண்டாம் இடையிசையில் வயலின், நாயகியின் திருமண கனவை பிரதிபலிக்கும் கொட்டு மேளத்தோடு நாதஸ்வரம் இசைக்க பின் மீண்டும் வயலின் இடைபுகும்.

பாடல் முழுவதும் ட்ரம்ஸ் பிரஷ்ஷிங் தாளம் சேர்ப்பது தனியான அனுபவம்.
இடையிசையில் ஜானகியின் குரலில் ஹம்மிங் இரு வேறு மெலடிகளாக பின்னிப் பிணைந்து நம்மை மேக கூட்டத்தில் மிதக்க வைக்கும்.
———————-
படம் : ஆறிலிருந்து அறுபது வரை (1979)
இசை : இளையராஜா
குரல் : எஸ்.பி.பி, ஜானகி
வரிகள் :பஞ்சு அருணாச்சலம்
———————–

“யாரடி நீ மோகினி”

இன்றும் கூட உத்தம புத்திரன் என்று சொன்னாலே உடனே நினைவுக்கு வரும் பாடல் இது.

இந்தக் காட்சிக்கான பாடல் மேற்கத்திய இசை வடிவமான “ராக் அண்ட் ரோல்” வகையில் அமைந்தால் நன்றாக இருக்குமே என்று அனைவரும் விரும்ப இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் சற்றும் தயங்காமல் அனாயாசமாக டியூன் போட்டார்.

டி.எம். சௌந்தரராஜன் – ஜிக்கி – ஜமுனாராணி ஆகிய மூவரையும் இணைத்துப் பாடவைத்து இந்த வெற்றிப் பாடலைக் கொடுத்து விட்டார்.

பாடலும், அதன் மெட்டும், முகப்பிசையும், இணைப்பிசையும், பாடல் முடிந்த பிறகு தொடரும் உற்சாகமான கரவொலியுடன் இணையும் கிட்டாரும், தாளக்கட்டும், கேட்பவரை தாளம் போட வைக்கும் விதத்தில் அமைந்த பாடல் இது.

இந்தப் பாடலில் பாடகி ஜிக்கியின் தனித் திறமையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கடைசியில் வரும் ஒரு நீண்ட சரணத்தை அனாயாசமாக ஒரே மூச்சில் பாடி அசத்தி இருப்பார் அவர்.

பாடலில் சிவாஜியின் வேகமான மிக நேர்த்தியான அசைவுகள் மிக மிக நவீன பாணியிலான அழகு, தன் இடது கை பழக்கத்தை உபயோகப்படுத்தி கைதட்டும் ஸ்டைல்..ஆஹா…பாடலின் இசை மாறிக்கொண்டே இருக்கும்.

அதற்கேற்றார் போல் சிவாஜியின் உடல் அசைவுகளும், முகபாவங்களும் மாறி கொண்டேயிருக்கும். இது போல சிவாஜி மிகவும் ரசித்து நடித்த இன்னொரு பாடல் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த கதாபாத்திரம் ஆடல், பாடல், மது, மங்கை போதை, களியாட்டங்களுக்கு அடிமையாக்கப்பட்டவனின் வாழ்க்கை.

இரட்டை வேட படத்தில் தன்னை மற்றொரு வேடத்திலிருந்து வேறுபடுத்தி காண்பித்து கொள்ள சிவாஜி மிகவும் நேர்த்தியாக பல புதிய மேனரிசங்களை செய்திருக்கிறார்.
———————-
படம்: உத்தம புத்திரன்
இசை: ஜி.இராமநாதன்
வரிகள்:
குரல்:டி.எம்.எஸ், ஜிக்கி, ஏ.பி. கோமளா, கே. ஜமுனாராணி

“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை…”

இசை மேதை ஜி.இராமநாதன் இசையமைத்த கடைசிப் படம்
‘தெய்வத்தின் தெய்வம்’ என்று கேள்வி.

இது ஒரு காதல் பாடல் இல்லை என்றும், இறந்து போன அண்ணனை நினைத்து தங்கை பாடும் பாடலென்றும் என் சிறு வயதில் யாரோ சொன்னதுபோல ஒரு நினைவு. இப்பாடலை எப்போது கேட்டாலும் ஒரே குழப்பம்தான். வரிகள் எல்லாம் காதல் பாடல் போலவே உள்ளது.

எளிமையான மெட்டமைப்பும் அலங்கார வார்த்தகளில்லாத பாடல் வரிகளும் மெல்லிய சோகத்தை உயிர் வரை ஊடுருவச் செய்யும் சுசீலாம்மாவின் குரலும் நம்மை கடந்த காலத்திற்கு கடத்திவிடும்.

இன்று நாளை, என்று நாளை எண்ணுகின்றேனே! அழகான சிலேடை!
—————————-
படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா

“நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்”

வெண்ணிற ஆடை படத்திற்காக எழுதப்பட்டு உபயோகப் படுத்தாத பாடல்.

“நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்”

இந்த பாடல் வெண்ணிற ஆடை படத்தில் இடம் பெற்றிருந்தால், படத்தின் கதாநாயகியின் மனதில் காதல் உணர்வு தோன்றியவுடன் அவர் பாடுவதாக அமைந்திருக்கும்.

‘நினைவு தராமல்…….. இந்த வரிகள் மருத்துவராக வரும் நாயகன் தன்னை குணப்படுத்தாமல் இருந்திருந்தால் நாயகி மனநிலை பாதிக்கப்பட்டவராகவே அதாவது கனவுலகிலேயே வாழ்ந்திருப்பார் என்பதை அழகாக வெளிப்படுத்தும் வரிகளாக அமைந்திருக்கும்.

‘நீ தர வேண்டும், நான் பெற வேண்டும், நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்’

இந்த வரிகள் தான் விரும்பும் அவரோடு சேர்ந்து வாழும்போது தனக்கு கிடைக்கப்போகும் மன அமைதியை நாயகனுக்கு சொல்லுவதாக அமைந்திருக்கும். எவ்வளவு அற்புதமான சூழ்நிலை பாடல்!

இந்தப்பாடல் முழுவதும் வரும் அந்த விசில் ஓசையே இந்த பாடலுக்கு ஒரு தனி அழகை தருகிறது. அந்த விசில் ஓசைக்கு ஏற்ப சில இடங்களில் சுசீலா அவர்கள் ராகம் பாடுவது மனதை அள்ளிக்கொண்டு போகும்.

மெல்லிசை மன்னரின் இதமான இசையில் சாகா வரம் பெற்ற இன்னொரு பாடல்.
—————————-
படம் : சாந்தி
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்

“முதல் கனவே முதல் கனவே”

கவிஞர்களுக்கு மிகப் பிடித்தமான விஷயம் கனவுகளோடு கபடியாடுவது தான். அதுவும் காதல் கனவென்றால் கவிகளுக்கு கேட்கவா வேண்டும்.

“முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்” பாடல் காதலன் காதலி உறையாடலாய் வரும் டூயட் பாடல்.

”ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையொடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கிவிடு”

ஊடல் மற்றும் ஓடல் களுக்கு நேரம் இல்லை இரவு விரைவில் விடிந்து போனால் கனவும் முடிந்து போகும் அல்லவா? எனவே காதலன் அவசரப் படுத்துகிறான்.

ஆனால் காதலி,

”நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு தென்றலை”

எனக்கு ஊடல் எதுவும் இல்லை வியர்வைகள் துளிர்விட “வாய்ப்பு” உள்ளதால் அவள் தென்றலை வரச்சொல் என காதலனுக்கு ஆணையிடுகிறாள்.

பாம்பே ஜெயஸ்ரீயும் ஹரிஷ் ராகவேந்திராவும் இந்த டூயட்டை வேற லெவலுக்கு கொண்டு போயிருப்பார்கள்.
—————————–
படம் : மஜ்னு (2001)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

“என்னை முதல் முதலாக”

1942 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணகி’ படத்திற்குப் பின் 1964
ஆம் ஆண்டு சிலப்பதிகாரம், காவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் இது. கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி.

இப்பாடலை எழுதிய கவிஞர் இராதாமாணிக்கம் அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

“கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா”
என்று காதலன் கேட்க
“ஏகாந்தம் பறந்தது” என்ற காதலியின் பதிலில் கவிஞரின் எதுகை மோனை சொல்லாடல் ரசிக்க வைக்கிறது.

நான் பார்க்காதபோது கள்ளத்தனமான பார்க்கும் என்னவளின் கடைக்கண் பார்வை, எங்களின் காதல் ரசனையில் பாதியளவைக் காட்டிலும் பெரிது…! என்ற வள்ளுவரின் குறளை நினைவு படுத்துகிறார்.

குறள்:1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது

டி.எம்.எஸ், ஜானகியின் ஆரம்பகால குரல்களில், இனிய மெட்டுடன் எளிமையான இசைப் பின்னணியில் இப்பாடலை கேட்கும்போது நமக்கும் சொர்க்கம் தெரிவதில் வியப்பில்லை.

இப்படத்தைப் பற்றிய ஒரு கொசுறு செய்தி.

“அன்று கொல்லும் அரசின் ஆணை…” என்ற பாடலில்
“நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது” எனக் கவிஞர் மாயவநாதன் எழுதியிருந்தாராம்.

கே. பி. சுந்தராம்பாள் அந்த வரியைப் பாட மறுத்துவிட்டார். மாயவநாதனோ ஊருக்குப் போய்விட்டார். எனவே கருணாநிதியே அந்த வரியை “நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என மாற்றி எழுதிக் கொடுத்தாராம்.
—————————-
படம்: பூம்புகார் (1964)
இசை: S ஸுதர்சனம்
படியவர்கள்: T M S, S ஜானகி
வரிகள்:இராதாமாணிக்கம்

“முதல் முதலாக காதல் டூயட்”

‘முதல்’ முறைக்கும், ‘முதன் முதல்’ முறைக்கும் என்ன வித்தியாசம். இன்று காலை எழுந்ததும் முதலில் பல் தேய்த்தேன் எனலாம். அதையே இன்று காலை முதன் முதலாக பல் தேய்த்தேன் என்றால் உங்களிடம் எல்லோரும் சற்று தள்ளி நின்று பேசுவார்கள்.

ஒரு விடயத்தை முதன் முதலாக செய்யும்போது நாம் அந்த விடயத்தைப் பொறுத்து, படபடப்பு, உற்சாகம், தயக்கம், பயம், ஆனந்தம் என பல விதமான உணர்வுகளுக்கு ஆளாகிறோம்.

முதன் முதலாக காதல் செய்வது இவை எல்லாம் கலந்த ஒரு உணர்வு என்பதை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. அது ஒருதலை காதலா, வெற்றி பெற்ற காதலா என்பது வேறு சங்கதி.

இதுவும் அப்படிப்பட்ட உணர்வை தரும், துள்ளல் டூயட் பாடல். இடையிசைகள் பயணிக்கும் பாணியும் அதன் பரபரப்பும் அன்றைய காலகட்டத்தில் மிகப்புதுமையாக இருந்தது என்று பலர் பதிவு செய்துள்ளனர்.

காதலர்களின் சிறு ஊடலை, இசைத்துள்ளலுடன் பாடகர்களும் இணைந்து பாடி கலக்கியிருப்பார்கள்.

பின்னணி இசையிலும் ராஜா தன் தனிமுத்திரையை பதிக்க ஆரம்பித்த படம் இது. இந்தப்படத்தில் எல்லா கதாப்பத்திரங்களின் பெயரும் நடிகர்களின் பெயர்களாவே அமைந்திருக்கும்.

பதினாறு வயதினிலே பட பூஜையில் எஸ்.பி.பி கலந்து கொண்டாலும், ஜலதோஷம் காரணமாக பாட முடியவில்லை. பாரதிராஜா, இளையராஜா இருவருக்குமே ஏமாற்றம்.

மனோவை வைத்து ட்ராக் பாடிவிட்டு பின்னர் எஸ்.பி.பியை பாட வைக்கலாம் என்று பாரதிராஜா சொல்ல, மனோ ஒரு வளரும் கலைஞர். அவர் பாடியது நன்றாக இருந்ததால், அவருக்கே வாய்ப்பு கொடுங்கள். நான் உங்களது அடுத்த படத்தில் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டார் எஸ்.பி.பி.

ஆனால் பாரதிராஜா படத்தில் அவர் முதன் முதலில் பாடிய பாடல் இதுதான் என்பது பாலு ஒரு பேட்டியில் சொன்ன தகவல்.
—————————–
படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
வரிகள்: பஞ்சு அருணாசலம்
குரல்: S.P.B, S.ஜானகி

“முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே”

பதின்ம வயதில் முதன் முதலாக காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் துடிப்பையும், மிதப்பையும் அற்புத அனுபவமாக வடிவமைத்த பாடல்.

பாடல் முழுக்க நாயகன் துள்ளலோடு இருந்தாலும் பாடல் காட்சி ஸ்லோ மோஷனில்தான் போகும். காதலின் அனுபவம் நாயகனை அந்தரத்தில் மிதக்க வைப்பதைப் போன்ற உணர்வை இந்த ஸ்லோ மோஷன் எஃபெக்ட்டில் நம்மையும் உணர வைத்திருப்பார் இயக்குநர்.

அதே சமயம், காதலர் இதயத்தின் படபடப்பு போல ஒலிக்கும் ட்ரம்ஸ் தாளமும் மனக் கிளர்ச்சியை உண்டாக்கும் கிடார் கம்பிகளின் முன்னிசையும் கூடவே வரும் மயக்கும் குழலும் தேனிசைத் தென்றல் தேவாவின் புது பரிமாணத்தைக் காட்டும்.

முதல் இடையிசையில் கோரஸ் ஹம்மிங்கை தொடரும் கிடார் மற்றும் குழல் தரும் மயக்கம் ஒருவகை என்றால் இரண்டாவது இடையிசையில் வீணையோடு தபலாவை பேசவைத்து முற்றிலும் வித்தியாசமான பாணியில் நம்மை அசத்துவார் தேவா.

ஹரிஹரனின் குரல் காற்றில் தெளித்த தேன் துளிகள் போல அலை அலையாக பரவி செவி வழி இதயத்தை வருடும் இன்ப அனுபவம்.

“இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை”
முதல் காதலின் இம்சையை வரிகளில் சொல்லும் வாலி…

இசை, பாடல் பாடப்பட்ட விதம்,வரிகள் என மற்ற அம்சங்களும் கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கும் பாடல்.
———————————-
படம் : ஆஹா
இசை : தேவா
வரிகள்: வாலி
குரல்: ஹரிஹரன்

“மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்”

எஸ்.பி.பி.பாடி முதலில் வெளிவந்த தமிழ்ப்பாடல் இது என்று கேள்வி. எஸ்.பி.பி தமிழில் பாடிய முதல் பாடல் எது என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

முதன் முதலில் ‘ஹோட்டல் ரமா’ என்ற படத்திற்காக 1962இல் பாடல் பதிவு செய்தாலும், அந்தப் படம் வெளியாகவில்லை.

எனவே முதல் பாடல் ‘சாந்தி நிலையம், படத்திலும் இரண்டாவது ‘அடிமைப்பெண்’ படத்திலும் மூன்றாவதாக ‘பால்குடம்’ படத்திலும் பாடினார். மூன்றுமே 1969 ஆம் வருடம் வெளியானாலும், கால வரிசையில் தலை கீழாக திரையிடப் பட்டதால், இந்தப் பாடல் முதலில் வெளிவந்தது.

பாலு அவர்கள் பல்லவியே ஒரு வித வித்தியாசமாக அனுபவித்து பாடியிருப்பார். கொஞ்சம் பி.பி.சீனிவாஸ் சாயல் தெரியும்.

“உனக்காக………. அன்பே
நான் உனக்காக…” என்று அவர் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பாடும் நேர்த்தி உண்மை காதலனின் ஆத்மார்த்தமான ஏக்கமாக வெளிப்படும்.

இடையிசையில் சதன் குரலில் ஒரு வில்லத்தனமான சிரிப்பு…
தொடரும் சுசீலாவின் குரலில் சொட்டும் கவிதை மற்றும் குற்றம் சாட்டும் வரிகள்….

“மலர் போன்ற என் மனதை
பறித்தது தான் பறித்தாயே
குழலோடு சூடாமல்
பொது இடத்தில் ஏன் எரித்தாய்”

இது முழுக்கவும் ஒரு காதல் டூயட் இல்லை என்று தோன்றுகிறது. பாடலின் கானொளி கிடைக்கவில்லை.
ஆனால் ரசிக்கவைக்கும் மல்லிகை பாடல்….
————————-
படம்: பால்குடம்
இசை:எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்: வாலி
குரல்: எஸ்.பி.பி, சுசீலா &சதன்

“மலர்கள் நனைந்தன பனியாலே”

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற நூலில் ஒரு காட்சி. பொழுது புலர்கிறது. இல்லறத் தலைவி எழுகிறாள். அப்போது அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாழை மீட்டிப் பாடுகிறாள். அந்த இனிய பாடலைக் கேட்டு கணவனும் குழந்தைகளும் கண்விழிக்கிறார்கள்.

யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
‘வாழிய வையம் வாழிய’ என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினான்

அதே காட்சியின் அழகை இப்பாடலிலும் காணலாம்.

இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் எழுந்ததும் கந்த சஷ்டிக் கவசத்தையோ சுப்ரபாதத்தையோ ஒலிக்க விடுவதைக் கேட்கத்தானே செய்கிறோம்.

“மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

காலை நேரத்துக் காட்சியையும் முந்தைய இரவில் அவள் கண்ட இன்பங்களின் மீட்சியையும் இப்படி நான்கு வரிகளில் சொல்ல கண்ணதாசன் இருந்தார் அப்போது.

அந்தப் பெண் கணவனோடு கொண்ட காதல் விளையாட்டைக் கூட நாகரிகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

Advertisements
REPORT THIS ADPRIVACY

கூடல் இன்பத்தை மட்டும் பாட்டில் வைக்கவில்லை அவர். அந்தக் குடும்பத்தலைவியின் அகவொழுக்கத்தையும் இறைநம்பிக்கையையும் பாட்டில் வைக்கிறார்.

“இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி” என்று….

மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு சுசீலாம்மா கொடுத்திருக்கும் அழுத்தமும்… வருணிக்க வார்த்தைகளே இல்லை.

மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.
——————————-
படம்: இதயக் கமலம்
இசை: கே.வி. மகாதேவன்
குரல்: பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்